உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
பேச்சுத் தொடர்பை டெக்னாலஜி குலைத்துவிடுகிறது
“பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் அதிகமதிகமாக நவீன டெக்னாலஜியையே சார்ந்திருப்பதால் நேருக்கு நேர் உரையாட பயப்படுகிறார்கள்” என்று த டைம்ஸ் ஆப் லண்டன் குறிப்பிடுகிறது. “மக்களுக்கு அதிக ஓய்வு கொடுப்பதற்கென்று கண்டுபிடிக்கப்பட்ட டெக்னாலஜியை” ஒரு சராசரி நபர் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் பயன்படுத்துவதாக ஒரு சர்வே காட்டுகிறது. வயதுவந்த 1,000 பேரிடம் பிரிட்டிஷ் காஸ் கம்பெனி நடத்திய அந்த சர்வேயின்படி, “பிரிட்டனில் ஒரு சராசரி நபர் ‘லேண்ட்லைன்’ டெலிபோனில் ஒரு நாளைக்கு 88 நிமிடங்களை செலவழிக்கிறார், மேலும் மொபைல் போனில் 62 நிமிடங்களும், ஈ-மெயிலில் 53 நிமிடங்களும், சிறிய செய்திகளை அனுப்பி தொடர்புகொள்வதில் 22 நிமிடங்களும் செலவழிக்கிறார்.” அதனால், நேருக்கு நேர் பேசும் திறமைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அந்த சர்வே முடிவாகச் சொன்னது. சர்வே எடுக்கப்பட்டவர்களில் அநேகர், “மற்றவர்களிடம் பேசும் நேரத்தைக் குறைப்பதற்காக அல்லது பேசுவதையே அடியோடு தவிர்ப்பதற்காக” சிறிய செய்திகளை அனுப்பும் முறையைப் பின்பற்றுவதாக ஒத்துக்கொண்டார்கள். (g05 2/8)
ஈர்ப்பு விசையையே எதிர்த்து நிற்கும் சிலந்திகள்
“சிலந்திகள் சுவர்களிலும் கூரைகளிலும் இறுகப் பிடித்துக்கொள்வதற்கான இரகசியத்தை அறிவியலாளர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” என்று த டைம்ஸ் ஆப் லண்டன் சொல்கிறது. சிலந்திக்கு எட்டு கால்கள் இருக்கின்றன. ஒவ்வொரு காலின் நுனியிலும் கொத்தாக சின்னஞ்சிறு முடிகள் உள்ளன, அந்த ஒவ்வொரு முடியின் நுனியிலும் இன்னமும் மிகச் சிறிய முடிகள் உள்ளன. அவற்றை ‘செட்யூல்கள்’ என்று அழைக்கிறார்கள். சிலந்தியின் 6,24,000 செட்யூல்களின் நுனியில் பலம்வாய்ந்த ஒட்டுவிசை இருக்கும். அதன் காரணமாக சுவர்களிலோ கூரைகளிலோ தொற்றிக் கொண்டிருக்கும்போது தன் உடலின் எடையைவிட சுமார் 170 மடங்கு அதிகமான எடையை சிலந்தி தாங்கிக்கொள்ளும். குதிக்கும் சிலந்தியை ஸ்கேனிங் மின்னணு நுண்ணோக்கியைப் பயன்படுத்தி ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் ஆராய்ந்தார்கள். “இது போன்ற ‘டெக்னிக்’குகளைப் பயன்படுத்தி ஈரத் தன்மை பாதிக்காத மிகத் திடமான ஒட்டுப் பொருட்களையும் பசைகளையும் உருவாக்க முடிய வேண்டும்” என்று இந்த கண்டுபிடிப்புகள் காட்டுவதாக த டைம்ஸ் விளக்குகிறது. “விண்வெளிக் கலங்களின் சுவர்களில் ஒட்டிக்கொள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவும் வித்தியாசமான ஓர் ஆடையையும் உருவாக்க முடியலாம்” என்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான பேராசிரியர் அன்டோன்யா கெசல் குறிப்பிட்டார். (g05 2/22)
நஷ்டத்தை விளைவிக்கும் பழக்கம்
புகைக்கும் பழக்கம் புகை பிடிக்கிறவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய முதலாளிகளுக்கும் புகை பிடிக்காதவர்களுக்கும்கூட பெரும் நஷ்டத்தை உண்டுபண்ணுகிறது என்று பின்லாந்தின் வேலை சார்ந்த உடல்நல ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர் காரீ ரேயூலா சொல்கிறார். வேலை நேரத்தில் புகை பிடிப்பதற்காக செலவிடப்படும் நேரத்தினால் மட்டுமே “அந்த நாட்டின் வருமானத்தில் வருடத்திற்கு கிட்டத்தட்ட ஒரு கோடியே 66 லட்சம் யூரோக்கள் [210 லட்சம் அமெரிக்க டாலர்கள்] நஷ்டமாகின்றன” என்று ஃபின்னிஷ் ஒலிபரப்பு கம்பெனியின் வெப்ஸைட் அறிக்கையிடுகிறது. “ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட்டுகளை அலுவலர்கள் ஊதித் தள்ளுவது, ஒரு வருடத்திற்கு 17 வேலை நாட்களில் வேலை செய்யாமல் இருப்பதற்குச் சமமாகும்” என்றும் கணக்கிடப்படுகிறது. போதாக்குறைக்கு ‘சிக் லீவு’ வேறு செலவைக் கூட்டுகிறது. ரேயூலா மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “புகை பிடிக்கும் அலுவலர்களுக்கு, விபத்துக்குள்ளாகும் ஆபத்து அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் காண்பிக்கின்றன.” மேலும், புகைக்கும் பழக்கத்தால் “காற்றோட்டத்திற்காக பவர்ஃபுல் வென்டிலேஷன் வசதிகளை செயல்படுத்த வேண்டியிருப்பதால்” மின்சார செலவும் சுத்தப்படுத்தும் செலவும் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை காட்டுகிறது. இதைவிட அதிக வேதனையான உண்மை என்னவென்றால், “வேலை நேரத்திலோ மற்ற நேரங்களிலோ புகைபிடிப்பவர்கள் மத்தியில் இருப்பதால் வரும் நோய்களால் புகைக்கும் பழக்கமே இல்லாத கிட்டத்தட்ட 250 மக்கள் பின்லாந்தில் வருடந்தோறும் சாகிறார்கள்.” (g05 2/8)
போரின் நூற்றாண்டு
“20-ம் நூற்றாண்டில்தான் இனப் படுகொலைகள் காரணமாக சரித்திரத்திலேயே இல்லாதளவு அநேகர் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்று ப்யூனஸ் அயர்ஸ் ஹெரால்ட் என்ற செய்தித்தாள் குறிப்பிடுகிறது. ஏதாவது நாட்டையோ, அரசியல் கட்சியையோ, அல்லது இனத்தையோ சார்ந்த ஒரு பிரிவை முறையாக திட்டமிட்டு பூண்டோடு அழிப்பதே படுகொலை என்பதாகும். 20-ம் நூற்றாண்டில் மட்டுமே கிட்டத்தட்ட நான்கு கோடியே பத்து லட்சம் பேர் படுகொலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று கணக்கிடப்படுகிறது. ருவாண்டா அதற்கு சமீபத்திய ஓர் உதாரணம். 1994-ல், “வெறுப்புணர்ச்சியின் தூண்டுதலால் [பெரும்பாலும்] சாதாரண மக்களாலேயே” சுமார் 8,00,000 பேர் கொல்லப்பட்டார்கள். ஒருசமயம், தொடர்ந்தாற்போல் 100 நாட்களுக்கு சுமார் 8,000 பேர் தினமும் கொல்லப்பட்டதாக அறிஞர்கள் சொல்கிறார்கள். அப்படிக் கொல்லப்பட்டவர்கள் “இரண்டாம் உலகப் போரின்போது நாசிக்கள் பயன்படுத்திய காஸ் சேம்பர்கள் மூலம் கொல்லப்பட்டவர்களைவிட ஐந்து மடங்கு வேகமாக கொல்லப்பட்டார்கள்” என்று ஹெரால்ட் குறிப்பிட்டது. (g05 2/8)
அலிகேட்டர்களின் வேட்டை
இரையின் நடமாட்டத்தை தண்ணீருக்குள்ளே கண்டறிய அலிகேட்டர்களின் மூக்கிலுள்ள அழுத்த உணர்விகள் (pressure receptors) அவற்றிற்கு உதவுகின்றன; அநேக வல்லுனர்களுக்கு புரியாப் புதிராக இருந்த இந்த விஷயத்தை மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டருக்குப் படித்து வந்த ஒரு மாணவர் கண்டுபிடித்தார். அலிகேட்டர்கள் மற்றும் முதலை குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஊரும் பிராணிகளின் தாடைக்குப் பின்னால் ஊசி முனை அளவில் மிகச் சிறிய கட்டிகள் இருக்கின்றன. அந்தக் கட்டிகள் உண்மையில் அழுத்தத்தைக் கண்டறிய உதவும் சிறிய மேடுகளாக இருக்கின்றன; இவை தண்ணீரின் மேற்பரப்பில் உருவாகும் எந்தவொரு சிறிய கலங்கலையும் கண்டுபிடிக்க இந்த உயிரினங்களுக்கு உதவுகின்றன என்று உயிரியலாளர் டேஃப்னி சோர்ஸ் கண்டுபிடித்தார். “முதலை குடும்பத்தைச் சேர்ந்த பிராணிகள் இரவில் வேட்டையாடும். தண்ணீரில் பாதியளவே மூழ்கியவாறு, தண்ணீரின் மேற்பரப்பை கலங்கச் செய்யும் இரைக்காக காத்திருக்கும். காற்றுக்கும் நீருக்கும் இடையே உள்ள இடைவெளியில் தாடையை வைத்துக்கொள்ளும்” என்று சோர்ஸ் விளக்குகிறார். “அவை பசியால் வாடும்போது தண்ணீரின் மேற்பரப்பை கலங்கச் செய்யும் எதையும் எடுத்த எடுப்பிலேயே தாக்க முற்படும்.” கவிகை மாடத்தின் வடிவத்தைப் போன்று அந்த அழுத்த உணர்விகள் இருப்பதால் அதை டோம் பிரஷர் ரிசெப்டார்ஸ் (dome pressure receptors) என்று அவர் பெயரிட்டார். சிறு நீர்த்துளி விழுவதால் ஏற்படும் அசைவைக்கூட கண்டுபிடிக்கும் அளவுக்கு கூருணர்ச்சி உடையவை அந்த உணர்விகள். (g05 2/8)
சாதனை படைத்த எய்ட்ஸ்
2003-ல், ஐம்பது லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்; “இருபது வருடங்களுக்கு முன்னால் பரவத் தொடங்கிய இந்தக் கொடூர நோய், முன்னொருபோதும் இல்லாதளவு இத்தனை பேரை தாக்கியிருக்கிறது” என்று த வால் ஸ்டிரீட் ஜர்னல் அறிக்கையிடுகிறது. “வளரும் நாடுகளில் ஹெச்ஐவி வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலகளாவிய விதத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், ஒவ்வொரு வருடமும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பல லட்சம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன.” ஐக்கிய நாட்டுச் சங்கத்தாலும் மற்ற குழுக்களாலும் ஸ்பான்சர் செய்யப்பட்ட UNAIDS என்ற ஓர் எய்ட்ஸ் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, ஒவ்வொரு வருடமும் எய்ட்ஸ் நோயால் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் சாகிறார்கள்; இந்த நோய் 1981-ல் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை 2 கோடிக்கும் அதிகமானோர் இந்நோயால் இறந்திருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி, 3.8 கோடி பேருக்கு ஹெச்ஐவி வைரஸ் தொற்றியிருக்கிறது என்று அந்த ஐநா ஏஜென்ஸி கணக்கிட்டுள்ளது. சஹாரா பாலைவனத்திற்குத் தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் 2.5 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிதான் உலகிலேயே அதிகமாக பாதிக்கப்பட்ட இடமாகும். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா அதற்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது. அங்கே 65 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கின்றனர். “உலகளவில் ஹெச்ஐவியால் புதிதாக பாதிக்கப்படுகிறவர்கள் 15 முதல் 24 வயதுடைய இளைஞர்களே” என்று அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. (g05 2/22)
தூக்கத்தைத் தொலைக்கும் இளைஞர்கள்
“தூக்கம் நேரத்தை வீணாக்கும் ஒன்றாக இன்று கருதப்படுகிறது” என ஏபிசி என்ற ஸ்பானிய செய்தித்தாள் சொல்கிறது. “சிறிய குழந்தைகளும்கூட மனோ ரீதியிலும் உடல் ரீதியிலும் வளருவதற்குத் தேவையான அளவு தூங்குவதில்லை.” பார்சிலோனாவில் உள்ள டெக்சேயுஸ் மருத்துவமனையின் தூக்கப் பிரிவின்படி (sleep unit), போதியளவு தூக்கம் இல்லாதது பிள்ளைகளை கவலையில் ஆழ்த்துகிறது, எரிச்சலடையச் செய்கிறது, படிப்பில் கவனத்தை குலைத்துவிடுகிறது, மனச்சோர்வை உண்டாக்குகிறது, (சில சமயங்களில்) வளர்ச்சியையும் தடுத்துவிடுகிறது. அநேக இளைஞர்களின் குறைவான தூக்கத்திற்கு கம்ப்யூட்டர்கள், டிவிக்கள், செல் போன்கள், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றை படுக்கைக்குப் போவதற்கு சற்று முன்பு பயன்படுத்துவதே காரணம் என வல்லுனர்கள் சொல்கிறார்கள். இந்தச் சாதனங்கள் தூங்கும் நேரத்தை திருடிவிடுவதோடு, தூங்குவதற்கேற்ற ஓய்வான மனநிலையையும் பறித்துவிடுகிறது. “புகை பிடிப்பது ஆபத்தானது என்று சிறு பிள்ளைகளுக்கு நன்றாகவே தெரியும்; ஆனால், போதுமான தூக்கத்தின் அவசியத்தைப் பற்றி யாரும் அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை” என்று மனோதத்துவ நிபுணர் பிக்டோரியா டி லா ஃபுவென்டெ கூறுகிறார். “நாம் இப்போதே செயல்படாவிட்டால், அவர்கள் வளர்ந்த பிறகு தூக்கமின்மை நோயால் அவதிப்பட நேரலாம்” என்றும் கூறுகிறார். (g05 2/22)