Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

பிள்ளைகளுக்கு வாசிப்பைச் சுவாரஸ்யமாக்குங்கள்

“நன்கு வாசிக்கிற பழக்கம் பெற்றோருக்கு இருந்தால் பிள்ளைகளுக்கும் இருக்கும்” என்கிறார் பெயாட்ரீஸ் கான்சாலெஸ் ஆர்ட்யூன்யோ என்ற நியூரோலிங்குவிஸ்ட் வல்லுநர். இதை மெக்சிகோவில் வெளியாகும் ரிஃபார்மா செய்தித்தாள் அறிக்கை செய்தது. பிள்ளைகள் உயிரெழுத்துக்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்னரே வாசிப்பதில் அவர்களுடைய ஆர்வத்தை வளர்க்க வேண்டும், ஏனெனில் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொள்கிற திறன் பிள்ளைகளுக்கு இருக்கிறது. உதாரணமாக, அவர்களுடைய கற்பனைத் திறனை வளர்க்க உதவுகிற கதைகளை வாசித்துக் காண்பிக்கலாம். வாசிப்பை சுவாரஸ்யமாக்க உதவும் பின்வரும் ஆலோசனைகளை அந்தச் செய்தித்தாள் அளிக்கிறது: “ஒன்றாக உட்காருங்கள். . . . பக்கங்களைத் திருப்பிப் பார்ப்பதற்கும், நடுநடுவே நிறுத்தி உரையாடுவதற்கும், கேள்விகள் கேட்பதற்கும் அவர்களை விட்டுவிடுங்கள். . . . கதையில் வருகிற பொருட்களைப் பற்றியும் கதாபாத்திரங்களைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிந்ததைச் சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளியுங்கள். . . . புத்தகத்தில் படிப்பவற்றிற்கும் தங்கள் சொந்த அனுபவங்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிய வையுங்கள்.” (g05 1/8)

யானைகளும் மிளகாய்களும்

ஆப்பிரிக்காவிலுள்ள வன விலங்கு காப்பிடங்களில் உலாவுகிற யானைகள் இயற்கை பாதுகாவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வெகு காலமாக சண்டையை மூட்டிவிட்டு வந்திருக்கின்றன. அந்தக் காப்பிடங்களைத் தாண்டி யானைகள் செல்லாதிருப்பதற்கு எடுக்கப்பட்ட எல்லா முயற்சியும் படுதோல்வியடைந்தது; வேலிகள், நெருப்புப் பந்தங்கள், மேளங்கள் என எந்தப் பாச்சாவும் பலிக்கவில்லை. சுற்றித்திரியும் யானைகள் அடிக்கடி பயிர்களை அழித்து நாசம் செய்திருக்கின்றன; அதுமட்டுமா, ஆட்களையும் மிதித்துச் சாகடித்திருக்கின்றன. அவற்றைத் துரத்திவிட கடைசியில் ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டது; அந்த வழி, மிளகாய்ச் செடிகளை வளர்ப்பதாகும். காப்பிடங்களின் எல்லைகளில் மிளகாய்ச் செடிகள் பயிரிடப்பட்டன, அதன்பின் அங்குச் சென்ற யானைகள் “அந்தச் செடியின் நெடியைத் தாங்காமல் வெறுத்துப்போய்” வந்த வழியே திரும்ப ஆரம்பித்தன என்பதாக தென் ஆப்பிரிக்க செய்தித்தாளான த விட்னஸ் அறிக்கை செய்கிறது. இப்போது அந்தக் காப்பிடங்களின் அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள், இனி அவர்கள் “யானைகளைத் திரும்ப காப்பிடத்திற்குள் ஓட்டிக்கொண்டு செல்ல” வேண்டியதில்லை; அந்த விவசாயிகளின் பயிர்கள் நாசமாக்கப்படுவதும் குறைந்திருக்கிறது. மிளகாய்கள் கொழுத்த லாபத்தையும் அள்ளித் தரலாம். (g05 1/8)

ஆபாசத்தைப் பார்க்க அலையும் பெண்கள்

“சமீப ஆண்டுகளில், இன்டர்நெட்டை உபயோகிக்க அநேக வாய்ப்புகள் இருப்பதாலும், அதற்கு அவ்வளவாகப் பணம் செலவழிக்க வேண்டியதில்லை என்பதாலும், அநாமதேயமாக அதைப் பயன்படுத்த முடியுமென்பதாலும் லட்சக்கணக்கான பெண்கள் ஆபாசத்தைப் பார்க்க அலையாய் அலைகிறார்கள்” என அ.ஐ.மா., ஒஹாயோவிலுள்ள க்ளீவ்லாண்டில் வெளியாகும் ப்ளெய்ன் டீலர் என்ற செய்தித்தாள் சொல்கிறது. “பெரியவர்களுக்குரிய வெப் சைட்களை உபயோகிக்கும் மூன்று பேரில் ஒருவர் பெண்ணாக இருக்கிறார்.” 42 வயது நிரம்பிய ஒரு தாய் ஆபாசத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். ஏன்? “தன்னுடைய மாஜி கணவனை அந்தளவுக்கு சுண்டி இழுத்தது எது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக. ஆனால் கொஞ்ச நாட்களுக்குள், தன்னுடைய செக்ஸ் பசிக்குத் தீனி போடுவதற்காக சீக்கிரத்திலேயே அவள் வாரத்திற்கு 30 மணிநேரத்தை வெப் சைட்களை அலசுவதில் செலவழிக்கத் தொடங்கியிருந்தாள்.” (g04 8/22)

முதியோர்​—⁠நமக்குச் சுமையல்ல

“முதியோரைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவைப் பற்றியே சதா மனதில் அசைபோடுவதற்குப் பதிலாக, அவர்கள் செய்யும் கூலியில்லா வேலையினால் உண்டாகிற நன்மைகளையும் சேமிப்புகளையும் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது முக்கியம்” என ஆஸ்திரேலிய குடும்ப ஆய்வுக் கழக அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. “கூலி கொடுத்தாலும் செய்ய வைக்க முடியாத ஏகப்பட்ட வேலையைக் கூலியின்றி செய்வதன் மூலம் முதியோர் உதவுகிறார்கள்.” “65 வயதிற்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் கூலியில்லாமல் வீட்டுப் பொறுப்புகளை மனமுவந்து கவனித்துக்கொள்வதால், [சமுதாயத்திற்கு] ஆண்டுதோறும் சுமார் 1, 21,500 கோடி ரூபாய் மிச்சமாகிறது” என அந்த ஆய்வு காட்டியது. இப்படி அவர்களாகவே மனமுவந்து செய்யும் சேவையில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது, நோய்வாய்ப்பட்டவர்களைப் பராமரிப்பது, வீட்டு வேலைகளைச் செய்வது போன்றவை அடங்கும். அவர்களது கூலியில்லா உழைப்பு “சமுதாயத்தை இணைக்கிற சமூகப் ‘பசை’ போல செயல்படுகிறது” என அந்த அறிக்கையை எழுதியவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களுடைய சேவையை வெறும் பணங்காசினால் மதிப்பிட முடியாது. (g05 1/8)

அச்சடிக்கப்பட்ட மிக மிகப் பழமையான புத்தகம்

உலகில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களிலேயே மிக மிகப் பழமையான புத்தகமாகக் கருதப்படும் புத்தகம் ஒன்று இப்போது பிரிட்டிஷ் நூலகத்தில் இருப்பதாக பிபிசி செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. த டைமன்ட் சூத்ரா எனப்படும் அந்தப் புத்த மதப் புத்தகம் பொ.ச. 868-⁠ம் ஆண்டைச் சேர்ந்ததென குறிப்பிடப்பட்டிருக்கிறது; சீனாவிலுள்ள டியுன்ஹவாங் என்ற ஊரிலிருந்த ஒரு குகையில் 1907-⁠ம் ஆண்டு அது கண்டெடுக்கப்பட்டது. “சாம்பல் நிற காகிதங்களில் சீன எழுத்துக்கள் அச்சிடப்பட்ட அந்தப் புத்தகச் சுருள், ஒரு மரக்குச்சியில் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது” என அந்த அறிக்கை சொல்கிறது. அந்தப் புத்தகமும் அதனுடன் இருந்த மற்ற பொருட்களும் “கி.பி. 1000-⁠ம் ஆண்டு வாக்கில், அந்தக் குகைக்குள் இருந்த நூலகத்தினுடையதாக” இருந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. ஐரோப்பாவில் அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் முறை அறிமுகமாவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அந்தப் புத்தகச் சுருள் இருந்திருக்கிறது; ஆனால் “அந்தச் சமயத்தில் பேப்பர் தயாரிப்பும் அச்சடிக்கும் முறையும் ஏற்கெனவே சீனாவில் நன்கு பிரபலமாகி இருந்தன” என்று அந்த பிபிசி அறிக்கை குறிப்பிடுகிறது. (g05 1/8)

பிரதிபலிக்கும் நேரத்தைச் சத்தம் குறைக்கிறது

“சத்தம் அதிகரிக்க அதிகரிக்க நீங்கள் பிரதிபலிப்பதற்காக எடுத்துக்கொள்கிற நேரம் குறைந்து கொண்டே போகும்” என்கிறது த டோரான்டோ ஸ்டார். கனடாவிலுள்ள நியூபௌண்ட்லாந்தைச் சேர்ந்த மெமோரியல் பல்கலைக்கழகத்திற்காக ட்வேன் பட்டன் என்ற ஆராய்ச்சியாளர் நடத்திய ஆய்வின் முடிவுகள்தான் இவை. இந்த ஆய்வுக்காக, பல்வேறு அளவுகளில் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே உடல் உழைப்பையும் மன உழைப்பையும் தேவைப்படுத்துகிற வேலைகளை நிறைய பேரை அவர் செய்ய வைத்தார். அலுவலகங்களில் கேட்கப்படும் 53 டெசிபல் பின்னணி சத்தம் ஒரு நபரின் பிரதிபலிப்பு நேரத்தை 5 சதவீதத்திற்குக் குறைத்ததையும், தொழிற்சாலைகளில் கேட்கப்படும் 95 டெசிபல் பின்னணி சத்தம் அதை 10 சதவீதத்திற்குக் குறைத்ததையும் அவர் கண்டுபிடித்தார். பிரதிபலிக்கும் இந்த நேரங்களுக்கிடையே சொற்ப வித்தியாசமே இருந்தாலும் “அந்தச் சொற்ப நேர வித்தியாசம் நீங்கள் வாகனம் ஓட்டும்போது பெரிய விஷயமாக ஆகிவிடுகிறது” என அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஒரு நொடியில் .035 நேரம் தாமதமாகப் பிரதிபலித்தால்கூட அது விபத்து நேரிடுவதற்குக் காரணமாகி விடலாம் என்கிறார் பட்டன். (g05 1/8)

அழகுபடுத்திக்கொள்ள அதிக நேரமெடுக்கும் ஐரோப்பிய ஆண்கள்

“கண்ணாடி முன்நின்று தோற்றத்தைச் சரிசெய்துகொள்ள ஆண்கள் எடுத்துக்கொள்கிற நேரம், கடந்த ஐந்து ஆண்டுகளில் வாரத்திற்கு சராசரி 3.1 மணிநேரமாக அதிகரித்திருக்கிறது; பெண்களின் சராசரி மணிநேரமோ 2.5 மட்டுமே” என லண்டன் செய்தித்தாளான த டெய்லி டெலிகிராஃப் அறிவிக்கிறது. ஆண்களுக்கென்றே தயாரிக்கப்படுகிற பொருட்களுக்கு, அதாவது சருமப் பாதுகாப்பு, கேசப் பராமரிப்பு, உடல்நலம் பேணுதல் ஆகியவற்றிற்கான பொருட்களுக்கும் சில நறுமணப் பொருட்களுக்கும் மவுசு அதிகரித்து வருவதிலிருந்தே தோற்றத்திற்கு ஆண்கள் அதிகக் கவனம் செலுத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது; அத்தகைய அழகு சாதனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு “சென்ற வருடம் 1,11,500 கோடி ரூபாயாக இருந்தது, 2008-⁠ம் ஆண்டுக்குள் அது 1,32,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.” “ஃபேஷியல், மானிகியூர், பெடிகியூர் ஆகியவற்றைச் செய்துகொள்ள தவறாமல் 16,400 ரூபாய் வரை வாடிக்கையாளர்கள் செலவழிப்பதால் எங்கள் பிஸினஸ் சக்கைபோடு போடுகிறது” என ஆண்கள் சலூன் மானேஜர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார். “ஆண்களுக்கான நறுமணப் பொருட்களில் 60 சதவீத பொருட்களை இப்போது ஆண்களே நேரில் வந்து வாங்கிச் செல்கிறார்கள், அவர்களுடைய கேர்ல்-ஃபிரெண்ட்ஸ்களோ மனைவிமார்களோ அல்ல” என்ற ஒரு துணுக்கையும் அந்தச் செய்தித்தாள் வெளியிட்டது. (g05 1/22)

பச்சிளம் குழந்தைகளிடம் வாசித்துக் காட்டுவதன் பயன்

“சிறு குழந்தைகளிடம் வாசித்துக் காட்டுவது அவர்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதால் பிறந்த சில மணிநேரத்திற்குள்ளேயே குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் வாசித்துக் காட்ட ஆரம்பிக்க வேண்டுமென வல்லுநர்கள் இப்போது சிபாரிசு செய்கிறார்கள்” என்று த டோரான்டோ ஸ்டார் சொல்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் கனடாவில் முதன்முறையாக கைக்குழந்தைகளுக்கான கல்வித் திட்டத்தை ஆரம்பித்து வைத்த டாக்டர் ரிச்சர்ட் கோல்ட்ப்ளூம் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “சிசுப் பருவத்திலிருந்து வாசித்துக் காட்டப்படுகையில் குழந்தைகள் உண்மையாகவே செவிகொடுத்துக் கேட்கின்றன என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம், அதைக் கவனிக்கவும் செய்தோம். ஆம், வாசிக்கப்படுவதை அந்தக் குழந்தைகள் உன்னிப்பாகக் கேட்கின்றன.” மழலைப் பருவத்திலிருந்து குழந்தைகளுக்குப் புத்தகங்களைக் கொடுப்பது அவர்களுடைய சொல் வளத்தையும் வாசிக்கும் திறன்களையும் மேம்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது. “வாசிக்கக் கற்றுக்கொள்ளும்படி சிறு குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவது அதன் நோக்கமல்ல, ஆனால் ஒரு மொழியின் தரத்தையும் அளவையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே அதன் நோக்கமாகும்; அப்போதுதான் அவர்கள் அநேக சொற்களையும், எழுத்துக்களையும், ஒலி அமைப்புகளையும் புரிந்துகொள்வார்கள், பிறகு காலப்போக்கில் வாசிக்கும் திறன்களைப் பெற்றுக்கொள்வார்கள்” என அந்தச் செய்தித்தாள் கூறுகிறது. (g05 1/22)