மரண தொழிற்சாலை
மரண தொழிற்சாலை
ஜெர்மனியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
மிடல்வெர்க் என்பது உலகிலேயே மிகப் பெரிய நிலத்தடி தொழிற்சாலை என்று சிலர் சொல்கின்றனர். இது, ஜெர்மனியிலுள்ள ஹார்ட்ஸ் மலைகளில், பெர்லினிலிருந்து சுமார் 260 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ளது. ஒரு மலையின் அடிவாரத்தில் 20 கிலோமீட்டர் தூரத்திற்குத் தோண்டப்பட்ட பிரமாண்டமான சுரங்கப்பாதைகளில் இந்தத் தொழிற்சாலை வளாகம் அமைந்திருந்தது. சித்திரவதை முகாமிலிருந்த ஆயிரக்கணக்கான கைதிகள் 1943 முதல் 1945 வரை இந்தச் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை செய்தனர். அங்கு நிலவிய படுமோசமான சூழ்நிலையில், நாசி அரசுக்காக ஆயுதங்களைத் தயாரிக்கும்படி வற்புறுத்தப்பட்டனர்.
இந்த அடிமைகள் ஏதோ சாதாரண ஆயுதங்களைத் தயாரிக்கவில்லை. வி-1, வி-2 என்று அழைக்கப்பட்ட ஏவுகணைகளைத் தயாரித்தனர். தயாரிக்கப்பட்ட பின், மிடல்வெர்கிலிருந்து முக்கியமாக பிரான்சிலும் நெதர்லாந்திலும் உள்ள ஏவுகணை செலுத்தும் மையங்களுக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டன. பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள இலக்குகளை குறி வைத்து செலுத்தப்பட்டபோது அவை தாமாகவே பறந்து சென்று தரை தட்டியதும் வெடித்துச் சிதறின. அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் நியு யார்க் வரை செல்லும், அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றைத் தயாரிக்கவும் நாசிக்கள் திட்டமிட்டிருந்தனர். இரண்டாம் உலகப் போர் முடிவதற்குள் நூற்றுக்கணக்கான வி-1, வி-2 ஏவுகணைகள் பல ஐரோப்பிய நகரங்களை சின்னாபின்னமாக்கியிருந்தன. ஆனால், தங்கள் எதிரிகளை அழிப்பதற்காக நாசிக்கள் தயாரித்து வைத்திருந்த மொத்த ஏவுகணைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட இவை வெகு சொற்பமே. இவற்றில் எதுவுமே நியு யார்க் வரை செல்லவில்லை.
துயரமான தனிச்சிறப்பு
யுத்தம் முடிந்த கையோடு, வி-1, வி-2 ஏவுகணைகளைத் தயாரிக்க உதவிய ஏராளமான ஜெர்மன் விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுனர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஏவுகணைகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அவர்கள் அறிந்திருந்ததால், குடியேறிய நாடுகளில் எல்லாம் அவற்றை உபயோகித்தனர். அப்படிப்பட்ட விஞ்ஞானிகளில் ஒருவர்தான் வெர்ன்ஹெர் ஃபான் பிராவுன் என்பவர். ஐக்கிய மாகாணங்களுக்குச் சென்ற அவர், மனிதன் சந்திரனில் கால் பதிக்க உதவிய சாட்டர்ன் என்ற ராக்கெட்டை உருவாக்குவதில் உதவினார்.
அன்றிருந்த மிடல்வெர்க் தொழிற்சாலைக்கு அருகிலேயே இன்று ஒரு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த 60,000 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் அது அமைதியாக நிற்கிறது. அந்தக் கைதிகளில் அநேகர் குளிரான, ஈரப்பதம் நிறைந்த அந்த சுரங்கங்களில் வேலை செய்ததோடு அங்கேயே தங்கியும் இருந்தனர். ஆகவே, சில கணக்கெடுப்புகளின்படி அவர்களில் ஏறக்குறைய 20,000 பேர் இறந்துவிட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அந்த நினைவுச்சின்ன அருங்காட்சியகத்தைக் காண செல்வோர் வழிகாட்டி ஒருவருடைய உதவியோடு சுரங்கங்களைச் சுற்றிப் பார்க்கலாம். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே விட்டுசெல்லப்பட்ட ஏவுகணைகளின் எஞ்சிய பாகங்கள் இங்குமங்குமாக சிதறிக் கிடப்பதை இன்றும் காணலாம். யுத்தத்திற்குப் பிறகு (ஆங்கிலம்) என்ற பத்திரிகை மிடல்வெர்க் ஏவுகணைகளுக்கு ஒரு துயரமான தனிச்சிறப்பு இருப்பதாகக் குறிப்பிடுகிறது: “வானில் செலுத்திய பிறகு ஏற்படுத்திய சேதத்தைவிட தயாரிக்கையிலேயே அநேகரின் உயிரைக் குடித்த ஏவுகணைகள் வி-1, வி-2 மட்டுமே.” (g04 12/22)
[பக்கம் 31-ன் படம்]
வண்டிகளில் வி-1 ஏவுகணைகள், 1945-ல் எடுத்த படம்
[படத்திற்கான நன்றி]
Quelle: Dokumentationsstelle Mittelbau-Dora
[பக்கம் 31-ன் படம்]
சுரங்கப்பாதைகளை சுற்றி வரும் பார்வையாளர்கள்; ஏவுகணைகளின் எஞ்சிய பாகங்கள் சிதறிக் கிடப்பதை இன்றும் காணலாம்