Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சேகரித்தல்—சமநிலை தேவைப்படும் ஹாபி

சேகரித்தல்—சமநிலை தேவைப்படும் ஹாபி

சேகரித்தல்​—⁠சமநிலை தேவைப்படும் ஹாபி

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“என்றைக்காவது ஒரு நாள்” உபயோகப்படும் என்று சொல்லியே பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறீர்களா? ஒருவேளை அந்த நாள் வராவிட்டால், சில காலம் கழித்து பிரயோஜனமற்ற அந்தப் பொருட்களை தூக்கி எறிந்துவிடுவீர்கள் அல்லவா? ஆனால் தங்களுக்கு எந்த விதத்திலும் பிரயோஜனப்படாத பொருட்களை சேகரிப்பதில் அநேகர் ஆனந்தம் அடைகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். பொருட்களைச் சேகரிப்பதே இவர்களுடைய ஹாபி.

இவர்களில் சிலர், கற்கள், தபால் தலைகள், பழைய நாணயங்கள் போன்ற பொதுவாக சேகரிக்கப்படும் பொருட்களையே சேகரிக்கிறார்கள். மற்றவர்களோ பொம்மைகள், வைக்கோல் திணிக்கப்பட்ட மிருகங்கள், கரண்டிகள், பதக்கங்கள், போஸ்ட் கார்டுகள், பண்டைய கலைப்பொருட்கள், இசை பதிவுகள், விடுமுறை பயணத்தின்போது கிடைத்த பொருட்கள் போன்றவற்றை சேகரிக்கிறார்கள். இதைத்தான் சேகரிக்க வேண்டும் என்ற வரம்பே கிடையாது! உதாரணமாக, ஐ.மா.வைச் சேர்ந்த ஒரு வழக்குரைஞர் சுமார் 2,00,000 இருப்புப்பாதை ஆணிகளை சேகரித்து வைத்திருக்கிறார்! அவற்றின் தலையில் தேதி அச்சிடப்பட்டிருக்கும் பழைய ஆணிகளைத் தேடி புறநகரில் சுற்றித் திரியும் நூற்றுக்கணக்கான ஆர்வலர்களில் இவரும் ஒருவர்.

ஹார்பர்ஸ் மேகஸின் இவ்வாறு கூறுகிறது: “ஜனங்கள் சேகரிக்கும் பொருட்கள் மலைப்பை ஏற்படுத்துகின்றன​—⁠பற்கள், டோப்பாக்கள், மண்டையோடுகள், பிஸ்கட் ஜாடிகள், மின்சார ரயில் டிக்கெட்டுகள், முடி, விசிறிகள், காற்றாடிகள், குறடுகள், நாய்கள், நாணயங்கள், வாக்கிங் ஸ்டிக்குகள், குருவிகள், ஷூக்கள் . . . பட்டன்கள், எலும்புகள், தொப்பி பின்கள், போலி கையெழுத்துகள், முதல் பதிப்புகள், விஷவாயு முகமூடிகள்.”

வினோத பொருட்களை சேகரிக்கும் ஆர்வலர்களும் இருக்கிறார்கள். ரஷ்யாவிலுள்ள ஒரு சீமாட்டியின் ஹாபியை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள்; பணக்காரர்களும், புகழ்பெற்றவர்களும் பயன்படுத்திய கழிகலங்களை (bedpans) அவர் சேகரித்தார். ஜப்பானிய ஆளுநர் ஒருவர் 5,000 நாய்களை சேகரித்திருந்தார்; ஒவ்வொன்றையும் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட நாய்க்கூண்டுகளில் வைத்திருந்தார். ஒரு பணக்காரர் ஆயிரக்கணக்கான உண்ணிகளை சேகரித்திருந்தார்; ஒவ்வொன்றையும் “ஸ்பிரிட்டில் போட்டு ஒரு சிறிய குப்பியில் பாதுகாப்பாக வைத்திருந்தார். அந்த உண்ணி எந்த இடத்தை சேர்ந்தது என்பதையும் அது எடுக்கப்பட்ட நபரின் அல்லது மிருகத்தின் பெயரையும் அதில் எழுதி வைத்திருந்தார்” என்று ஹார்பர்ஸ் மேகஸின் கூறுகிறது.

இவ்வாறு வினோதமான பொருட்களை சேகரிப்பது ஒருபுறமிருக்க, சேகரித்தல் இக்காலத்திற்கு மட்டுமே உரிய ஒரு ஹாபியல்ல. உதாரணமாக, எக்கச்சக்கமான புத்தகங்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் மலைபோல சேகரிப்பது பண்டைய காலத்திலும் ஹாபியாக இருந்தது. அசீரிய அரசனான அஷூர்பானிப்பால் (பொ.ச.மு. 7-⁠ம் நூற்றாண்டு), பழைய பதிவுகளையும் ஆவணங்களையும் திரட்டி நினிவேயிலிருந்த தனது ராஜாங்க நூலகத்தில் வைப்பதற்காக நகல் எடுப்பவர்களை எட்டுத்திக்கும் அனுப்பியதாக முற்காலத்திலிருந்து வரும் ஒளி என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. 1853-⁠ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட அஷூர்பானிப்பாலின் மாளிகையில் மலைக்க வைக்கும் இந்த நூலகமும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைப் போலவே, உயர்குடியில் பிறந்த கிரேக்கரும் ரோமரும் கலைப் பொருட்களை சேகரிப்பதில் பெயர் பெற்றவர்கள். சேகரித்தல்​—⁠கட்டுக்கடங்காத மோகம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “சிஸரோவும் சீஸரும் ஆண்ட காலத்தில், மிகுந்த ஆடம்பரத்திற்கும் பகட்டிற்கும் அரும்பொருட்கள் அனைத்தையும் சேகரிப்பதற்கும் ரோமாபுரி தலைசிறந்து விளங்கியது. . . . நகரத்தின் சில வளாகங்கள் முழுவதிலும் கலைப்பொருள் வியாபாரிகளே இருந்தனர். பெரும் பணக்காரர்களில் சிலர் சொந்த அருங்காட்சியகங்களையும் வைத்திருந்தனர்.”

சேகரிப்பதில் ஏன் அவ்வளவு ஆசை?

பொருட்கள் சேகரிப்பது சிலருக்கு ஏன் ஒரு ஹாபியாக இருக்கிறது? “மக்கள் பல காரணங்களுக்காக ஹாபிகள் வைத்திருக்கின்றனர், ஆனால் முக்கிய காரணம் தங்கள் சந்தோஷத்திற்காகவே. ஹாபிக்கள் ‘ரிலாக்ஸ்’ செய்ய உதவுகின்றன, இயந்திரத்தனமான அன்றாட வேலைகளிலிருந்து மாற்றத்தை அளிக்கின்றன” என்று என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா கூறுகிறது. ஆம், சேகரித்து வைத்திருக்கும் பிடித்தமான பொருட்களைப் பார்த்துப் பார்த்து ரசிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அநேகர் உணருகிறார்கள்.

ஒருவர் சேகரித்திருக்கும் பொருட்கள், அவர் “ஏறக்குறைய மறந்துபோய்விட்ட இடங்களையும் மக்களையும் மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவரலாம். பழங்காலத்திய பொருட்களை சேகரித்திருந்தால், அந்த சந்ததியினரின் திறமைகளுக்கும் விருப்பங்களுக்கும் இன்று நாம் அனுபவிக்கும் முன்னேற்றங்களுக்கான நன்றியுணர்விற்கும் இடையே ஒரு தொடர்பு ஏற்படுகிறது” என்றும் ஆஸ்திரேலியாவின் த கான்பெரா டைம்ஸ் செய்தித்தாளில் வெளிவந்த ஒரு கட்டுரை கூறுகிறது. ஆம், பொருட்களை சேகரிப்பது அறிவை வளர்ப்பதாகவும் போதனை அளிப்பதாகவும் இருக்கலாம். உதாரணமாக, ஆஸ்திரேலியாவிலுள்ள ரெக்ஸ் நாண் கிவெல் என்பவர் அரும்பொருட்களை சேகரிப்பதில் பெயர்பெற்றவர். ஆஸ்திரேலியா, நியுஜிலாந்து ஆகிய நாடுகளின் ஆரம்பகால சரித்திரத்தோடு தொடர்புடைய சுமார் 15,000 வியத்தகு பொருட்களை அவர் சேகரித்திருந்தார்.

பொருட்களை சேகரிப்பதில் முதலீடு செய்வது லாபகரமானது என்று பலர் நினைப்பதும் இது இவ்வளவு பிரபலமடைவதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். உட்னே ரீடர் என்ற பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “இல்லையென்றால், ‘1969 உட்ஸ்டாக் [ராக் இசை நிகழ்ச்சியின்] ஒரிஜினல் டிக்கெட்டுகளோடு’ அவற்றிற்கு அத்தாட்சி அளிக்கும் கடிதத்தையும் பெற 80 டாலர் செலவு செய்ய, அதுவும் அந்த நிகழ்ச்சிக்கு போகாத போதிலும்கூட அவ்வளவு பணம் செலவு செய்ய ஏன் தயாராக இருப்பார்களாம்? . . . பாப் கலாச்சாரத்தோடு சம்பந்தப்பட்ட பொருட்களை சேகரிப்பது லாபகரமான தொழிலாகியிருக்கிறது.”

இருப்பினும், ஓர் எச்சரிக்கை: “சேகரிப்பது எப்போதுமே இன்பமானதல்ல. அதில் சில படுகுழிகளும் இருக்கின்றன. விற்பனையாளர்கள் அனைவருமே நாணயமானவர்கள் என்று சொல்வதற்கில்லை. அநேக கள்ளப் பொருட்களும் போலியான பொருட்களும் ‘அசல்’ வேடத்தில் வலம் வருகின்றன; நேர்மை, நல்லொழுக்கம் போன்ற எதுவும் மதிக்கப்படுவதே இல்லை” என்று த கான்பெரா டைம்ஸ்-⁠ல் வெளியான அந்தக் கட்டுரை எச்சரிக்கிறது. வெறும் போலியை வாங்கவா இவ்வளவு “முதலீடு” செய்தோம் என்று அறிய வரும்போது எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்! ஆகவே, பொருட்களை சேகரிப்போருக்கு நீதிமொழிகள் 14:15-⁠ன் வார்த்தைகள் மிகவும் நடைமுறையானவை: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”

சமநிலை அவசியம்

இந்த ஹாபி அதிக நேரத்தையும், சக்தியையும், பணத்தையும்கூட விரயமாக்கலாம். சேகரிக்கும் தனது பழக்கத்தை, “தீராத வேட்கை” என்று ஒரு பெண்மணி கூறுகிறார். பொருட்களை சேகரிப்பதிலேயே வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட ஆலஸ்டர் மார்டின் என்பவர், பொருட்களை சேகரிக்கும் சிலர் “கொஞ்சம் விசித்திரமானவர்கள்” என்றும்கூட ஒப்புக்கொள்கிறார்.

சேகரித்தல்​—⁠கட்டுக்கடங்காத மோகம் புத்தகத்தின் எழுத்தாளர் வெர்னர் முயென்ஸ்டர்பெர்கர் இவ்வாறு கூறினார்: “சேகரிப்போரைக் கூர்ந்து கவனிக்கையில் அவர்களிடம் பொருட்கள் வேண்டுமென்ற வேகம், ஒருவித வேட்கை இருப்பதைக் காணலாம். . . . பொருட்களை சேகரிக்கும் செயல் மட்டுமே பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருப்பதில்லை. மாறாக, சேகரிக்கும் அநேகரின் குணாதிசயமே வேடிக்கையாக இருக்கிறது. பொருட்களை தேடுவதில் அவர்களுடைய உணர்ச்சிப்பூர்வ ஈடுபாடும், அவற்றில் ஒன்று கிடைக்கையில் அடையும் சந்தோஷமும், ஒன்று பறிபோகையில் படும் வேதனையும், சில சமயங்களில் அவர்களுடைய விசித்திரமான மனோபாவமும் நடத்தையுமே விந்தையாக இருக்கின்றன.”

ஒரு கிறிஸ்தவர், ஞானமற்ற விதத்திலோ தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் விதத்திலோ நடந்துகொள்ளும் அளவிற்கு ஏதாவதொரு ஹாபியில் மூழ்கிவிடுவது சரியா? சரியில்லை, ஏனெனில் ‘சமநிலையோடு இருக்கும்படி’ பைபிள் உற்சாகமளிக்கிறது. (1 பேதுரு 1:13, NW அடிக்குறிப்பு) ஒரு ஹாபி சந்தோஷத்தை அளித்தாலும் தேவ பக்தியுள்ள நபர் கருத்தில் வைக்க வேண்டிய ‘அதிமுக்கியமான காரியங்களில்’ அது ஒன்று அல்ல. (பிலிப்பியர் 1:10, NW) சாலொமோன் ராஜாவிடமிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். அவரிடம் எக்கச்சக்கமான செல்வமிருந்ததால் கண்கவர் வீடுகள், திராட்சை தோட்டங்கள், மரங்கள், கால்நடைகள் ஆகியவற்றை ஏராளமாக சேர்த்து வைத்திருந்தார். “என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடை பண்ணவில்லை” என்று சாலொமோனே ஒப்புக்கொண்டார். ஆனால், வாழ்நாள் முழுவதையும் இதற்காகவே அர்ப்பணித்தபோது அவருக்கு மனமார்ந்த திருப்தி கிடைத்ததா? சாலொமோன் இவ்வாறு பதிலளிக்கிறார்: “என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது.”​—பிரசங்கி 2:3-11.

சேகரிப்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தினால், அதிமுக்கிய காரியங்களை ஒதுக்கித் தள்ளிவிடாதபடி எவ்வாறு ஜாக்கிரதையாக இருக்கலாம்? ‘இந்த ஹாபிக்காக நியாயமாய் எவ்வளவு நேரம் செலவு செய்யலாம்?’ என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். இது நீங்கள் விரும்புகிற பொருளைப் பெறுவதோடு முடிந்துவிடுவதில்லை என்பதை நினைவில் வையுங்கள். அவற்றைப் பராமரிப்பது, அவ்வப்போது சுத்தம் செய்வது, சீராக அடுக்கி வைப்பது, பார்த்து ரசிப்பது, பாதுகாப்பது போன்ற எல்லாவற்றிற்கும் நேரம் தேவை. பணச் செலவைப் பற்றி என்ன சொல்லலாம்? உங்கள் குடும்பப் பொறுப்புகளைக் கவனிப்பதற்குத் தேவைப்படும் பணத்தை இந்த ஹாபி கரைத்துவிடுமா? (1 தீமோத்தேயு 5:8) உங்கள் வசதிக்கு மீறிய ஒரு பொருளை வாங்காமல் இருப்பதற்குத் தேவையான சுயகட்டுப்பாடு உங்களுக்கு இருக்கிறதா? சொல்லப்போனால், நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் ஆசைப்படும் எல்லா பொருட்களையும் சேகரிக்க முடியாது என்பதே உண்மை. புத்தகங்களைப் பற்றி சாலொமோன் சொன்ன விஷயம் மற்ற பொருட்களுக்கும் பொருந்தும்: “அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.” (பிரசங்கி 12:12) ஆகவே, கிறிஸ்தவ நியமங்களுக்கு இசைவான சமநிலை அவசியம்.

முன்னர் குறிப்பிட்டபடி, சேகரிப்பது “கட்டுக்கடங்காத மோகம்” என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. பொருட்களைச் சேகரிப்பதில் சமநிலையான எண்ணம் இருந்து, அளவோடு சேகரித்தால் அது நம் மனதை ‘ரிலாக்ஸ்’ செய்து, சந்தோஷத்தைப் பெறவும், ஒருவேளை அறிவை வளர்க்கவும்கூட உதவும் ஹாபியாக இருக்கலாம். (g04 12/8)

[பக்கம் 26-ன் படம்]

ஒரு ஹாபிக்காகும் நேரத்தையும் பணத்தையும் மனதில் வைத்து, அதற்கு செல்லுஞ்செலவை கணக்குப் பார்ப்பது ஞானமானது