Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிளாக்கோமா—பார்வையைப் பறிக்கும் திருடன்

கிளாக்கோமா—பார்வையைப் பறிக்கும் திருடன்

கிளாக்கோமா—பார்வையைப் பறிக்கும் திருடன்

இந்த வாக்கியத்திலுள்ள கடைசி வார்த்தையை மட்டுமே சில விநாடிக்குப் பாருங்கள். இந்தப் பத்திரிகைக்கு மேலேயும் கீழேயும் பக்கவாட்டிலும் உள்ள சில பகுதிகளில் உங்கள் கண்களை ஓட்டாமலேயே அவற்றைப் பார்க்க முடிகிறதா? புற பார்வை (peripheral vision) திறன் இருப்பதால் பெரும்பாலும் உங்களால் அவற்றைப் பார்க்க முடிகிறது. இத்திறன் இருப்பதால் சந்தேகப்படும்படி யாராவது, எப்பக்கத்திலிருந்தாவது உங்களை நெருங்கினால் அதை உடனடியாக கண்டுகொள்ள முடிகிறது. கீழே கிடக்கும் பொருட்களைத் தாண்டி செல்ல முடிகிறது, சுவர்களில் மோதாமல் நடந்து செல்ல முடிகிறது. அதுமட்டுமல்ல, நீங்கள் காரை ஓட்டிச் செல்கையில், பாதசாரி ஒருவர் நடைபாதையை விட்டு இறங்குவதை உங்கள் புற பார்வை உங்களுக்குத் தெரிவித்துவிடுகிறது.

இந்தப் பக்கத்தை நீங்கள் வாசித்து வரும்போதுகூட, உங்களுக்கே தெரியாமல் உங்கள் புற பார்வை மெல்ல மெல்ல மங்க ஆரம்பிக்கலாம். உலகெங்கும் 6 கோடியே 60 லட்சம் பேர் கிளாக்கோமா என்ற கண் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; இந்நோயில் பல பிரிவுகள் உண்டு. பாதிக்கப்பட்டவர்களில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையை முற்றிலும் இழந்திருக்கிறார்கள்; பார்வையை நிரந்தரமாக பறிக்கும் நோய்களின் வரிசையில் மூன்றாவது முக்கிய காரணியாக இது இருக்கிறது. “வளர்ச்சி கண்ட நாடுகளில் கிளாக்கோமாவைப் பற்றி பொதுக் கல்வி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தாலும்கூட பாதிப்பேருக்கு கிளாக்கோமா இருப்பது கண்டுபிடிக்கப்படவே இல்லை” என த லான்செட் என்ற மருத்துவ இதழ் குறிப்பிடுகிறது.

யாருக்கு கிளாக்கோமா வரலாம்? இது எப்படிக் கண்டுபிடிக்கப்படுகிறது, இதற்கு எப்படிச் சிகிச்சை அளிக்கப்படுகிறது?

கிளாக்கோமா என்றால் என்ன?

முதலாவதாக நம் கண்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வது அவசியம். ஆஸ்திரேலியாவிலுள்ள கிளாக்கோமா ஃபௌண்டேஷன் வெளியிட்டுள்ள ஒரு சிற்றேடு இவ்வாறு விளக்குகிறது: “கண்களிலுள்ள அழுத்தம் அதற்கு வடிவத்தைத் தருகிறது; கண்ணிலுள்ள அழுத்தம் மென்தசைகளை கார் டயரையோ பலூனையோ போல ‘உப்பச் செய்து’ அதற்கு வடிவம் கொடுக்கிறது.” கண்ணின் உள்ளே ‘இறைக்கும் இயந்திரம்’ ஒன்று உள்ளது; அதற்கு குருதி இழை அங்கம் (ciliary body) என்று பெயர்; இது, விழி நீர்மம் (aqueous humor) என்ற திரவத்தை இரத்தக் குழாய்களிலிருந்து கண்ணுக்குள் கொண்டுவருகிறது. “இந்த விழி நீர்மம் கண்ணின் ஆழம் வரைக்கும் எல்லா பக்கமும் சென்று கண்ணிலுள்ள உயிர் செல்களுக்குப் போஷாக்கு அளிக்கிறது; பின்னர், சல்லடைப் பின்னல் வலை (trabecular meshwork) எனப்படும் வடிகால் போன்ற அமைப்பு வழியாக அந்த நீர்மம் மீண்டும் இரத்தக் குழாய்களுக்குத் திரும்புகிறது.”

ஏதாவது காரணத்தினால் இந்தப் பின்னல் வலை அடைபட்டாலோ சுருங்கினாலோ கண்ணின் உள்ளே அழுத்தம் அதிகரிக்கும்; இறுதியில், இது கண்ணுக்குப் பின்புறமுள்ள மென் நரம்பு இழைகளைச் சேதப்படுத்த ஆரம்பிக்கும். இந்நிலையில் இந்த நோய்க்கு, திறந்த கோணக் கண் அழுத்த நோய் (open-angle glaucoma) என்று பெயர், சுமார் 90 சதவீதத்தினர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கண்ணுக்கு உள்ளே ஏற்படும் அழுத்தம், கண் உள் அழுத்தம் (intraocular pressure [IOP]) என்றழைக்கப்படுகிறது; இது மணிநேரத்துக்கு மணிநேரம் மாறுபடும் தன்மையுடையது. இந்த அழுத்தம், உங்களுடைய இதயத்துடிப்பு, நீங்கள் பருகும் நீர்மங்களின் அளவு, உங்களுடைய உடல் அமர்வுநிலை (body position) போன்ற பல்வேறு காரணிகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. இயல்பாகவே ஏற்படும் இந்த வேறுபாடுகளால் உங்கள் கண் பாதிக்கப்படாது. கண்ணில் அதிக அழுத்தம் இருப்பதை வைத்து மட்டும் கிளாக்கோமாதான் என்று முடிவு கட்டிவிடவும் முடியாது; ஏனெனில் “இயல்பான” கண் அழுத்தம்கூட நபருக்கு நபர் வேறுபடுகிறது. இருந்தாலும், உயர் IOP, கிளாக்கோமாவுக்கான அறிகுறிகளில் ஒன்றாகும்.

மற்றொரு வகை கிளாக்கோமாவுக்கு, மூடிய அல்லது குறுகிய கோணக் கண் அழுத்த நோய் (angle-closure glaucoma) என்று பெயர், இது அரிதாகவே வரும். திறந்த கோணக் கண் அழுத்த நோயைப் போலில்லாமல் இவ்வகை நோயால் திடீரென கண்ணிலுள்ள அழுத்தம் அதிகரிக்கிறது. அப்போது கண்ணில் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது, அதோடு பார்வை மங்குகிறது, வாந்தியும் ஏற்படுகிறது. அறிகுறிகள் தென்பட்ட சில மணிநேரத்திற்குள் இதற்குச் சிகிச்சை அளிக்காவிட்டால் பொதுவாக கண்பார்வையே பறிபோய்விடும். இன்னொரு வகையும் இருக்கிறது, அதற்கு இரண்டாம் நிலை கிளாக்கோமா (secondary glaucoma) என்று பெயர். அதன் பெயருக்கு ஏற்ப, கண் கட்டிகள், புரைகள், கண்ணில் ஏற்படும் காயங்கள் போன்ற காரணங்களால் தூண்டப்பட்டு இவ்வகை நோய் வருகிறது. பிறவியில் வரும் கண் அழுத்த நோய் (congenital glaucoma) நான்காவது வகையாகும்; இதனால் வெகு சிலரே பாதிக்கப்படுகிறார்கள். பிறக்கும்போதே இந்த வகை நோய் இருக்கலாம் அல்லது பிறந்த கொஞ்ச நாட்களுக்குப் பின் வரலாம்; இத்தகைய குழந்தைக்குக் கருவிழி பெரிதாக இருக்கும், வெளிச்சத்தைப் பார்த்தாலே அதற்குக் கண்கூசும்.

பார்வையைத் “திருடும்” விதம்

உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய ஒரு கண்ணின் பார்வையை 90 சதவீதம் வரைக்கும் கிளாக்கோமாவால் திருட முடியும். எப்படி? நம் எல்லாருக்குமே ஒவ்வொரு கண்ணுக்குப் பின்னாகவும் குருட்டுப் பொட்டு (blind spot) என்பது இயற்கையிலேயே இருக்கிறது. பார்வை நரம்பை உருவாக்கும் நரம்பு இழைகள் விழித்திரையில் ஒன்றாக இணையும் பகுதியிலுள்ள இந்தப் பொட்டில் ஒளியை உணரும் செல்கள் இல்லவே இல்லை. இப்படி ஒரு குருட்டுப் பொட்டிருப்பது உங்களுக்குத் தெரிவதில்லை; ஏனெனில் ஒரு காட்சியை பார்க்கையில், கண்ணினால் முழுமையாக பார்க்க முடியாத பகுதிகளையும் முழுமைப்படுத்திக் காட்டும் திறன் உங்கள் மூளைக்கு இருக்கிறது. ஆனால் மூளையின் அந்தத் திறனால்தான் கிளாக்கோமா அந்தளவு மெல்ல பார்வையைத் திருட காரணமாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவிலுள்ள புகழ்பெற்ற கண் மருத்துவரான டாக்டர் ஐவன் கோல்ட்பர்க் விழித்தெழு! எழுத்தாளரிடம் இவ்வாறு சொன்னார்: “பதுங்கி இருந்து பார்வையைப் பறிக்கும் திருடன் என கிளாக்கோமா அழைக்கப்படுகிறது; ஏனெனில் கிளாக்கோமா வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படுவதே இல்லை. பொதுவான வகை கிளாக்கோமாவோ மெல்ல மெல்ல, சீராக, எந்த எச்சரிக்கையுமின்றி, மூளையையும் கண்ணையும் இணைக்கிற நரம்பு அமைப்பை சேதப்படுத்துகிறது. உங்கள் கண்களில் நீர் வடிந்தாலும்சரி வடியாவிட்டாலும்சரி, அவை உலர்ந்திருந்தாலும்சரி உலர்ந்திராவிட்டாலும்சரி, எழுதும்போதும் வாசிக்கிறபோதும் தெளிவாக பார்க்க முடிந்தாலும்சரி பார்க்க முடியாவிட்டாலும்சரி அதற்கும் கிளாக்கோமாவுக்கும் சம்பந்தமில்லை. எல்லாவற்றையும் உங்களால் தெளிவாக பார்க்க முடிகிறதென்றாலும், உங்கள் கண்கள் கிளாக்கோமாவால் படுமோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.”

திருடனைக் கண்டுபிடித்தல்

திட்டவட்டமான எந்தவொரு பரிசோதனையையும் செய்து கிளாக்கோமா இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பது வருத்தகரமான விஷயம். முதலில் கண் மருத்துவ நிபுணர், கண் அழுத்தக் கருவி (tonometer) என்பதைப் பயன்படுத்தி உங்கள் விழி நீர்மத்தின் அழுத்தத்தைக் கண்டறிய முயற்சி செய்யலாம். அக்கருவியின் உதவியால் மெதுவாக உங்கள் கருவிழி வெண்படலம் (cornea) அதாவது உங்கள் கண்ணின் முன் பகுதி தட்டையாக்கப்படுகிறது. இப்படி தட்டையாக்குவதற்கு எந்தளவு ஆற்றல் தேவையென கணக்கிடப்படுகிறது, இவ்வாறு உங்கள் கண்ணின் உள் அழுத்தம் அளவிடப்படுகிறது. கிளாக்கோமா இருப்பதற்கான அறிகுறிகளைத் தெரிந்துகொள்ள கண் மருத்துவர், மூளையையும் கண்ணையும் இணைக்கும் நரம்பு அமைப்பிலுள்ள திசு ஏதேனும் சேதமடைந்திருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான கருவிகளைக்கூட பயன்படுத்தலாம். டாக்டர் கோல்ட்பர்க் இவ்வாறு சொல்கிறார்: “கண்ணுக்குப் பின்புறமுள்ள நரம்பு இழைகள் அல்லது இரத்தக் குழாய்கள் அசாதாரண வடிவில் உள்ளனவா என்பதையும் நாங்கள் பரிசோதிக்கிறோம்; ஏனெனில் நரம்புகள் சேதமடைந்திருப்பதை அவைகூட சுட்டிக்காட்டலாம்.”

பார்வைப் பரப்பு பரிசோதனை மூலமும் கிளாக்கோமா இருப்பது கண்டறியப்படுகிறது. இதை டாக்டர் கோல்ட்பர்க் இவ்வாறு விவரிக்கிறார்: “உட்குழிவான, கவிகை மாட வடிவுள்ள ஒன்றினுள் வெள்ளை ஒளியை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கையில் இன்னும் பிரகாசமான சிறிய வெள்ளை ஒளி அதனுள் பிரகாசிக்கிறது. அந்தச் சிறிய வெள்ளை ஒளியைப் பார்க்கும்போதெல்லாம் அவர் பட்டனை அழுத்துகிறார்.” அந்த வெள்ளை ஒளி உங்கள் பார்வை பரப்பின் புற பரப்பில் தோன்றுகையில் அதை நீங்கள் கண்டுகொள்ளத் தவறினால் அது கிளாக்கோமா இருப்பதை சுட்டிக்காட்டலாம். களைப்பூட்டுகிற இந்த முறையை விட்டுவிட்டு, எளிய முறைகளைக் கையாளுவதற்கு புதிய கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

யாருக்கு வரும்?

பவுல் என்பவர் 40-45 வயது மதிக்கத்தக்கவர், திடகாத்திரமானவர். இவர் இவ்வாறு சொல்கிறார்: “புதிய கண்ணாடியை வாங்குவதற்கு முன்பு கண் பரிசோதகரிடம் பரிசோதித்துக் கொண்டேன், அப்போது அவர் எங்கள் குடும்பத்தில் யாருக்காவது கிளாக்கோமா வந்திருக்கிறதா என கேட்டார். வீட்டில் விசாரித்தபோது என் பெரியம்மாவுக்கும், மாமாவுக்கும் கிளாக்கோமா இருந்தது தெரிய வந்தது. எனவே கண் மருத்துவ நிபுணரிடம் காட்ட சொன்னார்; அவரிடம் பரிசோதித்துக் கொண்டபோது எனக்கு கிளாக்கோமா இருப்பதை உறுதி செய்தார்.” டாக்டர் கோல்ட்பர்க் இவ்வாறு விளக்குகிறார்: “உங்கள் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ கிளாக்கோமா இருக்கிறதென்றால் உங்களுக்கும் வருவதற்கு மூன்று முதல் ஐந்து மடங்கு சாத்தியமிருக்கிறது. உங்கள் அண்ணன் தம்பிக்கோ, அக்கா தங்கைக்கோ இருக்கிறதென்றால் உங்களுக்கும் வருவதற்கு ஐந்து முதல் ஏழு மடங்கு சாத்தியமிருக்கிறது.”

அமெரிக்காவில் கிளாக்கோமா ஃபௌண்டேஷன் அமைப்பிலுள்ள டாக்டர் கிவன் கிரீனஜ் என்பவர் இன்னும் சில காரணிகளைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “உங்களுக்கு 45 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்றால், ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர் என்றால், அல்லது பின்வரும் காரணிகள் ஏதாவது உங்களுக்குப் பொருந்தும் என்றால் உங்கள் கண்களை வருடா வருடம் கட்டாயம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அதாவது குடும்பத்தில் யாருக்காவது கிளாக்கோமா வந்திருந்தால், உங்களுக்கு கிட்டப்பார்வையோ சர்க்கரை வியாதியோ இருந்தால், கண்ணில் முன்பு அடிபட்டிருந்தால், அல்லது கார்டிசோன்/ஸ்டீராய்ட் அடங்கிய பொருட்களைப் தவறாமல் பயன்படுத்தி வந்திருந்தால் நீங்கள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.” இப்படி எந்த ஆபத்தான நிலையிலும் இல்லாவிட்டாலும்கூட, 45 வயதுக்குட்பட்டவராக இருந்தால் நான்கு வருடத்திற்கு ஒருமுறை கிளாக்கோமா பரிசோதனை செய்துகொள்ளும்படி அந்த அமைப்பு சிபாரிசு செய்கிறது. உங்களுக்கு 45 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை நீங்கள் செய்துகொள்ள வேண்டும்.

சிகிச்சை பெறுங்கள், சுகமடையுங்கள்

கிளாக்கோமாவுக்கு சிகிச்சை பெறுகையில் தினமும் ஒருமுறை விசேஷ கண் சொட்டு மருந்தை முன்பு குறிப்பிடப்பட்ட பவுல் என்பவர் பயன்படுத்தினார். “நான் பயன்படுத்துகிற சொட்டு மருந்து கண்மணியில் விழி நீர்மம் உற்பத்தியாவதை தடுக்கிறது” என அவர் சொல்கிறார். அவருக்கு லேசர் சிகிச்சையும் அளிக்கப்பட்டது; கண்களில் இயல்பாகவே விழி நீர்மம் வடியும் துளைகளுக்கு அருகே லேசர் மூலம் சுமார் பத்து நுண்ணிய துளைகள் போடப்பட்டன. “முதல் கண்ணுக்கு லேசர் சிகிச்சை பெற்ற சமயத்தில் எனக்குப் படபடப்பாகவும், பயமாகவும் இருந்தது, இதனால் நான் ரொம்பவே அசெளகரியமாக உணர்ந்தேன். ஆனாலும் கொஞ்ச நாட்கள் கழித்து இரண்டாவது கண்ணுக்கு அந்த சிகிச்சை அளிக்கப்பட்டபோது அடுத்தடுத்து என்ன செய்வார்கள் என்பதை அறிந்திருந்தேன். அதனால் நான் பயப்படவே இல்லை, ஆப்ரேஷன் நடந்து முடிந்ததுகூட எனக்குத் தெரியவில்லை” என்கிறார் அவர். கண்களிலுள்ள அழுத்தம் சீராக இருப்பதற்கு இந்த சிகிச்சை அவருக்கு உதவியிருக்கிறது.

இப்போது பவுல் நம்பிக்கையான மனநிலையோடு இருக்கிறார். “எனது விழித்திரை கொஞ்சம் சேதமடைந்திருக்கிறதே தவிர புற பார்வைக்கு எந்த பாதிப்பும் இல்லாததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். ஒவ்வொரு நாளும் கண்ணுக்கு நான் சொட்டு மருந்து போட்டு வந்தால் அதற்கு இனியும் எந்த பாதிப்பும் வராது” என்கிறார் அவர்.

“பதுங்கி இருந்து பார்வையைப் பறிக்கும் திருடன்” உங்கள் பார்வையையும் பறிக்கிறானா? கிளாக்கோமா இருக்கிறதா இல்லையா என இதுவரை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளாவிட்டாலும், அது வருவதற்கான காரணிகளின் பட்டியலில் உள்ளவராக இருந்தாலும், உங்கள் டாக்டரிடம் பரிசோதனை செய்ய சொல்வது ஞானமான காரியம். “ஆரம்பத்திலேயே, உரிய சிகிச்சையை அளிக்கும்போது கிளாக்கோமாவால் ஏற்படும் சேதத்தைப் பெருமளவு கட்டுப்படுத்தலாம்” என டாக்டர் கோல்ட்பர்க் சொல்கிறார். உண்மைதான், பார்வையைப் பறிக்கும் திருடனை நீங்கள் கையும் களவுமாக பிடித்துவிடலாம்! (g04 10/8)

[பக்கம் 20-ன் பெட்டி/படம்]

எப்போது கிளாக்கோமா வருவதற்கான அபாயம் அதிகமிருக்குமென்றால்

• நீங்கள் ஆப்பிரிக்க வம்சாவளியினராக இருந்தால்

• குடும்பத்தில் யாருக்காவது கிளாக்கோமா வந்திருந்தால்

• சர்க்கரை வியாதி இருந்தால்

• கிட்டப்பார்வை இருந்தால்

• சில மருத்துவ கிரீம்களிலும் ஆஸ்துமா ஸ்ப்ரேயிலும் பயன்படுத்தப்படும் கார்டிசோன்/ஸ்டீராய்ட் போன்றவற்றை நீங்கள் தவறாமல் நீண்ட காலம் பயன்படுத்தி வந்திருந்தால்

• முன்பு கண்ணில் அடிபட்டிருந்தால்

• உங்களுக்கு 45 வயதுக்கு மேல் ஆகியிருந்தால்

[படம்]

பார்வை பறிபோகாமல் தடுப்பதற்குத் தவறாமல் அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது உதவும்

[பக்கம் 19-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

திறந்த கோணக் கண் அழுத்த நோய்

கருவிழி வெண்படலம்

விழிக் கரும்படலம்

விழி வில்லைகள்

விழித்திரை

பார்வை வட்டு அல்லது குருட்டுப் பொட்டு என்ற பகுதியில்தான் நரம்பு திசுக்கள் இணைந்து பார்வை நரம்பை உருவாக்குகின்றன

பார்வை நரம்பு பார்வை உணர்வுகளை மூளைக்கு கடத்துகிறது

குருதி இழை அங்கம் என்பது திரவம் தயாராகும் பகுதியாகும்

1 விழி நீர்மம் என்பது விழி வில்லை கள், விழிக் கரும்படலம் (iris), கருவிழி வெண்படலத்தின் உட்புறம் ஆகியவற் றிற்குப் போஷாக்கு அளிக்கும் தெளிந்த திரவமாகும். கண்ணின் வெளிப்புறத்தை நனைக்கிற கண்ணீர் அல்ல இது.

2 சல்லடைப் பின்னல் வலை, திரவத்தின் வடிகாலாக இருக்கிறது

3 இப்பின்னல் வலை அடைபட்டால் அல்லது சுருங்கினால் கண்ணின் உள்ளே அழுத்தம் அதிகரிக்கிறது

4 அழுத்தம் அதிகரிக்கையில் கண்ணுக்குப் பின்புறமுள்ள மென்மையான நரம்பு இழைகள் சேதமடைகின்றன, இதனால் கிளாக்கோமா வருகிறது அல்லது பார்வை மங்குகிறது

[பக்கம் 19-ன் படங்கள்]

பார்வை வட்டு

நீங்கள் என்ன பார்ப்பீர்கள்

இயல்பான பார்வை

கிளாக்கோமாவின் முதல் நிலை

கிளாக்கோமாவின் நாள்பட்ட நிலை

[படத்திற்கான நன்றி]

பார்வை வட்டுக்களின் ஃபோட்டோக்கள்: Courtesy Atlas of Ophthalmology