எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
செல்லப்பிராணிகள் “செல்லப்பிராணிகள்—அவற்றை எப்படி கருதுகிறீர்கள்?” (மார்ச் 8, 2004) என்ற தொடர் கட்டுரைகளுக்கு மிக்க நன்றி. மிருகங்களிடம் அன்பும் கருணையும் காட்டும் விதமாக கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. எனக்கு தெரிந்த கால்நடை மருத்துவரிடம் இந்தப் பத்திரிகையை கொடுக்கப் போகிறேன். மிருகங்களை நேசிப்போர் யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு இதுபோன்ற கட்டுரைகள் உதவும்.
ஓ. எம்., இத்தாலி (g04 12/8)
இப்போது கொஞ்சம் காலமாக நான் தனியாகத்தான் வாழ்கிறேன். அதனால் துணைக்கு இரண்டு பூனைக் குட்டிகளை வளர்க்கிறேன். அவை எனக்கு அதிக சந்தோஷத்தைத் தருகின்றன. இருந்தாலும், மனிதர்களைப் போல அவற்றை கருதிவிடக்கூடாது என்பதை உணருகிறேன். செல்லப்பிராணிகளின் விஷயத்தில் சமநிலை தேவை என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவியது.
கே. ஓ., ஜப்பான் (g04 12/8)
உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. நான் செல்லமாக வளர்த்து வந்த 13 வயது நாய் ரொம்ப அவதிப்பட்டதால் மூன்று வாரங்களுக்கு முன்பு அதைக் கொல்வதற்கு சம்மதித்தேன். இதுபோல் ஒரு கடினமான தீர்மானத்தை நான் எடுத்ததே இல்லை. செல்லப்பிராணிகள் பற்றிய தொடர் கட்டுரைகளை அன்று காலை மறுபடியும் ஒருமுறை வாசித்தேன். அது எழுதப்பட்ட விதத்தில் கரிசனையும் புரிந்துகொள்ளுதலும் மின்னியது, அதிக உதவியாகவும் இருந்தது.
எஸ். ஜீ., ஐக்கிய மாகாணங்கள் (g04 12/8)
செல்லப்பிராணிகளுக்கு உணவு தயாரிக்கும் துறையில் இன்று பெயர்பெற்று விளங்கும் ஒரு நபரிடம் நான் வேலை செய்கிறேன். செல்லப்பிராணிகள் பற்றிய அந்தப் பத்திரிகையை என் மேஜையிலுள்ள பேப்பர் ஸ்டான்டில் வைத்திருந்தேன். மதிய உணவு சாப்பிடுவதற்காக நான் வெளியே சென்றிருந்தபோது அவர் அதை எடுத்து வாசித்திருக்கிறார். அது அவருக்கு ரொம்ப பிடித்துப்போனதால் விழித்தெழு! பத்திரிகைகளைத் தவறாமல் தனக்குக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்.
எல். டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள் (g04 12/8)
அருமையான கட்டுரைகள். செல்லப்பிராணிகள் பற்றி சமநிலையோடு இருக்க உதவிய கட்டுரைகள். இது சம்பந்தமாக ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நாய்க் குட்டியை அல்லது பூனைக் குட்டியை வீட்டிற்கு கொண்டு வரும்போதே மலடாக்கிவிடுவது அல்லது காயடித்துவிடுவது நல்லது. ஏனெனில், நாய்களையும் பூனைகளையும் பாதுகாக்க போதுமான காப்பகங்கள் இல்லாத காரணத்தாலேயே ஒவ்வொரு வருடமும் அவற்றில் பல கொல்லப்படுகின்றன.
சி. பி., ஐக்கிய மாகாணங்கள் (g04 12/8)
“விழித்தெழு!” பதில்: இந்த விஷயத்தை எமது வாசகரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக உங்களுக்கு நன்றி.
கடவுளுடைய புதிய உலகில், ‘வீட்டு மிருகங்களும் சரி, காட்டு மிருகங்களும் சரி ஒன்றுக்கொன்று சமாதானமாக இருக்கும்’ என்று உங்கள் கட்டுரை குறிப்பிட்டது. ஆனால் இனி மாம்சபட்சிணிகளே இருக்காது என்பது நடக்கிற காரியமா என்ன?
டி. பி., கனடா (g04 12/8)
“விழித்தெழு!” பதில்: மனிதர் பாவம் செய்த சமயத்திலிருந்து இந்தப் பூமியில் பல காரியங்கள் தலைகீழாக மாறிவிட்டன. பரதீஸில் மிருகங்கள் ஒன்றுக்கொன்று சமாதானமாக இருக்கும் என்று கூறும் பைபிள் தீர்க்கதரிசனங்கள் துல்லியமாக எவ்வாறு நிறைவேறப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், தீங்கான எல்லாவற்றையும் நமது படைப்பாளர் இந்தப் பூமியிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிடுவார் என்பதில் நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.—சங்கீதம் 37:10, 11.
இரத்த குரூப் “பைபிளின் கருத்து—உங்களுடைய இரத்த குரூப் உங்கள் சுபாவத்தை தீர்மானிக்கிறதா?” (மார்ச் 8, 2004) என்ற கட்டுரைக்காக மிக்க நன்றி. இந்த விஷயம் என் தலையைக் குடைந்துகொண்டிருந்தது. நம் சுபாவத்திற்கும் இரத்த குரூப்பிற்கும் சம்பந்தமேயில்லை என பள்ளியில் படித்திருக்கிறேன். இரத்த குரூப்பை வைத்து ஒருவரின் சுபாவத்தைத் தீர்மானிப்பது ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்டது என்பதையும் சில புத்தகங்களில் வாசித்திருக்கிறேன். ஆனால், அடிக்கடி இரத்த குரூப் பற்றி பேசுவோரையும் அதன் அடிப்படையில் மற்றவர்கள் இப்படித்தான் என முடிவுகட்டுவோரையும் அறிந்திருக்கிறேன். எது சரி, எது தவறு என்பதைப் பற்றி குழம்பிப்போயிருந்த சமயத்தில்தான் இந்தக் கட்டுரை கையில் கிடைத்தது. அதைப் படித்த பிறகு பைபிளின் கருத்தை என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆர். கே., ஜப்பான் (g04 12/22)
அந்தக் கட்டுரை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ‘ஏ’ குரூப் இரத்தமுடையோர் கறார் பேர்வழிகள், சட்டென உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றும் ‘பி’ குரூப் இரத்தமுடையோர் சாந்தமானவர்கள் என்றும் எனது பள்ளியில் இருப்போர் கூறுகிறார்கள். ‘நான் அப்படித்தான் இருக்கிறேனா?’ என்று பல முறை யோசித்ததுண்டு. ஆனால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுபாவம் உள்ளது என்பதை அறிந்ததும் நிம்மதியடைந்தேன். கடவுளுடைய ஆவியின் உதவியோடு நம் சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடியும் என்பதையும் புரிந்துகொண்டேன்.
என். ஐ., ஜப்பான் (g04 12/22)