Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர் . . .

என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

“சில சமயத்தில், என்னோட அப்பாம்மா மேல பயங்கர கடுப்பாகி கன்னாபின்னாவென்று கத்திவிடுவேன். அந்த ஆவேசம் அடங்கி நார்மலா ஆகுற வரைக்கும் அவங்க கிட்ட இருந்து ஒதுங்கியே இருப்பேன்.”​—⁠கேட், 13 வயது.

“தன்னம்பிக்கை இல்லாததுதான் எனக்கிருக்கும் மிகப் பெரிய பிரச்சினை. சில சமயம் உள்ளுக்குள் செத்துக் கொண்டிருப்பதைப் போல் உணருவேன்.”​—⁠ஐவன், 19 வயது.

உணர்ச்சிகள் சக்தி வாய்ந்தவை. நீங்கள் சிந்திக்கும் விதத்தையும் செயல்படும் விதத்தையும் அவை பாதிக்கின்றன. அவை நல்ல விதமாகவோ கெட்ட விதமாகவோ பாதிக்கலாம். சில சமயத்தில் உங்களை திக்குமுக்காட வைத்துவிடலாம். “நான் ஒருநாளும் என்னைப் பற்றி திருப்திப்பட்டுக் கொண்டதே இல்லை. என்னுடைய எதிர்பார்ப்புகளை என்னால் பெரும்பாலும் எட்ட முடிவதில்லை. சிலசமயம் அழு​வேன், இல்லையென்றால் என் கோபத்தையெல்லாம் மற்றவர்கள்மேல் காட்டுவேன். என்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த ரொம்ப சிரமப்படுகிறேன்” என 20-வயது ஜேக்கப் கூறுகிறான்.

முதிர்ச்சி வாய்ந்த, பொறுப்புள்ள மனிதராக இருக்க விரும்பும் ஒருவர் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், மற்றவர்களோடு தொடர்பு கொள்வதற்குமான திறமை, புத்திசாலித்தனத்தைவிட அதிக மதிப்புள்ளது என்று வல்லுனர்கள் சிலர் இப்போது நினைக்கிறார்கள். எப்படியானாலும், ஒருவர் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை பைபிள் காண்பிக்கிறது. உதாரணமாக, நீதிமொழிகள் 25:28 இவ்வாறு கூறுகிறது: “உன்னுடைய கோபத்தை உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், தாக்கப்படும் ஆபத்திலிருக்கும் மதிலற்ற பட்டணம் போல் உதவியற்றவனாக இருப்பாய்.” (டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) ஒருவருடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதை எது அதிக கடினமாக்குகிறது?

இளைஞர்களுக்கு ஒரு சவால்

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் எல்லா வயதினருக்கும் பின்னணியினருக்கும் போராட்டம் இருக்கிறது. முக்கியமாக, டீனேஜ் பருவத்தைத் தாண்டி வயதுவந்த பருவத்தை அடையும்போது அந்தப் போராட்டம் சவால் நிறைந்ததாக இருக்கலாம். மாறும் உடல்கள், மாறும் வாழ்க்கை முறைகள் (ஆங்கிலம்) என்ற நூலின் ஆசிரியர் ரூத் பெல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “சந்தோஷம், பயம் போன்ற உணர்ச்சிகளும் பைத்தியகாரத்தனமான எண்ணங்களும் அநேக டீனேஜ் பிள்ளைகளுக்கு ஒருசேர ஏற்படுகின்றன. ஒரு காரியத்தைக் குறித்து ஒரே சமயத்தில் வித்தியாசமான எண்ணங்கள் மேலிடுகின்றன. . . . அவர்கள் ஒரு சமயம் ஒரு விதமாக உணரலாம், அடுத்த நிமிஷமே அதற்கு எதிர்மாறாக உணரலாம்.”

ஓர் இளைஞராக, உங்களுக்கு அனுபவம் போதாது. (நீதிமொழிகள் 1:4) அதனால் புதுப்புது சூழ்நிலைகளையும் சவால்களையும் முதன்முறையாக சந்திக்கையில், சற்று தன்னம்பிக்கை இழப்பது, அல்லது ஒருவேளை திக்குமுக்காடிப் போவது இயற்கையே. ஆனால் உங்கள் படைப்பாளர் உங்களுடைய உணர்ச்சிகளை நன்றாக புரிந்து கொள்கிறார் என்பதே ஆறுதலான விஷயம். உங்கள் மன அமைதியைக் குலைக்கும் ‘சிந்தனைகளை’ அவர் அறிவார். (சங்கீதம் 139:23) பயனுள்ள நியமங்கள் சிலவற்றை தமது வார்த்தையில் அவர் கொடுத்துள்ளார்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழி

உங்கள் சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதே உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். சோர்வூட்டும் சிந்தனைகள், உங்கள் சக்தியை உறிஞ்சிக் கொண்டு, செயல்பட முடியாதபடி செய்துவிடலாம். (நீதிமொழிகள் 24:10) எப்போதும் நல்ல காரியங்களையே சிந்திப்பதன் மூலம் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த நீங்கள் எப்படி கற்றுக்கொள்ளலாம்?

சோர்வுண்டாக்கும் அல்லது தன்னம்பிக்கை இழக்க வைக்கும் எதிர்மறையான காரியங்களையே சிந்தித்துக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது ஒரு வழியாகும். “ஒழுக்கமுள்ள” மற்றும் “நீதியுள்ள” காரியங்களையே சிந்திக்கும்படி சொல்லும் பைபிள் ஆலோசனையைப் பின்பற்றும்போது, எதிர்மறையான எண்ணங்களுக்குப் பதிலாக நம்பிக்கையான எண்ணங்களைப் பெற முடியும். (பிலிப்பியர் 4:8) இதைச் செய்வது எளிதாக இருக்காது, இருப்பினும் முயற்சி செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

ஜாஸ்மின் என்ற இளம் பெண்ணை கவனியுங்கள். “நான் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் நினைத்து திண்டாடிப் போய்விட்டேன். வேலையும் புதுசு, பொறுப்புகளும் புதுசு. உணர்ச்சிப்பூர்வமாக ரொம்பவே சோர்ந்துவிட்டேன். என்னால் ரிலாக்ஸ் பண்ணவே முடியவில்லை” என ஒரு சமயம் அவள் புலம்பினாள். ஓர் இளைஞர் எப்போதாவது அப்படி உணருவது இயல்பானதே, அது அவரை பாதுகாப்பற்றவராகவும் நம்பிக்கையற்றவராகவும் உணரச் செய்யலாம். தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை எல்லாம் திறம்பட்ட விதத்தில் செய்யும் தகுதியைப் பெற்றிருந்த தீமோத்தேயு என்ற இளைஞரைக் குறித்து பைபிள் சொல்கிறது. அவரும்கூட தகுதியற்றவர் என்ற எண்ணத்தோடு போராடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.​—1 தீமோத்தேயு 4:11-16; 2 தீமோத்தேயு 1:6, 7.

புதிய அல்லது பழக்கமில்லாத ஒரு வேலையை எதிர்ப்படுகையில் நீங்கள் தன்னம்பிக்கையை இழக்கலாம். ‘என்னால் இதைச் செய்யவே முடியாது’ என சொல்லிக் கொள்ளலாம். இப்படி எதிர்மறையாகவே சிந்திப்பதைத் தவிர்ப்பதன் மூலம் இதுபோன்ற நம்பிக்கையற்ற உணர்வைக் கட்டுப்படுத்தலாம். சரியான விதத்தில் அந்த வேலையைச் செய்வதற்கு கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். கேள்விகளைக் கேட்டு, கொடுக்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.​—நீதிமொழிகள் 1:5, 7.

ஒரு வேலையில் திறமையை வளர்க்க வளர்க்க, தன்னம்பிக்கை படிப்படியாக கூடும். உங்கள் குறைபாடுகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் கடினமாக உழைத்து முன்னேறுவதை அவை தடைசெய்ய விடாதீர்கள். ஒரு சமயம் அப்போஸ்தலன் பவுல் குற்றம் சாட்டப்படுகையில், இவ்வாறு பதிலளித்தார்: “நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல.” (2 கொரிந்தியர் 10:10; 11:6) அதைப் போலவே, உங்களுடைய பலங்களை ஒத்துக்கொள்வதன் மூலமும், உங்கள் பலவீனங்களை சமாளிக்க கடவுளிடம் மன்றாடுவதன் மூலமும் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்தலாம். பூர்வ காலத்தில் மற்றவர்களுக்கு கடவுள் உதவியதைப் போலவே, இக்காலத்தில் உங்களுக்கும் உதவுவார்.​—யாத்திராகமம் 4:10.

நியாயமான, எட்டக்கூடிய இலக்குகளை வைப்பதும், வரம்புகளை ஒப்புக்கொள்வதும் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் மற்றொரு வழி. நியாயமின்றி மற்றவர்களோடு உங்களை ஒப்பிடுவதையும் தவிருங்கள். கலாத்தியர் 6:4-⁠ல் பைபிள் ஒரு நல்ல அறிவுரையை தருகிறது: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.”

கோபப்பட தாமதித்தல்

கோபத்தைக் கட்டுப்படுத்துவது மற்றொரு கடினமான சவாலாக இருக்கலாம். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட கேட் என்ற டீனேஜ் பெண்ணைப் போல, மற்றவர்களை புண்படுத்தும் வகையில் பேசவோ அல்லது காரியங்களைச் செய்யவோ கோபம் அநேக இளைஞர்களைத் தூண்டலாம்.

சில சமயத்தில் கோபப்படுவது இயற்கையானதே. ஆனால் முதல் கொலையாளியான காயீனை சற்று நினைத்துப் பாருங்கள். காயீனுக்கு ‘எரிச்சல் உண்டானபோது,’ அப்படிப்பட்ட கோபம் வினைமையான பாவத்தைச் செய்ய அவனை வழிநடத்தும் என கடவுள் அவனை எச்சரித்தார். “நீயோ, உன்னுடைய பங்கில், அதைக் [பாவத்தைக்] கட்டுப்படுத்தி அடக்கிக் கொள்வாயோ?” என காயீனிடம் கேட்டார். (ஆதியாகமம் 4:5-7, NW) கடவுள் கொடுத்த இந்த எச்சரிப்புக்கு காயீன் செவிசாய்க்கவில்லை; ஆனால் நீங்கள் கடவுளுடைய உதவியோடு உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி பாவம் செய்வதைத் தவிர்க்க முடியும்!

மீண்டும், உங்கள் சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதையே அது அர்த்தப்படுத்துகிறது. நீதிமொழிகள் 19:11 இவ்வாறு கூறுகிறது: “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.” ஒருவர் உங்கள் மனதைப் புண்படுத்திவிட்டால், அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பதைப் புரிந்துகொள்ள முயலுங்கள். வேண்டுமென்றே உங்களைப் புண்படுத்த நினைக்கிறாரா? உணர்ச்சிவசப்பட்டோ அல்லது தெரியாமலோ அப்படி நடந்து கொண்டாரா? மற்றவர்களுடைய குற்றங்களைப் பொறுத்துக்கொள்வது கடவுளுடைய இரக்கத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும். அதோடு, உங்கள் கோப உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

உங்கள் கோபம் நியாயமாக இருந்தால் என்ன செய்வது? வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: ‘நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்.’ (எபேசியர் 4:26) தேவைப்பட்டால், அந்த விஷயத்தைக் குறித்து அந்த நபரிடம் பேசுங்கள். (மத்தேயு 5:23, 24) அல்லது அதை அத்துடன் மறந்துவிட்டு, கோபத்தையும் விட்டுவிட்டு, உங்கள் வேலைகளைத் தொடருங்கள். இதுவே மிகச் சிறந்தது.

நீங்கள் கோபத்தை சமாளிக்கும் விதம் உங்களுடைய நண்பர்களைப் பொறுத்து மாறலாம். ஆகவே பைபிள் இவ்வாறு அறிவுறுத்துகிறது: “கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.”​—நீதிமொழிகள் 22:24, 25.

கோபத்தைக் கட்டுப்படுத்த முயலுபவர்களோடு இருப்பது உங்கள் சுயகட்டுப்பாட்டை வளர்க்க உதவும். யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் அப்படிப்பட்ட முதிர்ச்சி வாய்ந்த அநேகர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் உங்களைவிட வயதானவர்களாக, அனுபவமிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பிரச்சினைகளை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். நீங்கள் பிரச்சினைகளை எதிர்ப்படுகையில் அவர்கள் “திறம்பட்ட வழிநடத்துதலை” கொடுக்கக்கூடும். (நீதிமொழிகள் 24:6, NW) முன்பு குறிப்பிடப்பட்ட ஜேக்கப் இவ்வாறு விவரிக்கிறார்: “கடவுளுடைய வார்த்தையை எனக்கு நினைவுபடுத்தும் முதிர்ச்சி வாய்ந்த நண்பர்கள் விலைமதிக்கப்பட முடியாதவர்கள். என்னுடைய நம்பிக்கையற்ற உணர்ச்சிகள் மத்தியிலும் யெகோவா என்னை நேசிக்கிறார் என்பதை நினைக்கும்போது, என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருக்க முடிகிறது.”

நடைமுறையான மற்ற படிகள்

பிரபல உடற்பயிற்சிப் புத்தகம் ஒன்று இவ்வாறு சொல்கிறது: “நீங்கள் உடலை அசைக்கும் விதத்திற்கும் உங்கள் மனநிலைக்கும் தொடர்பு இருக்கிறது. உடலில் நடைபெறும் உயிர்-வேதியியல் இயக்கமே அதற்குக் காரணம். ஹார்மோன் மற்றும் ஆக்ஸிஜன் அளவுகள் எல்லாம் உங்களுடைய அசைவுகளைப் பொருத்து மாறுகின்றன.” உடற்பயிற்சி பிரயோஜனமுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. “உடற்பயிற்சியானது சில வழிகளில் உதவிகரமானது” என பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 4:8, ஈஸி டு ரீட் வர்ஷன்) தவறாமல் உடற்பயிற்சி செய்வதை ஏன் பழக்கமாக்கிக் கொள்ளக்கூடாது? உங்கள் உணர்ச்சிகள் பேரில் அது நல்ல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஊட்டச்சத்துமிக்க உணவும்கூட நல்ல பலன்களைக் கொண்டுவரலாம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் இசை மற்றும் பொழுதுபோக்கைக் குறித்தும் கவனமாயிருங்கள். ஹார்வர்ட் மென்டல் ஹெல்த் லெட்டரில் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வுக் கட்டுரை இவ்வாறு கூறுகிறது: “வன்முறைக் காட்சிகளைப் பார்ப்பது . . . கோபத்தையும் மூர்க்கமான எண்ணங்களையும் கிளறி விடுகிறது . . . வன்முறையான திரைப்படங்களைப் பார்த்த ஆட்கள் அதிக மூர்க்கமாய் சிந்தித்தார்கள். அதோடு, அவர்களுடைய இரத்த அழுத்தமும் அதிகரித்தது.” நீங்கள் கேட்கும் இசையையும் பார்க்கும் படத்தையும் ஞானமாக தேர்ந்தெடுங்கள்.​—சங்கீதம் 1:1-3; 1 கொரிந்தியர் 15:33.

மொத்தத்தில், உங்கள் படைப்பாளரோடு ஒரு நல்ல உறவை வளர்ப்பதே உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்வதற்கான மிகச் சிறந்த வழி. நம்முடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஜெபத்தில் கொட்டும்படி நம்மெல்லோரையும் அவர் அழைக்கிறார். ‘நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் . . . காத்துக்கொள்ளும்’ என அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார். ஆம், வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையையும் எதிர்ப்படத் தேவைப்படும் நெஞ்சுரத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள முடியும். அப்போஸ்தலன் பவுல் கூடுதலாக இவ்வாறு கூறினார்: “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.”​—பிலிப்பியர் 4:6, 7, 13; பொது மொழிபெயர்ப்பு.

இளம் மாலிகா இவ்வாறு சொல்கிறாள்: “நான் திரும்பத் திரும்ப ஜெபிக்க கற்றுக்கொண்டேன். யெகோவா அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை அறிவது அமைதியாக இருக்கவும் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் எனக்கு உதவுகிறது.” கடவுளின் உதவியோடு நீங்களும் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும். (g05 2/22)

[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]

உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஒருவழி, உங்கள் சிந்தனைகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்வதாகும்

[பக்கம் 20-ன் படம்]

வயதானவர்களோடு கூட்டுறவு கொள்வது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் விதத்தை உங்களுக்குக் கற்றுத் தரும்