உடல் பருமனோடு போராட்டம்—முயற்சிக்குத் தகுந்த பலன் உண்டா?
உடல் பருமனோடு போராட்டம்—முயற்சிக்குத் தகுந்த பலன் உண்டா?
உடல் பருமனோடு போராடிய அநேகரை விழித்தெழு! பேட்டி கண்டது. முயற்சிக்குத் தகுந்த பலன் அவர்களுக்குக் கிடைத்ததா? இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மற்றவர்களுக்கு அவர்கள் என்ன ஆலோசனைகள் தருகிறார்கள்?
◼ மைக் என்பவரின் வயது 46, உயரம் ஆறு அடி, தற்போதைய எடை 130 கிலோ. ஒருசமயத்தில் அவரது எடை அதிகபட்சம் 157 கிலோவாக இருந்தது.
மைக்: “சின்ன வயதிலிருந்தே பூசணிக்காய் மாதிரிதான் இருந்தேன். எங்க வீட்டில் எல்லாருமே அப்படித்தான். அண்ணன், அக்கா, தங்கை எல்லாரும் செம குண்டு. தட்டில் போட்ட சாப்பாட்டை கொஞ்சங்கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பது எங்கள் பழக்கம், தட்டு நிறைய குவித்துக் கொடுத்தாலும் க்ளீனாக சாப்பிட்டு முடித்துவிடுவோம். பிறகு எப்படி மாறினேன் தெரியுமா? ‘உனக்கு எந்நேரத்திலும் சர்க்கரை வியாதி வந்துவிடலாம்’ என டாக்டர் சொன்னாரோ இல்லையோ பயந்துவிட்டேன். வாழ்க்கை பூராவும் இன்சுலின் போட வேண்டிய நினைப்பே என்னை குலைநடுங்க வைத்தது. போதாததற்கு பயங்கர கொலஸ்ட்ரால் இருந்ததால் அதற்காகவும் மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டியிருந்தது.
“வண்டி ஓட்டுவதுதான் என் வேலை. இப்போதும் அதே வேலையில்தான் இருக்கிறேன். பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பதால் அதை ஈடுகட்ட தவறாமல் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறேன். வாரத்தில் மூன்று முறையாவது அரை மணிநேரத்திற்கு ட்ரெட்மில்லில் ஓடுகிறேன். ஒவ்வொரு நாளும் என்னென்ன சாப்பிடுகிறேன் என்பதை எழுதி வைப்பதும் எனக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. வாராவாரம் அந்த லிஸ்ட்டை என் உணவு நிபுணர் பார்ப்பார் என்ற எண்ணமே கன்ட்ரோலோடு இருக்க உதவியிருக்கிறது. ‘அதை சாப்பிடவில்லை என்றால், அதை எழுதவும் வேண்டியதில்லையே’ என்று மனதில் சொல்லிக்கொள்வேன்.
“இதன் விளைவாக, கடந்த 15 மாதங்களில் 28 கிலோ குறைந்துவிட்டேன். ஆனாலும் நான் இன்னும் இளைக்க வேண்டும், 102 கிலோவுக்கு வர வேண்டும். இதற்காக உருளைக்கிழங்கு சிப்ஸ், மற்ற சிற்றுண்டிகள், காஸிரோல்கள் போன்றவற்றை சாப்பிடுவதில்லை. கடந்த சில மாதங்களில்தான் பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக சாப்பிட்டிருக்கிறேன். இது என் வாழ்நாளில் மொத்தமாக சாப்பிட்டதைவிட அதிகம்!
“இன்னொரு விஷயமும் எனக்கு தூண்டுகோலாக இருந்தது. நான் ட்ரக் டிரைவர் என்பதால் வருடாவருடம் மருத்துவ செக்கப் செய்துகொண்டால்தான் லைசென்ஸைப் புதுப்பிக்க முடியும். சர்க்கரை வியாதி வரும் வாய்ப்பு அதிகமிருந்ததால் என் லைசென்ஸைப் பறிகொடுக்கும் ஆபத்தில் இருந்தேன். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. கொலஸ்ட்ராலுக்காக மருந்து எடுப்பதில்லை. என் இரத்த அழுத்தம் குறைந்துவிட்டதால் அதற்காகவும் அவ்வளவாக மருந்துகள் எடுப்பதில்லை. அதிக தெம்பாக இருக்கிறேன். கடுமையான முதுகு வலியும்கூட குறைந்துவிட்டது. பருமனானவர்களின் பட்டியலிலிருந்து மெதுமெதுவாக விடுபடுகிறேன்!”
விழித்தெழு!: “உடல் எடையைக் குறைப்பதில் மனைவிமார் பங்களிக்க முடியுமா?”
மைக்: “எடையைக் குறைக்க முயற்சி செய்யும்போது உங்களை உற்சாகப்படுத்த ஒருவர் வேண்டும். என் மனைவி எனக்கு வயிறார சாப்பிடக் கொடுப்பாள்; அப்படி கொடுப்பதால், தான் அன்பு காட்டுவதாய் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அளவாக சாப்பிட உதவுகிறாள். நான் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால்கூட போதும், அளவை மீறிவிடுவேன், பிறகு மறுபடியும் எடை கூடிவிடுவேன். அதனால் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டியிருக்கிறது.”
◼ மைக் என்ற இன்னொருவர் அமெரிக்காவிலுள்ள கான்ஸாஸைச் சேர்ந்தவர். அவருடைய வயது 43, உயரம் ஐந்து அடி எட்டு அங்குலம். எந்தளவு குண்டாயிருந்தார் என்றும் அதற்கான காரணங்களையும் அவரிடம் கேட்டோம்.
மைக்: “நான் கிட்டத்தட்ட 135 கிலோ இருந்தேன். எப்போதும் சோர்வாகவே இருந்தேன், எதைச் செய்வதற்குமே சக்தி இருக்காது. மூச்சு விட சிரமமாக இருந்ததால் சரியாகத் தூங்கவும் முடியவில்லை. ஆகவே டாக்டரிடம் சென்றேன். என் எடைக்கு ஒரு காரணம் அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா என்ற ஒருவித தூக்கக் கோளாறு என்று சொன்னார். a எனக்கு இரத்த அழுத்தம் அதிகமாய் இருந்ததாகவும் சொன்னார்.”
விழித்தெழு!: “உங்கள் பிரச்சினைகளை எப்படித் தீர்த்தீர்கள்?”
மைக்: “தூங்கும்போது ஒரு சாதனத்தைப் பொருத்திக்கொள்ளும்படி டாக்டர் பரிந்துரை செய்தார். அந்தச் சாதனம் சரியாக சுவாசிக்கத் தேவையான காற்று கிடைக்கும்படி செய்யும். ஆகையால் தூங்கும்போதும் மூச்சு முட்டாமல் நன்கு சுவாசிக்க முடிந்தது. இதனால் பகலில் அதிக சுறுசுறுப்பானேன், இளைக்கவும் ஆரம்பித்தேன். வாரத்தில் மூன்று முறை ட்ரெட்மில்லில் ஓடவும் துவங்கினேன். பிறகு பத்திய சாப்பாடு சாப்பிட்டேன், அதுவும் அளவாக சாப்பிட்டேன். ஒரு வருடத்திற்குள் 20 கிலோ இறங்கிவிட்டேன், இன்னும் 20 கிலோ குறைய வேண்டும். மெதுமெதுவாகத்தான் அதைச் செய்ய முடியும், ஆனால் கட்டாயம் செய்தே தீருவேன்.”
விழித்தெழு!: எடையைக் குறைக்க உங்களுக்கு வேறென்ன தூண்டுதல் இருந்திருக்கிறது?
மைக்: “உங்கள் தோற்றத்தைப் பற்றி மற்றவர்கள் கேலி கிண்டல் செய்து கமென்ட் அடிப்பதைக் கேட்பது கஷ்டமாக இருக்கும். நீங்கள் ஒரு சோம்பேறி என அவர்கள் நினைப்பார்கள். குண்டாயிருப்பதற்கு வேறு அநேக காரணங்கள் இருக்கலாம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதே இல்லை. என் விஷயத்தில், அது பரம்பரைக் கோளாறு என்று நினைக்கிறேன். ஏனென்றால் என் குடும்பத்தில் கிட்டத்தட்ட எல்லாருமே பெரிய சைஸ்தான்.
“இருந்தாலும் எடையைக் குறைப்பதற்கு, உடற்பயிற்சி செய்வதுடன், சாப்பாட்டு விஷயத்தில் மிகக் கறாராகவும் இருக்க வேண்டும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.”
◼ ஆரிகான் நகரைச் சேர்ந்த வேன் என்பவரையும் விழித்தெழு! பேட்டி கண்டது. 31 வயதில் அவரது எடை 112 கிலோவாக இருந்தது.
வேன்: நான் உட்கார்ந்தபடியே வேலை பார்க்க வேண்டியிருந்தது, ஆகவே உடல் உழைப்பு இருக்கவில்லை.
டாக்டரிடம் போனபோது எனக்கு இரத்த அழுத்தம் இருப்பதாகவும் இதய நோய் வரும் வாய்ப்பு இருப்பதாகவும் சொன்னார். அதைக் கேட்டவுடன் எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. பிறகு அந்த டாக்டர் என்னை உணவு நிபுணரிடம் அனுப்பினார். அந்த நிபுணர் உடற்பயிற்சித் திட்டத்தையும் உணவுக் கட்டுப்பாட்டையும் கறாராக கடைப்பிடிக்க வைத்தார். தினமும் ஒரே மூச்சில் 5 கிலோமீட்டர் தூரம் நடந்தேன்; உடற்பயிற்சி செய்வதற்காக ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்தேன். என்னென்ன சாப்பிடுகிறேன், என்னென்ன குடிக்கிறேன் என்ற விஷயத்தில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. நொறுக்குத்தீனி, ரொட்டி, சோடா போன்றவற்றையெல்லாம் தவிர்த்து பழங்களையும் காய்கறிகளையும் அதிகமாக சாப்பிட ஆரம்பித்தேன். இப்போது என் எடை 80 கிலோதான்!”விழித்தெழு!: “என்ன நன்மைகளை அடைந்திருக்கிறீர்கள்?”
வேன்: “புதுத் தெம்பு கிடைத்திருக்கிறது, வாழ்கிறேன் என்ற உணர்வுகூட இப்போதுதான் வந்திருக்கிறது. முன்பெல்லாம் ஏதோ நடைப்பிணம் போல் இருந்தேன். இன்னொரு நன்மை என்னவென்றால், இரத்த அழுத்தத்திற்கான மருந்து மாத்திரைகளை இப்போது நிறுத்திவிட்டேன். அதுமட்டுமல்ல, இப்போது மற்றவர்களுடைய முகத்தைப் பார்த்து பேச முடிகிறது; ஏனென்றால் என் உருவத்தைப் பற்றி மனசுக்குள் ஏதோ கமென்ட் அடிக்கிறார்கள் என்ற மன உறுத்தல் இல்லை.”
◼ சார்ல்ஸ் என்பவர் (உண்மைப் பெயர் அல்ல) ஆறு அடி, ஐந்து அங்குலம் உயரமுள்ளவர். அவர் ஒருசமயம் 168 கிலோ எடையுள்ளவராய் இருந்தார்.
சார்ல்ஸ்: “எனக்குப் பெரிய பெரிய வியாதி எல்லாம் இருந்தது, நிலைமை மோசமாகிக்கொண்டே போனது. படிக்கட்டு ஏற முடியவில்லை. நான் பார்த்த வேலையை சரிவர முடிக்க சக்தி இருக்கவில்லை. உட்கார்ந்தே ஆராய்ச்சி செய்ய வேண்டிய பொறுப்புள்ள வேலை அது. முக்கியமாக டாக்டரைப் போய் பார்த்த பிறகு நான் இளைக்கத்தான் வேண்டும் என முடிவுசெய்தேன். ஏனென்றால் ஸ்ட்ரோக் வரும் ஆபத்து எனக்கு இருப்பதாக அவர் எச்சரித்தார். ஸ்ட்ரோக் நோயாளிகள் படும் பாட்டை நான் பார்த்திருந்தேன். ஆகவே வரும் முன் காப்பதே மேல் என தீர்மானித்தேன். டாக்டரின் கண்காணிப்பில் உடற்பயிற்சி செய்தேன்; ட்ரெட்மில்லில் ஓடினேன். பத்திய சாப்பாடு சாப்பிட்டேன். இந்த ஒரு வருடத்தில் 136 கிலோவுக்கு இறங்கிவிட்டேன், ஆனால் இன்னும்கூட இளைக்க வேண்டுமென எனக்குத் தெரியும். ஏற்கெனவே பெற்ற நன்மைகளை வைத்துப் பார்க்கும்போது எவ்வளவு தியாகமும் முயற்சியும் செய்தாலும் தகும் என்றுதான் நினைக்கிறேன். இப்போது என்னால் படிக்கட்டு ஏற முடிகிறது, அதிக தெம்பாக இருக்கிறேன்.”
◼ மார்டா என்பவர் எல் சால்வடாரைச் சேர்ந்தவர்; ஒருசமயத்தில் அவரது எடை 83 கிலோ. அவரது உயரம் ஐந்து அடி, ஐந்து அங்குலம். ஆகவே பருமனானவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
மார்டா: “நான் ஒரு டாக்டரைப் போய் பார்த்தேன், உடனடியாக எடையைக் குறைக்க வேண்டும் என அவர் கண்டிப்பாக சொல்லிவிட்டார். டாக்டருடைய பேச்சுக்கு மதிப்பு கொடுத்தேன். ஆலோசனை கேட்பதற்காக அவர் என்னை உணவு நிபுணரிடம் அனுப்பினார். அந்த நிபுணர் நான் என்னென்ன செய்ய வேண்டும் என்றும் அதற்குரிய காரணங்களையும் விலாவாரியாக விளக்கினார். எப்படி அளவாக சாப்பிடுவது, எப்படி ‘வாயைக் கட்டுவது’ என்றெல்லாம் அவர் சொன்னார். முதலில், வாரா வாரம் நான் அவரிடம் ரிப்போர்ட் பண்ண வேண்டியிருந்தது. பிறகு மாதத்திற்கு ஒருமுறை ரிப்போர்ட் பண்ணினேன். டாக்டரும் சரி உணவு நிபுணரும் சரி, நான் நல்ல முன்னேற்றம் செய்வதாக சொல்லி உற்சாகப்படுத்தினார்கள். கடைசியில் 12 கிலோ குறைந்தேன்; இப்போது என் எடை கிட்டத்தட்ட 68 கிலோ, அது மறுபடியும் ஏறாதபடி பார்த்துக்கொள்கிறேன்.”
விழித்தெழு!: “உடற்பயிற்சியையும் மருந்தையும் பற்றி என்ன சொல்கிறீர்கள்?”
மார்டா: “எனக்கு கொலஸ்ட்ரால் பிரச்சினை இருந்ததில்லை, அதனால் மருந்து மாத்திரை சாப்பிடவில்லை. ஆனால் தினமும் கொஞ்ச நேரத்திற்கு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தேன்.”
விழித்தெழு!: “நண்பர்கள் வீட்டுக்குச் சென்றபோது அவர்கள் உங்களை அதிகம் சாப்பிடும்படி வற்புறுத்தியிருக்கலாம், அப்போது என்ன செய்தீர்கள்?”
மார்டா: “‘இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருக்கிறார், என் உடம்புக்கு நல்லதில்லையாம்’ என சொல்வேன், அதற்கு மேல் பொதுவாக அவர்கள் வற்புறுத்த மாட்டார்கள்.”
ஆகவே நீங்கள் ஓரளவு குண்டாயிருந்தால் அல்லது ரொம்பவே பருமனாயிருந்தால் என்ன செய்யலாம்? ‘மனமிருந்தால் மார்க்கம் உண்டு’ என்ற பழமொழி அர்த்தம் நிறைந்தது. இளைத்தே தீர வேண்டுமென்ற திடதீர்மானமும் மனபலமும் உங்களுக்கு உண்டா? நீங்கள் பருமனான பிள்ளையாக அல்லது பெரியவராக இருந்தால், எதை தெரிவு செய்வீர்கள்: எடையைக் குறைத்துக் கொள்வதையா அல்லது ஆயுசை குறைத்துக் கொள்வதையா? சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்ந்து சிறிய விஷயங்களிலும் சாதனை உணர்வைப் பெறுங்கள்; சிறிய ஆடைகள் அணியும் விஷயத்திலும்தான்! (g04 11/8)
[அடிக்குறிப்பு]
a ஸ்லீப் ஆப்னியா பற்றிய அதிகமான தகவலுக்கு பிப்ரவரி 8, 2004 ஆங்கில விழித்தெழு! இதழில் பக்கங்கள் 10-12-ஐக் காண்க.
[பக்கம் 11-ன் பெட்டி]
லிப்போசக்ஷன் உங்களுக்கு உதவுமா?
லிப்போசக்ஷன் என்பது என்ன? ஓர் அகராதி இவ்வாறு விளக்குகிறது: “இது அழகு அறுவை சிகிச்சை. தொடை, வயிறு போன்ற குறிப்பிட்ட உடல் பாகத்திலிருக்கும் அதிகப்படியான கொழுப்பை உறிஞ்சி எடுப்பதுதான் லிப்போசக்ஷன். இது சக்ஷன் லிபெக்டமி என்றும் அழைக்கப்படுகிறது.” (அமெரிக்கன் ஹெரிடேஜ் டிக்ஷனரி) அப்படியென்றால், இது உடல் பருமனுக்கு தீர்வு என்று அர்த்தமா?
ஆரோக்கியமான உடல் எடை பற்றி மேயோ க்ளினிக் புத்தகத்தின்படி, லிப்போசக்ஷன் என்பது அழகு அறுவை சிகிச்சையாகும். அது எடை குறைக்கும் திட்டம் அல்ல. சருமத்தில் துளை போட்டு சன்னமான ட்யூப் மூலம் கொழுப்பு செல்கள் உறிஞ்சி எடுக்கப்படுகின்றன. ஒரே தடவையில் பல கிலோ கொழுப்பை அகற்றிவிடலாம். இருந்தாலும் “இந்த அறுவை சிகிச்சை உடல் பருமனுக்கான ட்ரீட்மன்ட் அல்ல.” அது பாதுகாப்பான சிகிச்சையா? “சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற எடை சம்பந்தப்பட்ட உடல்நல பிரச்சினைகளை உடையோருக்கு லிப்போசக்ஷன் அதிக ஆபத்தானதாகிவிடலாம்.”