Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விவாகரத்து—வேறு வழியே இல்லையா?

விவாகரத்து—வேறு வழியே இல்லையா?

பைபிளின் கருத்து

விவாகரத்து—வேறு வழியே இல்லையா?

பிரிட்டனில் ஒரு புனித சடங்கிற்கு வந்திருப்பவர்களை பாதிரி ஒருவர் வரவேற்கிறார். அவருக்கு முன்பாக நெருங்கிய நண்பர்களும் பிள்ளைகளும் சூழ ஒரு தம்பதியர் நிற்கிறார்கள். இவர்களெல்லாரும் மகிழ்ச்சியான திருமணத்திற்கு வந்திருக்கிறார்களா? இல்லவே இல்லை! அந்தத் தம்பதியரது திருமண பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இச்சடங்கு நடத்தப்படுகிறது. ஆம், விவாகரத்து அவ்வளவு பிரபலமாக இருப்பதால் சில சர்ச்சுகள் விவாகரத்துக்கென சடங்கே நடத்துகிறார்கள்!

விவாகரத்து செய்து கொள்ளலாமா வேண்டாமா என நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி உங்கள் பந்தத்தை முறித்துக்கொள்வதால் உண்மையிலேயே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர்ந்துவிடுமா? உங்கள் துணையோடு சேர்ந்து வாழ்வதன் மூலம் மகிழ்ச்சி காண நடைமுறையான வழிகள் ஏதாவது இருக்கின்றனவா?

“அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்”

முதல் மனித ஜோடிக்கு திருமணமானபோது, மனிதன் “தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” என்று கடவுள் சொன்னார். (ஆதியாகமம் 2:​24) எனவே, திருமணம் நிரந்தர பந்தமாக இருக்க வேண்டும். இதனால்தான், எந்தத் துணையாவது ‘வேசித்தனம் செய்தால்’ மட்டுமே விவாகரத்து செய்துவிட்டு வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இயேசு பிற்பாடு சொன்னார்.​—மத்தேயு 19:3-9. a

இது திருமணத்தில் உட்பட்டுள்ள ஒப்பந்தத்தை நன்றாக வலியுறுத்துகிறது. ஆனால் உங்கள் மணவாழ்க்கையில் படு சிக்கலான பிரச்சினைகள் இருந்தால் என்ன செய்வது?

விவாகரத்து செய்வது ஞானமானதா?

“ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று.” (மத்தேயு 11:19, பொது மொழிபெயர்ப்பு) இயேசு கூறிய இந்த நியமத்தை வைத்து நம்முடைய செயல்கள் எப்பேர்ப்பட்டவை என்பதை மதிப்பிட முடியும். இன்றைக்கு, எடுத்ததற்கெல்லாம் விவாகரத்து செய்வது கட்டுக்கடங்காமல் போவதால் வரும் விளைவுகள் எதைச் சுட்டிக்காட்டுகின்றன?

மகிழ்ச்சியற்ற திருமணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்களின் குழு ஒன்றுக்கு சிகாகோ பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் லின்டா வேட் தலைமை தாங்கினார். “விவாகரத்தினால் நன்மைகள் விளையுமென மிகைப்படுத்தி கூறப்பட்டிருக்கின்றன” என்று லின்டா சொல்கிறார். அதேவிதமாக ஆயிரக்கணக்கான மக்களின் பதில்களை 11 வருடங்களாக ஆராய்ந்த ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மிஷல் ஆர்கைல் என்ற பேராசிரியர் இவ்வாறு சொல்கிறார்: “சமுதாயத்தில் சந்தோஷமற்றவர்கள் என்று சொன்னால், ஒன்று விவாகரத்து செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும், அல்லது பிரிந்து வாழும் தம்பதிகளாக இருக்க வேண்டும்.” ஏன் அப்படி சொல்லலாம்?

விவாகரத்தைப் பொறுத்தவரை, அது சிறு சிறு துளைகள் போன்ற பிரச்சினைகளை அடைத்தாலும், அதிர்ச்சி தரும் வகையில் சரிசெய்ய முடியாத பெரிய பெரிய ஓட்டைகள் விழுவதற்கே காரணமாகிறது. பார்க்கப்போனால், விவாகரத்து ஒருவருடைய மன உளைச்சலை தணிப்பதோ சுய மரியாதையை கூட்டுவதோ கிடையாது என்பதைத்தான் ஆராய்ச்சி காட்டுகிறது.

உங்களுக்கு “மிகச் சிறந்த மணவாழ்க்கை” அமையாவிட்டாலும் துணையோடு சேர்ந்து வாழ்வது பலன் தரும். அவ்வாறு சேர்ந்து வாழ வேண்டுமென தீர்மானிக்கிறவர்கள் சந்தோஷத்தைக் காண்கிறார்கள். “கால ஓட்டத்தில் பல பிரச்சினைகள் சரியாகி விடுகின்றன; கணவனும் மனைவியுமாக சந்தோஷமாய் வாழத் தொடங்கி விடுகிறார்கள்” என்று பேராசிரியர் வேட் சொல்கிறார். இது சம்பந்தமாக செய்யப்பட்ட ஓர் ஆய்வு காட்டுவதாவது: மணவாழ்க்கையில் “துளியும் மகிழ்ச்சி கண்டிராத” 10 பேரில் கிட்டத்தட்ட 8 பேர் விவாகரத்து செய்யாமல் சேர்ந்தே வாழ்ந்தார்கள். விளைவு? ஐந்து வருடத்திற்குப் பிறகு “மணவாழ்வில் மகிழ்ச்சி ததும்ப ஆரம்பித்தது.” எனவே, சிக்கலான பிரச்சினைகள் இருந்தாலும் தம்பதிகள் அவசரப்பட்டு விவாகரத்து செய்துவிடாமல் இருப்பது நல்லது.

நடைமுறை படிகள்

விவாகரத்து செய்வதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பவர்கள் தங்களுடைய மணவாழ்வு சம்பந்தப்பட்ட எதிர்பார்ப்புகள் நடைமுறையானவையா என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். காதல் உறவு என்பது தடபுடலான கல்யாணத்திலும் ராஜா ராணி கதைகளில் வருவதுபோல் சந்தோஷத்திலும் முடிவடையும் என்றே மீடியா விளம்பரப்படுத்துகிறது. ஆனால், கல்யாணத்திற்குப் பிறகு ஆசை கனவுகளெல்லாம் நிறைவேறாமல் போகும்போது அடைகிற ஏமாற்றம் சண்டை சச்சரவுகளுக்கு அடிகோலும். சண்டை பெரிதாகையில், வேதனை ஆட்டிப்படைக்கும். காலப்போக்கில் அன்பு மறைந்து, கோபமும் வெறுப்பும் தலைதூக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் சிலர் விவாகரத்தை விட்டால் வேறு வழியே இல்லை என்று நினைக்கக்கூடும்.​—நீதிமொழிகள் 13:12.

கோபம் உங்கள் கண்களை மறைக்க அனுமதிப்பதற்கு பதிலாக திருமண பந்தத்தை பலமாக வைத்திருப்பவர்களோடு பழகுங்கள். “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” என்று கிறிஸ்தவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 5:​11) ஆம், மண வாழ்க்கையில் சந்தோஷம் காணாதவர்களுக்கு சக விசுவாசிகளிடமிருந்து ஊக்குவிப்பு நிச்சயம் தேவை.

தெய்வீக பண்புகளின் முக்கியத்துவம்

‘உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்ளுங்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் நினைப்பூட்டுகிறார். (கொலோசெயர் 3:​12) தெய்வீக பண்புகளை வளர்த்துக்கொண்டால் சச்சரவுகள் எழும் சமயங்களில்கூட மணவாழ்வில் ஒற்றுமை காக்க முடியும்.

உதாரணத்திற்கு பவுல் இவ்வாறு எழுதினார்: ‘ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், ஒருவருக்கொருவர் தாராளமாக மன்னியுங்கள்.’ (கொலோசெயர் 3:​13, NW) மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவரான கிறிஸ்டஃபர் பீட்டர்ஸன் இவ்வாறு சொல்கிறார்: “சந்தோஷத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய குணம் மன்னிக்கும் குணமே.”

பரிவு, இரக்கம், மன்னிக்கும் குணம் இவையெல்லாம் “பூரண சற்குணத்தின் கட்டாகிய” அன்பைக் காண்பிக்க உதவும். (கொலோசெயர் 3:14) ஒரு காலத்தில் நீங்கள் ஒருவரையொருவர் சந்தோஷமாக காதலித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அதே காதலை இப்போது உங்களால் புதுப்பிக்க முடியுமா? உங்களுடைய தற்போதைய சூழ்நிலைக்கு அதெல்லாம் ஒத்துவராது என்பது போல் தோன்றினாலும் முயற்சியைக் கைவிட்டு விடாதீர்கள். பலன்கள் கிடைப்பது உறுதி. பிரியாமல் ஒருமித்திருந்து பைபிள் நியமங்களைக் கடைப்பிடித்தால், எதிர்பார்த்ததைவிட அதிகமான சந்தோஷத்தை நீங்கள் அனுபவிக்கலாம். இந்த விஷயத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் திருமணத்தை ஆரம்பித்து வைத்த யெகோவா தேவனை சந்தோஷப்படுத்தும் என்பது திண்ணம்.​—நீதிமொழிகள் 15:20. (g04 9/8)

[அடிக்குறிப்பு]

a விபசாரம் செய்த துணையை விவாகரத்து செய்யலாமா வேண்டாமா என்பதைக் குறித்து குற்றம் செய்யாத துணை எடுக்கும் சொந்த தீர்மானத்தை யெகோவாவின் சாட்சிகளது கிறிஸ்தவ சபை மதிக்கிறது. விழித்தெழு! ஏப்ரல் 22, 1999, பக்கங்கள் 5-9-ஐக் காண்க.