Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முதியவர்களை எவ்வாறு நடத்த வேண்டும்?

முதியவர்களை எவ்வாறு நடத்த வேண்டும்?

பைபிளின் கருத்து

முதியவர்களை எவ்வாறு நடத்த வேண்டும்?

கடந்த 60 வருடங்களில் இந்த உலகம் காணாத வெப்பம் 2003-⁠ல் ஐரோப்பா முழுவதையும் சுட்டுப் பொசுக்கியது, ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். இவர்களில் அநேகர் வயதானவர்கள். விடுமுறையைக் கழிக்கச் சென்ற குடும்பத்தினர்கள் இவர்களில் சிலரை வீட்டில் தனியாக விட்டுச் சென்றிருந்தார்கள். இன்னும் சிலரோ ஆஸ்பத்திரியிலும் காப்பகத்திலுமுள்ள களைத்துப்போன ஸ்டாஃப்களால் கவனிக்காமல் விட்டுவிடப்பட்டிருந்தார்கள் என அறிக்கை காண்பிக்கிறது. பாரிஸ் நகரில் மட்டும் 450 சடலங்கள் கேட்பாரற்றுக் கிடந்தன என்று லீ பாரிஸெங் என்ற செய்தித்தாள் சொல்கிறது. அநாதைகளாக சாகும்படி விடப்பட்டவர்களின் நிலையைக் குறித்து அந்தச் செய்தித்தாள் கேட்கும் கேள்வி இது: “நம்முடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என எல்லாரையும் மறந்துபோகிறோம் என்றால் நாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம், சொல்லுங்கள்?”

இன்று, 65 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் 7,95,000 பேர் வயதானவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். எனவே வயதானவர்களின் தேவைகளைக் கவனித்துக் கொள்வது என்பது இன்றைய மிகப் பெரிய சவால்களில் ஒன்று. “உலகம் முழுவதும் என்றுமில்லாத அளவுக்கு முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மூப்பையும் அதன் சவால்களையும் மற்ற நாடுகள் எவ்வாறு சமாளிக்கின்றன என்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும்” என்று நான்ஸி கார்டன் என்பவர் சொல்கிறார். இவர் அமெரிக்காவிலுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் திட்ட உதவி இயக்குநர் ஆவார்.

நம்முடைய படைப்பாளர்கூட முதியவர்களிடம் அக்கறை காட்டுகிறார். சொல்லப்போனால், அவருடைய வார்த்தையாகிய பைபிளில் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார்.

முதியோருக்கு மரியாதை காட்டுதல்

மோசேக்கு கொடுக்கப்பட்ட கடவுளின் நியாயப்பிரமாணம் முதியவர்களுக்கு மரியாதை காட்டும்படி உற்சாகப்படுத்தியது. ‘நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணு’ என்று அது குறிப்பிட்டது. (லேவியராகமம் 19:32) கடவுளின் கீழ்ப்படிதலுள்ள ஊழியர்கள் இரண்டு காரணங்களுக்காக முதியவர்கள் முன் ‘எழுந்து நிற்க’ வேண்டியிருந்தது. அதாவது, முதியவர்களுக்கு மரியாதை காட்டுவதற்கு அடையாளமாகவும் கடவுளுக்குப் பயந்து நடப்பதற்கு அத்தாட்சியாகவும் எழுந்து நிற்க வேண்டியிருந்தது. எனவே வயதானவர்களைக் கனத்திற்கு உரியவர்களாகவும் மதிப்புமிக்க பொக்கிஷங்களாகவும் கருத வேண்டியிருந்தது.​—நீதிமொழிகள் 16:31; 23:22.

இன்று கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. என்றாலும் அதன் நியமங்கள் மூலம் யெகோவாவின் சிந்தனைகளைத் தெரிந்துகொள்கிறோம், அதோடு அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிற காரியங்களையும் தெரிந்துகொள்கிறோம். மேலும், வயதானவர்களைக் கடவுள் உண்மையிலேயே உயர்வாக கருதுகிறார் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அந்த நியமங்களை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டார்கள். அதற்கான சான்று அப்போஸ்தலர் புத்தகத்தில் பதிவாகியுள்ளது. எருசலேமில் அப்போது வாழ்ந்த கிறிஸ்தவர்களில் ஏழை விதவைகள் சிலரும் இருந்தார்கள். அவர்களில் நிறைய பேர் முதியவர்களாக இருந்தார்கள். இந்த விதவைகளுக்குத் தினந்தோறும் உணவுக்கு ஏற்பாடு செய்ய “நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழு பேரை” அப்போஸ்தலர்கள் நியமித்தார்கள். இவ்வாறு விசேஷ உதவி அளிப்பதை சபையின் ‘அவசிய வேலையென்று’ (NW) அவர்கள் கருதினார்கள்.​—அப்போஸ்தலர் 6:1-7.

பவுல் தனது கடிதத்தில், ‘நரைத்தவனுக்கு முன்பு எழுந்து நிற்க வேண்டும்’ என்ற நியமத்தை கிறிஸ்தவ சபைக்குப் பொருத்தி எழுதியிருந்தார். ‘முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப் போலும், . . . முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப் போலும் பாவிக்க’ வேண்டுமென்று பவுல் இளம் கிறிஸ்தவக் கண்காணியான தீமோத்தேயுவுக்குச் சொன்னார். (1 தீமோத்தேயு 5:1, 2) வயதான கிறிஸ்தவ சகோதரர்கள் மீது இளம் தீமோத்தேயுவுக்கு ஓரளவு அதிகாரம் இருந்தது. என்றபோதிலும் வயது முதிர்ந்த ஆண்களை அவர் இழிவுபடுத்தாமல் அவர்களை மரியாதையுடன் தகப்பனைப் போல நடத்த வேண்டியிருந்தது. அதேவிதமாக சபையிலுள்ள பெண்களையும் அவர் மரியாதையுடன் நடத்த வேண்டியிருந்தது. ஆம், ‘நரைத்தவனுக்கு முன்பு எழுந்து நிற்க வேண்டும்’ என்ற அறிவுரையை பவுல் தீமோத்தேயுவுக்குக் கொடுத்தார். ஆனாலும் கிறிஸ்தவ சபையிலுள்ள எல்லோருக்குமே பொதுவாக அவர் இந்த நியமத்தைப் பொருத்துகிறார்.

ஆம், முதிர் வயதினரை மதிப்பு மரியாதையுடன் நடத்த கடவுளுடைய மக்களுக்கு எந்தச் சட்டமும் தேவையில்லை. பைபிளில் யோசேப்பின் உதாரணத்தைக் கவனியுங்கள். யோசேப்பின் தந்தை வசித்த இடத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. செலவுக்குப் பயந்து யோசேப்பு தன்னுடைய தந்தையை அங்கேயே விட்டுவிடவில்லை, மாறாக எகிப்துக்கு அழைத்து வந்தார்; அதனால் 130 வயதான யாக்கோபு பஞ்சத்தின் பிடியிலிருந்து தப்பினார். 20-⁠க்கும் மேலான வருடங்களுக்குப் பிறகு தன் தந்தையைப் பார்த்ததும் யோசேப்பு ‘அவருடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவர் கழுத்தை விடாமல் அழுதார்.’ (ஆதியாகமம் 46:29) முதியவர்களைப் பரிவோடும் ஆழ்ந்த மரியாதையோடும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அப்போது இஸ்ரவேலருக்கு எந்தச் சட்டமும் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் சட்டம் வரும் முன்பே யோசேப்பு அதைக் கடைப்பிடித்தார், இதன் மூலம் காரியங்களைக் கடவுளுடைய நோக்குநிலையில் பார்த்தார்.

இயேசுவும்கூட பூமியிலிருந்தபோது முதியவர்களிடம் அக்கறை காண்பித்தார். ஆனால் அன்றிருந்த மதத் தலைவர்கள் வயதான பெற்றோர்களைக் கவனிக்காமல் மதப் பாரம்பரியங்களின் அடிப்படையில் அதைத் தட்டிக் கழிப்பதை நியாயப்படுத்தினார்கள். அப்படிப்பட்ட மதத் தலைவர்களை இயேசு கடுமையாகக் கண்டித்தார். (மத்தேயு 15:3-9) அவர் தமது தாயையும் அன்புடன் கவனித்துக் கொண்டார். கழுமரத்தில் கடும் வேதனையில் இருந்தபோதுகூட தம்முடைய பிரியமான அப்போஸ்தலன் யோவானிடம் தமது வயதான தாயை கவனித்துக்கொள்ளச் சொன்னார்.​—யோவான் 19:26, 27.

உண்மை ஊழியர்களைக் கடவுள் கைவிடுவதில்லை

“முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளி விடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்” என்று சங்கீதக்காரன் தாவீது ஜெபித்தார். (சங்கீதம் 71:9) இனி வாழ்ந்து என்ன பயன் என்று கடவுளுடைய உண்மை ஊழியர்கள்கூட சில சமயங்களில் நினைக்கலாம். ஆனால் அப்படிப்பட்டவர்களை யெகோவா ‘தள்ளிவிடுவதில்லை.’ சங்கீதக்காரன் தன்னை யெகோவா கைவிட்டுவிட்டதாக நினைக்கவில்லை. மாறாக, தனக்கு வயதாக ஆக யெகோவாவை அதிகமாய் சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்தார். அப்படி உத்தமராக இருப்பவர்களுக்கு யெகோவா காலம் பூராவும் உதவுவார். (சங்கீதம் 18:25) பெரும்பாலும் அது போன்ற உதவி நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்கள் மூலமாகவே வருகிறது.

கடவுளைக் கனம்பண்ண விரும்புவோர் முதியவரையும் கனம்பண்ண வேண்டும் என்பதை இதுவரை சிந்தித்த விஷயங்களிலிருந்து தெரிந்து கொண்டோம். நம்முடைய படைப்பாளர் முதிர்வயதினரை உயர்வாக மதிக்கிறார். கடவுளுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட நாமும் ‘நரைமயிர் உள்ளவர்களை’ எப்போதும் கடவுளுடைய கண்ணோட்டத்தில் பார்ப்போமாக.​—சங்கீதம் 71:18. (g04 10/8)

[பக்கம் 17-ன் படம்]

முதியோரை மதிப்பு மரியாதையுடன் கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்கள்