Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு தாயின் உரிமைகளை ஐரோப்பிய நீதிமன்றம் நிலைநாட்டியது

ஒரு தாயின் உரிமைகளை ஐரோப்பிய நீதிமன்றம் நிலைநாட்டியது

ஒரு தாயின் உரிமைகளை ஐரோப்பிய நீதிமன்றம் நிலைநாட்டியது

பிரான்சிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

பிரான்சு, ஸ்ட்ராஸ்பர்க் நகரில், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் உள்ளது. டிசம்பர் 16, 2003 அன்று அது ஒரு தீர்ப்பை அளித்தது; பிரான்சு நாட்டு நீதிமன்றங்கள் யெகோவாவின் சாட்சியான செராஃபின் பலாவ் மார்டினேத் என்பவருக்கு மதப் பாகுபாட்டின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதாக கண்டனம் தெரிவித்தது.

1996-⁠ல், செராஃபினுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே செராஃபின் தன் கணவரால் கைவிடப்பட்டிருந்தார். அவர்களுடைய இரண்டு பிள்ளைகளும் செராஃபினுடைய பராமரிப்பில் வளர நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளாக தாயிடமே பிள்ளைகள் வாழ்ந்து வந்தனர். ஆனால் 1997-⁠ல் ஒரு நாள், செராஃபினுடைய கணவர் பிள்ளைகளை சந்தித்த பிறகு அவர்களை தாயிடம் திரும்ப ஒப்படைக்க மறுத்துவிட்டார். செராஃபின் இவ்வாறு விவரிக்கிறார்: “பிள்ளைகளை வீட்டுக்கு கூட்டிட்டுவர ஸ்கூலுக்குப் போனேன். ஆனால் ஸ்கூல் ப்ரின்ஸிபல் போலீஸை வரவழைத்தார். போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில்தான் என் பிள்ளைகளைப் பார்க்க முடிந்தது. என்னுடைய மத நம்பிக்கையைப் பற்றி என் பிள்ளைகளிடம் பேசக் கூடாது என்பதற்காக அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டேன். என் பிள்ளைகளை திரும்ப வீட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால் நான் ஒரு பத்திரத்தில் கையெழுத்திட வேண்டியிருந்தது. நான் இனிமேலும் கடவுளைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் அவர்களிடம் பேசமாட்டேன் என்றும் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லமாட்டேன் என்றும் அந்தப் பத்திரத்தில் எழுதிக்கொடுக்க வேண்டியிருந்தது.”

செராஃபின் நீதிமன்றங்களில் முறையிட்டார். என்றபோதிலும், 1998-⁠ல் நிம் நகரிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம், அப்பாவின் பராமரிப்பில் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. யெகோவாவின் சாட்சிகள் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதாக கருதப்பட்ட கோட்பாடுகளை கடுமையாக கண்டித்து, நீண்டதொரு விமர்சனத்தை அளித்து தன் தீர்ப்பை நியாயப்படுத்தியது. இதைப் பற்றி செராஃபின் சொல்கையில், “என் பிள்ளைகளை மிகச் சிறந்த முறையில், கிறிஸ்தவர்களாக வளர்க்க முயற்சி செய்தேன். ஆனால் அவர்களை நாசமாக்குகிறேன் என்று என்னைக் குற்றஞ்சாட்டியது எனக்கு மிகவும் வேதனையளித்தது.”

கூர் டா காஸேஷன், அதாவது பிரெஞ்சு மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஒப்புதல் தெரிவித்ததால், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கைப் பதிவு செய்ய செராஃபின் தீர்மானித்தார். அந்த நீதிமன்றம் 6-⁠க்கு 1 என்ற வீதத்தில் பின்வரும் தீர்ப்பை அளித்தது: “முறையிடுபவருடைய மதத்தின் அடிப்படையில் [பிரெஞ்சு] மேல்முறையீட்டு நீதிமன்றம் பெற்றோருக்கு இடையில் பாரபட்சம் காட்டியிருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. . . . இத்தகைய பாரபட்சம் நியாயமற்றது.” மேலும், பிள்ளைகளைப் பராமரிக்க செராஃபினுக்குத் திராணியில்லை என்பதன் அடிப்படையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை; சொல்லப்போனால், அதைப் பற்றி கேள்வியே எழுப்பவில்லை; அதோடு, உண்மையான சாட்சியங்களின் அடிப்படையிலும் தீர்ப்பு வழங்கவில்லை. மாறாக, “யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய பொதுவான கருத்துகளின் அடிப்படையிலேயே” பிரான்சு நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது கண்டறியப்பட்டது. மத பாகுபாடு காட்டப்பட்டதாலும் செராஃபினின் உரிமைகள் பறிக்கப்பட்டதாலும் பிரான்சு நாடு இழப்பீடு செய்ய வேண்டும், செலவுகளை செராஃபினுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜூன் 1993-⁠ல், ஆஸ்திரியாவில் இதே போன்ற ஒரு வழக்கு நடந்தது; மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் இதே போன்ற தீர்ப்பை அளித்தது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சியான இங்கிரேட் ஹாஃப்மான் என்ற சகோதரிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மதப் பாகுபாட்டின் அடிப்படையில் தீர்ப்பளித்திருந்தது. a “பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை பெற்றோர் இருவரில் யாரிடம் ஒப்படைப்பது என்பதை மதத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கக் கூடாது என்ற ஹாஃப்மான் தீர்ப்புக்கு இசைவாக இந்தத் தீர்ப்பும் உள்ளது” என பிரான்ஸ் நாட்டின் சட்டப் பத்திரிகை லா சமென் ஜரிடிக் குறிப்பிடுகிறது. செராஃபினுடைய வழக்கறிஞர் இவ்வாறு சொல்கிறார்: “இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியம்; ஏனெனில் யெகோவாவின் சாட்சிகளுடைய பெற்றோர்களுக்கு பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெற உரிமை இருக்கிறது என்பதை இது வலியுறுத்துகிறது.”

தற்போது ஸ்பெயினில் வாழும் செராஃபினிடம் தீர்ப்பைப் பற்றி கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்: “எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் அதே சமயம் நிம்மதியாகவும் இருக்கிறது. மதத்தைக் காரணங்காட்டி என் பிள்ளைகளை என்னிடமிருந்து பிரித்தது தாங்க முடியாத வேதனையாக இருந்தது. அவர்களை ஐந்து வருடங்களுக்கு என் கண்ணிலேயே காட்டவில்லை. ஆனால் யெகோவா எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தார். இந்தத் தீர்ப்பு என்னைப் போன்ற சூழலில் இருக்கும் மற்றவர்களுக்கும் உதவும் என நம்புகிறேன்.” (g04 11/22)

[அடிக்குறிப்பு]

a அக்டோபர் 8, 1993, விழித்தெழு! (ஆங்கிலம்) பக்கம் 15-⁠ல் உள்ள “பிள்ளை கவனிப்பு போராட்டத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு கிடைத்த வெற்றி” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 20-ன் படம்]

செராஃபின்