Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விளையாட்டு சாமான்களே இல்லாத நர்சரிகள்

விளையாட்டு சாமான்களே இல்லாத நர்சரிகள்

விளையாட்டு சாமான்களே இல்லாத நர்சரிகள்

ஜெர்மனியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ஒருநாள் காலை வழக்கம் போல் நர்சரிக்குச் சென்ற வாண்டுகளுக்கு ஒரே ஏமாற்றம்​—⁠ஒரு பொம்மையையும் காணோம்! விளையாட்டு சாமான்களையும் காணோம்! அவற்றையெல்லாம் தேடிக்கொண்டு அந்த நர்சரி முழுவதும் ரூம் ரூமாக பரிதாபமாய் சுற்றி வந்தன. ஆனால் ஒன்றும் அகப்படவில்லை. டேபிள் சேர்கள் மட்டும்தான் இருந்தன. சரி, புத்தகங்களும் வீடு கட்டி விளையாட ப்ளாக்ஸ்களுமாவது அகப்பட்டனவா? இல்லை, அவையும் அகப்படவில்லை. ஏன் பேப்பர், கத்தரிக்கோல்கூட அவர்கள் கையில் சிக்கவில்லை. எல்லா விளையாட்டு சாமான்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. அந்த நர்சரியை நடத்துபவர்கள் அவற்றையெல்லாம் அந்தக் குழந்தைகளின் கண்ணிலே அடுத்த மூன்று மாதங்களுக்குக் காட்டப் போவதில்லையாம். ஏன்? எதற்காக?

ஆஸ்திரியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் மேற்சொல்லப்பட்டது போன்ற நர்சரிகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. விளையாட்டு சாமான்கள் இல்லாத நர்சரிகள் என்ற வித்தியாசமான ஒரு புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் கேட்பதற்கே விசித்திரமாக இருந்தாலும், ஐரோப்பிய யூனியனின் சுகாதார வல்லுநர்கள் இதற்குப் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார்கள். ஏதோ ஒன்றுக்கு அடிமையாகி விடுவதை தடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். சிறு வயதிலேயே மற்றவர்களுடன் நன்கு பழகக் கற்றுக்கொண்டால் பிற்காலத்தில் எந்தவித பழக்கத்திற்கும் ஆட்கள் அடிமையாகிவிட மாட்டார்கள் என்பதை சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மற்றவர்களுடன் பழகுவதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது? “உரையாடுவது, தயக்கமின்றி மற்றவர்களை அணுகுவது, கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பது, தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்பது, தங்களுக்கென்று சில லட்சியங்களை வைப்பது, பிரச்சினைகளைக் கண்டறிந்து, உதவி நாடி, தீர்வு காண்பது” ஆகியவையெல்லாம் அதில் உட்பட்டிருப்பதாக ஒரு செய்தித்தாள் சொல்கிறது. இத்திறன்களைச் சின்னஞ்சிறு வயதிலேயே வளர்க்க வேண்டுமென இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு விளையாட்டு சாமான் இல்லாத நேரமே மிகவும் கைகொடுக்கிறது. அதோடு, பிள்ளைகளுடைய கற்பனைத் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்க்க உதவுகிறது.

நர்சரியில் மூன்று மாதங்களுக்கு விளையாட்டு சாமான் இருக்காது என்ற விஷயம் நன்கு திட்டமிடப்பட்டது; இதைப் பற்றி பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. விளையாட்டு சாமான்கள் இல்லாததால் ஆரம்பத்தில் சில பிள்ளைகள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்கள். “இன்னும் சில நர்சரிகளில் பிள்ளைகள், முதல் நான்கு வாரங்களுக்கு முரண்டு பிடிக்கிறார்கள்.” இப்படிப்பட்ட பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இத்திட்டத்தை வகுத்தவர்களே திணறினார்களாம். ஆனால் குழந்தைகள் எந்தச் சூழ்நிலையில் இருக்கவும் பழகிக்கொள்கிறார்கள்; புதிது புதிதாக காரியங்களைச் செய்ய கற்றுக்கொள்கிறார்கள். விளையாட்டு சாமான்கள் இல்லாததால், மற்ற பிள்ளைகளுடன் அதிகமாக கலந்து பேசுகிறார்கள், திட்டமிடுகிறார்கள், ஒன்று சேர்ந்து விளையாடுகிறார்கள். இப்படியாக மற்றவர்களுடன் பழகும் இயல்பும் பேச்சுத் திறனும் வளர்கின்றன. ஒரு சமயத்தில் பொம்மைகளுக்குப் பின் “ஒளிந்து கொண்ட” பிள்ளைகள் இப்போது நண்பர்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். பிள்ளைகளிடம் நல்ல மாற்றங்களைப் பெற்றோரால் பார்க்க முடிகிறது. அவர்கள் முன்பைவிட விளையாட்டில் படுசுட்டியாக இருப்பதையும் அவர்களுடைய கற்பனைத் திறன் அதிகரித்திருப்பதையும் அவர்கள் கவனித்திருக்கிறார்கள். (g04 9/22)