Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

சீனப் பெருஞ்சுவர் நொறுங்குகிறது

“சீனப் பெருஞ்சுவரில் மூன்றில் இரண்டு பாகம் இடிந்துவிட்டது, இதற்குக் காரணம் சுற்றுலாப் பயணிகளும், விரிவாக்கப் பணியாளர்களும், நில அரிப்பும் ஆகும்” என லண்டன் செய்தித்தாள் த கார்டியன் அறிக்கையிடுகிறது. “உலக சொத்து இடிந்து மண்ணோடு மண்ணாகிறது. . . . சுவரின் சில பாகங்கள் கிறுக்கப்பட்டும் நாசமாக்கப்பட்டும் உள்ளன. மேலும் பன்றித் தொழுவங்களிலும் நிலக்கரி சுரங்கங்களிலும் பயன்படுத்துவதற்கு உடைத்தெடுக்கப்பட்டுள்ளன.” “பூமியிலேயே கலாச்சார பெருமை கொண்ட மிகப் பரந்த இடங்களில் ஒன்றுதான்” இந்தச் சுவர் என உலக நினைவக நிதியம் சமீபத்தில் குறிப்பிட்டது. மேலும் இந்த அமைப்பு, உலகில் ஆபத்திலிருக்கும் கட்டடங்களைப் பட்டியலிடுகையில் இந்தச் சுவரையும் அதில் சேர்த்தது. வேலியே பயிரை மேய்வது போல, அதைப் பராமரிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்ட அதிகாரிகளே அதை மேலும் நாசப்படுத்தியுள்ளனர். “போதிய நிதியும் பயிற்சியும் இல்லாத பராமரிப்பு அதிகாரிகள்” ஒரு சந்தர்ப்பத்தில், 600 வருட பழமை வாய்ந்த சுவரின் 14 மீட்டர் பகுதியை இடிப்பதற்கு விரிவாக்கப் பணியாளர் ஒருவருக்கு அனுமதி அளித்துள்ளனர். ஆரம்பத்தில் இந்தச் சுவரின் நீளம் சுமார் 6,400 கிலோமீட்டராக இருந்தது. எனவே இத்தனை நீளமுடைய சுவரைப் பராமரிப்பது நடைமுறைக்கு ஒத்துவராமல் போய்விட்டது. (g04 11/22)

விமான விபத்துகள் குறைந்து வருகின்றன

உலகெங்கிலும் சம்பவிக்கும் விமான விபத்துகளின் எண்ணிக்கை 1950-கள் முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் 2003-⁠ல் தான் மிகக் குறைவான விமான விபத்துகள் நடந்துள்ளன என ஃப்லைட் இன்டர்நேஷனல் பத்திரிகை அறிக்கை செய்கிறது. அந்த ஆண்டு விமான விபத்துகளில் பலியானவர்கள் மொத்தம் 702 பேர். 1990-லிருந்து விமானப் போக்குவரத்து 40 சதவீதம் அதிகரித்த போதிலும் இது மிகக் குறைவான எண்ணிக்கையே. “பாதுகாப்பு விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதற்கு [ஒரு காரணம்] விமானம் ஓட்டுவதில் ஏற்படும் கோளாறினால் மேடான இடத்தில் மோதுவது குறைந்துள்ளது” என்று கூறப்படுவதாக லண்டன் செய்தித்தாளான டெய்லி டெலிகிராஃப் தெரிவிக்கிறது. அது மேலும் சொல்வதாவது: “புதிய நில எச்சரிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பது உதவியிருக்கிறது; என்றபோதிலும், இந்தத் தொழில்நுட்பம் ‘பிழையற்றது’ என்பதற்கு உத்தரவாதமில்லை.” அநேக பழைய விமானங்களில் இப்படிப்பட்ட எச்சரிப்புக் கருவிகள் இல்லை. (g04 10/22)

டிவியும் குழந்தைகளின் மன வளர்ச்சியும்

அதிக நேரம் டிவி பார்க்கும் பிள்ளைகள் பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்வதில் பிரச்சினைகளை எதிர்ப்படுவதாக ஜப்பான் குழந்தை நல சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சொல்கின்றனர் என்பதாக மெய்னிசி டெய்லி நியூஸ் என்ற செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. அந்தப் பிள்ளைகள் வார்த்தைகளை நினைவில் வைக்க, பெற்றோருடன் முகம் பார்த்துப் பேச, ஆட்களோடு அறிமுகமாக சிரமப்படுகிறார்கள். “பெற்றோருடன் விளையாடுவதிலும் வெளியே சென்று ஓடியாடி விளையாடுவதிலும் பிள்ளைகள் குறைவான நேரத்தைச் செலவிட்டால் அவர்களுடைய இயல்பான மன வளர்ச்சி தடைபடலாம்” என அந்தச் சங்கத்தின் அங்கத்தினரான ஹிரோமி ஊட்சூமி சொல்கிறார். அந்தச் சங்கம் பெற்றோர்களுக்கு இவ்வாறு சிபாரிசு செய்ததை அந்த அறிக்கை கூறியது: “சாப்பிடும் வேளைகளிலும் குழந்தைக்கு பால் கொடுக்கையிலும் டிவியை ஆஃப் செய்துவிடுங்கள். பிள்ளைகளுடைய அறைகளில் டிவி, வீடியோ, கம்ப்யூட்டர் ஆகியவற்றை வைக்காதீர்கள்.” “டாக்டர்களுடைய அறிவுரையைக் கேட்டு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை டிவி மற்றும் வீடியோ பார்ப்பதை தடை செய்த பின்னர்” பிள்ளைகளுடைய பேச்சுத் தொடர்பு முன்னேறியிருப்பதாக அந்த அறிக்கை தொடர்ந்து சொல்கிறது. (g04 11/8)

மிதமான உடற்பயிற்சி அவசியம்

“டயட்டிங் செய்யாத ஆட்கள் எடை போடுவதைத் தவிர்க்கவும் எடையைக் குறைக்கவும் வாரத்திற்கு சுமார் 20 கிலோமீட்டர் நடப்பது போன்ற மிதமான உடற்பயிற்சிகள் உதவக்கூடும்” என எஃப் டி ஏ கன்ஸ்யூமர் என்ற பத்திரிகை அறிக்கையிடுகிறது. “உடலை வளைத்து வேலை செய்யாதிருக்கும் 40 முதல் 65 வயதுக்குட்பட்ட குண்டான 182 ஆண்களையும் பெண்களையும் வைத்து” எட்டு மாத கால ஆராய்ச்சி நடத்தப்பட்டது. “எந்தளவுக்கு உடலை வருத்தி வேலை செய்கிறோமோ அந்தளவுக்கு எடையும் குறையும் என்பது தெளிவாக உள்ளது” என அந்த ஆராய்ச்சி ஊர்ஜிதப்படுத்துகிறது. அந்த ஆண்களையும் பெண்களையும் நான்கு தொகுதிகளாகப் பிரித்து, அவர்கள் எப்போதும் சாப்பிடும் உணவையே உட்கொள்ளுமாறு சொல்லப்பட்டது. அதில் மூன்று தொகுதியினர் வெவ்வேறு அளவிலான உடற்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். நான்காவது தொகுதியினர் உடற்பயிற்சி எதுவும் செய்யாதவர்கள். “ஆராய்ச்சிக் காலம் முடிவதற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யாத தொகுதியினருடைய எடை கூடிவிட்டது” என அந்தப் பத்திரிகை குறிப்பிடுகிறது. “உடற்பயிற்சி செய்யாதவர்களைவிட உடற்பயிற்சி செய்தவர்களுடைய இடுப்புப் பகுதியிலிருந்த சதையும் இடுப்பின் சுற்றளவும் குறைந்திருந்தன.” இந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறபடி, ஒரு நாளைக்கு அரை மணிநேரம் நடப்பது போன்ற மிதமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலின் எடையைப் பெரும்பாலும் கட்டுப்படுத்தலாம். (g04 11/22)