Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எய்ட்ஸ் எப்போது ஒழியும்?

எய்ட்ஸ் எப்போது ஒழியும்?

எய்ட்ஸ் எப்போது ஒழியும்?

முறைகெட்ட பாலுறவை முன்னேற்றுவிக்கும் பாலியல் செய்திகள் இன்று சிறு பிராயத்திலிருந்தே இளைஞர்களைச் சரமாரியாகத் தாக்குகின்றன. ஹெச்ஐவி தொற்றுவதற்கு மற்றொரு முக்கிய காரணி போதை ஊசி போட்டுக்கொள்வது, இதுவும் அதிகமாக பரவி வருகிறது. நெறிகெட்ட நடத்தை இன்றைக்கு எங்கும் ஊடுருவி காணப்படுவதைப் பார்க்கையில், எய்ட்ஸ் என்றாவது ஒழியுமா என நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம்.

நடத்தையில் மாற்றம் செய்வதே எய்ட்ஸ் நோயை எதிர்த்துப் போராட முக்கிய வழி என சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கிறது. “ஹெச்ஐவி தொற்றுக்கு வழிநடத்தும் நடத்தைகளைத் தவிர்க்க ஒவ்வொரு இளைய தலைமுறையினருக்கும் வாழ்நாள் பூராவும் நீடிக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவும் சுகாதாரம் பற்றிய தகவல்கள் தொடர்ந்து தேவை. இத்தகைய திட்டங்களில் பெற்றோர்களையும் கல்வியாளர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஆகவே, தங்களுடைய பிள்ளைகளுக்கு சகாக்களோ மற்றவர்களோ தவறான செய்திகளைச் சொல்லிக் கொடுப்பதற்கு முன்பு இதன் ஆபத்துக்களைப் பற்றி அவர்களுக்கு எச்சரித்து, பெற்றோர்கள் கல்வி புகட்டுவது அவசியம் என்பது தெளிவாகிறது. இது எப்போதும் எளிதல்ல. ஆனால் இது உங்களுடைய பிள்ளையின் உயிரைப் பாதுகாக்கும். செக்ஸ் மற்றும் போதைப்பொருட்களைப் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது அவர்களுடைய தூய குணத்தைப் போக்கிவிடாது. சொல்லப்போனால், இது அவர்களுடைய கற்பை இழந்துவிடாமல் பாதுகாக்கும்.

பெற்றோருடைய பயிற்றுவிப்பு இன்றியமையாதது

பாலுறவுகளைப் பற்றியும் உடல்நலனை பாதுகாப்பது பற்றியும் பிள்ளைகளுக்குப் பெற்றோர் கற்பிக்கும்படி கடவுளுடைய பூர்வகால ஜனங்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. பூர்வ இஸ்ரவேலருடைய சட்டங்களில் ஒழுக்க நெறிமுறைகளும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பழக்கங்களும் தெளிவாக சொல்லப்பட்டிருந்தன. (லேவியராகமம் 18:22, 23; 19:29; உபாகமம் 23:12, 13) இத்தகைய சட்டங்கள் எப்படி மக்களுக்குக் கற்பிக்கப்பட்டன? இஸ்ரவேலரிடம் யெகோவா தேவன் இவ்வாறு கூறினார்: “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.” இந்தச் சட்டங்களைப் பின்பற்றினால் வரும் நன்மைகளையும் பின்பற்ற தவறினால் உண்டாகும் விளைவுகளையும் பற்றி முதலாவதாக பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. பிறகு அவர்களுக்கு இவ்வாறு கட்டளை கொடுக்கப்பட்டது: ‘நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேச வேண்டும்.’​—உபாகமம் 6:6, 7.

“கருத்தாய் போதி” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை “அடிக்கடி சொல்வதன் மூலம் கற்பிப்பதையும் மனதில் பதிய வைப்பதையும்” குறிக்கிறது. இதற்கு நேரம் தேவை என்பதில் சந்தேகமில்லை. போதைப் பொருட்களைத் துஷ்பிரயோகம் செய்வதாலும் நெறிகெட்ட பாலுறவில் ஈடுபடுவதாலும் உண்டாகும் ஆபத்துக்களைப் பற்றி மகன்களுக்கும் மகள்களுக்கும் கற்பிக்க பெற்றோர்கள் நேரம் ஒதுக்க வேண்டும், அப்படி செய்கிற பெற்றோர்களுடைய பிள்ளைகள் ஹெச்ஐவி தொற்றுக்கும் வேறுசில வியாதிகளுக்கும் வழிநடத்தும் பழக்கங்களைத் தவிர்ப்பார்கள். a

ஹெச்ஐவி/எய்ட்ஸ் நோயினால் அவதியுறுவோருக்கு ஆறுதல்

ஹெச்ஐவி/எய்ட்ஸ் தொற்றிய கோடிக்கணக்கான ஆட்களுக்குத் தடுப்பு முயற்சிகள் அதிக ஆறுதல் தராது. அந்த வியாதியால் உண்டாகும் உடல் பாதிப்புகளைத் தவிர, அவர்கள் பெரும்பாலும் மோசமானவர்கள் என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். ஏன்? அவர்களோடு பழகினாலே ஹெச்ஐவி தொற்றிவிடும் என்பது இன்றைக்குத் தவறான ஆனால் பரவலாக காணப்படும் ஒரு நம்பிக்கை. ஹெச்ஐவி தொற்றைக் குறித்து பயப்படுவது புரிந்துகொள்ளத்தக்கதே, ஏனென்றால் அது தொற்றக்கூடிய வியாதி, அதேசமயத்தில் சாவுக்கேதுவான வியாதி. இந்த வியாதியைப் பற்றிய பயத்தினால், எய்ட்ஸ் தொற்றிய ஆட்களைப் பற்றிய தேவையற்ற பயம் தங்களை கவ்விக்கொள்வதற்கு சிலர் அனுமதித்திருக்கிறார்கள். இந்த வியாதியால் அவதியுறுகிறவர்கள் மருத்துவ உதவி மறுக்கப்பட்டிருக்கிறார்கள், சர்ச்சிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள், கொடூரமாக தாக்கப்பட்டுமிருக்கிறார்கள்.

எய்ட்ஸ் என்பது கடவுளிடமிருந்து பொல்லாதவர்களுக்கு வந்த ஒரு சாபம் என சிலர் வாதிட்டிருக்கிறார்கள். உண்மைதான், பாலியல் நெறிமுறை, போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், இரத்தம் ஆகியவை சம்பந்தமாக பைபிள் தராதரங்களைப் பின்பற்றியிருந்தால் அநேகர் எய்ட்ஸ் நோய் தொற்றாமல் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள். (அப்போஸ்தலர் 15:28, 29; 2 கொரிந்தியர் 7:1) என்றாலும், வியாதி என்பது குறிப்பிட்ட ஒரு பாவத்திற்காக கடவுள் தரும் தண்டனை அல்ல என வேதவசனங்கள் காட்டுகின்றன. “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” என பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:13; யோவான் 9:1-3) பைபிள் தராதரங்களைப் பின்பற்றாததால் ஹெச்ஐவி அல்லது எய்ட்ஸ் தொற்றி இப்போது தனது பழக்கத்தை மாற்றிக்கொண்ட ஒருவர், கடவுள் தன்னை கைவிட மாட்டார் என்பதில் உறுதியுடன் இருக்கலாம்.

தீராத வியாதியால் அவதியுறுவோருக்குக் கடவுளுடைய அனுதாபமும் அன்பும் இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி அவருடைய குமாரனான இயேசு பூமிக்கு வந்தபோது தெளிவாக தெரிந்தது. இயேசு பயணம் செய்கையில் குஷ்டரோகி ஒருவனை சந்தித்தார், அப்போது அவர் ‘மனதுருகி, தமது கையை நீட்டி, அவனைத் தொட்டார்.’ இயேசு தமது அற்புத சக்தியைப் பயன்படுத்தி அந்தக் குஷ்டரோகியைச் சுகப்படுத்தினார். (மாற்கு 1:40-42) வியாதியஸ்தரை அவர் இகழ்வாக கருதவில்லை. அவர்கள் மீது அவர் காண்பித்த அன்பு அவருடைய பரலோக தகப்பனுடைய அன்பின் பரிபூரண வெளிக்காட்டாகும்.​—லூக்கா 10:⁠22.

எய்ட்ஸுக்கு நிவாரணம்​—⁠விரைவில்!

இயேசு அற்புதகரமாக சுகமளித்ததெல்லாம் கடவுளுடைய அன்பைக் காட்டிலும் மேலான ஒன்றை நமக்கு உறுதியளிக்கிறது. இயேசு கிறிஸ்து இப்பொழுது பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்கிறார் என பைபிள் கூறுகிறது. (வெளிப்படுத்துதல் 11:15) அவருக்கு வல்லமை இருக்கிறது, மனிதகுலத்தை வாட்டும் எந்த வியாதியையும் குணப்படுத்த மனவிருப்பமும் இருக்கிறது என்பதை பூமியில் அவர் செய்த ஊழியம் படம்பிடித்துக் காட்டியது. அதையே அவர் நிச்சயம் செய்யப் போகிறார்.

‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாத’ ஒரு காலம் விரைவில் வரப்போகிறது என பைபிள் தீர்க்கதரிசனம் உறுதியளிக்கிறது. (ஏசாயா 33:24) எய்ட்ஸ் பரவுவதை நிறுத்துவதற்கு அல்லது பலன்தரும் சிகிச்சை அளிப்பதற்கு மனிதகுலம் தவறுகிறபோதிலும், எய்ட்ஸ் அடியோடு ஒழிக்கப்படும் என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். ‘என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறவர்’ என தாவீது ராஜா கூறினார்.​—சங்கீதம் 103:2, 3.

இதெல்லாம் எப்பொழுது நடக்கும்? இத்தகைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் நம்பிக்கை உடையவர்களிடம் என்ன தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன? பைபிள் தரும் மகத்தான வாக்குறுதியைப் பற்றி கூடுதலாக அறிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ளும்படி உங்களை அழைக்கிறோம். (g04 11/22)

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகம் செக்ஸ் பற்றியும் முக்கியமான ஒழுக்க நெறிகளைப் பற்றியும் பிள்ளைகளுக்குப் படிப்படியாக கற்றுக் கொடுப்பதற்குப் பயனுள்ளதாக இருப்பதை பெற்றோர்கள் அநேகர் கண்டிருக்கின்றனர்.

[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]

‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாத’ ஒரு காலம் விரைவில் வரப்போகிறது என பைபிள் தீர்க்கதரிசனம் உறுதியளிக்கிறது

[பக்கம் 10-ன் படம்]

செக்ஸ் மற்றும் போதைப் பொருள் துஷ்பிரயோகத்தைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிப்பது அவர்களைப் பாதுகாக்கும்

[பக்கம் 10-ன் படம்]

இயேசுவுக்கு வல்லமையும் வியாதியை குணப்படுத்த மனவிருப்பமும் இருந்தது அவர் எதிர்காலத்தில் செய்யப்போவதை சுட்டிக்காட்டியது