Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தங்கள் விசுவாசத்தைப் பற்றி தைரியமாக பேசும் இளைஞர்கள்

தங்கள் விசுவாசத்தைப் பற்றி தைரியமாக பேசும் இளைஞர்கள்

தங்கள் விசுவாசத்தைப் பற்றி தைரியமாக பேசும் இளைஞர்கள்

யெகோவாவின் சாட்சிகளில் நிறைய இளைஞர்களும் இருக்கிறார்கள். அவர்கள் கடவுளை நேசிக்கிறார்கள் அதோடு, பைபிளில் காணப்படும் அவருடைய தராதரங்களுக்கு இசைய வாழ முயற்சி செய்கிறார்கள். தங்கள் விசுவாசத்தைக் குறித்து பெருமிதம் கொள்கிறார்கள். எனவே அவற்றைப் பற்றி பள்ளியில் எல்லாரிடமும் தைரியமாய் பேசுகிறார்கள். அவர்களில் சிலரது அனுபவங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

ஹாலி ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். “வன்முறையில் ஈடுபடாமல் பயங்கரவாதத்தை நீங்கள் எப்படி ஒழிப்பீர்கள்?” என்ற கேள்விக்கான பதிலை கட்டுரை வடிவில் எழுதும்படி அவளுக்கும் அவள் வகுப்பு மாணவர்களுக்கும் சொல்லப்பட்டது. பைபிள் தரும் எதிர்கால நம்பிக்கையைப் பற்றி எழுதுவதற்கு ஹாலி இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டாள். காலங்காலமாக ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்’ என்பதைத் தத்ரூபமாக விளக்கி எழுதினாள். (பிரசங்கி 8:9) பிறகு மனிதனுக்கு முன் வைக்கப்பட்டுள்ள ஒரே நம்பிக்கை கடவுளுடைய ராஜ்யம்தான் என்பதைச் சுட்டிக்காட்டினாள். “இயேசுதான் அந்த ராஜ்யத்தின் ராஜாவாக இருப்பதால் பயங்கரவாதம் மட்டுமல்ல, மற்ற எல்லா பிரச்சினைகளும் அடியோடு ஒழிக்கப்படும்” என்று எழுதினாள். எந்த மனிதனும் செய்ய முடியாததை இயேசு எப்படி செய்யப் போகிறார் என்பதை விவரித்தாள். “தாம் எப்படிப்பட்ட ராஜாவாக இருப்பார் என்பதை பூமியில் வாழ்ந்தபோதே இயேசு காட்டினார். அன்புடனும் அக்கறையுடனும் நடந்து கொண்டார். வியாதியஸ்தரை குணப்படுத்தினார், மரித்தவர்களை உயிர்த்தெழுப்பினார்; இவ்வாறு தமக்கு இருந்த வல்லமையை வெளிக்காட்டினார். எந்த மனித அரசாங்கத்தாலும் மரித்தவர்களைத் திரும்ப உயிருக்கு கொண்டுவர முடியாது. ஆனால் கடவுளுடைய அரசாங்கத்தால் அது முடியும்.” தன் கட்டுரையை ஹாலி இவ்வாறு முடித்தாள்: “பயங்கரவாத பிரச்சினைக்குத் தீர்வு, மனிதன் கையில் அல்ல ஆனால் கடவுள் கையிலேயே இருக்கிறது.”

“சபாஷ்! நெஞ்சைத் தொடும் கட்டுரை இது. மிக அருமையாக சிந்தித்து எழுதப்பட்டிருக்கிறது” என்று அந்தக் கட்டுரைக்குக் கீழே ஆசிரியர் எழுதியிருந்தார். ஹாலி அறிமுகப்படுத்தியிருந்த வசனங்கள்கூட ஆசிரியரைக் கவர்ந்திருந்தது. இது யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியைப் பற்றி, அதாவது வாராந்தர பேச்சு மற்றும் போதனா திட்டத்தை பற்றி ஆசிரியரிடம் பேச வாய்ப்பளித்தது. ஊழியப் பள்ளியில் பயன்படுத்தும் பாடப் புத்தகத்தை அவள் அளித்தபோது அதை அந்த ஆசிரியர் சந்தோஷமாக பெற்றுக்கொண்டார்.

ஜெசிகாவும் இவ்வாறே நற்செய்தியைப் பற்றி சாட்சி கொடுத்திருக்கிறாள். பள்ளிக் கட்டுரைகளில் தன் விசுவாசத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறாள். “என்னுடைய நம்பிக்கைகளைக் குறித்து இதுவரை மூன்று கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்” என அவள் கூறுகிறாள். “அதில் ஒன்று, யெகோவாவின் சாட்சிகள் மற்றும் அவர்களுடைய மத உரிமைகள் சம்பந்தப்பட்டது. அதை வாசிக்க விரும்புவோரின் வசதிக்காக ஆசிரியர் அதைப் பள்ளி நூலகத்தில் வைத்தார். சமீபத்தில், நான் முழுக்காட்டுதல் பெற்றது பற்றியும் அது எனக்கு எவ்வளவு முக்கியமான நாள் என்பது பற்றியும் இன்னொரு கட்டுரை எழுதினேன். மாணவர்கள் எல்லாரும் கட்டுரைகளை ‘ரஃப்பாக’ எழுதி முடித்தவுடன் ஒருவருக்கொருவர் வாசிக்க கொடுப்பது வழக்கம்; இப்படி ஒருமுறை என்னுடைய கட்டுரையை மற்ற மாணவர்களுக்கு வாசிக்கக் கொடுத்தேன். ஒரு மாணவி இவ்வாறு சொன்னாள்: ‘நீ ரொம்ப நல்லா எழுதியிருக்கே. யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒருத்தருக்கு என்னென்ன பொறுப்பு இருக்குன்னு உன்னுடைய கட்டுரையை வாசிச்சு தெரிஞ்சுக்கலாம். முழுக்காட்டுதல் பெற்றதற்கு என்னோட வாழ்த்துக்கள்!’ இன்னொரு பெண் இவ்வாறு சொன்னாள்: ‘உன்னுடைய அனுபவம் ரொம்ப பிரமாதம்! உனக்கு இந்தளவு உறுதியான விசுவாசம் இருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம்!’ ஒரு பையன் ரத்தினச் சுருக்கமாக இவ்வாறு சொன்னான்: ‘நீ புத்திசாலிப் பெண். உனக்கு என் நல்வாழ்த்துக்கள்.’”

மெலிஸா 11 வயதிலிருக்கும்போது அவளுடைய விசுவாசத்தைப் பற்றி பேசுவதற்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. அவள் சொல்வதாவது: “என்னுடைய பள்ளி நர்ஸ், அறிவியல் வகுப்பில் நோய் எதிர்ப்பு அமைப்பு பற்றிய பாடத்தை எடுக்க வந்தார். அப்போது, இரத்தம் ஏற்றுவது பற்றிய விஷயமும் சிந்திக்கப்பட்டது. வகுப்பு முடிந்த பிறகு என் அறிவியல் ஆசிரியரிடம் இரத்தம் சம்பந்தமாக வெளியிடப்பட்டிருக்கும் நம்முடைய வீடியோவைப் பற்றி சொன்னேன். அடுத்த நாள் அந்த வீடியோ கேஸட்டை பள்ளிக்கு கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன். வீட்டுக்கு எடுத்துச் சென்று தன் குடும்பத்தோடு அதைப் பார்த்தார். மறுநாள் அதே வீடியோவை என்னுடைய வகுப்பிலும் இன்னொரு வகுப்பிலும் மாணவர்களுக்கு போட்டுக் காட்டினார். வீடியோவைப் பார்த்த பிறகு, யெகோவாவின் சாட்சிகள் மட்டும் இல்லையென்றால் இரத்தத்திற்கு பதிலாக மாற்று மருந்தே வந்திருக்காது என்று உயர்வாக பேசினார். அந்த வீடியோ கேஸட்டை என்னிடம் திருப்பித் தந்தபோது, ‘ஸ்கூல் லைப்ரரியில் வைப்பதற்கு ஒரு வீடியோ கேஸட் எனக்கு வேண்டும், அது எப்படி கிடைக்கும்?’ என்று கேட்டார். நானே ஒரு கேஸட்டை வாங்கி அவருக்கு கொடுத்தேன். அவருக்கு ஒரே சந்தோஷமாக போய்விட்டது, எனக்கும்தான்!”

ஹாலி, ஜெசிகா, மெலிஸா ஆகிய இம்மூவரும் தங்கள் சிருஷ்டிகரை நினைக்க வேண்டும் என்ற பைபிளின் புத்திமதியை பின்பற்றுகிற இளம் சாட்சிகள். (பிரசங்கி 12:1) அவர்களைப் போல நீங்களும் உங்கள் சிருஷ்டிகரை நினைக்கிறீர்களா? அப்படி நினைக்கிறீர்கள் என்றால் நீங்கள் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துகிறீர்கள் என்றுதான் அர்த்தம், அதில் சந்தேகமேயில்லை.​—நீதிமொழிகள் 27:11; எபிரெயர் 6:10.

இளைஞர்களான நீங்கள் சக மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் உங்கள் விசுவாசத்தைக் குறித்து பேசும்போதுதான், அது யெகோவா தேவனைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் வலிமையான சாட்சியாக அமைகிறது. அதுமட்டுமல்ல, உங்களுடைய விசுவாசத்தையும் பலப்படுத்தி, கடவுளின் ஊழியர்களில் நீங்களும் ஒருவர் என்று பெருமிதம் கொள்ளவும் செய்கிறது. (எரேமியா 9:24) அதோடு, பள்ளியில் நற்செய்திக்குச் சாட்சி கொடுப்பது பாதுகாப்பையும் அளிக்கிறது. ஜெசிகா அதை இவ்வாறு விளக்குகிறாள்: “என்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி மாணவர்களிடத்தில் பேசுவதால் எனக்கு கிடைக்கும் ஒரு நன்மை என்ன தெரியுமா? பைபிளுக்கு முரணான காரியங்களைச் செய்யும்படி அந்த மாணவர்கள் என்னைத் தொந்தரவே செய்வதில்லை.” (g04 9/8)

[பக்கம் 22-ன் படங்கள்]

ஹாலி

[பக்கம் 22, 23-ன் படங்கள்]

ஜெசிகா

[பக்கம் 23-ன் படங்கள்]

மெலிஸா