Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்றும் விரும்பப்படும் வெங்காயம்

என்றும் விரும்பப்படும் வெங்காயம்

என்றும் விரும்பப்படும் வெங்காயம்

மெக்சிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

வெங்காயம் இல்லாத சமையலறையா? இந்த ‘ஆல்-இன்-ஆல்’ பூண்டு வகை கிட்டத்தட்ட எல்லாவற்றிலும்​—⁠சூப்புகள், சாலட்கள், முக்கிய பதார்த்தங்கள், மருந்துப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றிலும்​—⁠பயன்படுத்தப்படுகிறது. அது நம்மை கொஞ்சம் அழவைத்தும் விடுகிறது.

அழகாக பூத்துக் குலுங்கும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் வெங்காயம். இதன் குடும்பத்தில் பொன்னிற வெங்காயம், மணப்பெண் வெங்காயம், அலங்காரமிக்க பூண்டு போன்றவையும் அடங்கும். எனினும் உலகின் பெரும்பாலான சமையல் அறைகளில் பயன்படுத்தப்படுவது ஒரு மொட்டுதான். இது அடுக்கடுக்காக புடைத்த இலைகளுடன் நிலத்தடியில் புதைந்திருக்கும்.

மனிதனால் பயிரிடப்பட்ட மிகப் பழமையான தாவர வகைகளில் வெங்காயமும் ஒன்று. இது எவ்வளவு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க பைபிள் பதிவு உதவுகிறது. ஏறத்தாழ பொ.ச.மு. 1513-⁠ல், எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்தபோது சாப்பிட்ட வெங்காயத்திற்காக இஸ்ரவேல் ஜனங்கள் ஏங்கினதாக பதிவு காண்பிக்கிறது.​—எண்ணாகமம் 11:5.

ஆனால் வெவ்வேறு கலாச்சாரங்களிலும் வெங்காயத்தின் சுவை இவ்வளவு பிரபலமடைய காரணம் என்ன? நிச்சயமாகவே, அதிலுள்ள கந்தகச் சேர்மங்களே. இந்தச் சேர்மங்கள் அதற்கு ஒருவித வாசனையையும் காரச் சுவையையும் தருகின்றன. வெங்காயத்திலுள்ள கந்தக அமிலக் கலவைகளே நம் கண்களிலிருந்து நீர் வடியச் செய்கின்றன.

சுவையூட்டுவதற்கு மட்டுமல்ல

மனிதர்களுடைய உடல்நலத்திற்கும் வெங்காயம் இன்றியமையாதது. அதில் கால்ஷியம், பாஸ்பரஸ், அஸ்கார்பிக் அமிலம், அதாவது வைட்டமின் ‘சி’ போன்ற ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக, அதிலுள்ள மருத்துவ குணங்களுக்காக அது பழங்காலத்திலிருந்தே மதிக்கப்பட்டு வருகிறது. சளி, தொண்டைக் கட்டு, இரத்தக் குழாய் தடிப்பு, இதய இரத்தக்குழாய் நோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா போன்ற நோய்களை சுகப்படுத்த வெங்காயம் இன்றும் உதவுகிறது. மேலும், செப்டிக் ஆவதைத் தடுக்க, கொழுப்புச் சத்தைக் குறைக்க, வீக்கத்தைக் குறைக்க, இரத்தக் குழாயில் இரத்தம் உறைவதைத் தடுக்க, புற்றுநோயிலிருந்து காக்க என இவற்றுக்கும்கூட வெங்காயம் இன்றியமையாதது.

வெள்ளை, மஞ்சள், காவி, பச்சை, சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிறங்களில் வெங்காயம் கிடைக்கிறது. நீங்கள் அதை பச்சையாகவோ, சமைத்தோ, பதனப்படுத்தியோ, ஊறுகாய் போட்டோ, சாறு நீக்கியோ, பொடி பண்ணியோ, தூளாகவோ, கட்டிகளாகவோ சாப்பிடலாம். வெங்காயம் உங்களை கொஞ்சம் அழ வைத்தாலும் அது உண்மையிலேயே அற்புதமான பூண்டு வகை அல்லவா? (g04 11/8)