Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வதால் நன்மை உண்டா?

திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வதால் நன்மை உண்டா?

திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வதால் நன்மை உண்டா?

ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழும் பழக்கம் “உலகெங்கிலும் உள்ள தொழில்மயமாக்கப்பட்ட சமுதாயங்களில் சர்வ சாதாரணமாகிவிட்டது” என ஜர்னல் ஆஃப் மேரேஜ் அண்ட் ஃபேமிலி என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. மேலும், “ஒருவர் ஏற்ற ஜோடியா என்பதை மதிப்பிட இந்தப் பழக்கம் உதவுகிறது என அவ்வாறு சேர்ந்து வாழ்பவர்களில் சுமார் பாதிப் பேர் கருதுகின்றனர்.” அப்படியானால் இந்தப் பழக்கம் “பொருத்தமற்ற ஜோடிகள் திருமணம் செய்வதை தடுக்க வேண்டும், அதோடு பொருத்தமான ஜோடிகளின் திருமணத்தை அதிக ஸ்திரமாக்க வேண்டும்” என அந்த ஜர்னல் கருத்து தெரிவிக்கிறது.

“ஆனால் நேர்மாறான விளைவே ஏற்பட்டிருப்பதாக அத்தாட்சிகள் காட்டுகின்றன. திருமணத்திற்குமுன் சேர்ந்து வாழ்ந்தவர்களுடைய மணவாழ்க்கையில் அதிக திருப்தி கிடைப்பதில்லை, இருவரும் சேர்ந்து அதிக நேரம் செலவிடுவதில்லை, அதிக கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன, பரஸ்பர ஆதரவு குறைவுபடுகிறது, பிரச்சினைகள் நல்ல விதத்தில் தீர்க்கப்படுவதில்லை, இன்னும் அநேக பிரச்சினைகள் ஏற்படுகின்றன. . . . மேலும், நேரடியாக திருமண பந்தத்திற்குள் நுழைந்த தம்பதிகளோடு ஒப்பிடுகையில் திருமணத்திற்குமுன் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகள் [விவாகரத்து] செய்துகொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது” என அந்தப் புத்தகம் தொடர்ந்து குறிப்பிடுகிறது.

இந்த ஆய்வு காட்டுகிறபடி, மனித கண்ணோட்டத்தில் ஞானமாக தோன்றுகிற காரியம் நிஜத்தில் மிக ஞானமற்ற காரியமாகவே இருக்கலாம். இந்த உண்மையை எரேமியா 10:23 ஊர்ஜிதப்படுத்துகிறது; “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல” என்று அது சொல்கிறது. திருமணத்தைப் பற்றி அருமையான ஆலோசனை அளிக்கும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிடம் கவனத்தைத் திருப்புவது எவ்வளவு ஞானமான காரியம்! (2 தீமோத்தேயு 3:16, 17) உதாரணத்திற்கு, திருமண பந்தத்தைப் பற்றி பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.”​—⁠ஆதியாகமம் 2:24; மத்தேயு 19:5.

குறைபாடுள்ளதும் மாறிக்கொண்டே இருப்பதுமான மனித கருத்துக்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக இப்படிப்பட்ட தெய்வீக வழிநடத்துதலைக் கடைப்பிடிக்கையில் உண்மையிலேயே சந்தோஷமான, நிலையான திருமண வாழ்க்கையைப் பெற முடியும்.​—நீதிமொழிகள் 3:5, 6. (g04 11/22)