செக்கியாவின் மில்களில் வாழ்க்கை
செக்கியாவின் மில்களில் வாழ்க்கை
செக் குடியரசிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு, மாவு மில்களில் ஓடிய பல் சக்கரங்களின் தாள கதியே செக்கியா நாடெங்கும் எதிரொலித்தது. இந்த ஓசை, அங்கு நிலவிய அமைதியைக் குலைப்பதற்கு மாறாக செக் நாட்டுப்புறத்தின் அழகிற்கு அழகு சேர்ப்பது போல தோன்றியது. அங்கு வசித்த மக்களின் வாழ்க்கையில் மாவு மில்கள் முக்கிய பங்கு வகித்தன.
அந்தக் காலங்களில், மாவு அரைத்து முடிக்கப்பட்டதும் மாவரைப்பவரின் மனைவி அதை சுடச்சுட, மணங்கமழும் ரொட்டியாக செய்து கொண்டுவருவது வழக்கம். அவர் சூடு பறக்கும் அந்த ரொட்டியை ஒரு பெரிய மேசையில் வைப்பதை மனக்கண்களால் காண முடிகிறதா? ஆஹா, வாசனை மூக்கைத் துளைக்கிறதே! அதோ, மாவரைப்பவர் வருகிறார். உடலெங்கும் மாவு படிந்து வெள்ளே வெளேரென தோன்றும் அவர் கம்பீரமாக காட்சியளிக்கிறார். கொஞ்சம் சிற்றுண்டியை உண்டு மகிழ தன் குடும்பத்தாரை அழைக்கிறார்.
மில்களின் சரித்திரம்
மாவரைக்கும் தொழில் ஏறக்குறைய வேளாண்மை ஆரம்பித்த சமயத்திலேயே தொடங்கியது. பூர்வ இஸ்ரவேலில் மாவரைப்பது அனுதின வேலையாக இருந்தது. பெரும்பாலும், பெண்கள் இரண்டு பேராக அமர்ந்து எந்திரக்கல்லில் மாவை அரைத்தார்கள். மிருகங்கள் இழுத்த பெரிய எந்திரக்கற்களைப் பற்றிகூட பைபிள் சொல்கிறது.—மாற்கு 9:42, NW.
“ஆலை” என்ற வார்த்தையைக் கேட்டதும் காற்றாலையை நீங்கள் கற்பனை செய்யலாம். என்றாலும், செக் நாட்டுப்புறத்தில் நீர் ஆலைகளே பிரபலமாக இருந்தன. ஏன்? ஏனென்றால், ஆலையை இயக்குவதற்கு ஓடும் நீரே மிகவும் சிக்கனமான, நம்பகமான சக்தி என்று செக் நாட்டவர் நம்பினார்கள்.
மத்திய ஐரோப்பாவின் மற்ற இடங்களில் உள்ளதைப் போலவே செக்கியாவிலும் ஆலைகளுக்கு வரும் தண்ணீரை கட்டுப்படுத்த குளங்கள், வாய்க்கால்கள், மதகுகள் போன்ற பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குளங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது, வாய்க்கால்கள் வழியாக அது ஆலைகளை வந்தடைந்தது, மதகுகள் தண்ணீரின் போக்கைக் கட்டுப்படுத்தின. சில வாய்க்கால்களின் நீளம் 20 மீட்டர்கூட இல்லை. மற்றவையோ ஒரு கிலோமீட்டருக்கும் அதிக நீளமாக இருந்து, வழிநெடுக அமைந்திருந்த ஆலைகள் இயங்குவதற்கு உதவின.
மாவரைப்பவரும் உதவியாளர்களும்
செக்கியாவில் நூறு வருடங்களுக்கு முன்னர் மாவரைப்பவரும் அவருடைய குடும்பத்தாரும் ஆலையிலேயே குடியிருந்தனர். மாவு அரைக்கப்பட்ட அறையில்தான் அவர்களும் வாழ்ந்தார்கள்; அது உறுதியான கல் சுவர்களால் சூழப்பட்டிருந்தது. அந்த நகரத்தார் அவரை “பெரிய முதலாளி” என்று அழைப்பது வழக்கம். அவர், ஓரம் மடக்கிவிடப்பட்ட வெள்ளை கால்சட்டையும், ஆட்டுத்தோலால்
அலங்கரிக்கப்பட்ட தொப்பியும், செருப்பும் அணிந்திருந்ததால் அவரைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம்.இந்த வேலையை செய்ய அவர் திடகாத்திரமானவராக இருக்க வேண்டும்; வாழ்நாளில் எத்தனை மாவு மூட்டைகளை அவர் தூக்கி வைக்க வேண்டியிருக்கும் என்பதை கற்பனை செய்துபாருங்கள்! மாவரைக்கும் தொழிலுக்கு நல்ல மதிப்பு, மரியாதை இருந்தது; இது வழிவழியாக கற்றுக்கொடுக்கப்பட்டது. மகன் தகப்பனிடமே தொழிலைக் கற்றுக்கொண்டான்; என்றாலும், அதிக அனுபவம் பெறுவதற்காக அவன் கொஞ்ச காலத்திற்குக் கைதேர்ந்த மற்ற மாவரைப்பவர்களிடம்கூட வேலை செய்திருக்கலாம்.
ஆலையில் அதிக வேலை இருந்ததால் முழு குடும்பமுமே அதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டது. அநேக சமயங்களில், அவர்கள் மட்டுமே செய்து முடிக்க முடியாதளவிற்கு வேலைகள் இருந்தன. ஆகவே, மாவரைப்பவர் நிரந்தர அல்லது தற்காலிக வேலையாட்களைத் தன் கூடவே வைத்துக்கொண்டார். தற்காலிக வேலையாட்கள் வருடத்தின் படுபிஸியான சமயங்களில் பல்வேறு ஆலைகளுக்குச் சென்று வேலை செய்தனர்; மாவரைப்பதில் கைதேர்ந்தவர்களாக இருந்த அவர்களுக்கு தங்குமிடமும் உணவும் ஊதியமாக வழங்கப்பட்டன.
பெருமதிப்பும் அதிக திறமையும் வாய்ந்த முக்கிய நபரே, அதாவது மாவரைப்பவரே மில்லின் சொந்தக்காரர். ஓர் இளைஞர் அவருக்கு உதவியாளராக வேலை செய்தார்; தொழிலை நன்கு கற்றிருந்த இந்த உதவியாளரிடம் இயந்திரங்களை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அரைக்கப்பட்ட மாவின் தரம், இவருடைய அறிவுக்கும் திறமைக்கும் சான்றளித்தது. அதோடு, தொழில் பழகும் புத்திசாலி சிறுவன் ஒருவனும் இருந்தான்; அவன் அனுபவசாலியான, முதிர்ச்சி வாய்ந்த மாவரைப்பவர்களைக் கண் கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்தான். இவன் தொழிலை கற்றுக்கொள்வதற்கு எந்த தடையுமே வராதபடி பார்த்துக்கொள்ளப்பட்டது.
எந்திரக் கற்கள்
பைபிளிலுள்ள யோபு புத்தகம், “ஏந்திரத்தின் அடிக்கல்லைப்” பற்றி பேசுகிறது. (யோபு 41:24) அந்தக் காலத்தில் எந்திரக் கற்கள் எப்படி இருந்தன என்பதை இந்தப் பூர்வகால குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ளலாம். ஒரு மேல் கல், ஓர் அடிக்கல் என இரண்டு கற்கள் இருந்தன. அடிக்கல் அசையாமல் இருந்தது, மேல் கல் சுழன்றபோது, இரண்டிற்கும் இடையே போடப்பட்ட தானியம் மாவாக அரைபட்டது.
ஆரம்பத்தில், எந்திரக் கற்கள் கடினமான பாறையிலிருந்து செய்யப்பட்டிருந்தன. பிற்காலத்தில், நொறுங்கிய பாறை துண்டுகளுடன் மக்னீஷியம் குளோரைடு சேர்த்து செயற்கை எந்திரக் கற்கள் தயாரிக்கப்பட்டன. மில்லின் பல் சக்கரங்கள், மிகவும் கடினமான மரத்திலிருந்து கைதேர்ந்த வல்லுனரால் தயாரிக்கப்பட்டன. இவற்றைத் தயாரிப்பது மிகக் கடினம்; ஏனெனில், அவற்றின் வடிவங்கள் மிகவும் சிக்கலாக இருந்ததோடு, அவை ஒன்றோடு ஒன்று மிகத் துல்லியமாக பொருந்தவும் வேண்டியிருந்தது. இவற்றின் அமைப்பு காரணமாகத்தான் அரவை இயந்திரத்தின் மற்ற பாகங்கள் சுழலும் வேகம் அதிகரித்தது. இந்தச் சக்கரங்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தியபோது ஏற்பட்ட ஒலியே ஆலைகளின் பிரத்தியேக சத்தத்திற்குக் காரணமாகும்.
மாவரைப்பவர் பற்றிய நாட்டுப்புற கதைகள்
மாவரைப்பவர்களில் சிலர் நேர்மையானவர்களாக, ஒழுக்க சீலர்களாக இருந்தார்கள். மற்றவர்களோ பேராசையுள்ளவர்களாக, ஆதிக்கம் செலுத்துபவர்களாக அல்லது வாடிக்கையாளரை ஏய்ப்பவர்களாக இருந்தார்கள். ஆகவே, நாட்டுப்புற பாடல்கள் சிலவற்றில் மாவரைப்பவரும் அவருடைய குடும்பத்தாரும் கேலி செய்யப்பட்டார்கள். இன்னும் சில பாடல்களில், அவர்கள் போற்றிப் புகழப்பட்டார்கள்; அவர்களுடைய உதவியாளர்களை, பெண்கள் தங்கள் கணவர்களாக அடைய விரும்பியவர்களாக சித்தரித்தார்கள். இன்னும் மற்ற பாடல்களில், மாவரைப்பவருக்கும் அவருடைய மில்லுக்கும், நெருப்பிற்கு அடுத்தபடியாக பெரும் அச்சுறுத்தலாய் இருந்த வெள்ளப்பெருக்குகள் பற்றி விவரிக்கப்பட்டன.
எழுதப்பட்ட இடத்திற்கும் சமயத்திற்கும் ஏற்றவாறு கதைகள் ஓரளவிற்கு வேறுபட்டன. மற்றபடி, செக்கியா முழுவதிலும் கதைகளின் சாராம்சம் ஒன்றுபோலவே இருந்தது. நாடோடியாக திரிந்த தற்காலிக வேலையாட்களே இந்தக் கதைகள் பரவுவதற்கும் ஜோடிக்கப்படுவதற்கும் காரணமாயிருந்தார்கள். அதனால்தான், “கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன, தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது” என்ற ஒரு செக் பழமொழி இன்றுவரை வழக்கில் உள்ளது. ஒரு கதை அல்லது அறிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை வெளிப்படுத்த இவ்வாறு சொல்லப்படுகிறது.
இன்றைய மில்கள்
காலவோட்டத்தில் மாவரைக்கும் தொழில் படிப்படியாக மறைந்துபோனது. மில்கள் நவீனமயமாக்கப்பட்டன, நீரினால் இயக்கப்படும் ஆலைகளுக்குப் பதிலாக மின்சார ஆலைகள் வந்துவிட்டன. என்னவானாலும் சரி, தங்கள் பாரம்பரிய தொழிலை கைவிடுவதில்லை என மாவரைப்பவர்கள் சிலர் விடாப்பிடியாக இருந்ததால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகும்கூட சில நீர் மில்கள் செக்கியாவில் இயங்கிக்கொண்டிருந்தன. ஆனால், தன் தொழிலை விடாதிருந்த மாவரைப்பவரும் 1948-ம் வருடத்தில் அதைக் கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, அனைத்து ஆலைகளும் தேசிய சொத்தாக்கப்பட்டன; பெரும்பாலான ஆலைகள் இயங்காமல் போனதால் பாழாக ஆரம்பித்தன.
இன்றைய மில்கள் அன்றிருந்த ஆலைகளைப் போல நம் கற்பனையைத் தூண்டுவதில்லை. கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் இயங்கும் அதிநவீன இயந்திரங்கள் மாவு அரைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. எந்திரக் கற்களுக்குப் பதிலாக பெரும்பாலும் ஸ்டீல் உருளைகளே உபயோகிக்கப்படுகின்றன. இருந்தாலும், இன்னும் இருக்கிற பழங்கால, நாட்டுப்புற ஆலைகள் அமைதியான, மனங்கவரும் சூழலை விரும்புவோரையும், கலாச்சாரத்தையும் சரித்திரத்தையும் அறிய ஆர்வமுள்ள உல்லாசப் பயணிகளையும் இன்றும் கவர்ந்திழுக்கின்றன.
இன்று சில மில்கள் அவற்றின் வசீகரிக்கும் தன்மையால் பொழுதுபோக்கு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. ப்ராக் செல்லும் அநேக பயணிகள், வல்டாவா நதியின் கிளை நதியான சர்டாவ்கா அல்லது “பிசாசின் ஓட்டம்” என்ற இடத்திலுள்ள மில் சக்கரத்தைக் கண்டுகளிக்கின்றனர். அங்கிருந்த ஆலை, 1938-ல் எரிந்து சாம்பலானது; அதோடு மூடப்பட்டது. ஆனால், 600 வருடங்களுக்கும் பழமையான ஏறக்குறைய 7 மீட்டர் உயரமுள்ள அதன் சக்கரம் ஒரு கலாச்சார நினைவுச்சின்னமாகப் புதுப்பிக்கப்பட்டது. அது இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட ஒரு மில்லில் நிற்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நூறு வருடங்களுக்கு முன்பு அங்கு வேலை செய்த மாவரைப்பவர் கண்முன் தெரிகிறாரா? ஆலையின் சக்கரம் சுழலுகையில் தண்ணீரின் சலசலப்பு கேட்கிறதா? ஆலையைவிட்டு நாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி செல்கையில் அது சின்னதாய் தெரிகிறது. இருந்தாலும் அந்தச் சக்கரங்களின் தாளம் நம் காதுகளைவிட்டு நீங்க மறுக்கிறது. நெடுநாள் சென்றாலும் இந்த இனிய ஓசையை நாம் மறக்கவே மாட்டோம். (g04 12/22)
[பக்கம் 22-ன் படம்]
எந்திரக் கல்
[பக்கம் 22, 23-ன் படங்கள்]
1. தானியத்தைச் சுத்தப்படுத்த கையால் சுற்றப்படும் பழங்கால இயந்திரம்
2. மாவரைக்கும் மில்களில் ஒன்று
3. சக்கரத்தின் சக்தியை மாவரைக்கும் இயந்திரங்களுக்குக் கடத்தும் முக்கிய அச்சு
4. ஆலை இயங்க தேவையான சக்தியை ஒரு காலத்தில் அளித்த, சர்டாவ்காவிலுள்ள ஏறக்குறைய 7 மீட்டர் சக்கரம்
[பக்கம் 24-ன் படம்]
சர்டாவ்காவிலுள்ள மில் சக்கரம்