Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆறு கண்டங்களின் சங்கமம்

ஆறு கண்டங்களின் சங்கமம்

ஆறு கண்டங்களின் சங்கமம்

உக்ரைனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

விலங்கினங்களை இயற்கை வாழிடத்திலேயே கண்டுகளிக்க ஆசையா? அப்படியானால், ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் விஜயம் செய்வதில் மகிழ்வீர்கள். அது எப்படி சாத்தியம்? தென் உக்ரைனில் உள்ள அஸ்கானியா-நோவா என்ற சரணாலயத்திற்கு விஜயம் செய்தால் போதும்! ஆறு கண்டங்களிலிருந்து வந்த காட்டு மிருகங்களின் மந்தைகள் இந்தச் சமவெளியில் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் மேய்கின்றன.

இந்தச் சரணாலயத்தின் வரலாறு 1883-⁠ல் எழுதப்படத் துவங்கியது. அந்த வருடத்தில், ஜெர்மனியிலிருந்து வந்து குடியேறியிருந்த ப்ரெட்ரிக் ஃபால்ட்ஸ் ஃபைன் என்பவர் புல்வெளியாய் விரிந்துகிடந்த ஒரு வெற்றுநிலத்தை சரணாலயமாக தேர்ந்தெடுத்தார். அந்நிலத்தில் ஏற்கெனவே ஒரு மிருகக்காட்சி சாலையை சொந்தமாக வைத்து நடத்தி வந்தார்; அதில் 50 வகை பறவைகளும் பாலூட்டிகளும் இருந்தன. இந்த மிருகக்காட்சி சாலையுடன் ஒரு தாவரவியல் பூங்காவும் 1887-⁠ல் சேர்த்துக்கொள்ளப்பட்டது. தற்போது, அஸ்கானியா-நோவா சரணாலயத்தில் ஒரு தாவரவியல் பூங்கா, 27,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் புல்வெளி, ஒரு மிருகக்காட்சி சாலை ஆகியவை உள்ளன.

அந்தச் சரணாலயத்தில் நுழையும்போது தாவரவியல் பூங்காதான் முதலில் நம் கண்ணில் படுகிறது. பல வருடங்களாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வகை மரங்களை விஞ்ஞானிகள் இங்கே கொண்டுவந்துள்ளனர். சுமார் 500 ஏக்கர் பரப்பளவுடைய இந்தப் பூங்காவில் அந்த மரங்கள் அங்குமிங்குமாக காணப்படுகின்றன. இந்தச் சரணாலயம் நாட்டின் வறண்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதால், மரம், செடி, கொடிகளுக்கு நீர்ப்பாசன வசதி செய்ய ஆர்ட்டீசியன் கிணறுகளும் வாய்க்கால்களும் வெட்டப்பட்டுள்ளன. இந்த இயற்கை நிலப்பகுதியும் இதன் நீர்ப்பாசன முறையும் 1889-⁠ல் நடந்த பாரிஸ் உலக கண்காட்சியில் தங்கப் பதக்கத்தை வென்றன.

ஆறு கண்டங்களிலிருந்து வந்த மிருகங்கள்

நிழல் தரும் பூங்காவிலிருந்து வெயில் அடிக்கும் புல்வெளிக்கு நாம் பயணிக்கிறோம். வேலியிடப்பட்ட 6,000 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 50 வகை காட்டு மிருகங்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் சில மிருகங்களை முதலாவது கவனிக்கலாம்.

வேட்டையாடப்படும் விலங்குகளில் அதிக பிரபலமானதாகவும் ஆபத்தானதாகவும் இருப்பவற்றில் கேப் எருமையும் ஒன்று. தோள்மட்டம் வரை அது சுமார் 1.7 மீட்டர் உயரமாக இருப்பதால் மட்டுமல்லாமல், அதன் பெரிய கொம்பு ஒரு மீட்டர் நீளமுள்ளதாக இருப்பதாலும் அது நம் கவனத்தைச் சுண்டி இழுக்கிறது. இவற்றில் ஆண் எருமைகள் எப்போது யாரைத் தாக்கும் என்று ஊகிக்கவே முடியாது. ஆகையால் அவற்றின் அருகில் நெருங்கிச் செல்வது நல்லதல்ல.

நமது கவனத்தை ஈர்க்கும் மற்றொரு விலங்கு எலாண்ட் ஆண்டிலோப். இது தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் மறிமான். வேட்டையாடுவது இந்தச் சரணாலய பகுதியில் தடை செய்யப்பட்டிருப்பதால் இந்த மறிமான்கள் 1892-⁠ல் இங்கே கொண்டுவரப்பட்ட சமயம் முதற்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றன. பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவை பயமின்றி மேய்கின்றன. சில எலாண்ட் ஆண்டிலோப்களை வீட்டு விலங்குகள் போல பழக்கிவிடலாம், பால் பண்ணையிலுள்ள விலங்குகளைப் போலவே அவற்றிலிருந்தும் பால் கறக்கலாம். அவற்றின் பால் ஊட்டச் சத்தும் கொழுப்புச் சத்தும் நிறைந்தது. வயிற்றுப்புண்ணை ஆற்றுவது போன்ற மருத்துவ குணங்களுக்காக அது பயன்படுத்தப்படுகிறது.

ஈமு என்ற பெரிய, பறக்க முடியாத பறவை ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறது. நெருப்புக்கோழிக்கு அடுத்து மிகப் பெரிய பறவை இதுதான். ஈமுக்களில் சில 1.8 மீட்டர் உயரமும், 59 கிலோ எடையும் உள்ளவை. வேலியாக போடப்பட்டிருக்கும் வலை ஒன்று இந்தப் பறவைகளை மற்ற மிருகங்களிலிருந்து பிரித்தாலும் இவை ஓடியாடி சுற்றித்திரிய போதுமான இடம் இருக்கிறது.

ஆண் ஈமுவின் சத்தத்தைக் கேட்டு முட்டைக்குள் இருக்கும் குஞ்சுப் பறவைகள் அசைவது நம் கவனத்தை ஈர்க்கும் ஓர் அம்சம். உதாரணமாக, குஞ்சு பொரிப்பதற்கு சற்றுமுன், பதிவுசெய்யப்பட்ட ஆண் ஈமுவின் சத்தத்தை ஒலிக்கச் செய்தால், அந்தக் குஞ்சுகள் அசையும், அதனால் முட்டைகள் முன்னும் பின்னும் ஆடும். ஆனால், பெண் பறவையின் சத்தத்தையோ அவை கண்டுகொள்வதே இல்லை. ஏன்?

ஈமுக்களில் பெண் பறவை முட்டையிட்டாலும், ஆண் பறவைதான் அவற்றை அடைகாக்கிறது. குஞ்சு பொரிக்கும் வரை சுமார் 50 நாட்களுக்கு அடைகாப்பது மட்டுமின்றி அதன் பிறகும் குஞ்சுகளை கவனித்துக் கொள்கிறது. அதனால், அக்குஞ்சுகள் முட்டையில் இருக்கும் போதே தங்களை யார் கவனித்துக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கின்றன. இவை ஒன்றும் ‘லேசான’ முட்டைகள் அல்ல​—⁠ஒவ்வொன்றும் சுமார் 700 கிராம் எடையுடன், கரும்பச்சை நிறத்தில் இருக்கும் ‘கனமான’ முட்டைகள்!

இந்தச் சரணாலயத்தில் பெர்ஷிவால்ஸ்கி குதிரைகள் திரளாக உள்ளன. அவை 1899-⁠ல் மங்கோலிய புல்வெளியிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டன. வேட்டையாடப்படுவதாலும் மேய்ச்சல் நிலத் தட்டுப்பாட்டாலும் இந்தக் குதிரைகள் இயற்கை சூழலில் காணப்படாமல் 1960-களில் கிட்டத்தட்ட அழிந்து போனதாகவே கருதப்பட்டன.

தற்போது, கிட்டத்தட்ட 1,100 பெர்ஷிவால்ஸ்கி குதிரைகள் பல்வேறு மிருகக்காட்சி சாலைகளிலும் பூங்காக்களிலும் அடைபட்டு கிடக்கின்றன. அவற்றில் சுமார் நூறு குதிரைகள் அஸ்கானியா-நோவா சரணாலயத்திலும் இருக்கின்றன. இந்த மிருகங்களை திரும்பவும் காட்டுக்குள் விட விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள். இப்படி, 1992/93-⁠ல் 21 பெர்ஷிவால்ஸ்கி குதிரைகள் மங்கோலியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

சீனாவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் வந்த புள்ளிமான்கள் அந்தச் சரணாலயத்தில் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றின் பின்பக்கத்தில் புள்ளிகள் நிறைந்து காணப்படுவதால் இந்த அழகிய மான்கள் பூ மான்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. சிறிய தலையின் மேல் பெருமிதமாக காட்சியளிக்கும் மெல்லிய, கம்பீரமான கொம்புகளுடைய இந்த மான் ஓர் அழகான பிராணி.

ஓரளவுக்கு பழக்கிவிடப்பட்ட கயால்கள் எனப்படும் பெரிய இந்திய எருதுகள் அமைதியாக சமவெளியில் மேய்வதை பார்க்கலாம். இந்தியாவில் இந்த விலங்குகள் பகல் நேரத்தை காட்டில் தனியாக கழித்துவிட்டு, இரவானதும் கிராமத்திற்குத் திரும்புகின்றன. அஸ்கானியா-நோவாவில் காடு, கிராமம் என எதுவும் இல்லாத போதும், இந்த எருதுகள் அங்குள்ள புல்வெளியில் மற்ற விலங்கு கூட்டத்தோடு எவ்வித பிரச்சினையும் இன்றி மேய்கின்றன.

அமெரிக்க பைசன் அல்லது காட்டெருமை அதன் பலத்திற்கும் உருவத்திற்கும் பெயர்பெற்றிருப்பதால் நம்மைக் கவர்ந்திழுக்கிறது. 150 வருடங்களுக்கு முன்னால், இந்த ராட்சஸ எருமைகள் கோடிக்கணக்கில் வட அமெரிக்க புல்வெளியில் திரிந்தன. ஆனால் அவை அழிவின் விளிம்புக்குச் செல்லும் அளவிற்கு வேட்டையாடப்பட்டன. இதுபோன்ற அமெரிக்க பைசன் கூட்டத்தை ஐரோப்பாவில் வேறெங்கும் காண முடியாது. வெயில் காலமோ, பனி காலமோ இவை இந்தப் புல்வெளிகளில் தங்களது இயற்கை வாழிடத்தில் இருப்பதைப் போலவே உணர்கின்றன.

ரீயா (அல்லது நான்டூ) தென் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறது. இது பறக்க முடியாத ஒரு பெரிய பறவை. ஆஸ்திரேலிய ஈமுவை ஒத்த இப்பறவை 1.5 மீட்டர் உயரம் வரை வளர்கிறது; எடை 50 கிலோ இருக்கும். ஈமுவைப் போலவே ரீயாவின் விஷயத்திலும் ஆண் பறவை முட்டைகளை அடைகாக்கிறது. இவற்றின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஈமுக்கள் ஒருதார மணம் செய்பவை, ரீயாவோ பலதார மணம் செய்பவை. இப்படி, மூன்று முதல் ஐந்து பெண் ரீயாக்கள் ஒரே கூட்டில் முட்டைகளை இடும்.

சிவப்பு மான், ரோ மான் ஆகியவை ஐரோப்பாவிலிருந்து வந்திருக்கின்றன. தரிசு நில புல்வெளியில் செழிக்கும் இந்த விலங்குகள் பனியோ, வெயிலோ எதையும் தாங்கும் திறன் கொண்டவை. ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சரணாலயங்களிலும், வேட்டையாட அனுமதி பெற்ற இடங்களிலும் இவ்வகை மான்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. ஷெட்லாண்ட்டின் மட்டக்குதிரைகள் வட ஐரோப்பாவிலிருந்து 1960-⁠ல் இந்த அஸ்கானியா-நோவா சரணாலயத்திற்கு வந்தன. அப்போதிலிருந்து அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வந்திருக்கிறது.

இந்தச் சரணாலயம் வரிக்குதிரைக் கூட்டங்கள், நீல நிற நூ (பெரிய ஆப்பிரிக்க ஆண்டிலோப்), ஆசிய காட்டுக் கழுதைகள், சைகாக்கள் (யுரேசிய ஆண்டிலோப்), பல்வகை பறவைகள் ஆகியவற்றின் வீடாக திகழ்கிறது. சில விலங்குகள் வருடம் பூராவும் இந்த புல்வெளிகளிலேயே இருக்கின்றன. ஆனால் மற்றவையோ பனிக்காலத்தில் பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கே பாதுகாப்பாக தங்க வைக்கப்படுகின்றன.

இந்த இயற்கை சரணாலயத்தை பராமரித்தல்

அஸ்கானியா-நோவா இன்று உக்ரேனிய விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு கல்வி மையமாக விளங்குகிறது. இந்நிறுவன ஊழியர்கள் இந்தப் புல்வெளியை அதன் இயற்கை நிலையில் பாதுகாப்பதற்காகவும், மிருகங்கள் அந்தப் புதிய சூழ்நிலைக்கு தங்களைப் பழக்கிக்கொள்ள உதவி செய்யவும் கடினமாக உழைக்கிறார்கள். வேற்று நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட, அரிய விலங்குகளின் தரத்தை முன்னேற்றுவிக்க விஞ்ஞானிகள் அரும்பாடுபட்டு வருகிறார்கள்.

இயற்கை சரணாலயங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. வட மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா மற்றும் ஐரோப்பியா ஆகிய இடங்களிலுள்ள புல்வெளிகளில் அவற்றைக் காணலாம். அவை ஒவ்வொன்றும் அவற்றிற்கே உரிய சிறப்புகளையும், வகை வகையான செடிகளையும், விலங்குகளையும் கொண்டிருக்கின்றன. அஸ்கானியா-நோவா சரணாலயம் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மிருகங்கள் சுற்றுப்புறத்தோடு ஒன்றி சமாதானமாக வாழ முடியும் என்பதைக் காட்டுகிறது.

கடவுளுடைய ராஜ்யம் மனிதர்களிடையே மட்டுமின்றி பல்வேறு விலங்குகளிடையேயும் சமாதானத்தைக் கொண்டுவரும் என்பதாக பைபிள் முன்னறிவிக்கும் காலத்திற்காக அநேக ஜனங்கள் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.​—ஏசாயா 11:6-9; ஓசியா 2:18; அப்போஸ்தலர் 10:34, 35. (g05 2/22)

[பக்கம் 14-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

அஸ்கானியா-நோவா சரணாலயம்

[பக்கம் 15-ன் படம்]

எலாண்ட்

[பக்கம் 15-ன் படம்]

கேப் எருமை

[பக்கம் 15-ன் படம்]

ஈமு

[பக்கம் 16-ன் படம்]

புள்ளி மான்கள்

[பக்கம் 16-ன் படம்]

பெர்ஷிவால்ஸ்கி குதிரை

[பக்கம் 16-ன் படம்]

அமெரிக்க பைசன்

[பக்கம் 1617-ன் படம்]

பல விதமான பறவைகளின் வீடாக திகழ்கிறது இச்சரணாலயம்

[பக்கம் 17-ன் படம்]

ரீயா

[பக்கம் 17-ன் படம்]

ரோ மான்

[பக்கம் 17-ன் படம்]

சிவப்பு மான்

[பக்கம் 17-ன் படம்]

தாவரவியல் பூங்கா

[பக்கம் 15-ன் படங்களுக்கான நன்றி]

எலாண்டும் ஈமுவும்: Biosphere Reserve “Askaniya-Nova,” Ukraine; கோளங்கள்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

[பக்கம் 16-ன் படங்களுக்கான நன்றி]

மான்கள்: Biosphere Reserve “Askaniya-Nova,” Ukraine; கோளங்கள்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

[பக்கம் 17-ன் படங்களுக்கான நன்றி]

பறவைகள்: Biosphere Reserve “Askaniya-Nova,” Ukraine; பூக்களும் பூங்காவும்: Olha Dvorna/ Biosphere Reserve “Askaniya-Nova,” Ukraine; கோளங்கள்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.