Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இதை மட்டும் மக்கள் புரிந்துகொண்டால் . . . !”

“இதை மட்டும் மக்கள் புரிந்துகொண்டால் . . . !”

“இதை மட்டும் மக்கள் புரிந்துகொண்டால் . . . !”

இளைஞர்கள் பெரும்பாலோர் பள்ளிப் படிப்பை முடித்ததும் நிறைய சம்பாதிக்க வேண்டுமென்றே ஆசைப்படுகிறார்கள். ஆனால் டேவிட்டின் இலட்சியமோ வேறு. செப்டம்பர் 2003-⁠ல் அவனும் அவனுடைய நண்பனும் ஐக்கிய மாகாணங்களிலுள்ள இல்லினாய்ஸ் என்ற இடத்திலிருந்து டொமினிகன் குடியரசில் போய் குடியேறினார்கள். a அவனுடைய நண்பர்களும் குடும்பத்தாரும் செல்லமாக அவனை டேவீ என்று அழைத்தார்கள். ஸ்பானிய மொழியைக் கற்றுக்கொண்டு பைபிளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளுடைய நாவாஸ் சபையாருடன் சேர்ந்து ஊழியம் செய்ய அவன் தீர்மானித்தான். அந்தச் சபையார் அவனை தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக கருதினார்கள். அந்தச் சபையில் க்வான் என்பவர் மட்டுமே மூப்பராக இருக்கிறார்; அவர் இவ்வாறு சொல்கிறார்: “என்ன வேலை சொல்லுங்கள், டேவீ சந்தோஷமாக செய்வான். எப்போதுமே மற்றவர்களுக்காகக் கடுமையாக உழைப்பான். எல்லா சகோதரர்களுக்கும் அவனை ரொம்பப் பிடிக்கும்.”

அந்தப் புதிய பிராந்தியத்தில் ஊழியம் செய்வது டேவீக்கு மிகவும் பிடித்திருந்தது. ஐக்கிய மாகாணங்களில் இருக்கும் தனது நண்பனுக்குக் கடிதம் எழுதியபோது அவன் இவ்வாறு எழுதினான்: “இங்கே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஊழியத்திற்குப் போகும்போது எந்தளவுக்குப் புதுப் பலம் கிடைக்கிறது தெரியுமா? நாம் சொல்கிற எல்லாவற்றையும் மக்கள் காதுகொடுத்துக் கேட்க விரும்புறாங்க. அதனால் ஒவ்வொரு வீட்டிலேயும் 20 நிமிஷமாவது நாங்க பேசறோம். இப்போது நான் ஆறு பைபிள் படிப்புகளை நடத்தறேன். ஆனால் இன்னும் நிறைய பேருக்கு உதவி தேவைப்படுகிறது. எங்க சபையில் 30 பிரஸ்தாபிகள் இருக்கிறோம், ஆனால் ஒரு முறை கூட்டத்திற்கு 103 பேர் வந்திருந்தாங்க!”

வருத்தகரமாக, ஏப்ரல் 24, 2004 அன்று டேவீயும் அதே சபையைச் சேர்ந்த மற்றொரு சகோதரரும் ஒரு விபத்தில் உயிரிழந்தார்கள். மரணம் வரை ஊழியத்தில் அவன் உற்சாகமாக ஈடுபட்டு வந்தான். தன்னோடு வந்து ஊழியம் செய்வதற்குத் தன் சொந்த நாட்டிலிருந்த இளைஞர்களையும் உற்சாகப்படுத்தினான். யெகோவாவின் சாட்சியாக இருந்த ஒரு வாலிப சகோதரியிடம் அவன் இவ்வாறு சொன்னான்: “இந்த ஊழியம், பல்வேறு கோணத்தில் காரியங்களைக் காண கற்றுக் கொடுக்கும்.”

பொருளாதார காரியங்களில் தன் கண்ணோட்டம் மாறியிருந்ததை அவனே உணர்ந்தான். அவனுடைய அப்பா தன் நினைவில் இருந்ததை இவ்வாறு சொல்கிறார்: “ஒரு தடவை அவன் ஊரிலிருந்து வந்திருந்தபோது பனிச்சறுக்கு விளையாடப் போவதற்கு அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டான். அதைக் கேட்டதும் அதற்காக அவ்வளவு பணம் செலவழிக்கிறதை நினைத்துக்கூட பார்க்க முடியாதென்று சொன்னான். அந்தப் பணம் இருந்தால் டொமினிகன் குடியரசில் பல மாதங்களுக்குப் பயன்படும் என்று சொல்லிவிட்டான்.”

டேவீக்கு இருந்த வைராக்கியம் மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது. “டேவீ எவ்வளவு சந்தோஷமா ஊழியம் செய்றான்னு கேள்விப்பட்டபோது, என்னாலும் அது போல ஊழியம் செய்ய முடியும்னு உணர்ந்தேன். நான் இறந்த பிறகு மத்தவங்க என்னைப் பற்றி என்ன சொல்வாங்க, அவங்களோட வாழ்க்கையில என்னாலும் செல்வாக்கு செலுத்த முடியுமா என்று நினைத்தேன். அவனுடைய மரணம் என்னை ரொம்பவே சிந்திக்க வெச்சிடுச்சு” என்று டேவீயின் ஊரைச் சேர்ந்த ஓர் இளம் பெண் கூறினாள்.

வரவிருக்கும் நீதியுள்ள புதிய உலகத்தில் கடவுள் நிச்சயமாக டேவீயை மறுபடியும் உயிரோடு எழுப்புவார் என்று யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் அவனது பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் முழுமையாக நம்புகிறார்கள். (யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 21:1-4) அது வரை, தன்னால் முடிந்த மட்டும் அவன் தன் சிருஷ்டிகரைச் சேவித்திருக்கிறான் என்ற நினைப்பில் அவர்கள் ஆறுதலைப் பெறுகிறார்கள். (பிரசங்கி 12:1) தேவை அதிகம் இருக்கும் இடத்தில் சேவை செய்ய தான் தீர்மானித்திருப்பதைப் பற்றி ஒருமுறை அவன் இவ்வாறு சொன்னான்: “என்னைப் போலவே ஒவ்வொரு இளைஞரும் ஊழியத்தில் ஈடுபட்டு, நான் அனுபவிக்கும் சந்தோஷத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். முழு ஆத்துமாவோடும் யெகோவாவை சேவிப்பதில் கிடைக்கிற சந்தோஷம் வேறெதிலும் கிடைக்காது. இதை மட்டும் மக்கள் புரிந்துகொண்டால் . . . !” (g05 1/8)

[அடிக்குறிப்பு]

a டேவிட்டைப் போன்றே, அதிக ராஜ்ய அறிவிப்பாளர்கள் தேவைப்படும் இடங்களுக்குச் செல்ல யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் தாங்களாகவே முன்வந்திருக்கிறார்கள். கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் சத்தியத்தை பிறருக்குப் போதிக்க சிலர் ஒரு புதிய மொழியையும் கற்றுக்கொள்கிறார்கள். 400-⁠க்கும் மேற்பட்ட இத்தகைய வாலண்டியர்கள் இப்போது டொமினிகன் குடியரசில் சேவை செய்கிறார்கள்.