Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நண்பர்கள் நம் எல்லாருக்கும் தேவை

நண்பர்கள் நம் எல்லாருக்கும் தேவை

நண்பர்கள் நம் எல்லாருக்கும் தேவை

“ஒருவரிடம் உங்களால் எந்த விஷயத்தையும் மனம்விட்டு பேச முடிகிறதென்றால், ஒரு நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஒருவரிடம் போனில் உரையாட முடிகிறதென்றால் அவரே நண்பர்.”⁠யாயில், பிரான்சு.

“ஒரு நண்பர், நீங்கள் வேதனைப்படுகையில் புரிந்துகொள்கிறார், நீங்கள் படும் வேதனையை அப்படியே அவரும் உணருகிறார்.”⁠கேயில், பிரான்சு.

“உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு.” (நீதிமொழிகள் 18:24, பொது மொழிபெயர்ப்பு) பைபிளிலுள்ள இந்த வார்த்தைகள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை. அன்றுதொட்டு இன்றுவரை மனிதனின் இயல்பு மாறவே இல்லை. உணவும் நீரும் மனிதனின் உடலுக்கு எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு மனிதனின் மனநிலைக்கு நட்பு மிக முக்கியமானதாகவே இருந்து வருகிறது. ஆனால் நட்பு என்ற இந்த அடிப்படை தேவை பலருக்கும் பூர்த்தியாவதில்லை. எங்கும் மக்கள் தனிமையில் தவிக்கிறார்கள். “இதற்கான சில காரணங்களைக் கண்டுபிடிப்பது பெரிய விஷயமல்ல” என இன் ஸர்ச் ஆஃப் இன்டிமஸி என்ற புத்தகத்தில் கேரன் ரூபன்ஸ்டைன் மற்றும் ஃபிலிப் ஷேவர் குறிப்பிடுகின்றனர். ஜனங்கள், ‘அடிக்கடி குடிமாறிச் செல்வது, எந்தவொரு பற்றுதலும் இல்லாதவராக உணருவது, பெருமளவு குற்றச்செயல்களைச் சந்திப்பது,’ “சமுதாயத்தோடு ஒட்டுறவில்லாமல் டிவி-யும் வீடியோவுமே கதியென கிடப்பது” ஆகியவற்றை அதற்கான காரணங்கள் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இன்றைய வாழ்க்கை சூழலும்கூட நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிவிடுகிறது. “பதினேழாம் நூற்றாண்டில் கிராமவாசி ஒரு வருஷத்திலோ தன்னுடைய வாழ்நாள் காலத்திலோ எத்தனை பேருடன் அறிமுகமாகி இருந்தாரோ அதைவிட அதிகமானவர்களிடம் இன்றைய நகரவாசி ஒரே வாரத்தில் அறிமுகமாகிறார்” என லெட்டி போக்றிபன் என்பவர் அமங் ஃபிரெண்ட்ஸ் என்ற புத்தகத்தில் எழுதுகிறார். ஒருவர் நூற்றுக்கணக்கான ஆட்களைச் சந்திப்பதால், நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ளும் அளவுக்கு தனிப்பட்ட கவனத்தை செலுத்தி யாருடன் பழகுவதும் கடினமாக இருக்கலாம்.

சமீப காலத்தில் அதிக பரபரப்பில்லாமல் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த இடங்களில்கூட சமுதாய சூழல் படுவேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. கிழக்கு ஐரோப்பாவில் வசிக்கிற உல்லா என்பவள் இவ்வாறு சொல்கிறாள்: “முன்பெல்லாம் எங்களுடைய நண்பர்களிடம் உயிருக்கு உயிராய் பழகுவோம். ஆனால் இப்போதெல்லாம் பலரும் வேலை, சொந்தக் காரியங்கள் என மூழ்கிவிட்டார்கள். எல்லாரும் எப்போதுமே பிஸி, எங்களுடைய பழைய நட்பெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடுவது போல் தெரிகிறது.” பம்பரமாகச் சுழலும் வாழ்க்கை ஓட்டத்தில் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போகலாம்.

ஆனால், நமக்கென்று நண்பர்கள் வேண்டும் என்ற கட்டுக்கடங்கா ஆசை நமக்குள் இருக்கிறது. முக்கியமாக இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட ஆசை அதிகம். மேற்குறிப்பிடப்பட்டுள்ள யாயில் இவ்வாறு சொல்கிறாள்: “இளைஞராக இருக்கும்போது உங்களை ஒருவர் ஏற்றுக்கொள்வதும், அவருடன் நன்கு பழகி நெருங்கிய நண்பராவதும் அவசியம்.” சிறியவர்களாகட்டும் பெரியவர்களாகட்டும் நம் எல்லாருக்குமே மகிழ்ச்சியளிக்கும் உற்ற நண்பர்கள் தேவை. அப்படி உண்மையான நண்பர்கள் கிடைப்பது கடினமென்றாலும் அவர்களைப் பெறுவதற்கும் அவர்களோடு எப்போதும் நட்பு வைத்துக்கொள்வதற்கும் நாம் செய்ய வேண்டிய அநேக காரியங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி தொடர்ந்து வரும் கட்டுரைகள் கலந்தாலோசிக்கின்றன. (g04 12/8)