Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உடல் பருமன் உண்மையிலேயே ஒரு பிரச்சினையா?

உடல் பருமன் உண்மையிலேயே ஒரு பிரச்சினையா?

உடல் பருமன் உண்மையிலேயே ஒரு பிரச்சினையா?

“டீனேஜர்கள் வட்டத்தில் உடல் பருமன் ஒரு கொள்ளைநோய் போல் உருவெடுத்திருக்கிறது.”​—⁠எஸ். கே. வாங்னூ, நாளமில்லாச் சுரப்பியல் மூத்த மருத்துவர், இந்தரப்ரஸ்தா அப்பொல்லோ மருத்துவமனை, டில்லி, இந்தியா.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்தியர் அநேகர் தங்கள் வாழ்க்கைப் பாணியை மாற்றியிருக்கின்றனர். இதனால் டீனேஜர்கள் உடல் பருத்துக் காணப்படுகிறார்கள். இதைத்தான் மருத்துவர் வாங்னூவின் குறிப்பு காட்டுகிறது. ஒருசமயத்தில் ஆங்காங்கே காணப்பட்ட இப்பிரச்சினை இப்போது அநேக நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. ஏனென்றால் அதிகமதிகமானவர்கள் நொறுக்குத்தீனிக்கு அடிமையாகியிருக்கிறார்கள், அதோடு உடற்பயிற்சியை அசட்டை செய்திருக்கிறார்கள். “[பிரிட்டனின்] அடுத்த தலைமுறையினர் . . . உலகில் இதுவரை வாழ்ந்திருக்கும் எந்தத் தலைமுறையினரையும்விட மிகவும் குண்டாயிருப்பார்கள்” என டீனேஜ் மருத்துவத்தின் ஆலோசகர் ஒருவர் குறிப்பிட்டார். கார்டியன் வீக்லி பத்திரிகை இவ்வாறு அறிக்கை செய்தது: “உடல் பருமன் பெரியவர்களின் பிரச்சினையாகத்தான் முன்பு இருந்தது. ஆனால் இப்போது பிரிட்டனில் இளம் தலைமுறையினருடைய பிரச்சினையாகவும் இது ஆகிவிட்டது; ஏனென்றால் அவர்கள் சத்துள்ள உணவைச் சாப்பிடுவதில்லை, அதோடு உடலுக்கு உழைப்பு தராமல் உட்கார்ந்தபடியே காலத்தை ஓட்டுகிறார்கள். முதன்முதலாக அமெரிக்காவில் தலைதூக்கிய இப்பிரச்சினையை இப்போது இவர்களும் சந்திக்கிறார்கள். இப்படியே இவர்கள் சதைப்பிடிப்போடு இருந்தால் சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் போன்ற பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.”

ஃபுட் ஃபைட் புத்தக எழுத்தாளர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்: “உணவு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் பட்டியலில் ஊட்டக் குறைவே முதல் இடத்தில் இருந்தது; இப்போதோ, அளவுக்கதிகமாக சாப்பிடுவது அந்த இடத்தைப் பிடித்துவிட்டது.” தி அட்லாண்டிக் மன்த்லி பத்திரிகையில் டான் பெக் இவ்வாறு எழுதுகிறார்: “ஏறக்குறைய 90 லட்சம் அமெரிக்கர்கள் ‘ஆபத்தான அளவுக்கு குண்டாயிருக்கிறார்கள்.’ அதாவது கிட்டத்தட்ட 45 கிலோ ஊளைச்சதையை உடலில் சுமந்து கொண்டிருக்கிறார்கள்; சிலசமயம் அதற்கு அதிகமாகக்கூட சுமந்து கொண்டிருக்கிறார்கள்.” அளவுக்கு அதிகமாக சதை போடுவதன் காரணமாக அமெரிக்காவில் வருடா வருடம் சுமார் 3 லட்சம் பேர், வாழவேண்டிய வயதிலேயே பரிதாபமாக கண் மூடிவிடுகிறார்கள்; “புகைபிடித்தலுக்கு அடுத்ததாக உடல் பருமன்தான் இத்தனை உயிர்களை காவு கொள்கிறது.” முடிவில் பெக் இவ்வாறு சொல்கிறார்: “மிக அவசரமாக கவனிக்கப்பட வேண்டிய உடல்நல பிரச்சினைகளின் பட்டியலில் பசி, தொற்றுநோய் ஆகியவற்றின் இடத்தை உடல் பருமன் சீக்கிரத்தில் பிடித்துவிடும் போல் தெரிகிறது.” நிலைமை இப்படியிருக்க, கொழுத்த உடலின் ஆபத்துக்களை யாரால்தான் கண்டுகொள்ளாமல் விட முடியும்? புசித்துக் குடித்து ஆரோக்கியமாக இருங்கள் என்ற ஆங்கில புத்தகத்தில் டாக்டர் வால்டர் சி. விலட் இவ்வாறு எழுதுகிறார்: “எதிர்காலத்தில் ஆரோக்கியமாக வாழ்வீர்களா என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கிய விஷயங்களில் ஒன்று இப்போது புகைக்கிறீர்களா இல்லையா என்பது; மற்றொன்று உங்கள் எடை.” இங்கே, “எதிர்காலத்தில்” என்ற வார்த்தையை கவனிக்கத் தவறாதீர்கள்.

உடல் பருமனை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?

ஒருவர் அதிக எடையுடன் இருப்பதற்கும் ஓவராக உடல் பருத்திருப்பதற்கும் வித்தியாசம் உண்டு; அப்படியென்றால் உடல் பருத்திருப்பதற்கு அடையாளம் என்ன? “எளிய வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், அளவுக்கு மீறிய கொழுப்பினால் ஓவர் எடையுடன் இருப்பதுதான் உடல் பருத்திருப்பதற்கு அடையாளம்” என அ.ஐ.மா., மினிசோடா, ரோசெஸ்டரிலுள்ள மேயோ க்ளினிக் குறிப்பிடுகிறது. ஆனால் ஒருவர் ஓவர் எடையுடன் இருக்கிறார் என எதை வைத்துச் சொல்வது? உயரம்-எடை விகித அட்டவணைகளை வைத்து ஓரளவுக்கு சொல்லிவிடலாம்; இப்படியாக ஒருவர் அதிக எடையுடன் இருக்கிறாரா அல்லது ஓவராகப் பருத்திருக்கிறாரா என தெரிந்துகொள்ளலாம். (பக்கம் 5-⁠ல் உள்ள அட்டவணையைக் காண்க.) ஆனால் இந்த அட்டவணைகள், ஒருவரது உடல் கட்டை கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை. “உடலின் எடையைவிட உடலிலுள்ள கொழுப்பை வைத்தே ஆரோக்கியத்தை நன்கு மதிப்பிட முடியும்” என மேயோ க்ளினிக் கூறுகிறது. உதாரணத்திற்கு விளையாட்டு வீரர் ஒருவருக்கு தசைபலத்தின் காரணமாக அல்லது எலும்புக் கட்டமைப்பின் காரணமாக கனமான உடல் இருக்கலாம். ஆகவே அட்டவணைகளை முழுமையாக சார்ந்திருக்க முடியாது. எப்படியிருந்தாலும், உடல் பருமனுக்கு முக்கிய காரணங்கள் யாவை? இந்தக் கேள்விக்கு அடுத்த கட்டுரை பதிலளிக்கும். (g04 11/8)