Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடலில் நடனமாடும் குதிரைகள்

கடலில் நடனமாடும் குதிரைகள்

கடலில் நடனமாடும் குதிரைகள்

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்ததும் வெட்கத்தில் நிறம் மாறுகின்றனர். பெருமையால் பூரிப்பது போல கணவன் உடல் ஊதுகிறது, மனைவி தன் அங்கீகார பார்வையை வீசுகிறாள். நெருங்கி வந்து ஒருவரையொருவர் மென்மையாக வருடிக்கொள்கின்றனர், பின்னர் கனிவாகக் கட்டியணைக்கின்றனர். காலைக் கதிரவனின் இதமான ஒளி அவர்கள்மீது படும்போது, இயற்கையில் காணப்படுவதிலேயே எழில்கொஞ்சும் பாலே நடனத்தை ஆட ஆரம்பிக்கின்றனர். அதுவே கடற்குதிரையின் நடனம்.

“கடற்குதிரைகள் மிகவும் அட்டகாசமானவை, விசேஷித்தவை, வசீகரிப்பவை” என்று கடல் வல்லுநரான டாக்டர் கீத் மார்டின்-⁠ஸ்மித் கூறுகிறார். முற்காலங்களிலோ அவற்றைக் கண்டவர்கள் அவற்றை எந்தப் பட்டியலில் சேர்ப்பதென புரியாமல் குழம்பிப்போனார்கள். பூர்வகால இயற்கையியலாளர்கள் அவற்றிற்கு ஹிப்போகாம்பஸ் என்று பெயரிட்டார்கள். புராணக்கதைகளில் வரும் பாதி குதிரை, பாதி மீன் போன்ற கடல் ஜீவிகளுக்கும் இந்தப் பெயர்தான் கொடுக்கப்பட்டிருந்தது. கிரேக்க கடல் தெய்வமான பஸைடனின் இரதத்தை இந்தப் பிராணிகளே இழுத்துச் சென்றதாக நம்பப்பட்டது.

நெருப்பை கக்கும் டிராகன்களின் குட்டிகளே இந்தக் கடற்குதிரைகள் என்று சொல்லி இடைக்காலத்தில் சிறு வியாபாரிகள் அவற்றை விற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது. உண்மையில், அவை எலும்புகள் நிறைந்த மீன்களே. ஆனாலும், அவை பார்ப்பதற்குப் பெரும்பாலான மற்ற மீன்களைப் போல இருப்பதில்லை, அவற்றைப் போல நீந்துவதும் இல்லை. நீரோட்டத்தோடு செல்லும் அல்லது ஒரே இடத்தில் மிதக்கும் அவை, மென்மையான கண்ணாடி குதிரைகள் போலவும் உயிர்பெற்று வந்த செஸ் காய்கள் போலவும் இருப்பதாய் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன.

வெதுவெதுப்பான நீருள்ள பெரும்பாலான கரையோர பகுதிகளில் கடற்குதிரைகளைக் காணலாம். அவை வினோதமான பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் காணப்படுகின்றன. அவற்றில் 33 முதல் 70-⁠க்கும் அதிகமான வகைகள் இருக்கலாம் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். உங்கள் கை நகத்தின் அளவேயான குள்ள கடற்குதிரை முதல் 30 சென்டிமீட்டருக்கும் அதிக நீளமான பானை வயிற்று கடற்குதிரை வரை பல்வேறு அளவுகளில் அவை உள்ளன.

பல் இல்லை, வயிறு இல்லை, பிரச்சினையே இல்லை!

குதிரை போன்ற தலையும், எலும்பு கவசம் கொண்ட உடலும், குரங்கு போன்ற வாலும் உடைய கடற்குதிரைகளின் வினோத உடல்வாகு வேகமாக சுற்றித்திரிவதற்குப் பதிலாக ஒரே இடத்தில் இருப்பதற்கே ஏற்றது. கடற்குதிரைகள் பெரும்பாலான நேரம் ஏதாவது கடல் தாவரத்தில் வாலை சுற்றிக்கொண்டு உணவருந்த விரும்புவதாகவே தோன்றுகிறது. அவை நகரும்போது அவற்றின் முதுகிலுள்ள சிறிய துடுப்பின் உதவியால் மெதுவாக உந்திச் செல்கின்றன; பக்கவாட்டிலுள்ள துடுப்புகளின் உதவியால் இங்குமங்கும் திரும்புகின்றன. அவற்றின் உடலிலுள்ள காற்றுப்பையில், காற்றின் அளவை அதிகரிப்பதன் மூலமோ குறைப்பதன் மூலமோ அவற்றால் நீர்மூழ்கிக் கப்பல் போல மேலே வரவோ கீழே செல்லவோ முடிகிறது.

கடற்குதிரைகளுக்கு அகோரப் பசியெடுப்பதால் ஏராளமான உணவை கபளீகரம் செய்கின்றன. அருகில் நீந்திச் செல்லும் சிறிய இறால் மீன்களையோ மெல்லுடலிகளையோ எலும்பு வாயால் சட்டென உறிஞ்சிவிடுகின்றன. உணவு செரிமானத்தில் உதவ அவற்றிற்கு பற்களோ வயிறோ கிடையாது. எனவே தினமும் ஏறக்குறைய 50 இறால் மீன்களை விழுங்கினால்தான் உயிர்வாழ தேவையான ஊட்டச்சத்தை அவற்றால் பெற முடியும். இந்தக் கெட்டிக்கார வேட்டைக்காரர்களுக்கு இது ஒன்றும் கடினமல்ல, ஏனெனில் அவற்றின் கண்பார்வை மிகவும் கூர்மையானது. ஒரு கண், முன்னால் இரை தேடுகையில் மற்றொரு கண் பின்னால் இரை தேடும். மனிதர்களைவிட அதிக நிறங்களை அவற்றால் காண முடியும், பெரும்பாலான மீன்களைவிட அதிக துல்லியமாகவும் அவற்றால் பார்க்க முடியும்.

அதே சமயம், கடற்குதிரைகள் மற்ற பிராணிகளுக்கு இரையாகிவிடாதபடியும் கவனமாக இருக்க வேண்டும். நண்டுகள், ஆமைகள் போன்ற எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவற்றின் வாழிடங்களான கடல் புல், பவழப்பாறை, சதுப்பு நில தாவரம் ஆகியவற்றோடு ஒன்றிப்போய் மறைந்து கொள்கின்றன. அவற்றின் தோலிலுள்ள வடிவங்கள், கடற்பாசி போல நீட்டிக்கொண்டிருக்கும் உறுப்புகள், சுற்றுப்புறத்திற்கு ஏற்ப தோலின் நிறத்தை மாற்றும் அபார திறன் ஆகியவற்றின் உதவியால் சுற்றுச் சூழலுடன் இரண்டற கலந்துவிட முடிகிறது. “அவை அவ்வளவு தத்ரூபமாக மாறுவேடம் போடுவதால் அவற்றைக் கண்டுபிடிக்க ஒருவருக்குக் கழுகுக் கண் வேண்டும்” என ஆராய்ச்சியாளரான ரூய்டி காய்டர் கூறுகிறார்.

நடனமும் காதலும்

பெரும்பாலான மீன்களைப் போலில்லாமல், ஒரு கடற்குதிரை ஜோடி காலம் பூராவும் சேர்ந்தே வாழ்கிறது, பிரிந்துபோவதே கிடையாது. ஒவ்வொரு நாளும் பொழுது புலர்கையில் விசேஷித்த நடனமாடி தங்கள் உறவை உறுதிப்படுத்துகின்றன. “கடற்குதிரை நடனம் ரொம்ப அருமையாகவும், நளினமாகவும் இருப்பதால் அதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும்” என்று கடற்குதிரைகளை வளர்க்கும் ட்ரேஸி வார்லண்ட் கூறுகிறார். நடனம் முடிந்த பிறகு அவை இரண்டும் அதனதன் இடங்களுக்கு சென்று நாள் முழுவதும் உணவருந்தும். இனச்சேர்க்கை நடனமோ இன்னும் விலாவாரியானது. ஒரு பெண் கடற்குதிரை ஆணை நெருங்குகையில் அவன் தன் காற்றுப்பையைப் பெரிதாக்கி, நிறத்தை அடர்த்தியாக்கி, அவளுக்கு முன்னால் இங்குமங்கும் நடை பழகுவான். அவை மெதுவாக ஒன்றை ஒன்று வட்டமிட்டு, வால்களைக் கோர்த்துக்கொள்ளும். இரண்டும் ஒன்றாக சேர்ந்து கடலின் தரையில் சுழன்று, சுழன்று கும்மாளமடிக்கும். பார்ப்பதற்கு அவை பாய்ந்து ஓடும் குதிரைகளைப் போல காட்சியளிக்கும். மேலும் கீழுமாக சென்று, பல்டியடித்து, நிறத்தை மாற்றிக்கொண்டு சுமார் அரைமணி நேரம் இப்படி குதித்து விளையாடும்.

இவற்றின் இனச்சேர்க்கை நடனமே குட்டிகளைப் பிறப்பிப்பதற்கான துவக்கம். “இனம் சேரும் நேரம் நெருங்க நெருங்க அவை நீண்ட நேரமும் அடிக்கடியும் நடனமாடுகின்றன. நாள் முழுவதும்கூட திரும்பத் திரும்ப நடனமாடுகின்றன. நடனம் உச்சக்கட்டத்தை எட்டுகையில் அவை மெல்ல மேற்பரப்பை அடைகின்றன. அவற்றின் வால்கள் பிணைந்திருக்க உடல்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கியிருக்கின்றன. பின்பு பெண் கடற்குதிரை தனது முட்டைகளை ஆணின் கங்காரு போன்ற அடைகாக்கும் பைக்குள் மெதுவாக வைக்கும்” என்று காய்டர் கூறுகிறார். பிறகு, அந்த ஆண் கடற்குதிரை அமைதியான ஓரிடத்திற்கு சென்று அந்த முட்டைகளை அதன் பையின் சுவற்றில் பாதுகாப்பாக வைக்கிறது. அங்கே அவற்றை சினையுறச் செய்கிறது; இவ்வாறு, பிராணிகளின் உலகிலேயே மிகவும் விசித்திரமான கருவுறுதல் ஆரம்பமாகிறது.

“ஒவ்வொரு பெண்ணின் கனவு”

“ஆண் கடற்குதிரைகள் கர்ப்பந்தரித்து குட்டிப் போடுவது ரொம்ப அருமையானது என நினைக்கிறேன்” என்று ஒரு பெண் கூறுகிறார். “ஒவ்வொரு பெண்ணின் கனவும் அதுதானே” என்று மற்றொரு பெண் கிண்டலடிக்கிறார். ஒரு ஆண் கடற்குதிரை ஒரே வருடத்தில் அடுத்தடுத்து 7 முறை கர்ப்பந்தரித்து வெற்றிகரமாக குட்டிப் போட்டது; அந்த ஒவ்வொரு கர்ப்ப காலமும் 21 நாட்கள் நீடித்தன!

கடற்குதிரை குட்டிகள் அடைகாக்கும் பையின் ஆழத்தில் பாதுகாப்பாக இருக்கையில், அங்குள்ள ஏராளமான இரத்தக் குழாய்கள் அவற்றிற்குத் தேவையான ஆக்ஸிஜனையும் ஊட்டச்சத்துக்களையும் அளிக்கின்றன. காலப்போக்கில், பைக்குள் இருக்கும் உப்புத்தன்மை அதிகரித்து கடலில் வாழ்வதற்காக அவற்றை தயார்படுத்துகிறது. பிரசவ காலத்தில் ஆண் கடற்குதிரைக்குப் பல மணிநேரம் முதல் இரண்டு நாள் வரை வலி எடுக்கலாம். ஒரு வழியாக அதன் பை திறக்கையில் கடற்குதிரை குட்டிகள் ஒவ்வொன்றாக வெளியே தள்ளப்படுகின்றன. பிரசவிக்கும் குட்டிகளின் எண்ணிக்கை வகைக்கு வகை வேறுபடலாம், என்றாலும் 1,500 குட்டிகள் வரைகூட ஈன்றெடுக்கும்.

செல்லப்பிராணிகள், கலைப்பொருட்கள், நிவாரணிகள்

இந்த மீன்களின் பிறப்பு விகிதம் இவ்வளவு அதிகமாக இருக்கிறபோதிலும் உலகமுழுவதிலும் உள்ள கடற்குதிரைகள் ஆபத்தில் இருக்கின்றன. பாரெங்கும் ஒவ்வொரு வருடமும் 3 கோடி கடற்குதிரைகள் பிடிக்கப்பட்டு விற்கப்படுகின்றன என்று சில அதிகாரிகள் கணிக்கின்றனர். அவற்றுள் பெரும்பாலானவை பாரம்பரிய ஆசிய மருந்து கடைகளில் போய் சேருகின்றன. ஆஸ்துமா, எலும்பு முறிவு, ஆண்மைக்குறைவு போன்ற பல்வேறு வியாதிகளைக் குணப்படுத்தும் மருந்தாக அவை உபயோகிக்கப்படுகின்றன.

கீ-செயின்கள், பேப்பர் வெய்ட்டுகள், புரூச்சுகள் போன்றவற்றைத் தயாரிக்க ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 10 லட்சம் கடற்குதிரைகள் உபயோகிக்கப்படுகின்றன. பைபோன்ற பெரிய வலையை உபயோகித்து மீன் பிடித்தல், டைனமைட்டால் பவழப்பாறைகளைத் தகர்த்தல், தூய்மைக்கேடு போன்றவை எளிதில் சேதமடையக்கூடிய கடற்கரை பகுதிகளை அழிக்கின்றன; இதனால் கடற்குதிரைகளின் குடியிருப்புகள் நாசமடைகின்றன. அக்வேரியத்தில் வைக்கப்படுவதற்காகவும் கடற்குதிரைகளைக் கடலிலிருந்து பிடித்து விற்கிறார்கள். என்றாலும், அவை உயிர் வாழ விசேஷமான உணவு தேவை என்பதாலும் தொட்டிகளில் வசிக்கையில் பல விதமான வியாதிகளைப் பெறுவதாலும் சீக்கிரத்தில் மடிந்துவிடுகின்றன.

கடற்குதிரைகள் இவ்வாறு மடிவதைத் தடுப்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடற்குதிரைகளை ஏற்றுமதி செய்யும் அநேக நாடுகள், ஏற்றுமதி காரணமாகக் கடற்குதிரைகளின் எண்ணிக்கைக்கும் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாது என்பதற்கு அத்தாட்சி அளிக்க வேண்டும். அதோடு, மேம்பட்ட முறைகளையும் தொழில்நுட்பங்களையும் உபயோகிப்பது வியாபாரத்திற்காகக் கடற்குதிரைகளை வளர்க்கும் சிலருக்கு உதவியிருக்கிறது. இவர்கள், தொட்டிகளில் வளர்க்கப்பட்ட கடற்குதிரைகளை அக்வேரியத்திற்கு விற்கின்றனர்.

கடற்குதிரைகளின் எதிர்காலத்திற்கும் கடல்களின் எதிர்காலத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. “மனிதரின் நடவடிக்கைகளால் சமுத்திரங்கள் பாழாகி வருவது தெளிவாக உள்ளது. அவற்றிலுள்ள எல்லாவற்றையும் நாம் அளவுக்கு அதிகமாக சுரண்டுகிறோம்” என்று காய்டர் புலம்புகிறார். மானிட “முன்னேற்றம்,” நளினமான இந்த நடனமணிகளை நசுக்கிப் போடுமா? “நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். கடற்குதிரைகளைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளை பொதுமக்கள் ஆதரிக்கிறார்கள். பூமியிலுள்ள ஜீவராசிகள் மீது அதிக அக்கறையை வளர்த்துக்கொள்ள இன்னும் அநேகருக்கு உதவுவதே நம் வேலை. அந்த அக்கறை வளருகையில் மாற்றம் நிச்சயம். நம்மால் கடற்குதிரைகளைக் காப்பாற்ற முடிந்தால் ஒருவேளை கடல்களையும்கூட காப்பாற்ற முடியலாம்” என்று மார்டின்-⁠ஸ்மித் கூறுகிறார். ஒருவேளை முடியலாம். ஆனால், நம்பிக்கை வைப்பதற்கு மற்றொரு நம்பகமான ஊற்றுமூலம் இருக்கிறது.​—வெளிப்படுத்துதல் 14:7. (g04 12/22)

[பக்கம் 15-ன் படம்]

குள்ள கடற்குதிரை (நிஜ அளவு)

[படத்திற்கான நன்றி]

© Reinhard Dirscherl/Visuals Unlimited

[பக்கம் 16, 17-ன் படங்கள்]

சுற்றுப்புறத்திற்கு ஏற்ப தோலின் நிறத்தை முற்றிலும் மாற்றும் திறமை கடற்குதிரைகளுக்கு உண்டு

சிறுதலை கடற்குதிரை

பானை வயிற்று கடற்குதிரைகள்

வரியுள்ள கடற்குதிரை

[பக்கம் 16-ன் படம்]

ஒய்யார கிரீட கடற்குதிரை

[பக்கம் 17-ன் படம்]

சிறுதலை கடற்குதிரைகள்

[பக்கம் 17-ன் படம்]

ஆண் சிறுதலை கடற்குதிரை​—⁠பிரசவிக்கையில்

[பக்கம் 17-ன் படம்]

சிறுதலை கடற்குதிரை குட்டிகள்

[பக்கம் 16-ன் படங்களுக்கான நன்றி]

வரியுள்ள கடற்குதிரை: © Ken Lucas/Visuals Unlimited; மற்ற எல்லா படங்களும்: Rudie H Kuiter

[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]

எல்லா படங்களும்: Rudie H Kuiter