சலவைக்கல் குகை
சலவைக்கல் குகை
மெக்சிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
அந்தக் குகையின் தரையில் கோடிக்கணக்கான “சலவைக் கற்கள்”! “இந்த அற்புதத்தைக் காண எனக்கு ஜீவனைக் கொடுத்ததற்காக நன்றி கடவுளே!” என ஓர் அமெரிக்க குகை ஆராய்ச்சியாளர் வியந்து கூறினார். அவர் தென்கிழக்கு மெக்சிகோவில் உள்ள சலவைக்கல் குகைக்கு விஜயம் செய்திருந்தார். அது 17 மீட்டர் ஆழத்தில் 529 மீட்டர் நீளமாக இருந்தது. அதன் உள்ளே மலைக்க வைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருந்தன. அக்குகையைப் பற்றி கேள்விப்பட்டதால், அதை நேரில் பார்க்க விரும்பினோம்.
அக்குகை ஒருவருக்கு சொந்தமான பண்ணையில் இருந்ததால், அவருடைய மனைவியுடன் அறிமுகமாக எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தக் குகையில், சலவைக் கற்கள் நிறைந்துள்ள இடத்தின் வாயிலில் நுழைந்தபோது சுமார் 20 கோடி சுண்ணாம்பு உருண்டைகளை கண்டோம். அடுத்த 50 மீட்டர் தூரத்திற்கு, சுமார் 12 சென்டி மீட்டர் உயரத்திற்கு அவை தரையில் விரவிக் கிடந்தன. அந்த உருண்டைகளை இரு கைகளால் அள்ளியெடுத்து, பருப்புகள் போல் குட்டி குட்டியாக இருப்பவற்றை விரல் இடுக்கு வழியாக நழுவ விட்டுப் பார்க்கும் ஆசையை யாராலும் அடக்க முடியாது. அவற்றில் பெரியவை சின்ன ஆரஞ்சுப் பழ அளவுக்கு இருந்தன. மேலேயுள்ள சலவைக் கற்களை ஒதுக்கிவிட்டு பார்த்தால் அடியிலுள்ள சலவைக் கற்கள் சீராக தரையில் பதிந்திருப்பது தெரியும்.
இந்த சலவைக் கற்கள் அல்லது உருண்டைகள் எப்படி உருவாகின்றன? தண்ணீர் துளித் துளியாய் வேகமாக விழுந்து ஆங்காங்கே தேங்குகிறது. அவ்வாறு விழுகையில் குகையின் கூரையிலும் சுவர்களிலுமிருந்து சுண்ணாம்பு தனியாக பிரிந்து மண், எலும்புத் துண்டுகள், அல்லது ‘ஸ்ட்ரா’ போன்றவற்றில் படிந்து விடுகின்றன. இவ்வாறு படிந்து படிந்து, நாளடைவில் ஒரு சலவைக் கல் உருண்டை உருவாகிறது.
உள்ளூர்வாசிகள் பல வருடங்களாக இந்தக் குகையைப் பற்றி அறிந்திருக்கிற போதிலும், சமீபத்தில்தான் வெளியூரைச் சேர்ந்த வல்லுனர்கள் அங்கிருக்கும் திரளான சலவைக் கற்களால் கவர்ந்திழுக்கப்பட்டு அங்கே விஜயம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். தனிச்சிறப்பு மிக்க இந்தக் குகையை ஆராயவும் பாதுகாக்கவும் இப்போது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சலவைக்கல் குகை போன்ற இடங்களைப் பார்க்கும்போது சங்கீதம் 111:2-ல் (NW) சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் நம் மனத்திரையில் ஓடுகின்றன: “யெகோவாவின் செயல்கள் மகத்தானவை, அவற்றில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுபவை.” (g05 2/8)