Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கான்ச்—பஹாமாஸ் ஸ்பெஷாலிட்டி

கான்ச்—பஹாமாஸ் ஸ்பெஷாலிட்டி

கான்ச்​—⁠பஹாமாஸ் ஸ்பெஷாலிட்டி

பஹாமாஸிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“கான்ச் ஸ்நாக்ஸ் நாலு!” “கான்ச் ரோஸ்ட் ஒண்ணு, அதோட கான்ச் சாலட் இரண்டு!”

பசியோடிருக்கும் வாடிக்கையாளர்கள் பஹாமாஸ் உணவகங்களில் உணவு ஆர்டர் செய்யும்போது அடிக்கடி கேட்கப்படும் வார்த்தைகள் இவை! உப்பு கலந்த காற்றோடு கலந்து வரும் கான்ச் வறுவலின் வாசனை மூக்கைத் துளைத்து பசியைக் கிளறுகிறது. அது சரி, கான்ச் என்றால் என்ன?

கான்ச் என்பது ஒற்றை ஓட்டுக் கடல்வாழ் மெல்லுடலி (mollusk), அதாவது கடல் நத்தை. இந்த மெல்லுடலியில் பல்வேறு வகைகள் உள்ளன. ஹாக்-விங், மில்க், ரூஸ்டர்-டெய்ல், ஃபைட்டிங், குயின் அல்லது பிங்க் கான்ச் ஆகியவை இதில் அடங்கும். பஹாமாஸில் விசேஷ உணவாக ருசிக்கப்படுவது குயின் கான்ச் வகையாகும். இது லத்தீனில் ஸ்ட்ராம்பஸ் கிகாஸ் என்று அழைக்கப்படுகிறது. ப்ளோரிடாவில் இருந்து பிரேசில் வரை உள்ள வெதுவெதுப்பான நீரில் இது காணப்படுகிறது.

குயின் கான்ச் வகை, சுருள் வடிவ ஓட்டுடன், பக்கவாட்டில் விரிந்திருக்கும் இதழைக் கொண்டது. நன்கு முதிர்ந்த கான்ச் 20, 25 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். பொதுவாக “கான்ச்” என்று இதை உச்சரிக்கும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் “காங்க்” என்றழைப்பதை கேட்டு ஆச்சரியப்படுகிறார்கள். என்றாலும், இரண்டுமே ஓ.கே. தான்.

பிடிக்கும் முறையும் பயன்களும்

பேசல் என்பவர் இளைஞராய் இருந்தபோது, கான்ச் பிடிப்பதற்காக தன் தகப்பனோடு படகில் பயணித்ததை நினைவுகூருகிறார். “கான்ச் பிடிப்பதற்கு என்னுடைய அப்பா பயன்படுத்திய பெரிய வாளி, கூம்பு வடிவத்தில் இருந்தது; அகன்ற, கண்ணாடியாலான அடிப்பகுதியுடன் அது இருந்தது. அதோடு அவர் பயன்படுத்திய நீளமான கம்பின் நுனியில் இரண்டு கொக்கிகள் இருந்தன. ஒரு கையில் உள்ள அந்த வாளியைத் தண்ணீருக்குள் அமிழ்த்தி கான்ச் அடியில் தென்படுகிறதா என்று பார்ப்பார். மறு கையில் உள்ள கம்பால் கான்ச்சை கொக்கிபோட்டு பிடித்து படகில் போடுவார்.”

முக்குளிப்பவர்கள் தண்ணீரில் மூழ்கி கான்ச்சை கையில் பிடித்துவரும் முறைதான் தற்போது பிரபலமாக இருக்கிறது. ஆழ்கடலில் மூழ்கும் போது, அவர்கள் ஸ்நார்க்கிள் சாதனத்தை அல்லது அரசாங்க உரிமம் பெற்றிருந்தால் காற்று கம்ப்பிரஸரை பயன்படுத்துவார்கள்.

கான்ச்சின் சதைப்பகுதியை வெளியே எடுக்க, அதன் ஓட்டின் அடிப்பகுதியில் துளை போட வேண்டும். அதனுள் ஒரு கத்தியை நுழைத்து, விரிந்திருக்கும் இதழை நோக்கி அதைத் தள்ள வேண்டும்; பிறகு அதை எளிதாக வெளியே எடுத்து விடலாம். கான்ச் நான்கு முக்கிய பாகங்களைக் கொண்டிருக்கிறது: தலை, உள்ளுறுப்புகள், ‘மேன்டில்’ என்ற மூடகம், சதைப் பற்றுள்ள கால். அந்தக் காலுடன் பிரவுன் நிற கடினமான தகடு போன்ற ஓட்டின் மூடி அல்லது ஓபர்குலம் ஒட்டிக்கொண்டிருக்கும். சாப்பிடக்கூடிய பகுதியான காலைச் சுற்றி கெட்டியான தோல் உள்ளது. தோலை அகற்றிவிட்டு, சாப்பிடத் தகுதியற்ற மற்ற பகுதிகளையும் வெட்டி எடுத்துவிட்டால், சுவையான வெள்ளைநிற மாமிசம் மிஞ்சுகிறது.

கான்ச் புரோட்டீன் சத்து நிறைந்தது. அதனுடைய மருத்துவ குணங்களுக்காக அது உயர்வாகவே மதிக்கப்படுகிறது. கான்ச்சை அதிகளவில் சாப்பிட ஆரம்பித்த பின்னர், தங்களுடைய உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாக அநேகர் தெரிவிக்கிறார்கள்.

கான்ச் ஓட்டைப் பயன்படுத்தி அணிகலன்கள் செய்யும் தொழில் இன்று செழித்தோங்குகிறது. இளஞ்சிவப்பு நிற விளிம்புடன் கூடிய இதன் ஓடு அழகானதாகவும், ஓடு சேகரிப்பவர்கள் மத்தியில் அதிக பிரபலமானதாகவும் இருக்கிறது. இருந்தாலும், ஒரு ருசியான உணவாக இருப்பதுதான் கான்ச்சின் மிகப் பெரிய பயனாக இருக்கிறது. பல வருடங்களாக, சமைப்பதில் ஆர்வமுள்ளவர்கள் இதை ருசியாக சமைக்க புதுப்புது முறைகளை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சூப்பர் விருந்து

குளிர்ப்பதன முறை இங்கு புழக்கத்திற்கு வரும் முன் கான்ச்சை காய வைத்து பாதுகாத்தனர். முதலில், மர சுத்தியால் அடித்து அதை மென்மையாக்கினர். பிறகு சில நாட்களுக்கு அதை வெயிலில் தொங்கவிட்டு காய வைத்து, பதப்படுத்தினர். சமைக்கும் முன் அதை தண்ணீரில் சில மணி நேரம் ஊறவைத்து மீண்டும் மென்மையாக்கினர். இந்த முறையில் தயாராகும் கான்ச்சை இன்றும் அநேகர் விரும்பி ருசிக்கின்றனர்.

கான்ச் சுஷி என்றழைக்கப்படும் கான்ச் சாலட் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் ஒருசேர விரும்பி உண்ணும் உணவு. ஆம், கான்ச் அப்படியே பச்சையாக உண்ணப்படுகிறது. ஓட்டில் இருந்து சதை வெட்டி எடுக்கப்பட்டு, கடிப்பதற்கு ஏற்ற அளவான துண்டுகளாக வெட்டப்பட்டு, செலரி, குடை மிளகாய், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றோடு சேர்க்கப்படுகிறது. தேவையான அளவு உப்பு சேர்க்கப்பட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவற்றின் சாறு பிழிந்து விடப்படுகிறது. இப்படி பச்சையாக சாப்பிடப் பிடிக்காவிட்டால், வித்தியாசமான வேறு முறைகளிலும் நீங்கள் சமைத்து உண்ணலாம். இருப்பினும் ஒரு சின்ன குறிப்பு: கான்ச்சை சமைக்கும்போது, முதலில் ஒரு மர சுத்தியால் அடித்து அதை மென்மையாக்குங்கள். அப்படிச் செய்யாவிட்டால், கான்ச் ரொம்ப கடினமாக, சவ்வு போல இருக்கும்.

கான்ச்சை நீராவியில் வேகவைத்தோ, நீரில் வேகவைத்தோ, வெயிலில் உலர்த்தியோ, நெருப்பில் வாட்டியோ, சிறு துண்டங்களாகவோ, பர்கர்களாகவோ, அரிசி அல்லது சூப்புடன் சேர்த்து சமைத்தோ​—⁠பட்டியல் நீண்டு கொண்டே போகிறது⁠—⁠சாப்பிடலாம். கான்ச் பஜ்ஜிகளும், கான்ச் சூப்பும் பெரும்பாலும் பசியைத் தூண்டுவதற்காக பரிமாறப்படுகின்றன. பொதுவாக இதை சமைக்கும் விதங்கள் தலைமுறை தலைமுறையாக சொல்லித் தரப்படுகின்றன. இந்த அழகிய பஹாமாஸ் தீவுக்கு நீங்கள் விஜயம் செய்கையில் கான்ச்சை சுவைத்து ருசிக்காமல் வீடு திரும்பிவிடாதீர்கள். இத்தீவின் ஸ்பெஷாலிட்டி அது! (g05 2/22)

[பக்கம் 23-ன் பெட்டி/படம்]

க்ரேக்ட் கான்ச் (கீழே காட்டப்பட்டுள்ளது)

ஒரு குடும்பத் தலைவியாகவும் தாயாகவும் உள்ள சான்ட்ரா இந்த சுவைமிக்க கான்ச்சை சமைக்கும் விதத்தை விளக்குகிறார்: “முதலில் இதை முழுவதுமாக மென்மையாக்க வேண்டும். பிறகு உப்பு, மிளகு சேர்த்த மாவில் புரட்டி, அடித்து வைத்த முட்டையில் நனைத்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாக ஆகும் வரை பொரிக்க வேண்டும். பின்பு பேப்பர் டவலை விரித்து, அதில் கொட்டி, எண்ணெயை வடித்து விட்டு, எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாற வேண்டும்.”

இந்த முறையில் சமைக்கப்படும் கான்ச் பொதுவாக எக்கச்சக்கமான தக்காளி சாஸ் விடப்பட்ட ஃபிரெஞ்ச் ஃபிரையோடு, அல்லது பட்டாணியோடும் சாதத்தோடும் சேர்த்து பரிமாறப்படுகிறது. இந்த கான்ச்சை புளிப்பு சுவையுடைய டார்டர் சாஸுடன் சேர்த்தும் சாப்பிடலாம். உறைய வைத்த கான்ச் ஏற்றுமதி செய்யப்படுவதால், நீங்கள் வசிக்கும் பகுதியில்கூட கான்ச் கிடைக்கலாம். கொஞ்சம் விசாரித்துத்தான் பாருங்களேன். அப்படிக் கிடைத்தால், நீங்களும் சுவைத்து மகிழலாம்.

[பக்கம் 23-ன் படங்கள்]

கடிகாரச் சுற்றில்: குயின் கான்ச் ஓடு; கண்ணாடி அடிபாகத்தையுடைய வாளி மற்றும் கம்புடன் கான்ச்சை பிடித்தல்; கான்ச்சை வெளியே எடுத்தல்; கான்ச் சூப்; கான்ச் சாலட்; கான்ச் பஜ்ஜி; வாழைப்பழம், மரவள்ளிக் கிழங்குடன் கான்ச் ரோஸ்ட்