Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர்—ஓர் அற்புத சங்கிலித் தொகுப்பு

உயிர்—ஓர் அற்புத சங்கிலித் தொகுப்பு

உயிர்—ஓர் அற்புத சங்கிலித் தொகுப்பு

உங்கள் உடலை நுண்ணிய சங்கிலிகளின் ஒரு தொகுப்பாக நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? ஒருவேளை அப்படி கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் நிஜத்தில், “மிகச் சிறிய ஆக்கக்கூறுகளின் நிலையில்,” உயிர் “இந்தச் சங்கிலியையே அதன் ஒழுங்கமைப்பு விதிமுறையாக” பயன்படுத்துகிறது என உயிர் வேலை செய்யும் விதம் என்ற ஆங்கில நூல் கூறுகிறது. அதனால்தான், இந்தச் சங்கிலிகள் சிலவற்றில் ஏதாவது சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும்கூட, அது நம் உடல் ஆரோக்கியத்தில் பேரளவு தாக்கத்தை உண்டுபண்ணுகிறது. இந்தச் சங்கிலிகள் யாவை? அவை எப்படி செயல்படுகின்றன? நம் ஆரோக்கியத்தோடும் உடல்நலத்தோடும் அவை எப்படி சம்பந்தப்பட்டுள்ளன?

அடிப்படையில், அவையெல்லாம் சங்கிலி போன்ற மூலக்கூறுகள், அவை இரண்டு முக்கியமான தொகுதிகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டுரையில் நாம் சிந்திக்கும் மூலக்கூறுகளெல்லாம் புரோட்டீன்கள். மற்றவையோ மரபுத் தகவல்களைச் சேகரித்து வைக்கிற மற்றும் அனுப்புகிற மூலக்கூறுகள், அதாவது டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ. என்றாலும், இந்த இரண்டு தொகுதிகளும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக சம்பந்தப்பட்டுள்ளன. சொல்லப்போனால், டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ-வின் முக்கியமான ஒரு செயல் என்னவென்றால், உயிருக்குத் தேவையான புரோட்டீன்களை எக்கச்சக்கமாக உற்பத்தி செய்வதாகும்.

வினையூக்கிகள், காவலர்கள், தூண்கள்

உயிரின் பெரிய மூலக்கூறுகளில் புரோட்டீன்களே பல்வேறு வகைப்பட்டவை. புரோட்டீன் குடும்பத்தில் உடற்காப்பு மூலங்கள் (antibodies), என்ஸைம்கள், தூதுவர்கள், கட்டமைப்பு சார்ந்த புரோட்டீன்கள், டிரான்ஸ்போர்ட்டர்கள் ஆகியவை உள்ளன. பேக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற அந்நியர்களை ஏகப்பட்ட உடற்காப்பு மூலங்கள் அல்லது நோய் தடுப்பாற்றல் புரதங்கள் (immunoglobulins) எதிர்த்துப் போரிடுகின்றன. வேறுசில புரதங்களோ விபத்தினால் சேதமடைந்த இரத்த நாளங்களை செப்பனிடுகின்றன.

என்ஸைம்கள் வினையூக்கிகளாக (catalysts) செயல்பட்டு, வேதிவினைகளை துரிதப்படுத்துகின்றன; உதாரணத்திற்கு, ஜீரணத்துடன் சம்பந்தப்பட்ட வேதிவினைகளை துரிதப்படுத்துகின்றன. சொல்லப்போனால், “என்ஸைம்கள் இல்லையென்றால் நீங்கள் சீக்கிரத்திலேயே பட்டினியால் இறந்துவிடுவீர்கள், ஏனென்றால் ஒரு வேளை சாப்பாடு ஜீரணமாவதற்கே 50 ஆண்டுகள் ஆகிவிடும்” என உயிரின் இழை என்ற ஆங்கில நூல் விளக்குகிறது. பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகையில் ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலித் தொடர் போல் வேலை நடக்கும் விதமாகத்தான் என்ஸைம்களும் வேலை செய்கின்றன, ஒவ்வொரு புரோட்டீனும் திட்டவட்டமான ஒரு வேலையை செய்கிறது. உதாரணமாக மால்டேஸ் என்ற என்ஸைம், மால்ட்டோஸ் என்ற சர்க்கரையை இரு குளுக்கோஸ் மூலக்கூறுகளாக சிதைவுறச் செய்கிறது. லாக்டேஸ் என்பது லாக்டோஸை, அதாவது பால் சர்க்கரையை சிதைவுறச் செய்கிறது. வேறுசில என்ஸைம்கள் புதிய பொருட்களை உருவாக்குவதற்கு அணுக்களையும் மூலக்கூறுகளையும் ஒன்று சேர்க்கின்றன. இவை தங்களுடைய வேலைகளையெல்லாம் ஜெட் வேகத்தில் செய்கின்றன. ஒரேவொரு தனி என்ஸைம் மூலக்கூறு ஒரே நொடியில் ஆயிரக்கணக்கான வேதிவினைகளை ஊக்குவிக்க முடியும்.

சில புரோட்டீன்கள் ஹார்மோன்களாக வகைப்படுத்தப்படுகின்றன, அவை தூதுவர்களாக செயல்படுகின்றன. இவை இரத்தக் குழாய்க்குள் நுழைந்து, பிற உடலுறுப்புகளின் நடவடிக்கைகளை முடுக்கிவிடுகின்றன அல்லது மந்தப்படுத்துகின்றன. உதாரணமாக, செல்களுக்கு கிடைக்கும் சக்தியின் மூல காரணமாக விளங்கும் குளுக்கோஸை உட்கிரகித்துக் கொள்வதற்குச் செல்களை இன்சுலின் தூண்டுகிறது. கொலாஜென், கெரட்டின் போன்ற கட்டமைப்பு சார்ந்த புரோட்டீன்களே குருத்தெலும்பு (cartilage), முடி, நகம், தோல் ஆகியவற்றில் அடங்கியுள்ள முக்கிய பொருட்களாகும். இந்த அனைத்து புரோட்டீன்களே “செல்களைப் பொறுத்தவரை தூண், உத்திரம், பிளைவுட், சிமென்ட், ஆணி ஆகிய எல்லாவற்றிற்கும் சமானமானவை” என உயிர் செயல்படும் விதம் என்ற நூல் கூறுகிறது.

செல் சவ்வுகளிலுள்ள டிரான்ஸ்போர்ட் புரோட்டீன்கள், அதாவது போக்குவரத்து புரோட்டீன்கள் பம்புகளாகவும் கால்வாய்களாகவும் செயல்படுகின்றன; செல்களின் வெளியேயும் உள்ளேயும் பொருட்களை கொண்டு செல்ல இவை துணை புரிகின்றன. புரோட்டீன்களின் மூலக்கூறு பற்றியும், சங்கிலி போன்ற அவற்றின் கட்டமைப்பு அவை செய்யும் வேலையுடன் எப்படி சம்பந்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும் நாம் இப்பொழுது ஆராயலாம்.

எளிமையை ஆதாரமாகக் கொண்ட சிக்கலான அமைப்புமுறை

அட்சரமே பல மொழிகளுக்கு அடிப்படை அம்சமாக விளங்குகிறது. அதிலிருந்தே வார்த்தைகள் உருவாக்கப்படுகின்றன. பிறகு, வார்த்தைகளிலிருந்து வாக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன. மூலக்கூறு நிலையில், இது போன்ற நியமத்தையே உயிர் பயன்படுத்துகிறது. மாஸ்டர் “அட்சரத்தை” டிஎன்ஏ தருகிறது. இந்த “அட்சரத்தில்,” ஏ, சி, ஜி, டி, (A, C, G, T) என்ற நான்கு எழுத்துக்கள் மட்டுமே இருப்பது ஆச்சரியமானது. இவையே வேதியியல் அடிப்படைத் தளங்களின், அதாவது அடினின் (Adenine), சைட்டோஸின் (Cytosine), குவானின் (Guanine), தைமின் (Thymine) ஆகியவற்றின் குறியீடுகளாகும். இந்த நான்கு அடிப்படைத் தளங்களிலிருந்து, ஆர்என்ஏ இடையீடு வழியாக டிஎன்ஏ அமினோ அமிலங்கள் உருவாகின்றன, இவற்றை வார்த்தைகளுக்கு ஒப்பிடலாம். என்றாலும், சாதாரண வார்த்தைகளைப் போலின்றி அமினோ அமிலங்கள் அனைத்தும் ஒரே எண்ணிக்கையான எழுத்துக்களைக் கொண்டுள்ளன, அதாவது மூன்று எழுத்துக்களைக் கொண்டுள்ளன. ரிபோசோம்கள் என்ற “புரோட்டீன்-அசெம்பிளிங் மெஷின்கள்” அமினோ அமிலங்களை ஒன்றாக இணைக்கின்றன. இதனால் உருவாகும் சங்கிலிகளை, அதாவது புரோட்டீன்களை வாக்கியங்களுக்கு ஒப்பிடலாம். பேசப்படும் அல்லது எழுதப்படும் வாக்கியத்தைவிட அநேக கூறுகள் ஒரு புரோட்டீனில் உள்ளன; அதாவது, சுமார் 300 முதல் 400 அமினோ அமிலங்கள் அதில் உள்ளன.

இயற்கையில் நூற்றுக்கணக்கான அமினோ அமிலங்கள் தோன்றுகின்றன, ஆனால் பெரும்பாலான புரோட்டீன்களில் 20 வகை அமினோ அமிலங்களே உள்ளன என்று ஒரு நூல் கூறுகிறது. இந்த அமினோ அமிலங்களை ஏறக்குறைய எல்லையற்ற வகையில் பல்வேறு சேர்மானங்களாக ஒழுங்கமைக்கலாம். இதை சிந்தித்துப் பாருங்கள்: இருபதே அமினோ அமிலங்கள் 100 அமினோ அமிலங்கள் நீளத்திற்கு ஒரு சங்கிலியை உருவாக்கினால், அந்தச் சங்கிலியை 10100-⁠க்கும் அதிகமான பல்வேறு முறைகளில்​—⁠அதாவது 1-⁠க்குப் பின் 100 பூஜ்ஜியங்கள் என பல்வேறு முறைகளில்​—⁠ஒழுங்கமைக்கலாம்!

புரோட்டீன் வடிவமும் இயக்கமும்

புரோட்டீனின் வடிவமைப்பு செல்லில் அது வகிக்கும் பாகத்திற்கு இன்றியமையாதது. அமினோ அமிலங்களின் சங்கிலி எப்படி ஒரு புரோட்டீனின் வடிவமைப்பை பாதிக்கிறது? உலோக அல்லது பிளாஸ்டிக் சங்கிலியிலுள்ள தளர்ச்சியான இணைப்புகளைப் போலில்லாமல், அமினோ அமிலங்கள் குறிப்பிட்ட கோணங்களில் ஒன்றாக இணைந்து இவ்வாறாக குறிப்பிட்ட வடிவங்களாக உருவாகின்றன. இந்த வடிவங்களில் சில டெலிபோன் ஒயர் போல சுருள் சுருளாக இருக்கின்றன, அல்லது துணி மடிப்புகள் போல இருக்கின்றன. இந்த வடிவங்கள் அதிக சிக்கலான முப்பரிமாண அமைப்பை உருவாக்கும்படி பிற்பாடு “மடிக்கப்படுகின்றன,” அதாவது வடிவமைக்கப்படுகின்றன. புரோட்டீனின் வடிவமைப்பு கண்டபடி உருவாவதில்லை. சொல்லப்போனால், புரோட்டீனின் வடிவமைப்பு அதன் இயக்கத்திற்கு இன்றியமையாதது; இது, அமினோ அமில சங்கிலியில் குறைபாடு உண்டாகும்போது மிகவும் அப்பட்டமாக தெரியவருகிறது.

சங்கிலியில் குறைபாடு இருக்கும்போது

அமினோ அமில சங்கிலியில் புரோட்டீன்களுக்கு குறைபாடு இருக்கும்போது, அல்லது அவை தவறாக மடிக்கப்பட்டிருக்கும்போது, அரிவாள் செல் சோகை நோய், (sickle-cell anemia) நீர்க்கட்டி நார்மிகு நோய் (cystic fibrosis) உள்ளிட்ட அநேக வியாதிகள் உண்டாகலாம். அரிவாள் செல் சோகை நோய் என்பது பரம்பரை வியாதி; இவ்வியாதியின்போது சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் மூலக்கூறுகள் இயல்புமீறி காணப்படுகின்றன. பொதுவாக ஹீமோகுளோபின் மூலக்கூறில் 574 அமினோ அமிலங்கள் உள்ளன, அவை நான்கு சங்கிலிகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு சங்கிலிகளில் ஒரேவொரு அமினோ அமிலத்தின் வரிசை மாறினால்கூட அரிவாள் செல் சோகை என்ற மாறுபட்ட வடிவத்தை ஹீமோகுளோபின் பெற்றுவிடும். அமினோ அமில சங்கிலியின் ஒரு முக்கிய நிலையில் ஃபினைலலனின் (phenylalanine) என்ற அமினோ அமிலத்தை ஒரு புரோட்டீன் பெறாததால்தான் பெரும்பாலோருக்கு நீர்க்கட்டி நார்மிகு நோய் உண்டாகிறது. இந்தக் குறைபாடு பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு, குடல் பாதையையும் நுரையீரல்களையும் இணைக்கிற சவ்வுகளுக்குத் தேவையான உப்பு மற்றும் நீரின் சமநிலையைக் குலைத்துவிடுகிறது. இதனால், இவற்றின் மேற்புறங்களை மூடுகிற வழுவழுப்பான திரவம் வழக்கத்திற்கு மாறாக கெட்டியாகவும் பிசுபிசுப்பாகவும் ஆகிவிடுகிறது.

குறிப்பிட்ட சில புரோட்டீன்கள் பேரளவில் குறைவுபடுவது அல்பினிஸம், இரத்த ஒழுக்கு போன்ற கோளாறுகளுக்கு வழிநடத்துகிறது. அல்பினிஸம் என்பது நிறத்தில் ஏற்பாடும் குறைபாடாகும். இதன் மிகப் பொதுவான வகை, டைரோஸினேஸ் என்ற முக்கியமான புரோட்டீன் குறைவுபடும்போது அல்லது அந்தப் புரோட்டீனே இல்லாதபோது உண்டாகிறது. இது மெலனின் உற்பத்தியாவதைத் தடுக்கிறது, இந்த மெலனின் பொதுவாக மனிதருடைய கண்களில், முடியில், தோலில் காணப்படும் பழுப்பு நிறமியாகும். இரத்தம் உறைவதற்கு உதவும் புரோட்டீன்களின் அளவு மிகவும் குறைவுபடுவதால் இரத்த ஒழுக்கு ஏற்படுகிறது. மேலும், லாக்டோஸ் ஒவ்வாமை, தசை நலிவடைதல் (muscular dystrophy) போன்ற வேறுசில கோளாறுகளும் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

நோய் உண்டாகும் முறையைப் பற்றிய ஒரு கோட்பாடு

சமீப ஆண்டுகளில் விஞ்ஞானிகள் தங்களுடைய கவனத்தை ஒரு வகையான வியாதியின் மீது ஒருமுகப்படுத்தியிருக்கிறார்கள்; ‘பிரையான்’ என்ற அசாதாரணமான ஒரு புரோட்டீனே அந்த வியாதிக்கு காரணமென சிலர் கூறுகிறார்கள். குறைபாடுள்ள பிரையான்கள் நல்ல நிலையிலுள்ள பிரையான் புரோட்டீன்களுடன் கலந்துவிடுகின்றன; இப்படி கலந்துவிடுவதால் நல்ல நிலையிலுள்ள புரோட்டீன் தவறான மடிப்பை உண்டாக்குகிறது என்பதே அந்தக் கோட்பாடு. “இதனால், வியாதியைப் பரப்புகிறதும் தொற்றுண்டாக்குகிற புதிய பொருளை பிறப்பிக்கிறதுமான சங்கிலித் தொடர் விளைவு ஏற்படுகிறது” என சயன்டிஃபிக் அமெரிக்கன் என்ற ஜர்னல் கூறுகிறது.

பிரையான் மூலம் உருவானதாக கருதப்பட்ட வியாதி முதன்முதலில் 1950-களில் பாப்புவா நியூ கினியிலிருந்த பொது மக்களின் கவனத்திற்கு வந்தது. ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்துவந்த சில பழங்குடியினர் மத காரணங்களுக்காக மனித மாமிசத்தைப் புசிக்கும் ஒருவகை பழக்கத்தில் ஈடுபட்டார்கள். இது ‘குறு’ என்ற வியாதி தோன்றுவதற்குக் காரணமானது; ஒரு வகை மூளை வியாதிக்கு (Creutzfeldt-Jakob disease) உண்டாகும் அறிகுறிகளே இதற்கும் தோன்றின. பாதிக்கப்பட்ட இந்தப் பழங்குடியினர் இந்த மதச் சடங்காச்சாரத்தை கைவிட்டவுடன் ‘குறு’ வியாதி படுவேகமாக வீழ்ச்சியடைந்து இப்பொழுது கிட்டத்தட்ட ஒழிந்தே போய்விட்டது.

வியத்தகு வடிவமைப்பு!

புரோட்டீன்கள் பொதுவாக சரியாக மடிக்கப்பட்டு, வியத்தகு விதத்தில் ஒத்துழைப்புடனும் திறமையுடனும் துல்லியத்துடனும் தங்களுடைய வேலைகளைச் செய்கின்றன. மனித உடலில் 1,00,000 வித்தியாசமான புரோட்டீன்கள் இருப்பதையும் சிக்கலான இந்த எல்லா சங்கிலித் தொகுப்புகளும் ஆயிரக்கணக்கான வகை மடிப்புகளாக ஒழுங்கமைக்கப்படுவதையும் நினைத்துப் பார்க்கும்போது இது தனிச்சிறப்புக்குரியதே.

புரோட்டீன்களின் உலகம் இன்னும் பெருமளவில் ஆராயப்படாமலேயே இருக்கிறது. இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுது அதிநுணுக்கமான கம்ப்யூட்டர் புரோகிராம்களை உருவாக்கி வருகிறார்கள்; அவை அமினோ அமில தொடரை வைத்து புரோட்டீன்களின் வடிவத்தை முன் கணிக்கலாம். என்றாலும், புரோட்டீன்களைப் பற்றி நமக்குத் தெரிந்த வெகுசில விஷயங்களும்கூட இந்த “உயிர் சங்கிலிகளில்” உயர்ந்த ஒழுங்கமைப்பு இருப்பதை தெள்ளத் தெளிவாக நிரூபிப்பதோடு, ஆழ்ந்த அறிவுக்கூர்மை படைத்த ஒருவரின் கைவண்ணமே என்பதையும் பறைசாற்றுகின்றன. (g05 1/22)

[பக்கம் 27-ன் பெட்டி/படம்]

புரோட்டீன்களுக்கு “பின்கோட்”

தபால்களை அஞ்சல் துறை வேகமாக பட்டுவாடா செய்ய வேண்டுமானால் எல்லா கடிதத்தின் விலாசத்திலும் “பின்கோட்” எழுதப்பட்டிருக்க வேண்டும். புரோட்டீன்கள் இதுபோன்ற முறையைப் பயன்படுத்தி செல்லுக்குள் தங்களுடைய வழியைக் கண்டுபிடிக்கும் விதத்தில் படைப்பாளர் அவற்றை வடிவமைத்திருக்கிறார். நூறு கோடி புரோட்டீன்களைக் கொண்ட செல்கள் மிகவும் சந்தடிமிக்க இடங்களாக இருப்பதால் இது மிகவும் இன்றியமையாதது. என்றாலும், புதிதாக உருவாக்கப்படும் புரோட்டீன்கள், மூலக்கூறு “பின்கோட்”டின் உதவியால்​—⁠அதாவது புரோட்டீனிலுள்ள அமினோ அமிலங்களின் ஒரு விசேஷித்த இழையினால்​—⁠தாங்கள் வேலைக்கு செல்லும் வழியை எப்போதும் கண்டுபிடித்து விடுகின்றன.

இந்த வியத்தகு கொள்கையை கண்டுபிடித்ததற்காக செல் உயிரியலாளர் குந்தர் புளோபெல் என்பவர் 1999-⁠ல் நோபல் பரிசு பெற்றார். என்றாலும், ஏற்கெனவே இருந்ததைத்தான் புளோபெல் கண்டுபிடித்தார். உயிருள்ள அந்தச் செல்லையும் அதன் மூலக்கூறுகளின் மலைக்கவைக்கும் அணிவரிசையையும் படைத்தவருக்கு இதைவிட அதிக பேரும் புகழும் போய்ச்சேர வேண்டும் அல்லவா?​—⁠வெளிப்படுத்துதல் 4:⁠11.

[பக்கம் 24, 25-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

புரோட்டீன்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன?

செல்

1 செல்லின் நியூக்ளியஸிற்குள், ஒவ்வொரு புரோட்டீனுக்குரிய தகவல்களும் டிஎன்ஏ-வில் உள்ளன

டிஎன்ஏ

2 டிஎன்ஏ-வின் ஒரு பகுதி திறக்கப்படுகிறது, பிறகு மரபணு தகவல் ஒரு தூதுவர் ஆர்என்ஏ-வாக உருவாக்கப்படுகிறது

தூதுவர் ஆர்என்ஏ

3 “தகவலை வாசித்து, புரோட்டீனை உருவாக்கும்” ரிபோசோம்கள், ஆர்என்ஏ-வுடன் இணைகின்றன

4 இடம் மாற்றும் ஆர்என்ஏ-⁠க்கள் அமினோ அமிலங்களை ரிபோசோமுக்கு கொண்டு செல்கின்றன

தனித்தனி அமினோ அமிலங்கள்

இடம் மாற்றும் ஆர்என்ஏ-⁠க்கள்

ரிபோசோம்

5 ஆர்என்ஏ-வை ரிபோசோம் “வாசிக்கையில்,” ஒரு சங்கிலியை, அதாவது புரோட்டீனை உருவாக்குவதற்கு தனித்தனி அமினோ அமிலங்களை குறிப்பிட்ட வரிசையில் இணைக்கிறது

புரோட்டீன்கள், அமினோ அமிலங்களால் ஆனவை

6 சங்கிலி போன்ற புரோட்டீன் அதன் வேலையை செவ்வனே செய்ய துல்லியமான மடிப்புகள் ஏற்பட வேண்டும். ஒரு புரோட்டீனில் 300-⁠க்கும் அதிகமான “இணைப்புகள்” இருக்கின்றன!

புரோட்டீன்

நமது உடலில் 1,00,000-⁠க்கும் அதிகமான புரோட்டீன்கள் இருக்கின்றன. உயிர் வாழ அவை மிகவும் இன்றியமையாதவை

ஆன்டிபாடிகள்

என்ஸைம்கள்

அமைப்பு சார்ந்த புரோட்டீன்கள்

ஹார்மோன்கள்

டிரான்ஸ்போர்ட்டர்கள்

[பக்கம் 25-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஒவ்வொரு புரோட்டீனையும் டிஎன்ஏ எப்படி “வாசிக்கிறது”?

டிஎன்ஏ G T C T A T A A G

டிஎன்ஏ நான்கே “எழுத்துக்களை” பயன்படுத்துகிறது: A, T, C, G

A T C G

டிஎன்ஏ “எழுத்துக்கள்” ஆர்என்ஏ-⁠க்கு ஏற்றபடி நகலெடுக்கப்படுகின்றன. T-⁠க்கு பதிலாக U-வை (யூரேசில்) ஆர்என்ஏ பயன்படுத்துகிறது

A U C G

மூன்றெழுத்து கொண்ட ஒவ்வொரு தொகுதியும் ஒரு குறிப்பிட்ட “வார்த்தையை” “வாசிக்கிறது,” அதாவது ஒரு அமினோ அமிலத்தை நிர்ணயிக்கிறது. உதாரணமாக:

G U C = வேலைன்

U A U = டைரோசின்

A A G = லைசின்

இவ்வாறு, பொதுவான 20 அமினோ அமிலங்களில் ஒவ்வொன்றையும் “வாசிக்க” முடியும். “வார்த்தைகள்” ஒன்றாக இணைந்து “வாக்கியமாக,” அதாவது சங்கிலி போன்ற புரோட்டீனாக உருவாகின்றன

[பக்கம் 26-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

புரோட்டீன் எப்படி ‘வடிவமைக்கப்படுகிறது’?

தனித்தனி அமினோ அமிலங்கள் ஒன்றுசேர்ந்து . . .

1 சங்கிலியை உருவாக்குகின்றன, பிறகு . . .

2 அவை சுருள்களை, மடிப்புகளை, அல்லது வேறுசில வடிவங்களை உருவாக்குகின்றன, பிறகு . . .

சுருள்கள்

மடிப்புகள்

3 அதிக சிக்கல்வாய்ந்த முப்பரிமாண அமைப்பில் மடிப்பை உண்டாக்குகின்றன, அது . . .

4 சிக்கலான புரோட்டீனின் ஒரேவொரு சிறு பகுதியாக இருக்கலாம்

[பக்கம் 26-ன் படம்]

ரிபோசோம் புரோட்டீனின் ஒரு பகுதியான இந்தக் கம்ப்யூட்டர் மாடல், இதன் முப்பரிமாணத்தைப் பளிச்சென காட்டுவதற்கு வண்ணங்களைப் பயன்படுத்துகிறது. கட்டமைப்பு சார்ந்த வடிவங்கள் சுருள்களாலும் அம்புகளாலும் (குறைந்த மடிப்பு பிரிவுகளைக் கொண்டவை) சுட்டிக் காட்டப்படுகின்றன

[படத்திற்கான நன்றி]

The Protein Data Bank, ID: 1FFK; Ban, N., Nissen, P., Hansen, J., Moore, P.B., Steitz, T.A.: The Complete Atomic Structure of the Large Ribosomal Subunit at 2.4 A Resolution, Science 289 pp. 905 (2000)

[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]

Adapted drawings: From THE WAY LIFE WORKS by Mahlon Hoagland and Bert Dodson, copyright ©1995 by Mahlon Hoagland and Bert Dodson. Used by permission of Times Books, a division of Random House, Inc.