Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

பிள்ளைகள் “பிள்ளைகளுக்கு பெற்றோரிடமிருந்து தேவைப்படுபவை” (பிப்ரவரி 8, 2004) என்ற தொடர் கட்டுரைகளைக் கொண்ட பத்திரிகை என் கையில் கிடைத்ததோ இல்லையோ ஒன்று விடாமல் எல்லா பக்கங்களையும் புரட்டினேன். ஐந்து பிள்ளைகளின் தாயாக, அந்தக் கட்டுரைகளைப் படித்தபோது மெய்மறந்து போனேன். உலகிலுள்ள ஒவ்வொரு தாயும் இதைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

சி. எம்., பிரான்சு

உங்களுடைய கட்டுரைகள் எனக்காகவே சரியான நேரத்தில் எழுதப்பட்டிருப்பது போல உணர்ந்தேன். நாங்கள் ஒரு குழந்தைக்குப் பெற்றோர் ஆகப்போகிறோம் என்ற விஷயம் தெரிந்த சமயத்தில் உங்கள் பத்திரிகை கர்ப்பிணிகளுக்கான ஆலோசனைகளை அளித்தது. (பிப்ரவரி 8, 2003) இப்போது நாங்கள் மூன்றுமாத குழந்தைக்குப் பெற்றோராக இருக்கிறோம், இந்த முறை பிள்ளைகளை வளர்ப்பது பற்றி நீங்கள் அருமையான ‘டிப்ஸ்’ கொடுத்திருக்கிறீர்கள். ஓர் இளம் தாய்க்கு இப்படிப்பட்ட கட்டுரைகள் மிகவும் உதவியாக உள்ளன.

டி. கே., போலந்து (g04 10/22)

உடன் பிறப்புடன் போட்டி “இளைஞர் கேட்கின்றனர் . . . இன்னாரின் உடன் பிறப்பாக மற்றவர்கள் என்னைப் பார்க்காதிருக்க என்ன செய்வது?” (டிசம்பர் 8, 2003) என்ற கட்டுரைக்குக் கோடி நன்றி. எனக்கு இப்போது 16 வயது. ஆனால் எப்போதும் எல்லாருடைய கவனமும் என் அக்கா மீதுதான், என்மீது இல்லை என்கிற எண்ணம் எனக்குள் இருக்கிறது. யெகோவா என்னைக் கண்டுகொள்கிறார் என்று என் மனம் சொல்லும். ஆனால் அதையும் மீறி எனக்குள் ஒரு தனிமையுணர்வு தலைதூக்கும். என் உணர்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டியது உங்கள் கட்டுரை. உங்களுடைய அன்பான வார்த்தைகளைப் படிக்கப் படிக்க என் கண்கள் கசிந்தன. நடைமுறை ஆலோசனைகளுக்கு மறுபடியும் நன்றி சொல்கிறேன். உங்கள் கட்டுரை என் நெஞ்சை குளிர வைத்தது.

எம். ஓ., ஜப்பான்

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இளைஞர்களைப் போலவே நானும் சில சமயம் உணர்ந்திருக்கிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எல்லாரும் என் அக்காவைத்தான் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். அதனால் கூடப் பிறந்தவர்களுடன் யாராவது நம்மை ஒப்பிட்டு பேசினால் எப்படியிருக்குமென்று எனக்கும் தெரியும். உங்களிடம் உள்ள பிரத்தியேக திறமைகளை முன்னேற்றுவிக்க நீங்கள் ஏன் உழைக்கக் கூடாது என்று ஏற்ற சமயத்தில் நீங்கள் சொன்ன வார்த்தைகள் “வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.”​—நீதிமொழிகள் 25:11.

எஸ். டி., ஐக்கிய மாகாணங்கள் (g04 9/22)

மூலிகை மருத்துவம் “மூலிகை மருத்துவம் உங்களுக்கு உதவுமா?” (ஜனவரி 8, 2004) என்ற கட்டுரையை ரசித்துப் படித்தேன். நான் ஒரு நர்ஸ். என் மூட்டு பிரச்சினைகளுக்கு இயற்கை மூலிகை மருந்துகளைத்தான் பயன்படுத்துவேன். என் உடலும் மூலிகையின் கட்டளைக்கு உடனே கீழ்ப்படியும். ஆனால் சில மூலிகைகள் அறுவை சிகிச்சையின்போது அதிக இரத்த இழப்புக்கு காரணமாயிருக்கின்றன என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு முன் சில மூலிகைகளைச் சாப்பிடாதிருக்க வேண்டும். இது யெகோவாவின் சாட்சிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.

ஜே. எச்., ஐக்கிய மாகாணங்கள்

“விழித்தெழு!” பதில்: இந்த முக்கியமான விஷயத்தை எங்களுக்கு நினைப்பூட்டியதற்கு நன்றி. ஒருவர் தான் என்னென்ன மருந்துகளைச் சாப்பிடுகிறார் என்பதை அறுவை சிகிச்சைக்கு முன் டாக்டரிடம் தெரிவிக்க வேண்டும். மருந்துகள் என்று சொல்லும்போது மூலிகை மருந்துகளைப் பற்றியும் சொல்ல வேண்டும். குறிப்பாக, ‘இரத்தத்தை விட்டு விலகியிருங்கள்’ என்ற பைபிளின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்கள் இதைக் குறித்து முன்கூட்டியே டாக்டரிடம் பேச வேண்டும்.​—⁠அப்போஸ்தலர் 15:29.

பேச்சாளராவது “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் எவ்வாறு சிறந்த பேச்சாளராக முடியும்?” (ஜனவரி 8, 2004) என்ற கட்டுரையைப் படித்து மெய் சிலிர்த்துப் போனேன். ஒரு ஜர்னலிஸ்டாக பணிபுரிந்ததில் பத்து வருட அனுபவம் எனக்கு இருக்கிறது. ஆனால் ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்பு பேச வேண்டும் என்றால் இப்போதுகூட என் நெஞ்சம் படபடக்கும். ஸ்கூலும் சரி, நிறுவனமும் சரி, இரண்டுமே எனக்குப் பயிற்சி கொடுத்திருக்கின்றன. ஆனால் யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றங்களில் நடைபெறும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் ஒரு மாணவனாக நான் பெற்ற பயிற்சியே அருமையிலும் அருமை! அதற்கு நிகர் எதுவுமே இல்லை. இந்தப் பயிற்சி வீட்டுக்கு வீடு ஊழியத்தை மட்டுமல்ல, என்னுடைய வேலையையும் நன்றாக செய்வதற்கு உதவுகிறது.

எல். பி., ஐக்கிய மாகாணங்கள் (g04 10/22)