Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளையை சீராட்டி பாராட்டி வளர்ப்பது ஏன் முக்கியம்

பிள்ளையை சீராட்டி பாராட்டி வளர்ப்பது ஏன் முக்கியம்

பிள்ளையை சீராட்டி பாராட்டி வளர்ப்பது ஏன் முக்கியம்

பிள்ளைப் பருவத்தில் கற்கும் விஷயங்கள் அல்லது கற்காமல்விடும் விஷயங்கள் எதிர்காலத்தில் அப்பிள்ளையின் திறமைகளைப் பாதிக்கலாம். அப்படியானால், பிள்ளைகள் முதிர்ச்சி அடையவும் வாழ்க்கையில் நன்கு முன்னுக்கு வரவும் பெற்றோரிடமிருந்து என்ன தேவை? சமீப பத்தாண்டுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் சிலர் என்ன முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.

மூளையிலுள்ள சினாப்ஸ்களின் பங்கு

‘பிரெய்ன்-இமேஜிங் டெக்னாலஜி’யில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், மூளை வளர்ச்சியைப் பற்றி விஞ்ஞானிகளால் முன்பைவிட இப்பொழுது அதிக நுணுக்கமாக ஆராய முடிகிறது. தகவல்களைக் கையாளுவதற்கும், உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்துவதற்கும், மொழியறிவுத் திறனில் சிறந்து விளங்குவதற்கும் தேவையான மூளையின் திறமைகளை வளர்ப்பதற்குக் குழந்தைப் பருவமே முக்கியமான காலகட்டம் என்பதை இந்த ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. ‘இந்தப் பருவத்தில்தான் மூளை இணைப்புகள் அசாதாரணமான வேகத்தில் உருவாகின்றன; மரபு அமைப்பும் சூழலும் வினாடிக்கு வினாடி இணைந்து செயல்படுவதால் மூளையின் நரம்பு இணைப்புகள் அப்போதுதான் வடிவமைக்கப்படுகின்றன’ என நேஷன் என்ற பத்திரிகை அறிவிக்கிறது.

சினாப்ஸ்கள் என அழைக்கப்படும் இந்த இணைப்புகளில் பெரும்பாலானவை குழந்தை பிறந்த சில வருடங்களில் உருவாகின்றன என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இந்தக் காலகட்டத்தில்தான் “ஒரு குழந்தை அறிவுக்கூர்மையுடனும், தன்னைப் பற்றிய உணர்வுடனும், நம்பிக்கையுடனும், கற்றுக்கொள்ள வேண்டுமென்ற தூண்டுதலுடனும் வளருவதற்குத் தேவையான இணைப்புகள் மூளையில் உருவாகின்றன” என டாக்டர் டி. பெர்ரி பிரேஸல்டன் கூறுகிறார், இவர் குழந்தை வளர்ச்சி துறையில் நிபுணர் ஆவார்.

ஒரு குழந்தையின் மூளை இந்த முதல் சில வருடங்களில்தான் அளவிலும் நரம்பு இணைப்புகளிலும் செயல்பாட்டிலும் வியத்தகு விதத்தில் வளர்ச்சி அடைகிறது. தூண்டுதல்களும் கற்றுக்கொள்ளும் அனுபவங்களும் அதிகம் கிடைக்கும் ஒரு சூழலில் சினாப்டிக் இணைப்புகள் பெருகுகின்றன, அதனால் மூளையில் பேரளவில் இணைப்புகள் உருவாகின்றன. இந்த இணைப்புகளே சிந்திக்கும், கற்றுக்கொள்ளும், நியாயங்காட்டும் திறமைகளை வளர்க்கின்றன.

ஒரு சிசுவின் மூளைக்கு எந்தளவு அதிகமாக தூண்டுதல் கிடைக்கிறதோ அந்தளவு அதிகமான மூளை செல்கள் தூண்டுவிக்கப்பட்டு அவற்றிற்கு இடையே அந்தளவு அதிகமான இணைப்புகளும் உருவாகின்றன. அக்கறைக்குரிய விஷயம் என்னவென்றால், தகவல்கள், எண்கள், மொழிகள் ஆகியவற்றால் பெறப்படும் அறிவுப்பூர்வமான தூண்டுதலை மட்டுமே இது குறிப்பதில்லை. உணர்ச்சிப்பூர்வமான தூண்டுதலும் தேவை என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சிசுக்களை அணைக்காமல், தொடாமல், உணர்ச்சிப்பூர்வமாக தூண்டாமல், அவர்களோடு விளையாடாமல் இருக்கும்போது இந்த சினாப்டிக் இணைப்புகள் அதிகம் உருவாவதில்லை என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது.

சீராட்டி பாராட்டி வளர்ப்பதும் திறமையும்

பிள்ளை வளர்ந்து பெரியவனாகையில், தேவையற்ற சினாப்டிக் இணைப்புகளை உடல் களைந்துவிடுவதாக தோன்றுகிறது. இது பிள்ளையின் திறமையை வெகுவாக பாதிக்கலாம். “சரியான வயதில் சரியான வகை தூண்டுதல் பிள்ளைக்குக் கிடைக்கவில்லை என்றால், நரம்பு இணைப்புகள் சரியாக வளராது” என மூளை ஆய்வாளர் மாக்ஸ் சினாடர் கூறுகிறார். இதன் விளைவாக, IQ குறைவுபடுதல், பேச்சு மற்றும் கணித திறமைகள் குன்றுதல், வயதுவந்த பருவத்தில் உடல்நல பிரச்சினைகள் ஆகியவையும் நடத்தை சம்பந்தமான பிரச்சினைகளும்கூட ஏற்படலாம் என டாக்டர் ஜே. ஃபிரேசர் மஸ்டர்டு கூறுகிறார்.

ஆகவே, சிசுப் பருவத்தில் ஒரு பிள்ளைக்குக் கிடைக்கும் அனுபவங்கள் வயதுவந்த பருவத்தில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. ஏதாவது கஷ்டம் ஏற்படுகையில் அதற்கேற்றவாறு தன்னை சரிப்படுத்திக்கொள்ளும் திறமையுடையவரா அல்லது எளிதில் துவண்டுவிடுபவரா, அறிவுப்பூர்வமாக சிந்திப்பவரா அல்லது அவ்வாறு சிந்திக்கும் திறமையற்றவரா, அனுதாபமுள்ளவரா அல்லது அனுதாபமற்றவரா என்பதெல்லாம் பிள்ளைப் பருவத்தின் ஆரம்பத்தில் பெற்ற அனுபவங்களையே சார்ந்திருக்கிறது. ஆகவே பெற்றோருடைய பங்கு மிகவும் இன்றியமையாதது. “பிள்ளை ஆரம்ப காலத்தில் பெறும் அனுபவங்களைப் பொறுத்தவரை பெற்றோருடைய பங்கு மிக அத்தியாவசியமான அம்சமாயிருக்கிறது” என குழந்தை வளர்ப்பு நிபுணர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

உங்கள் பிள்ளைகளை சீராட்டி பாராட்டி வளருங்கள், அவர்கள் செழித்தோங்குவர் என்பது கேட்பதற்கு மிகவும் எளிதாக தொனிக்கலாம். ஆனால் பிள்ளைகளை எப்படி சரியான விதத்தில் சீராட்டி பாராட்டி வளர்ப்பதென்பதை புரிந்துகொள்வது எப்போதும் மிக எளிதல்ல என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்கிறார்கள். திறம்பட்ட பெற்றோராக இருப்பது எப்பொழுதும் இயல்பாக வந்துவிடுவதில்லை.

ஒரு சுற்றாய்வின்படி, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் விதம் அவர்களின் அறிவுக்கூர்மையை, நம்பிக்கையை, கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அதிகரிக்கவும் செய்யலாம் மழுங்கவும் செய்யலாம் என்பது 25 சதவீத பெற்றோருக்கு தெரியவில்லை. இது பின்வரும் கேள்விகளை எழுப்புகிறது: உங்களுடைய பிள்ளையின் திறமையை வளர்ப்பதற்கு எது மிகச் சிறந்த வழி? எவ்வாறு சரியான சூழலை உங்களால் உருவாக்க முடியும்? இவற்றை நாம் இப்பொழுது ஆராயலாம். (g04 10/22)

[பக்கம் 6-ன் படம்]

தூண்டுதல் அளிக்கப்படாத சிசுக்கள் மற்றவர்களைப் போல நன்கு வளராது