Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தப்பெண்ணத்தின் பல முகங்கள்

தப்பெண்ணத்தின் பல முகங்கள்

தப்பெண்ணத்தின் பல முகங்கள்

“கதவு வழியாக தப்பெண்ணங்களை விரட்டி அடித்தால் அவை ஜன்னல் வழியாக மீண்டும் உள்ளே நுழைந்துவிடும்.​—⁠மகா ஃபிரெட்ரிக், பிரஷ்யாவின் அரசர்.

ராஜேஷ்: இந்தியாவில் பாலியாது என்ற கிராமத்தில் வசிக்கிறவர். தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கப்பட்டிருக்கும் மற்றவர்களைப் போலவே 15 நிமிட தூரம் நடந்துபோய் தன் குடும்பத்தாருக்கு தண்ணீர் கொண்டு வருகிறார். “மேல் ஜாதிக்காரர்கள் பயன்படுத்தும் குழாய்களிலிருந்து தண்ணீர் பிடிக்க எங்களுக்கு அனுமதி இல்லை” என இவர் சொல்கிறார். பள்ளியில் படிக்கிற காலத்தில் மற்ற பிள்ளைகள் விளையாடிய கால் பந்தை இவரும் இவருடைய நண்பர்களும் தொடக்கூட முடியாதாம். “பந்துக்கு பதிலாக நாங்கள் கற்களை வைத்து விளையாடினோம்” என்கிறார் இவர்.

கிறிஸ்டீனா: ஐரோப்பாவில் வசிக்கும் ஆசிய நாட்டு டீனேஜ் பெண். அவள் இவ்வாறு சொல்கிறாள்: “ஜனங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது, ஆனால் ஏன் என்பதுதான் புரியவில்லை. இந்த மாதிரி சமயங்களில் ரொம்பவே விரக்தியடைந்து விடுகிறேன். அப்போது தன்னந்தனியாக எங்கேயாவது ஒதுங்கி விடுவேன், ஆனால் அப்படிச் செய்வதும் பயனளிப்பதில்லை.”

ஸ்டான்லி: மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். “என்னுடைய 16-வது வயதில்தான் முதன்முதலாக தப்பெண்ணத்தைப் பற்றி தெரிந்துகொண்டேன். நான் வசித்துவந்த நகரத்தைவிட்டு வெளியேறும்படி முன்பின் தெரியாதவர்கள் என்னிடம் சொன்னார்கள். என் இனத்தைச் சேர்ந்த சிலருடைய வீடுகளை தீ வைத்துக் கொளுத்தினார்கள். பேங்கில் அப்பா போட்டு வைத்திருந்த பணத்தையும் முடக்கிவிட்டார்கள். இதனால் எங்களைப் பாடாய் படுத்திய அந்த இனத்தாரை வெறுக்க ஆரம்பித்தேன்” என்கிறார்.

மேற்கூறப்பட்ட ராஜேஷ், கிறிஸ்டீனா, ஸ்டான்லி ஆகியோர் தப்பெண்ணத்திற்கு பலியானவர்களில் சிலர் மட்டுமே. “இனவெறி, ஏற்றத்தாழ்வு, அயல்நாட்டவர் மீதான கடும் வெறுப்பு, சமுதாயத்திலிருந்து தள்ளி வைக்கப்படுவது ஆகிய பிரச்சினைகளால் இன்று ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். அறியாமையும் தப்பெண்ணமும் சேர்ந்து மக்களை இப்படி மிருகத்தனமாக ஆக்கியிருக்கின்றன, அவர்களுடைய மிருகத்தன செயல்கள் அநேக நாடுகளில் உள்நாட்டு பூசல்களையும் அளவிலா துன்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன” என விவரிக்கிறார் கோயிசிரோ மாட்சூரா; இவர் ஐக்கிய நாட்டு சங்கத்தின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பாகிய யுனெஸ்கோ-வின் இயக்குநர்.

இதுவரை நீங்கள் தப்பெண்ணத்தால் பாதிக்கப்படாதிருந்தால் அது மனதை எந்தளவு ரணமாக்குமென புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். “சிலர் அதைக் குறித்து எதிர்ப்புக் குரல் எழுப்பாமல் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் ஒன்றுக்கு இரண்டாக பதிலடி கொடுக்கிறார்கள்” என தப்பெண்ணத்தை நேருக்கு நேர் சந்தித்தல் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. தப்பெண்ணம் என்னென்ன வழிகளில் வாழ்க்கையைப் பாழாக்குகிறது?

நீங்கள் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவரா? அப்படியென்றால் மக்கள் உங்களைத் தவிர்ப்பதை, வெறுப்போடு பார்ப்பதை, அல்லது உங்கள் கலாச்சாரத்தை மட்டம் தட்டிப் பேசுவதை நீங்கள் பார்த்திருக்கலாம், கேட்டிருக்கலாம். உங்களுக்கு வேலை கிடைப்பதோ குதிரைக் கொம்பாக இருக்கலாம், அப்படியே கிடைத்தாலும் வேறு யாரும் செய்ய விரும்பாத அடிமட்ட வேலையே கிடைக்கலாம். ஒருவேளை குடியிருக்க வசதியான வீடு கிடைப்பதுகூட பெரும் பாடாக இருக்கலாம். உங்கள் பிள்ளைகள் தங்களுடைய வகுப்பு மாணவர்கள் யாருமே தங்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது போல் உணரலாம்.

அதையெல்லாம்விட, வன்முறையில் இறங்குவதற்கும், ஏன் கொலைகூட செய்வதற்கும் தப்பெண்ணம் மக்களைத் தூண்டிவிடுகிறது என்பதுதான் மோசத்திலும் மோசம். கடந்த காலங்களில் தப்பெண்ணத்தால் விளைந்த வேதனைமிக்க வன்முறை சம்பவங்களைப் பற்றி​—⁠ஒட்டுமொத்த கொலைகளும், இனப் படுகொலைகளும், இனங்கள் பூண்டோடு ஒழிக்கப்படுவது ஆகிய சம்பவங்களைப் பற்றி​—⁠கதை கதையாக சொல்லலாம்.

காலங்காலமாக தொடரும் தப்பெண்ணம்

ஒரு காலத்தில் கிறிஸ்தவர்கள்தான் தப்பெண்ணத்தின் முக்கிய குறியிலக்காக இருந்தார்கள். உதாரணமாக, இயேசுவின் மரணத்திற்குப் பிறகு சீக்கிரத்திலேயே அவர்கள் கடும் துன்புறுத்தலைச் சந்திக்க ஆரம்பித்தார்கள். (அப்போஸ்தலர் 8:3; 9:1, 2; 26:10, 11) தங்களைக் கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொண்டவர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு மூர்க்கத்தனமாக நடத்தப்பட்டார்கள். “கொள்ளை நோய் வந்துவிட்டது என்றால் போதும், ‘கிறிஸ்தவர்களைச் சிங்கங்களுக்கு இரையாக்குங்கள்’ என உடனடியாக குரலெழுப்பப்பட்டது” என மூன்றாம் நூற்றாண்டு நூலாசிரியர் டெர்ட்டூலியன் எழுதினார்.

ஐரோப்பாவிலிருந்த யூதர்களோ 11-⁠ம் நூற்றாண்டில் சிலுவைப் போர்கள் ஆரம்பித்த சமயத்திலிருந்து வெறுக்கப்பட்ட சிறுபான்மையினராக ஆனார்கள். அந்தக் கண்டம் முழுவதையும் நெரிக்கட்டு கொள்ளைநோய் ஆட்டிப்படைத்தபோது சில வருடங்களுக்குள் அங்கிருந்தவர்களில் 25 சதவீதத்தினர் அதற்குப் பலியானார்கள்; ஏற்கெனவே பெரும்பாலோர் யூதர்களை வெறுத்ததால் இதற்கான பழியை அவர்கள் மீது சுமத்துவது எளிதாக இருந்தது. “இப்படி வெறுக்கப்பட்டதற்கு இந்தக் கொள்ளைநோய் ஒரு சாக்குப்போக்காய் அமைந்தது; இந்த வெறுப்பு, கொள்ளைநோய்க்கு யூதர்களே காரணம் என எண்ண வைத்தது” என கண்களுக்குப் புலப்படாத எதிரிகள் என்ற ஆங்கில புத்தகத்தில் எழுதுகிறார் ஜானெட் ஃபாரெல்.

இறுதியில், கிணற்று நீரில் நஞ்சைக் கலந்து, கொள்ளை நோயை வரவழைத்தவர்கள் யூதர்கள்தான் என தென் பிரான்சிலிருந்து ஒரு யூதரைச் சித்திரவதைச் செய்து சொல்ல வைத்தார்கள். அவர் அப்படி சொன்னது பொய்யாக இருந்தாலும், அதுவே உண்மை என்பது போல் எங்கும் பரப்பப்பட்டது. இதனால் ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மனி ஆகிய இடங்களிலிருந்த யூதர்கள் எல்லாரும் கொன்று குவிக்கப்பட்டார்கள். அந்தக் கொள்ளைநோய்க்குக் காரணமாய் இருந்த உண்மையான குற்றவாளிகளை, அதாவது எலிகளை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. எல்லாரையும் போல யூதர்களும் அந்தக் கொள்ளைநோய்க்குப் பலியானதை வெகு சிலரே கவனித்தார்கள்!

தப்பெண்ணம் என்ற நெருப்பு பற்ற வைக்கப்பட்டுவிட்டால் அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு புகைந்து கொண்டே இருக்கும். யூதர்களுக்கு எதிரான பகை என்ற சாம்பல் பூத்திருந்த நெருப்பை, 20-⁠ம் நூற்றாண்டின் மத்திபத்தில் அடால்ஃப் ஹிட்லர் மீண்டும் கொளுந்துவிட்டு எரியச் செய்தார்; முதல் உலகப் போரில் ஜெர்மனி படுதோல்வி அடைந்ததற்கு யூதர்களே காரணமென அவர்கள் மீது பழி போட்டார். இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமின் நாசி கமான்டராக இருந்த ருடால்ஃப் ஹோஸ் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “நாங்கள் பெற்ற இராணுவ பயிற்சியும் கருத்தியல் பயிற்சியும், யூதர்களிடமிருந்து ஜெர்மனியைப் பாதுகாக்க வேண்டுமென்று உணர வைத்தன.” ‘ஜெர்மனியைப் பாதுகாப்பதற்கு’ ஹோஸின் தலைமையில் சுமார் 20,00,000 பேர் கொன்று குவிக்கப்பட்டார்கள்; அவர்களில் பெரும்பாலோர் யூதர்கள்.

வருத்தகரமான விஷயம் என்னவென்றால், பல பத்தாண்டுகள் உருண்டோடிய பின்பும் அட்டூழியங்கள் ஓய்ந்தபாடில்லை என்பதுதான். உதாரணமாக, 1994-⁠ல் கிழக்கு ஆப்பிரிக்காவில், டூட்ஸி, ஹூட்டூ என்ற இரு இனத்தாருக்கு இடையே பகைமை தலைதூக்கியது; விளைவு? குறைந்தது ஐந்து லட்சம் பேர் செத்தார்கள். “தஞ்சமடைய இடம் ஏதும் இல்லாதிருந்ததால் அநேகர் சர்ச்சுகளுக்குள் புகுந்தார்கள்; அந்த சர்ச்சுகளின் நடைபாதைகளில் இரத்தம் ஆறாக ஓடியது. . . . கைகலப்பு ஏற்பட்டு, நேருக்கு நேர் கடும் தாக்குதல் நடந்தது, பார்க்க படுபயங்கரமாக இருந்தது, இரத்தவெறி தலைக்கேறியது, ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து வந்தவர்கள் பிரமை பிடித்தது போல் விக்கித்து நின்றார்கள்” என டைம் பத்திரிகை அறிக்கை செய்தது. அந்த வன்கொடூரம் பிள்ளைகளையும் விட்டு வைக்கவில்லை. “ருவாண்டா என்பது சின்னஞ்சிறிய ஊர். ஆனால் உலகத்திலுள்ள அத்தனைப் பகைமையும் எங்கள் ஊருக்குள்தான் இருக்கிறது” என அந்த ஊர்க்காரர் ஒருவர் சொன்னார்.

முன்னாள் யுகோஸ்லாவியா பிரிக்கப்படுவது சம்பந்தமாக நடந்த சண்டைகளில் 2,00,000-⁠க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தார்கள். அண்டை அயலில் பல காலமாக சமாதானத்துடன் வாழ்ந்து வந்தவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்ய ஆரம்பித்தார்கள். ஆயிரக்கணக்கான பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது, இனத்தைப் பூண்டோடு ஒழிப்பது என்ற காட்டுமிராண்டித்தனமான கொள்கையால் லட்சக்கணக்கானோர் அவர்களது வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

தப்பெண்ணம் பெரும்பாலும் கொலையில் போய் முடியாவிட்டாலும், மக்களை அது எலியும் பூனையுமாக ஆக்கிவிடுகிறது, மனதில் கசப்பை ஊட்டி வளர்க்கிறது. உலகமயமாக்கல் என்ற கொள்கை இருந்தபோதிலும் இனப் பகைமை, இன வேறுபாடு ஆகியவை “உலகின் பல பாகங்களில் அதிகரித்து வருவது போல் தோன்றுகிறது” என யுனெஸ்கோ-வின் சமீபத்திய அறிக்கை ஒன்று சொல்கிறது.

அப்படியானால், தப்பெண்ணத்தை ஒழித்துக்கட்ட ஏதாவது செய்ய முடியுமா? இந்தக் கேள்விக்குப் பதிலைப் பெற, முதலாவதாக தப்பெண்ணம் எப்படி மனதிலும் இருதயத்திலும் வேரூன்றுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். (g04 9/8)

[பக்கம் 5-ன் பெட்டி]

தப்பெண்ணத்தின் அறிகுறிகள்

தப்பெண்ணம் பிறப்பிக்கும் ஐந்து விதமான நடத்தைகளைப் பற்றி தப்பெண்ணத்தின் இயல்பு என்ற ஆங்கில புத்தகத்தில் அதன் எழுத்தாளர் கார்டன் டபிள்யூ. அல்பர்ட் குறிப்பிடுகிறார். தப்பெண்ணமுள்ள ஒருவர் பொதுவாக இந்த விதமான நடத்தைகளில் ஒன்றை அல்லது பலவற்றை வெளிக்காட்டுகிறார்.

1. சாதகமற்ற குறிப்புகளைச் சொல்லுதல். ஒருவர் தனக்குப் பிடிக்காத தொகுதியைப் பற்றி மட்டம் தட்டிப் பேசுகிறார்.

2. தவிர்த்தல். அந்தத் தொகுதியைச் சேர்ந்த எல்லாரையும் அறவே வெறுக்கிறார்.

3. ஏற்றத்தாழ்வு காண்பித்தல். பழித்துப் பேசப்படும் தொகுதியினருக்கு ஒருசில வேலைகள், குடியிருப்பு பகுதிகள், அல்லது சமூக அந்தஸ்துகள் ஆகியவற்றை அளிக்க அவர் மறுக்கிறார்.

4. சரீர தாக்குதல். தான் வெறுக்கும் ஆட்களை மிரட்டி அடிபணிய வைப்பதற்கு அவர் வன்முறையில் இறங்குகிறார்.

5. பூண்டோடு ஒழித்தல். விசாரணையின்றி கொலை செய்வது, ஒட்டுமொத்த கொலைகள், அல்லது பூண்டோடு ஒழிக்கும் திட்டங்களில் அவர் பங்கேற்கிறார்.

[பக்கம் 4-ன் படம்]

மே 11, 1994, டான்ஜானியாவிலுள்ள பெனாகோ அகதிகள் முகாம்

தண்ணீர் கேன்களுடன் அமர்ந்திருக்கும் பெண். 3,00,000-⁠க்கும் அதிகமான அகதிகள் டான்ஜானியாவிற்குள் நுழைந்தார்கள், அதில் பெரும்பாலோர் ருவாண்டாவைச் சேர்ந்த ஹூட்டு இனத்தவர்கள்

[படத்திற்கான நன்றி]

Photo by Paula Bronstein/Liaison