Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

துன்பம் “இளைஞர் கேட்கின்றனர் . . . கடவுள் ஏன் நம்மை துன்பப்பட அனுமதிக்கிறார்?” (ஏப்ரல் 8, 2004) என்ற கட்டுரைக்கு மிக்க நன்றி. எனக்கு 14 வயது. என்னுடைய தாத்தா மீதும் அத்தை மீதும் நான் அதிக அன்பு வைத்திருந்தேன்; அவர்கள் சமீபத்தில் இறந்துவிட்டார்கள். அவர்களுடைய மரணத்துக்குக் கடவுள் காரணர் அல்லவென்று எனக்குத் தெரியும். சாத்தானே அதற்கெல்லாம் காரணம், அவனுக்குச் சீக்கிரத்தில் அழிவு காத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். இந்தக் கட்டுரை எனக்கு ஆறுதலின் அருமருந்தாய் இருந்தது. இது போன்ற கட்டுரைகளைத் தயவுசெய்து தொடர்ந்து பிரசுரியுங்கள். என் மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவிக்கிறேன்.

பி. பி., ஐக்கிய மாகாணங்கள்

நான் மணக்கவிருந்த பெண் சமீபத்தில் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தாள். அது எனக்கும் சபையாருக்கும், முக்கியமாக அவளுடைய பெற்றோருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருந்தது. தாங்க முடியாத அந்தத் துயரத்திலிருந்து மீண்டுவர யெகோவா எனக்கு உதவியதற்காக நன்றி தெரிவிக்கிறேன். “கடவுள் ஏன் நம்மை துன்பப்பட அனுமதிக்கிறார்?” என்ற கட்டுரைக்கு நன்றி. அது சரியான சமயத்தில் கையில் கிடைத்தது.

ஐ. டி. ஜெர்மனி

இந்தக் கட்டுரையைப் பார்த்ததும் எனக்கு வாசிக்க விருப்பமில்லை. மனதை வாட்டும் தகவல்களே இருக்கும் என்று நினைத்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய அண்ணன் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டான். அதனால் ஏற்பட்ட உணர்ச்சி ரீதியான காயங்கள் இன்னும் ஆறவில்லை. ஆனால் யெகோவா நன்மைகளையே கொடுப்பவர் என்று அந்தக் கட்டுரை எனக்கு நினைப்பூட்டியது. என் காயங்கள் விரைவாக குணமாவதை உணர்ந்தேன். இந்த நிலையற்ற உலகில் வாழ்க்கையைத் தொடர தைரியத்தைப் பெற்றேன்.

எஸ். எச்., ஜப்பான்

லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாமை “லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாததற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளுதல்” (ஏப்ரல் 8, 2004) என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த அறிகுறிகள் சில வருடங்களாக எனக்கு இருந்தன. எனவே ‘ஹைட்ரஜன் பிரெத்’ பரிசோதனை (hydrogen breath test) எனக்குச் செய்ய வேண்டியிருந்தது. அது எனக்கு லாக்டோஸ் ஒத்துக்கொள்வதில்லை என்பதை உறுதி செய்தது. மருந்து மருத்துவரிடம் அந்தக் கட்டுரையை காண்பித்தேன். ஆராய்ச்சி செய்து அருமையாக எழுதப்பட்டிருக்கிறது என்று பாராட்டினார். இது போன்ற ஒரு நல்ல கட்டுரையைப் பிரசுரித்ததற்கு அவர் சார்பில் உங்களுக்கு நன்றியைத் தெரிவிக்கச் சொன்னார். அதற்கு முன்பு அவர் விழித்தெழு! பத்திரிகையை படித்ததாகவே அவருக்கு நினைவில்லை.

ஈ. எஸ். ஜெர்மனி

மிதமீறி குடிப்பது “பைபிளின் கருத்து: மிதமீறி குடிப்பது உண்மையிலேயே தவறா?” (ஏப்ரல் 8, 2004) என்ற கட்டுரைக்கு நன்றி. மதுபானம்தான் எனக்கும் என் மனைவிக்கும் இடையே நிலவிய மனக்கசப்புக்குக் காரணம் என்பதை இப்போது உணர்கிறேன். மதுபானத்திற்காக பணத்தைத் தண்ணீராய் இறைத்ததை எண்ணி வருந்துகிறேன். இப்பொழுது குடிப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறேன்.

ஜி. கே., டான்ஜானியா

குறுக்கெழுத்துப் போட்டி விழித்தெழு!-வில் வெளியாகும் குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை கண்டுபிடிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அவை அறிவை வளர்க்க உதவுகின்றன. ஆரம்பத்தில் சரியான வார்த்தையைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு முறையும் பைபிளைத் திறந்து பார்த்தேன். ஆனால் இப்போதெல்லாம் எப்பொழுதாவதுதான் பைபிளைத் திறந்து பார்க்கிறேன். பைபிளை நான் தவறாமல் படிப்பதே அதற்கு காரணம். தவறாமல் பைபிள் படிப்பதற்குக் குறுக்கெழுத்துப் போட்டிகளே எனக்கு உற்சாகத்தை அளித்தன.

டபிள்யு. கே., போலாந்து

“விழித்தெழு!” பதிலளிக்கிறது: “விழித்தெழு!”-வில் வெளிவரும் குறுக்கெழுத்துப் போட்டி, “உங்களுக்குத் தெரியுமா?” என்ற தலைப்பில் பைபிள் வினாடிவினாவாக சில மொழிகளில் வெளிவருகிறது. (g05 1/8)

கெட்ட பழக்கங்கள் “பைபிளின் கருத்து: கெட்ட பழக்கங்களை விட்டொழிப்பது சாத்தியமா?” (மே 8, 2004) என்ற கட்டுரைக்குக் கட்டாயம் என்னுடைய போற்றுதலைத் தெரிவிக்க வேண்டுமென்றுதான் இதை எழுதுகிறேன். எப்படியாவது உடம்பைக் குறைக்க வேண்டுமென கொஞ்ச காலமாகவே போராடி வந்திருக்கிறேன். கஷ்டப்பட்டு எடையைக் குறைப்பேன், ஆனால் மறுபடியும் அது கூடிவிடும். இந்தக் கட்டுரை அந்தப் பிரச்சினையை குறிப்பிட்டுப் பேசாவிட்டாலும், அதிலிருந்த தகவல் எனக்குப் பொருத்தமாக இருந்தது. என்னிடம் என்னென்ன கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன என்பதை ஆராய்வதற்கும் அவற்றால் என்னுடைய எடை எப்படிக் கூடுகிறது என்பதைக் காண்பதற்கும் அது உதவியது. எங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளை யெகோவா அறிந்திருக்கிறார், அக்கறையுள்ளவராகவும் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்தியதற்காக மிக்க நன்றி.

எம். எஸ். ஐக்கிய மாகாணங்கள் (g04 1/22)