Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உடல் பருமன்—காரணங்கள் யாவை?

உடல் பருமன்—காரணங்கள் யாவை?

உடல் பருமன்​—⁠காரணங்கள் யாவை?

“உடல் பருமன் என்ற கொள்ளைநோய் நம்மைச் சுற்றிலும் பரவியிருக்கிறது; நம் பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு அது மிகுந்த கெடுதல் விளைவிக்கலாம். தடுப்பு நடவடிக்கைகளை இப்போதே எடுக்காவிட்டால், அது மேன்மேலும் பரவும்.”​—⁠வில்லியம் ஜே. க்ளிஷ், குழந்தை மருத்துவ பேராசிரியர்.

நல்ல உடல்வாகுள்ள சிலர், எடை கூடியிருப்பவர்களை அல்லது பருத்திருப்பவர்களைப் பார்த்ததும் பொதுவாக தப்புக்கணக்கு போட்டுவிடுவார்கள்; கொஞ்சமும் கன்ட்ரோலே இல்லாதவர்கள் என்றும் மனோதிடம் இல்லாதவர்கள் என்றும் முடிவுகட்டி விடுவார்கள். ஆனால் பருத்த உடலுள்ளவர்களின் பிரச்சினை உண்மையில் அதுதானா? சதைப்பற்றுள்ள அனைவரும் வேண்டுமென்றே உடற்பயிற்சி செய்யாத சோம்பேறிகளா? அல்லது அநேகர் அவர்களது கட்டுப்பாட்டை மீறிய வேறு பல காரணங்களால் பருத்திருக்கிறார்களா?

மரபியலா? சூழலா? இரண்டுமா?

ஃபுட் ஃபைட் புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “உடல் பருமனுக்குக் காரணம் மரபியலா அல்லது சூழலா என்பது வெகு காலமாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது.” இங்கே மரபியல் என குறிப்பிடப்படுவது எது? மனித உடல், எதிர்கால தேவைகளுக்காக கலோரிகளை சேமித்து வைத்துக்கொள்ளும் திறனை பல ஆண்டுகளாக படிப்படியாக பெற்றுவந்திருக்கிறது என்ற கோட்பாட்டை சிலர் நம்புகிறார்கள். “உடல் பருமனுக்கும் மரபியலுக்கும் உள்ள சம்பந்தம் பல பத்தாண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது. . . . இப்போதும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. உடல் பருமனையும் சர்க்கரை நோய் போன்ற வியாதிகளையும் பரம்பரையாக கடத்தும் மரபணுக்களை அடையாளம் கண்டுகொள்ள நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அறிவியலின்படி, உடல் எடை நபருக்கு நபர் வேறுபடுவதற்கு ஒரு காரணம் மரபணுக்களே; அவை 25 முதல் 40 சதவீதம் பங்களிக்கின்றன” என்று அப்புத்தகம் கூறுகிறது. மேலும் அது சொல்வதாவது: “சதைப்பிடிப்புக்குக் காரணம் அவரவரே என பொதுவாக நினைக்கப்படுகிறது; ஆனால் உயிரியலுக்கும் முக்கிய பங்கிருப்பதை மேற்கூறிய புள்ளிவிவரம் கோடிட்டுக் காட்டுகிறது. அதே சமயத்தில் சூழலும் 60 சதவீதமோ அதற்கும் அதிகமோ பங்களிக்கிறது.” இதன்படி பார்த்தால், உடல் பருமனுக்கு முக்கிய காரணம் ஒருவரது வாழ்க்கைப் பாணியே. தேவைப்படுவதற்கும் அதிகமான கலோரிகளை ஒருவர் தினமும் உட்கொள்கிறாரா? உடலுக்கு தீங்கிழைக்கும் உணவு வகைகளை எப்போதும் சாப்பிடுகிறாரா? மிதமான உடற்பயிற்சிக்கு ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்குகிறாரா?

உடல் பருமனுக்கான காரணத்தை மேயோ க்ளினிக் இவ்வாறு எளிய வார்த்தைகளில் விளக்குகிறது: “குண்டாயிருப்பதற்கு அல்லது பருமனாயிருப்பதற்கு மரபணுக்கள் ஒரு காரணியாக இருக்கலாம்; ஆனால் உண்மையில் உங்கள் எடையைத் தீர்மானிப்பது உணவும் உடல் உழைப்பும்தான். தொடர்ந்து அளவுக்கதிகமான கலோரிகளை உட்கொண்டு வந்தால் அல்லது உடல் உழைப்பின்றி உட்கார்ந்தே காலம் ஓட்டினால், அல்லது இவ்விரண்டையுமே செய்தால் உடல் ஊதிப்போகும்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) அதே க்ளினிக் இவ்வாறும் சொல்கிறது: “பருமனாவது உங்கள் பரம்பரையில் இருந்தாலும் அது உங்களை கட்டாயம் பாதிக்கும் என்றில்லை. . . . நீங்கள் எப்படிப்பட்ட மரபணுக்களைப் பெற்றிருந்தாலும் உங்கள் எடை உங்கள் கையில்தான் இருக்கிறது; ஆம், உணவுக்கும் உடல் உழைப்புக்கும் நீங்கள் கவனம் செலுத்துவதன் பேரில்தான் சார்ந்திருக்கிறது.”

உடல் எடையைக் குறைக்க உதவும் நிறுவனங்கள் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கின்றன; ஏனென்றால் இழந்துபோன உடல்வாகை மறுபடியும் பெற மக்கள் துடிக்கிறார்கள். ஆனால் அந்த நிறுவனங்களின் திட்டங்களைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? “உடல் கொழுப்பை கரைப்பது அவ்வளவு சுலபமல்ல; அப்படியே கரைத்தாலும் பெரும்பாலானவர்கள் கொஞ்ச காலத்திற்குள் மறுபடியும் கொழுத்துவிடுகிறார்கள்” என ஃபுட் ஃபைட் புத்தகம் சொல்கிறது. “நிலவரத்தை மிகவும் நம்பிக்கையான கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இப்படித்தான் சொல்ல முடியும்: 25 சதவீதத்தினரே [நான்கில் ஒருவரே] எடையைக் குறைத்து, அது மறுபடியும் ஏறாமல் பார்த்துக்கொள்கிறார்கள்; அதுவும் விடாமுயற்சி செய்ய வேண்டியிருக்கிறது.”

உடல் பருமனின் ஆபத்துக்கள்

உடலில் அதிக கொழுப்பு சேருவதால் பல பெரிய வியாதிகள் வரலாம். பருமனாயிருக்கும் இளையவர்களுக்குக்கூட வகை-2 சர்க்கரை வியாதி வரும் ஆபத்து இருப்பதாக தென் கலிபோர்னிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் நரம்பியல் நிபுணராக பணியாற்றும் டாக்டர் ஸ்காட் லாரன்-செல்கோ எச்சரிக்கிறார். (ஜூன் 8, 2003 விழித்தெழு! இதழைப் பாருங்கள்.) அவர் சொல்வதாவது: “இப்போது எங்கு பார்த்தாலும் இந்தப் பிரச்சினைதான். நிலைமையை நினைத்தால் ரொம்பவே பயமாக இருக்கிறது. [பருமனாயிருப்பவர்களிடம்] நான் இப்படி சொல்வேன்: ‘சர்க்கரை வியாதிக்காரர்களின் வார்டுக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு போய் காண்பிக்கிறேன்; அங்கே பார்வை இழந்தவர்கள், கை காலை பறிகொடுத்தவர்கள், வகை-2 சர்க்கரை வியாதியால் கொஞ்சமும் பலமின்றி படுத்த படுக்கையாய் கிடப்பவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் எல்லாருமே பருமனானவர்கள். அவர்களைப் பார்த்தால் உங்களுக்கும் என்ன நிலை ஏற்படலாம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.’” உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணம் என்ன? “வசதி இருப்பதால் பெரிய பெரிய ஹாம்பர்கர்களையும், ஃபிரெஞ்ச் ஃப்ரைகளையும் வாங்கி சாப்பிடுகிறார்கள். அதெல்லாம் உடம்புக்கு நல்லதல்ல என்று சொல்லவும் யாருமில்லை. ஃபாஸ்ட்-ஃபுட் கம்பெனிகள் அப்படிச் சொல்ல வாய்ப்பே இல்லை; ஏன், பெரும்பாலான மருத்துவர்கள்கூட அப்படிச் சொல்வதில்லை. ஏனென்றால் ஊட்டச்சத்து சம்பந்தமாக அவர்கள் பயிற்சி பெறுவதில்லை” என்றும் லாரன்-செல்கோ சொல்கிறார்.

ஊட்டச்சத்து பேரிலான பிரபல எழுத்தாளர் டாக்டர் எட்வர்டு டாப் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இந்த நவீன யுகத்தில் சதைப்பிடிப்புடன் இருப்பது நார்மல்தான், ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான் என நினைப்பதே பாணியாகி விட்டிருக்கிறது; சொல்லப்போனால் அவ்வாறு நினைப்பதே சரியென்றும் கருதப்படுகிறது. கொழுப்பான உணவுப் பொருட்களை வாங்கும்படி மக்களைத் தூண்டும் வியாபார நிறுவனங்கள் படைத்திருக்கும் வியக்கத்தக்க சாதனை இது.”

நம் உடல் “பேரிக்காய் வடிவில்” இருப்பதைவிட, அதாவது இடுப்புப் பகுதியில் ஊளைச்சதை இருப்பதைவிட “ஆப்பிள் வடிவில்” இருப்பது, அதாவது வயிற்றுப் பகுதியில் ஊளைச்சதை இருப்பது (முக்கியமாக அதன் சுற்றளவு 35 முதல் 40 அங்குலங்களுக்கு மேல் இருப்பது) அதிக ஆபத்தானது என நிபுணர்கள் சொல்கின்றனர். ஏன்? ஏனென்றால் “வயிற்றில் கொழுப்பு சேரும்போது உயர் இரத்த அழுத்தம், இதயத்தமனி நோய், சர்க்கரை நோய், ஸ்ட்ரோக், சில வகையான புற்றுநோய் போன்றவை வரும் ஆபத்து அதிகம்” என ஆரோக்கியமான உடல் எடை பற்றி மேயோ க்ளினிக் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. “உங்கள் உடல் ‘பேரிக்காய் வடிவில்’ இருந்தால், அதாவது உங்களுக்கு பெரிய இடுப்பும், தொடைகளும், பிட்டமும் இருந்தால் ஆபத்து அவ்வளவு அதிகமில்லை” என்றும் அது சொல்கிறது.

உலகெங்கும் லட்சக்கணக்கான பெரியவர்களும் பிள்ளைகளும் பருமனாயிருக்கிறார்கள்; தீராத நோய்களினால் பாதிக்கப்படும் ஆபத்திலும் இருக்கிறார்கள். இவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு என்ன? சிறந்த பரிகாரம் ஏதேனும் உண்டா? (g04 11/8)

[பக்கம் 5-ன் பெட்டி/அட்டவணை]

BMI என்பது என்ன? அது எதைக் காட்டுகிறது?

BMI (Body Mass Index) என்பது உயரத்திற்கும் எடைக்கும் இடையேயுள்ள விகிதம் ஆகும். ஒருவர் அதிக எடையுடன் இருக்கிறாரா அல்லது ஓவராக பருத்திருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள அது உதவும். மேயோ க்ளினிக்கின்படி BMI விகிதம் 18.5-லிருந்து 24.9-⁠க்குள் இருந்தால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என அர்த்தம். அது 25-லிருந்து 29.9-⁠க்குள் இருந்தால் அதிக எடையுடன் இருக்கிறீர்கள் என அர்த்தம். ஆனால் அது 30-ஐத் தாண்டிவிட்டால் பருமனாயிருக்கிறீர்கள் என அர்த்தம். இந்த அட்டவணையை வைத்து BMI விகிதத்தை எப்படித் தெரிந்துகொள்வது? அதைத் தெரிந்துகொண்ட பின்னர் உறுதிசெய்வதற்கு அல்லது ஆலோசனைகள் கேட்பதற்கு உங்கள் டாக்டரை சந்திக்க வேண்டுமா?

உங்கள் BMI விகிதத்தைத் தெரிந்து​கொள்​வதற்கு, உங்கள் எடையை கிலோகிராம்களில் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் உயரத்தை மீட்டரில் எடுத்துக்கொள்ளுங்கள். அதன்பின் உங்கள் எடையை உயரத்தால் வகுத்துவிடுங்கள். பின்பு மறுபடியும் உங்கள் உயரத்தால் வகுத்துவிடுங்கள். உதாரணத்திற்கு, உங்கள் எடை 90 கிலோகிராம் என்றும் உயரம் 1.8 மீட்டர் என்றும் வைத்துக்கொள்ளலாம். அப்போது உங்கள் BMI 28 (90÷1.8÷1.8=28) ஆகும்.

[அட்டவணை]

ஆரோக்கியமான எடை அதிக எடை ஓவர் எடை (பருமன்)

BMI 18.5-​24.9 25-​29.9 30 அல்லது அதிகம்

உயரம் எடை-கிலோகிராம்களில்

1.47மீ53 அல்லது குறைவு 54-​6465 அல்லது அதிகம்

1.50மீ56 அல்லது குறைவு 57-​6768 அல்லது அதிகம்

1.52மீ57 அல்லது குறைவு 58-​6970 அல்லது அதிகம்

1.55மீ59 அல்லது குறைவு 60-​7172 அல்லது அதிகம்

1.57மீ61 அல்லது குறைவு 62-​7374 அல்லது அதிகம்

1.60மீ63 அல்லது குறைவு 64-​7677 அல்லது அதிகம்

1.63மீ66 அல்லது குறைவு 67-​7980 அல்லது அதிகம்

1.65மீ67 அல்லது குறைவு 68-​8182 அல்லது அதிகம்

1.68மீ70 அல்லது குறைவு 71-​8485 அல்லது அதிகம்

1.70மீ72 அல்லது குறைவு 73-​8687 அல்லது அதிகம்

1.73மீ74 அல்லது குறைவு 75-​8990 அல்லது அதிகம்

1.75மீ76 அல்லது குறைவு 77-​9192 அல்லது அதிகம்

1.78மீ79 அல்லது குறைவு 80-​9495 அல்லது அதிகம்

1.80மீ80 அல்லது குறைவு 81-​9798 அல்லது அதிகம்

1.83மீ83 அல்லது குறைவு 84-​100101 அல்லது அதிகம்

1.85மீ85 அல்லது குறைவு 86-​102103 அல்லது அதிகம்

1.88மீ89 அல்லது குறைவு 90-​106107 அல்லது அதிகம்

1.90மீ90 அல்லது குறைவு 91-​108109 அல்லது அதிகம்

[படத்திற்கான நன்றி]

ஆரோக்கியமான உடல் எடை பற்றி மேயோ க்ளினிக் புத்தகத்தின் அடிப்படையில்

[பக்கம் 5-ன் பெட்டி]

கலோரி என்பது என்ன?

டயட்டிங் செய்வோரின் விஷயத்தில் ஒரு கலோரி எவ்வாறு வரையறுக்கப்படுகிறது? கலோரி என்பது வெப்ப அளவைக் கூறு ஆகும். ஆகவே வியர்க்கும்போது கலோரிகளை, அதாவது எரிசக்தியை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். “ஒரு கலோரி என்பது ஒரு கிலோகிராம் தண்ணீரை கரெக்ட்டாக ஒரு டிகிரி சென்டிகிரேடுக்கு உயர்த்துவதற்கு தேவையான வெப்பமாகும்.” (உடலையும் வாழ்வையும் சமநிலைப்படுத்துங்கள் [ஆங்கிலம்]) தினமும் தேவைப்படும் கலோரி, அதாவது சக்தியின் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும்; உயரம், எடை, வயது, உடல் உழைப்பு போன்ற பல அம்சங்களைப் பொறுத்து அது வேறுபடும்.

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

உடல் உழைப்பு இல்லை என்பதற்கான அறிகுறிகள்

◼ பெரும்பாலான நேரம் டிவிக்கு முன், அல்லது சேரில், அல்லது வாகனத்தில் உடல் உழைப்பின்றி சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள்

◼ அரிதாகவே 100 மீட்டருக்கும் அதிக தூரம் நடக்கிறீர்கள்

◼ சுறுசுறுப்பான உடல் உழைப்பு தேவைப்படாத வேலையில் இருக்கிறீர்கள்

◼ வாரத்தில் ஒரு முறைகூட 20-30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யாதிருக்கிறீர்கள்

[படத்திற்கான நன்றி]

ஆரோக்கியமான உடல் எடை பற்றி மேயோ க்ளினிக் புத்தகத்திலிருந்து