Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சவால்களைச் சமாளிக்கும் தாய்மார்

சவால்களைச் சமாளிக்கும் தாய்மார்

சவால்களைச் சமாளிக்கும் தாய்மார்

குடும்பத்தின் பணக் கஷ்டத்தைச் சமாளிக்க வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பது இன்று தாய்மார் சந்திக்கும் ஒரு பெரிய சவால். அதோடு, பல காரணங்களின் நிமித்தமாக, ஆதரவின்றி தனியாளாக பிள்ளைகளை வளர்க்கும் கட்டாயத்திலும் சிலர் இருக்கலாம்.

மெக்சிகோவில், தனிமரமான மார்கரீடா தன் இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து வருகிறாள். “ஒழுக்க விஷயத்திலும் ஆன்மீக விஷயத்திலும் அவர்களைப் பயிற்றுவிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கிறது” என்று அவள் சொல்கிறாள். “முந்தி ஒரு நாள் என்னுடைய மூத்த பையன் பார்ட்டிக்கு போயிட்டு குடிச்சு வெறிச்ச மாதிரி வந்தான். மறுபடியும் அது போல குடிச்சிட்டு வந்தால், வீட்டுக்குள்ளே ஏத்தமாட்டேன்னு எச்சரித்தேன். அடுத்த முறை குடிச்சிட்டு வந்தப்போ, மனச கல்லாக்கிட்டு, அவனை வெளியே விட்டு கதவை அடைச்சுட்டேன், அதிலிருந்து அவன் அப்படி ஒருநாளும் வந்ததே இல்லை.”

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, மார்கரீடா பைபிளை படிக்க ஆரம்பித்தாள். பிள்ளைகளுடைய மனதில் ஒழுக்க நெறிகளைப் பதியவைக்க அது அவளுக்கு உதவியது. இப்போது அவளுடைய இரண்டு பிள்ளைகளுமே யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்களாக இருக்கிறார்கள்.

கணவன்மார்கள் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டால்

பின்தங்கிய நாடுகளில் வாழும் கணவன்மார் பலரும் பணம் சம்பாதிப்பதற்காக வேலைவாய்ப்பு அதிகமுள்ள நாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். இதனால் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு மனைவிகளின் தலையில் விழுகிறது. நேபாளத்தில் வசித்து வரும் லட்சுமி என்ற தாய் இவ்வாறு சொல்கிறாள்: “ஏழு வருஷமா என்னோட கணவர் வெளிநாட்டுல இருக்காரு. பிள்ளைங்க என்னோட பேச்சை கேக்கிறதே இல்ல; ஆனால் அவரோட பேச்சை தட்டாமல் கேப்பாங்க, அதனால அவரு இங்கேயே தங்கினா கொஞ்சம் நல்லாயிருக்கும்.”

இது போன்று கஷ்டங்கள் இருந்தாலும், லட்சுமி அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்கிறாள். அவள் குறைவாகவே படித்திருப்பதால், பிள்ளைகளின் பள்ளி படிப்பு விஷயத்தில் அவளால் உதவி செய்ய முடிவதில்லை, எனவே டியூஷனுக்கு ஏற்பாடு செய்திருக்கிறாள். ஆனாலும் பிள்ளைகளுடைய ஆன்மீக படிப்புக்கு அவளே கவனம் செலுத்துகிறாள். தன் பிள்ளைகளுடன் வாராவாரம் பைபிள் படிப்பு நடத்துகிறாள்; தினந்தோறும் ஒரு பைபிள் வசனத்தைக் கலந்தாராய்கிறாள்; தவறாமல் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறாள்.

கொஞ்சமே படித்திருக்கும் தாய்மார்

சில நாடுகளில், பெண்கள் பெரும்பாலோர் படிப்பறிவு இல்லாதிருப்பது மற்றொரு சவாலாக இருக்கிறது. மெக்சிகோவில் வசிக்கும் ஆரீலியா ஆறு பிள்ளைகளை வளர்த்து வருகிறாள். படிப்பறிவு இல்லாத தாயாக இருப்பதன் கஷ்டத்தைக் குறித்து அவள் சொல்கிறாள்: “பெண்கள் படிக்க வேண்டிய அவசியம் இல்லைனு என்னோட அம்மா அடிக்கடி சொல்வாங்க. அதனால வாசிக்கக்கூட நான் கத்துக்கல. என்னோட பிள்ளைங்க வீட்டுப் பாடங்களைச் செய்றதுக்கு என்னால உதவ முடியல. அதை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன். நான் கஷ்டப்பட்ட மாதிரி அவங்களும் கஷ்டப்படக் கூடாதுங்கறதுக்காக ரொம்ப பாடுபட்டு அவங்களை படிக்க வைச்சேன்.”

குறைவாக படித்திருந்தாலும்கூட தாய்மாரால் முக்கிய பங்கு வகிக்க முடியும். ஒரு பழமொழி சொல்கிறது: “பெண்களுக்குக் கல்வி புகட்டுங்கள், ஆண்களுக்குக் கல்வி புகட்ட அது வழிவகுக்கும்.” நேபாளத்தில் வாழ்ந்து வரும் பிஷ்னு என்பவள் மூன்று மகன்களுக்குத் தாய். அவளுக்குப் படிப்பறிவு கிடையாது, ஆனால் பைபிள் சத்தியங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசையும், அதை தன் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆவலும் அவளுக்கு இருந்ததால் எழுத-படிக்க கற்றுக்கொள்வதற்கு முழு முயற்சி எடுத்தாள். அதனால் தன் பிள்ளைகள் வீட்டுப் பாடங்களை ஒழுங்காகச் செய்கிறார்களா என்பதை அவளால் கவனிக்க முடிந்தது. அடிக்கடி அவர்களுடைய பள்ளிக்குச் சென்று அவர்களுடைய படிப்பைப் பற்றி ஆசிரியர்களிடம் பேசவும் முடிந்தது.

பிஷ்னுவின் மகன் சீலாஷ், அம்மா தங்களுக்கு ஆன்மீக மற்றும் ஒழுக்க சம்பந்தமாக கற்றுக் கொடுத்ததைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறான்: “நாங்க தப்பு செஞ்சப்பல்லாம் அம்மா எங்களை திருத்துறதுக்காக பைபிள் உதாரணங்களையே எடுத்துச் சொல்வாங்க. இப்படி அவங்க எடுத்த முயற்சி என்னை ரொம்ப கவர்ந்தது. அம்மா கையாண்ட இந்த முறைக்கு நல்ல பலன் இருந்தது, அவங்களோட ஆலோசனைய ஏத்துக்கவும் முடிந்தது.” பிஷ்னுவின் மூன்று மகன்களுமே இன்று கடவுள் பயமுள்ள இளைஞர்களாக இருக்கின்றனர். இதிலிருந்தே, மகன்களுக்கு கற்பிப்பதில் பிஷ்னு வெற்றி சிறந்ததைக் காணலாம்.

இரண்டு பிள்ளைகளை வளர்க்கும் மெக்சிகோவிலுள்ள அன்டோனியா என்ற தாய் சொல்கிறாள்: “நான் ‘பிரைமரி ஸ்கூல்’ வரைதான் படிச்சிருக்கேன். நாங்க ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தோம். அங்கிருந்து ‘ஹைஸ்கூல்’ ரொம்ப தூரம். என்னைவிட என் பிள்ளைங்க அதிகம் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால அவங்களுக்காக நிறைய நேரத்தை ஒதுக்கினேன். அவங்களுக்கு எழுத்துக்களையும் எண்களையும் சொல்லிக் கொடுத்தேன். ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே என்னுடைய மகள் அவளோட பெயரை எழுத பழகிவிட்டாள். எல்லா எழுத்துக்களையும் பழகிவிட்டாள். நர்சரியில் சேருவதற்கு முன்னாடியே என்னோட மகனும் தெளிவாக வாசிக்க ஆரம்பிச்சிட்டான்.”

ஆன்மீக ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் கல்வி புகட்டுவதற்கு அன்டோனியா என்ன செய்தாள் என்று கேட்டபோது, அவள் இவ்வாறு சொல்கிறாள்: “நான் பைபிள் கதைகளைச் சொல்லிக் கொடுத்தேன். என் மகள் பேசத் தொடங்குறதுக்கு முன்னாடியே பைபிள் கதைகளை சைகையில் செஞ்சு காட்டுவா. என்னுடைய மகன் நான்கு வயதாயிருந்தப்பவே கூட்டத்தில முதல் முறையா பைபிள் வாசிப்புப் பகுதியை வாசிச்சான்.” தாய்மார் அநேகர் குறைவாகவே படித்திருந்தாலும்கூட கற்பிப்பதில் தங்களுடைய பங்கை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறார்கள்.

தீங்கிழைக்கும் சம்பிரதாயங்களோடு போராடுதல்

மெக்சிகோவில் வாழும் சோட்சில் என்ற இனத்தவர்களிடையே, 12 அல்லது 13 வயதிலேயே தங்களுடைய மகள்களை திருமணத்திற்காக விற்கும் பழக்கம் உள்ளது. பெரும்பாலும் இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியை நாடும் வயதான ஒருவருக்கு அவர்கள் விற்கப்படுகிறார்கள். அந்தப் பெண்ணை வாங்கியவருக்கு அவள்மீது திருப்தியில்லை என்றால் அவளை திருப்பிக் கொடுத்துவிட்டு தன் பணத்தை மறுபடியும் பெற்றுக்கொள்ளலாம். பெட்ரோனா சிறு பிள்ளையாக இருந்தபோது இந்தப் பழக்கத்திற்கு ஆளாகும் நிலையில் இருந்தாள். அவளுடைய அம்மா திருமணத்திற்காக விற்கப்பட்டு, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, விவாகரத்தும் செய்யப்பட்டிருந்தாள்; இவையெல்லாம் அவள் 13 வயதாகும் முன்னமே நடந்துவிட்டது! அந்த முதல் குழந்தை இறந்து போனது. அதற்குப் பிறகும்கூட இரண்டு முறை அவள் விற்கப்பட்டாள். மொத்தத்தில் அவள் எட்டு குழந்தைகளை பெற்றெடுத்தாள்.

இது போன்ற வாழ்க்கை தனக்கு அமையக்கூடாது என்று பெட்ரோனா நினைத்தாள். அதில் எவ்வாறு வெற்றி காண முடிந்தது என்பதை அவள் விவரிக்கிறாள்: “நான் ‘பிரைமரி ஸ்கூல்’ படிப்பை முடிச்சதும், கல்யாணம் செஞ்சுக்க விரும்பல, தொடர்ந்து படிக்க ஆசைப்படறேன்னு அம்மாவிடம் சொன்னேன். அம்மா தன் கையில் எதுவும் இல்லை என்றும் அப்பாவிடம் போய் கேட்கும்படியும் சொல்லிட்டாங்க.”

“அப்பாகிட்ட பேசினப்போ அவர் என்னிடம், ‘உனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறேன்; உனக்கு ஸ்பானிஷ் மொழி பேசத் தெரியும், வாசிக்கவும் தெரியும். இதுக்கு மேல நீ என்ன படிக்கணும்? அப்படிப் படிக்க நினைச்சா, நீயே உழைச்சு ஸ்கூலுக்கு ஃபீஸ் கட்டிக்கோ’ என்று சொல்லிட்டார்.”

“நான் அவர் சொன்ன மாதிரியே செய்தேன். என்னுடைய செலவுக்காக துணிமணிகளில் எம்ப்ராய்டரி போட்டுக் கொடுக்க ஆரம்பிச்சேன்” என்று பெட்ரோனா சொல்கிறாள். இதனால் விற்கப்படுவதிலிருந்து அவள் தப்பித்துக் கொண்டாள். பெட்ரோனா வளர்ந்ததும் அவளுடைய அம்மா பைபிள் படிக்கத் தொடங்கினாள். அது தானே பெட்ரோனாவின் தங்கைகளுக்கு பைபிள் நெறிமுறைகளைக் கற்றுக் கொடுக்க அவளுடைய அம்மாவுக்கு தைரியத்தை கொடுத்தது. திருமணத்திற்காக சிறு பிள்ளைகளை விற்பதால் உண்டாகும் மோசமான விளைவுகளைப் பற்றி தன்னுடைய சொந்த அனுபவங்களை வைத்தே அம்மாவால் சொல்லிக் கொடுக்க முடிந்தது.

குடும்பத்தில் அப்பாவே ஆண் பிள்ளைகளை கண்டிக்க வேண்டும் என்ற பழக்கமும் அநேகரிடம் உள்ளது. பெட்ரோனா சொல்கிறாள்: “ஆண்களைவிட பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று சோட்சில் இனத்துப் பெண்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆண்களே ரொம்ப ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சிறு பையன்களும் அப்பா பாணியில் தங்கள் அம்மாவிடம்: ‘நான் என்ன செய்யணும்னு நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். அப்பா சொல்றவரைக்கும் நான் செய்ய மாட்டேன்’ என்று சொல்கிறார்கள். எனவே தாய்மார்களால் தங்கள் மகன்களுக்கு கற்பிக்க முடிவதில்லை. ஆனால், இப்போது என்னுடைய அம்மா பைபிளை படித்ததால், என் தம்பிமாருக்கு அவங்களால் கற்பிக்க முடிந்திருக்கிறது. தம்பிமாரும் எபேசியர் 6:1, 3-⁠ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளை மனப்பாடமாக வைத்திருக்கிறார்கள்: ‘பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்கு . . . கீழ்ப்படியுங்கள். . . . உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.’”

நைஜீரியாவில் வாழும் மேரி என்ற தாய் இவ்வாறு சொல்கிறாள்: “நான் வளர்ந்த பகுதியிலுள்ள ஜனங்களின் பழக்கவழக்கப்படி, ஒரு தாய் தனது மகன்களுக்கு கற்பிக்கவோ சிட்சிக்கவோ முடியாது. ஆனால் தீமோத்தேயுவின் பாட்டியும் தாயுமாகிய லோவிசாளையும் ஐனிக்கேயாளையும் பற்றிய பைபிள் உதாரணம், என்னுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் எந்தவித உள்ளூர் பழக்கங்களுக்கும் இடங்கொடுக்காதபடி உறுதியாய் இருக்க உதவியது.”​—2 தீமோத்தேயு 1:⁠5.

இன்று சில நாடுகளில், “பெண்கள் விருத்தசேதனம்” என்று அழைக்கப்படும் பழக்கம் சாதாரணமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பெண் பிறப்புறுப்பை அறுப்பது (Female genital mutilation [FGM]) என்று இந்தப் பழக்கத்தை இன்று சிலர் பொதுவாக அழைக்கிறார்கள். அதாவது, ஒரு பெண்ணின் பிறப்புறுப்புகளில் சிறு பகுதியையோ பெரும் பகுதியையோ அறுத்தெடுத்து விடுகிறார்கள். ஒரு பிரபல ஃபாஷன் மாடலாக இருந்தவரும் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை செயற்பாட்டு நிதி அமைப்பின் தூதுவராக இருந்தவருமான வாரிஸ் டிரீ இந்தப் பழக்கத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். ஐந்து வயதில், உள்ளூர் சோமாலிய பழக்கத்திற்கிசைவாக அவள் தன்னுடைய தாயால் FGM செய்யப்பட்டார். மத்திய கிழக்குப் பகுதியிலும் ஆப்பிரிக்காவிலும் 80 லட்சம் முதல் 1 கோடி பெண்களும் சிறுமிகளும் FGM செய்யப்படும் ஆபத்தில் இருப்பதாக ஓர் அறிக்கை சொல்கிறது. ஐக்கிய மாகாணங்களிலும்கூட 10,000 சிறுமிகள் இந்த ஆபத்தில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தப் பழக்கத்திற்குக் காரணமான நம்பிக்கைகள் என்ன? பெண்களின் பிறப்புறுப்புகள் இழிவானவை என்றும், அவர்களை அசுத்தப்படுத்துபவை என்றும், அதனால் திருமணத்திற்கு தகுதியற்றவர்களாக ஆக்கிவிடுபவை என்றும் சிலர் நினைக்கிறார்கள். மேலும், பிறப்புறுப்புகள் அறுக்கப்படுவதோ நீக்கப்படுவதோ, திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணின் கன்னித்தன்மைக்கும், திருமணத்திற்குப் பின்பு கணவனிடம் காட்டும் விசுவாசத்திற்கும் காப்புறுதியாக இருக்கிறதென்றும் கருதப்படுகிறது. ஒரு தாய் இந்தப் பழக்கத்தை கடைப்பிடிக்கத் தவறினால் கணவரின் கோபத்திற்கும் உள்ளூர் சமுதாயத்தின் கோபத்திற்கும் ஆளாவாளாம்.

வேதனையளிக்கும் இந்தப் பயங்கரமான பழக்கத்தை மதமோ மருத்துவமோ சுகாதாரமோ எதுவுமே ஆதரிப்பதில்லை என்பதை அநேக தாய்மார் உணர்ந்திருக்கிறார்கள். அநேக தாய்மார் தங்கள் மகள்களை அந்தப் பழக்கத்திற்கு ஆளாக்க தைரியமாய் மறுத்திருக்கிறார்கள் என்று வெறுப்பூட்டும் பழக்கங்களை எதிர்த்தல் என்ற நைஜீரிய டாக்குமென்ட்டரி சொல்கிறது.

உண்மையிலேயே, பல சவால்களுக்கு மத்தியிலும் உலகமுழுவதிலும் உள்ள தாய்மார் தங்கள் பிள்ளைகளுக்கு வெற்றிகரமாக பாதுகாப்பளித்து கல்வி புகட்டி வருகிறார்கள். அவர்களுடைய முயற்சிகள் பாராட்டப்படுகின்றனவா? (g05 2/22)

[பக்கம் 5-ன் பெட்டி/படம்]

“எந்தவொரு வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் நிச்சயம் இருப்பாள் என்றே அநேக அறிக்கைகள் காட்டியிருக்கின்றன. பெண்கள் ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால் அதற்குரிய பலன்களையும் உடனடியாக பார்க்க முடியும்: குடும்பத்தினருக்கு நல் ஆரோக்கியமும் சிறந்த உணவும் கிடைக்கும்; அவர்களுடைய வருமானமும், சேமிப்புகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். இது ஆரம்பத்தில் குடும்ப அளவில் பயன்தருவதாய் இருந்தாலும் பிற்பாடு சமுதாயத்திற்கும், எதிர்காலத்தில் நாட்டிற்கும் பலனை ஈட்டித்தரும்.”​—⁠ஐநா பொதுச் செயலாளர் கோபி அன்னன், மார்ச் 8, 2003.

[படத்திற்கான நன்றி]

UN/DPI photo by Milton Grant

[பக்கம் 8-ன் பெட்டி/படங்கள்]

எங்களுக்காக அநேக தியாகங்களைச் செய்தார்

பிரேசிலில் வாழும் ஜூலியானூ என்ற இளைஞர் இப்படிச் சொல்கிறார்: “நான் ஐந்து வயதாயிருந்தப்போ என்னோட அம்மா நல்ல ஒரு வேலையில் இருந்தாங்க. என்னோட தங்கச்சி பிறந்ததும், எங்களை கவனிப்பதற்காக வேலையை விட்டுவிட தீர்மானிச்சாங்க. ஆனா ஆபீசில் இருந்த ஆலோசகர்கள் அம்மாவோட மனச மாத்த முயற்சி பண்ணினாங்க. பிள்ளைங்க திருமணமாகி வீட்டைவிட்டு போன பிறகு, அவங்களுக்காக இப்ப செய்றதெல்லாம் வீணாய்ப் போய்விடுமென்றும், எந்தவொரு லாபத்தையும் தராத ஒன்றுக்காக முதலீடு செய்றதுக்குச் சமமென்றும் அவங்க சொன்னாங்க. ஆனால் அவங்க சொன்னதுல துளியும் உண்மையில்ல என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும்; அந்த முடிவை எடுப்பதன் மூலம் அம்மா காட்டிய அன்பை என்னால் எப்போதுமே மறக்க முடியாது.”

[படங்கள்]

தன் பிள்ளைகளோடு ஜூலியானூவின் தாய்; இடது: ஐந்து வயதாயிருக்கையில் ஜூலியானூ

[பக்கம் 6-ன் படங்கள்]

பிஷ்னு எழுத-படிக்க கற்றுக்கொண்டு தன் மகன்களுக்கு நல்ல கல்வி கிடைக்க உதவி செய்தாள்

[பக்கம் 7-ன் படங்கள்]

அன்டோனியாவின் சிறு பையன் கிறிஸ்தவ கூட்டத்தில் பைபிள் வாசிப்பு செய்கிறான்

[பக்கம் 7-ன் படங்கள்]

மெக்சிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் பெட்ரோனா வாலண்டியராக சேவை செய்து வருகிறாள். பின்பு யெகோவாவின் சாட்சியாக மாறிய அவளுடைய அம்மா, அவளுடைய தம்பி-தங்கைகளுக்கு கற்பிக்கிறார்

[பக்கம் 8-ன் படம்]

பெண் பிறப்புறுப்புகளை அறுக்கும் பழக்கத்தை எதிர்த்துப் பேசுவதில் பேர்பெற்ற வாரிஸ் டிரீ

[படத்திற்கான நன்றி]

Photo by Sean Gallup/ Getty Images