Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

கோபப்படும் மனம், காயப்படும் இதயம்

“சதா கத்தி கூச்சல்போடும் அல்லது சிடுசிடுவென இருக்கும் ஆண்களுக்கு ஏட்ரியல் ஃபைபிரில்லேஷன் [atrial fibrillation] எனப்படும் ஒழுங்கற்ற இதய துடிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது” என்று நியு யார்க்கில் வெளியாகும் டெய்லி நியூஸ் அறிக்கை செய்கிறது. தொட்டதற்கெல்லாம் கோபப்படும் அல்லது எரிச்சலடைகையில் மற்றவர்கள் மேல் எரிந்துவிழும் அல்லது குறை சொல்லப்படுகையில் கொதித்தெழும் இயல்புடைய ஆண்களுக்கு ஒழுங்கற்ற இதய துடிப்பு ஏற்பட 30 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆய்வின் இயக்குநரான இலேன் ஏகர் இவ்வாறு கூறுகிறார்: “கோபத்தை அடக்கி வைக்காமல் கொட்டித் தீர்த்துவிட்டால் உடல்நலக் கேடுகளைத் தவிர்க்கலாம் என்று பலர் நம்பியிருக்கிறார்கள். . . . ஆனால், ஆய்வு செய்யப்பட்ட ஆண்களின் விஷயத்திலோ அது முற்றிலும் தவறு என்பது நிரூபணமானது. அவர்களுக்கு ஒழுங்கற்ற இதய துடிப்பு ஏற்படுவதற்கு மட்டுமல்ல, மற்ற அநேக காரணங்களால் மரணம் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்பு இருந்தது.” (g04 12/8)

உயிருக்கு ஆபத்தான எரிபொருள்

“வீட்டிற்குள் சமைக்கும்போது உண்டாகும் புகை, வளரும் நாடுகளில் ஒவ்வொரு 20 வினாடிக்கும் ஒருவரின் உயிரைப் பலி வாங்குகிறது” என்று இந்தியாவிலுள்ள புது டில்லியில் வெளியாகும் டௌன் டு எர்த் பத்திரிகை அறிக்கை செய்கிறது. “இந்த எண்ணிக்கை, மலேரியாவால் கொல்லப்படுவோரைவிட மிக அதிகமாகவும், பாதுகாப்பான குடிநீரும் சுகாதார வசதியும் இல்லாததால் இறப்பவர்களின் எண்ணிக்கைக்கு சமமாகவும் இருக்கிறது.” நிலக்கரி, வறட்டி போன்ற எரிபொருட்கள் உபயோகிக்கப்படுவதாலும், அறைகளில் போதுமான காற்றோட்டம் இல்லாததாலும், பாதுகாப்பான அளவைவிட 100 மடங்கு அதிகமான நச்சுப்பொருட்களை வீட்டிலுள்ளவர்கள் சுவாசிக்க நேரிடுகிறது. இவற்றால் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், தீராத மார்புச்சளி நோய் போன்றவை ஏற்படுகின்றன. புகையைக் கக்காத எரிபொருட்களை வாங்க வசதியற்ற ஏழைகள்கூட ஆபத்தான புகையை சுவாசிக்கும் வாய்ப்பை சுமார் 80 சதவிகிதம் குறைக்க முடியும்; அதற்காக அவர்கள் புகைப்போக்கிகள் உடைய அடுப்புகளை அல்லது நன்கு வடிவமைக்கப்பட்ட புகைப்போக்கிகளை உபயோகிக்க வேண்டுமென இன்டர்மீடியெட் டெக்னாலஜி டெவலப்மெண்ட் குரூப் என்ற ஆய்வு அமைப்பின் வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் வீட்டில் ஏற்படும் காற்று தூய்மைக்கேட்டால் மரிக்கும் 16 லட்சம் பேரில் ஏறக்குறைய 10 லட்சம் பேர் பிள்ளைகளே. (g04 12/8)

மிக அதிக மொழிகளில் கிடைக்கும் புத்தகம்

உலகிலேயே மிக அதிக மொழிகளில் கிடைக்கும் புத்தகம் என்ற இடத்தை தொடர்ந்து தக்க வைத்திருப்பது பைபிள்தான். உலகிலுள்ள ஏறக்குறைய 6,500 மொழிகளில் பைபிளானது முழுமையாகவோ பகுதியாகவோ 2,355 மொழிகளில் கிடைக்கிறது. இப்போது பைபிள், 665 ஆப்பிரிக்க மொழிகளிலும், 585 ஆசிய மொழிகளிலும், 414 ஓசியானிய மொழிகளிலும், 404 லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய மொழிகளிலும், 209 ஐரோப்பிய மொழிகளிலும், 75 வட அமெரிக்க மொழிகளிலும் கிடைக்கிறது. யுனைடெட் பைபிள் சொஸைட்டிஸ் தற்போது ஏறக்குறைய 600 மொழிகளில் பைபிள் மொழிபெயர்ப்பு வேலைகள் நடைபெறுவதற்கு உதவியளித்து வருகின்றன. (g04 12/8)

சுறா மீன் பாதுகாப்பு கருவி

நீச்சல் பிரியர்கள் அநேகர், சுறா மீன்களுக்குப் பயந்துகொண்டு கடலுக்குள் இறங்க மறுக்கிறார்கள். ஆனால், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நடால் ஷார்க்ஸ் போர்ட் என்ற குழு சுறா மீன் பாதுகாப்பு கருவி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறது. “குறிப்பிட்ட அதிர்வெண் உள்ள மின் அலை, சுறா மீனின் மூக்கிலுள்ள உணர்வு உறுப்புகளைத் தாக்குவதை [அந்தக் குழு] கண்டுபிடித்திருக்கிறது” என க்வாஸுலு-நடாலில் வெளியாகும் பத்திரிகையான வீக்கென்ட் விட்னெஸ் அறிக்கை செய்கிறது. பெருங்கடல் பாதுகாப்பு கருவி [Protective Oceanic Device] என்ற ஒரு டிரான்ஸ்மிட்டரை அந்தக் குழு தயாரித்தது. ஒரு சுறா மீன் அந்தக் கருவியை நெருங்க நெருங்க அதிக அசௌகரியமாக உணரும். தாங்க முடியாதளவுக்கு அசௌகரியத்தை உணரும்போது, “சுறா மீன் அந்த சுற்றுவட்டாரத்தைவிட்டே சென்றுவிடும்.” நீச்சல் பிரியரும் சர்ஃபிங் பிரியரும் உபயோகிப்பதற்காக ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு கம்பெனி இத்தகைய டிரான்ஸ்மிட்டரைத் தயாரிக்கிறது. முழங்காலுக்குக் கீழே அணிந்துகொள்ளப்படும் அந்தக் கருவி, “சுறாமீன் நுழைய முடியாத ஒரு பாதுகாப்பு வளையத்தை” அணிந்திருப்பவரை சுற்றிலும் உண்டாக்குகிறது. இருந்தாலும், இக்கருவி “எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா சுறா மீன்களையும் விரட்டியடிக்கும் என்று உறுதியளிக்க முடியாது” என அதைத் தயாரிக்கும் கம்பெனி எச்சரிக்கிறது. (g04 12/22)

சின்னஞ்சிறுசுகளுக்கு டிவி ஆபத்தானதா?

“டிவி பார்க்கும் சின்னஞ்சிறுசுகளுக்குப் பள்ளி செல்லும் வயதை அடைவதற்குள்ளாகவே கவனக்குறைவு கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன” என்று மெக்சிகோ நகரைச் சேர்ந்த த ஹெரால்ட் செய்தித்தாள் அறிக்கை செய்தது. ஒரு வயது குழந்தைகள் ஒரு தொகுதியாகவும், மூன்று வயது குழந்தைகள் ஒரு தொகுதியாகவும் மொத்தம் 1,345 குழந்தைகளை வைத்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது; அதைப் பற்றி குழந்தை நலம் (ஆங்கிலம்) என்ற மருத்துவ பத்திரிகை பிரசுரித்ததை அந்த அறிக்கை மேற்கோள் காட்டியது. ஆய்வின்படி, குழந்தைகள் ஒரு நாளில் டிவி பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும், ஏழு வயதில் கவனக்குறைவு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை 10 சதவிகிதம் அதிகரித்தது தெரிய வந்தது. “பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகளில் காட்சிகள் படுவேகமாக மாறுவதைத்தான் பார்க்கிறோம்; இதுவே [சின்னஞ்சிறுசுகளின்] இயல்பான மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம்” என்பதாக ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள். “சொல்லப்போனால், குழந்தைகள் டிவி பார்க்காமல் இருப்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. [டிவி பார்ப்பது] குண்டாவதோடும் முரட்டுத்தனத்தோடும் சம்பந்தப்பட்டிருப்பதாக மற்ற ஆராய்ச்சிகள் காண்பித்திருக்கின்றன” என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட டாக்டர் டிமிட்ரீ கிரிஸ்டாகிஸ் கூறினார். (g04 12/22)

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்

“சிரிப்பு நமக்கு ஏன் மனநிறைவை அளிக்கிறது என்பதற்கான மற்றொரு காரணத்தை ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்” என்று யூசி பெர்கிலி வெல்னெஸ் லெட்டர் அறிக்கை செய்கிறது. அந்நிபுணர்கள், “வேடிக்கையான கார்ட்டூன் புத்தகங்களை வாசிப்போரின் மூளை செயல்பாடுகளை ஆராய்ந்தார்கள்; நகைச்சுவையும் சிரிப்பும் அவர்கள் மூளையிலுள்ள ‘பரிசளிப்பு மையங்களை’ தூண்டிவிட்டதைக் கண்டார்கள்.” ஊக்கமூட்டும் போதை மருந்துகளும் இதே மையங்களைத்தான் தூண்டிவிடுகின்றன. “சிரிப்பு நமது டென்ஷனைக் குறைத்து, மனதை லேசாக்கி, நம் உள்ளத்திற்கு புத்துணர்ச்சியூட்டுகிறது” என வெல்னெஸ் லெட்டர் கூறுகிறது. அதோடு சிரிப்பு, ஹார்மோன்களின் உற்பத்தியையும் இதய துடிப்பையும் அதிகரிக்கிறது, இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது, தசைகளின் திறனுக்கு மெருகூட்டுகிறது. “வாய்விட்டு சிரிப்பதும் உண்மையில் ஒரு வகை உடற்பயிற்சியே. ஆனால், சிரிப்பதால் எடையைப் பெருமளவு குறைக்க முடியாது. சிரித்து சிரித்து உங்கள் வயிறு வலிக்கலாமே தவிர நீங்கள் ஒல்லியாக முடியாது” என வெல்னெஸ் லெட்டர் கூறுகிறது. (g04 12/22)

ஸ்விஃப்ட் பறவைகளின் திறமைகள்

ஸ்விஃப்ட் பறவைகள், “ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்து வரை 6,000 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தை ஏப்ரல் மாத கடைசியில் கடக்கின்றன” என்று லண்டனில் வெளியாகும் த சன்டே டெலிகிராஃப் கூறுகிறது. அவற்றிற்கு, “குளோபல் பொஸிஷனிங் சாட்டிலைட்டோ, விமான கட்டுப்பாட்டு மையங்களோ, பைலட்டுகளோ இல்லை”; என்றாலும், நவீன விமானத்தைவிட மிகவும் மேம்பட்ட போக்குவரத்து திறன்களை உபயோகித்து அவை 3,000 மீட்டர் உயரத்தில், அதுவும் இரவில் வழக்கமாக பறக்கின்றன. காற்றினால் தங்கள் பாதையைவிட்டு அடித்துச் செல்லப்படாதபடி அவை திசையை மாற்றிக்கொண்டே இருக்கின்றன; ஆனால், முன்னர் நினைத்தபடி பூமியில் இருக்கும் அடையாளங்களை வைத்து அல்ல மாறாக காற்றின் திசையை வைத்தே அவ்வாறு செய்கின்றன. ஸ்வீடனிலுள்ள லுன்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் யூஹான் பேக்மன் 225 பறவைகளை ராடர் உபயோகித்து கவனித்தார். “மிக நுட்பமான போக்குவரத்து கருவிகள் பொருத்திய அதிநவீன விமானங்களாலும்கூட காற்றின் திசையை இந்தளவிற்கு கண்டறிய முடியாது” என்று அவர் கூறுகிறார். குறிப்பிடத்தக்க விதமாக, இந்தப் பறவைகள் இரவுநேர பயணத்தின்போது மூளையில் ஒரு பாதியை மட்டுமே உபயோகிக்கின்றன என்பதை சில ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. ஆனாலும் அநேக கேள்விகள் தொக்கி நிற்கின்றன என்று பறவைகள் பாதுகாப்பிற்கான ராயல் சொஸைட்டியைச் சேர்ந்த கிரஹாம் மேஜ் கூறுகிறார். “பறக்கும்போது அவை எதைத்தான் சாப்பிடுகின்றன?” என்பது அதில் ஒன்று. (g04 12/22)

தெரியாமல் விஷம் குடித்துவிடுவது பெரும்பாலும் பெரியவர்களே

“தெரியாமல் விஷம் குடித்தவர் இறப்பதைத் தடுக்க வேண்டும் என நினைத்தவுடன் பொதுவாக நம் மனதுக்கு வருபவர்கள் சிறு குழந்தைகளே” என்று பிரிட்டிஷ் கொலம்பியா மருந்து மற்றும் விஷம் பற்றிய தகவல் மையத்தைச் சேர்ந்த டெப்ரா கென்ட் கூறுகிறார். என்றாலும், “பெரும்பாலும் இளைஞர்களும் பெரியவர்களுமே தெரியாமல் விஷம் குடித்து அதிக எண்ணிக்கையில் இறந்துவிடுகிறார்கள்” என்று கென்ட் கூறுகிறார். “யாரோ ஒருவர் பெயர் எழுதப்படாத பாட்டிலில், ஒருவேளை தண்ணீர் குடிக்கும் பிளாஸ்டிக் பாட்டிலில் விஷத்தை வைப்பதால்” பெரும்பாலும் பெரியவர்கள் தெரியாமல் அதை எடுத்துக் குடித்துவிடுகிறார்கள் என்று வான்கூவர் சன் செய்தித்தாள் கூறுகிறது. ஒரு மருந்தை எடுத்து சாப்பிடுவதற்கு முன்பு லைட்டைப் போட்டு அதன் பெயரைப் படித்துப் பார்த்திருந்தாலே மற்ற பல அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாம். “பெரியவர்கள் விபத்தில் இறப்பதற்கான முதல் 10 காரணங்களில் தெரியாமல் விஷம் குடித்துவிடுவது நான்காவது இடத்தில் இருக்கிறது” என்று சன் செய்தித்தாள் கூறுகிறது. (g04 12/22)