Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குட்டிக் குட்டி கடல் வீரர்கள்

குட்டிக் குட்டி கடல் வீரர்கள்

குட்டிக் குட்டி கடல் வீரர்கள்

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

திமிங்கலங்கள், டால்ஃபின்கள், சுறாக்கள்​—⁠ஆம், வியத்தகு இந்தக் கடல் ஜீவிகள் உங்களுடைய கற்பனைக் குதிரையை ஜோராகத் தட்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், கடலுக்குள் “சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள்” சஞ்சரிக்கின்றன. (சங்கீதம் 104:25) நுணுக்கமான விஷயங்களைக் கூர்ந்து கவனிப்போருக்குச் சின்னச் சின்ன உயிரினங்களும்கூட அதிசயமானவைதான்.

உதாரணமாக, கடலுக்கடியில் அங்கும் இங்கும் பரபரவென்று ஓடிக்கொண்டிருக்கிற ஒருவகை ஜீவிகள் உள்ளன, “கவசம் அணிந்த கடல் போர்வீரர்கள்” என அவை வர்ணிக்கப்படுகின்றன. இடைக்கால போர்வீரர்கள் சிலர் அணிந்திருந்த கவசத்தைப் போல் அல்லாமல், இந்தக் குட்டி “போர்வீரர்களின்” கவசம் அட்டகாசமான வர்ணங்களும் டிஸைன்களும் நிறைந்தது. பொடிசு பொடிசான இந்தக் கடல்வாசிகள் ஓட்டுடலிகளாகிய க்ரஸ்டேஷியன்ஸ் என்ற இனத்தைச் சேர்ந்தவை, இவை பொதுவாக இறால்கள் (shrimps) என அழைக்கப்படுகின்றன.

நுண்ணிய உயிரினமாக உருவாவது முதல் உங்கள் தட்டுகளுக்கு வரும் வரை

இறால்கள் என்றதும் ருசியான கடல் உணவு மட்டுமே உங்கள் நினைவுக்கு வரலாம். என்றாலும், அவை உங்கள் தட்டுகளில் பரிமாறப்படுவதற்கு முன், குறிப்பிடத்தக்க நிலைகளைக் கடந்து வருகின்றன. சில பெண் இறால்கள் குஞ்சு பொரிக்கும் வரையில் கரு முட்டைகளைத் தங்களுடைய அடிவயிற்றிலேயே சுமக்கின்றன; வேறு சில இறால்களோ அந்த முட்டைகளை நீரோட்டத்திலே விட்டுவிடுகின்றன, அங்கே அவை தானாகவே முழு வளர்ச்சி அடைகின்றன.

இறால் முட்டைகளிலிருந்து முதலில் ஸோயெ என்றழைக்கப்படுகிற லார்வாக்கள் வெளிவருகின்றன, பிறகு லார்வா பருவத்தின் பல கட்டங்களை அவை தாண்டிச் செல்கின்றன; இந்தச் சமயத்தில் இவற்றைப் பார்த்தால் இறாலுக்கும் இவற்றிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல் வெகு வித்தியாசமாக இருக்கின்றன. கடலில் மிதக்கிற கூட்டங்கூட்டமான ப்ளாங்டன் நுண்ணியிரிகளோடு சிறிது காலம் வாழ்ந்த பின், ஸோயெ லார்வாக்கள் கடைசியில் கடலுக்கடியில் போய்த் தங்கிவிடுகின்றன; அங்கே அவை படிப்படியாக உருமாறி, வளர்ந்த இறால்களாக ஆகின்றன.

கவசத்தை மாற்றுதல்

கட்டுறுதியான கவசத்தால் மூடப்பட்டிருக்கும் இறால்களால் எப்படி வளர முடிகிறது? “இயல்பாக நடைபெறுகிற இந்த வளர்ச்சியின் (இது எக்டைஸிஸ் என்றும் அழைக்கப்படுகிறது) பாகமாக அதன் பழைய புறத்தோலுக்கு அடியில் மிருதுவான புதிய ஒரு புறத்தோல் உருவாகிறது” என எ ஃபீல்ட் கைடு டு க்ரஸ்டாஷியன்ஸ் ஆஃப் ஆஸ்ட்ரேலியன் வாட்டர்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது. “பிறகு அதன் பழைய புறத்தோலை உரித்துவிடுகிறது, அடுத்து அந்த இறால் தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு, வளையும் தன்மையுள்ள புதிய புறத்தோலை உப்பும்படிச் செய்கிறது, இதனால் வளர்ச்சியடையத் தேவையான இடைவெளி அந்த இறாலுக்கு கிடைத்து விடுகிறது” எனவும் அந்தப் புத்தகம் தொடர்ந்து சொல்கிறது. ஆஸ்ட்ரேலியன் ஸீஷோர்ஸ் என்ற புத்தகம் பின்வருமாறு விளக்குகிறது: “இந்த இறால் தன் முழு உடம்பையும்​—⁠பெரியதும் வலுவானதும் அல்லது சிறியதும் மெலிதானதுமான எல்லா உறுப்புகளையும்​—⁠தன் பழைய மேல் ஓட்டிலிருந்து வெளியே எடுத்துக் கொள்கிறது. கையுறையிலிருந்து விரல்களை வெளியே எடுப்பது போல இந்த இறால் தன் உடலுறுப்புகளை எடுத்துக் கொள்கிறது.”

இந்த ஓட்டுடலிகள் தங்கள் உடலிலுள்ள கணுக்களின் இடுக்கமான சந்துகள் வழியே கொடுக்குத் தசைகள் போன்ற பெரிய உடலுறுப்புகளை எப்படி இழுத்துக் கொள்கின்றன? “இறால்களின் உடலுறுப்புகள் மென்மையானவை, இந்த ஒரே காரணத்தினால்தான் அவற்றால் இடுக்கமான சந்துகள் வழியே தங்கள் பெரிய உறுப்புகளை இழுத்துக்கொள்ள முடிகிறது. சொல்லப்போனால், இலகுவாக இழுத்துக்கொள்வதற்காக தங்கள் வளர்ச்சிப் பருவத்தின்போது பக்க உறுப்புகளிலிருக்கும் இரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு இழுத்துக் கொள்கின்றன” என டபிள்யூ. ஜெ. டாக்கின் என்ற நூலாசிரியர் சொல்கிறார். பழைய ஓட்டிலிருந்த அதே நெளிவுகளும், வரிகளும், நிறங்களும் இந்தப் புதிய மேல் ஓட்டில் அப்படியே அச்சாக பதிந்துவிடுகின்றன; அதுவும் நல்லதுக்கே!

இறாலை மறைத்துப்போடுகிறதும், பிரபலப்படுத்துகிறதுமான சில நிறங்கள்

சில இறால்கள் கடற்பஞ்சுகள் என்றழைக்கப்படுகிற கடல் பிராணிகளின் உணரிழைகளுக்கு நடுவே வாழ்கின்றன, அவற்றில் சில பார்ப்பதற்கு ஓரளவு கண்ணாடி போல் இருக்கின்றன; வேறு சிலவற்றிற்கு அந்தக் கடற்பஞ்சுகளின் நிறத்திலேயே கவசம் இருக்கின்றன. கடற்பஞ்சுகளின் நிறத்தில் இரண்டறக் கலந்துவிடுகிற இந்த இறால்கள் அவற்றின் புயங்களுக்கு நடுவே பாதுகாப்பாக இருக்கின்றன; அந்தக் கடற்பஞ்சுகள் மீது படிந்துவிடுகிற குப்பைகளைச் சுத்தப்படுத்துகிற வேலை செய்து அங்கேயே தங்கிவிடுகின்றன.

மற்ற இறால்கள் அட்டகாசமான நிறங்களில் வலம் வருகின்றன, அதற்கு ஓர் உதாரணம் கிளீனர் இறால்கள் ஆகும். அவை பெரும்பாலும் கடற்பாறைகளின் முகடுகளுக்கு அடியில் கூட்டங்கூட்டமாக வாழ்கின்றன; கண்ணைப் பறிக்கும் அவற்றின் நிறங்கள் அவை செய்யும் சுத்தப்படுத்துகிற வேலையை விளம்பரப்படுத்துவது போல் தெரிகிறது. சில மீன்களின் உடம்பில் ஒட்டுண்ணிகள் டேரா போட்டிருந்தால், அந்த மீன்கள் கிளீனர் இறால்கள் வசிக்கிற இடத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிடுகின்றன; காரணம், தங்கள் உடம்பின் மீதுள்ள ஒட்டுண்ணிகளை அந்த இறால்கள் ‘மேய்ந்து செல்வதற்காக.’ அந்த மீன்களின் வாய்க்குள்ளும் செவுள்களுக்குள்ளும் அவை ஜாலியாக ‘மேய்ந்து செல்கின்றன.’ அப்படிச் செல்லும்போது இந்த “இறால் டாக்டர்கள்” தங்களுடைய கண்ணில் படுகிற எல்லா ஒட்டுண்ணிகளையும் கபளீகரம் செய்து விடுகின்றன, அதுமட்டுமல்ல, அந்த மீனின் தோலிலிருந்து வெளிப்படுகிற பிசின்களையும் ருசிபார்த்து விடுகின்றன.

அவற்றின் நிறம் எதுவாக இருந்தாலும் சரி, அவை என்ன வேலை செய்து வந்தாலும் சரி, பிரமிப்பூட்டும் இந்தக் குட்டி ஜீவிகளைப் பற்றியதில் ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது இவற்றின் கவசம் பூர்வகால எந்தப் போர்வீரனுடைய கவசத்தைப் பார்க்கிலும் எத்தனையோ மடங்கு மகத்தானதாய் இருக்கிறது. (g05 1/22)

[பக்கம் 17-ன் படம்]

ஹிஞ்பீக் இறால்

[பக்கம் 17-ன் படம்]

கண்ணாடி போன்ற கடற்பஞ்சு இறால்

[பக்கம் 17-ன் படம்]

எம்பரர் இறால்

[பக்கம் 17-ன் படம்]

கடற்பஞ்சு இறால்

[பக்கம் 17-ன் படம்]

கிளீனர் இறால்

[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]

கிளீனர் இறால் தவிர, மற்ற எல்லாப் புகைப்படங்களும்: © J and V Stenhouse