Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தாய்மார் எதிர்ப்படும் சவால்கள்

தாய்மார் எதிர்ப்படும் சவால்கள்

தாய்மார் எதிர்ப்படும் சவால்கள்

“குடும்பப் பொறுப்புகளே மனிதரின் முக்கிய பொறுப்புகள். . . . தாய் தனது கடமையை செய்யாவிட்டால் அடுத்த தலைமுறையே இருக்காது; அப்படியே இருந்தாலும், இல்லாததே மேல் என நினைக்கத் தோன்றுமளவுக்கு அது மோசமாக இருக்கும்.”​—⁠ஐக்கிய மாகாணங்களின் 26-⁠ம் ஜனாதிபதி, தியோடர் ரூஸ்வெல்ட்.

மனிதன் பிறப்பதற்கு ஒரு தாய் நிச்சயம் அவசியம், ஆனால் பிள்ளை பெறுவதோடு அவளது கடமை முடிந்து விடுவதில்லை, அவள் பங்கில் இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. இன்றைய உலகின் பெரும்பாலான இடங்களிலுள்ள தாய்மாரின் பங்கை குறித்து எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒவ்வொரு பிள்ளையின் ஆரோக்கியம், கல்வி, அறிவு, ஆளுமை, சுபாவம், உணர்ச்சிப்பூர்வ ஸ்திரத் தன்மை ஆகியவற்றுக்கு அவளே பெரும் பங்கு வகிக்கிறாள்.”

பிள்ளைகளுக்குக் கல்விபுகட்டுவது ஒரு தாயின் பல்வேறு பொறுப்புகளில் ஒன்று. பொதுவாக, தாயிடமிருந்தே ஒரு பிள்ளை முதல் வார்த்தைகளையும் பேச்சு நடையையும் கற்றுக்கொள்கிறது; எனவேதான் ஒருவருடைய முதல்மொழி தாய்மொழி என்று சொல்லப்படுகிறது. தகப்பனைவிட தாயே பொதுவாக பிள்ளைகளிடம் அதிக நேரம் செலவழிக்கிறாள். ஆகையால், அவளே பிள்ளைகளுக்குச் சிறந்த ஆசிரியையாகவும், கண்டித்து வளர்க்கும் முக்கிய நபராகவும் இருக்கிறாள். “பிள்ளைக்குப் பாலூட்டும்போதே கல்வி புகட்டப்படுகிறது” என்று சொல்லி தாய்மாரின் பங்கை கௌரவிக்கிறது ஒரு மெக்சிகன் பழமொழி.

தாய்மாரை நமது படைப்பாளரான யெகோவா தேவனும் கௌரவிக்கிறார். சொல்லப்போனால், “தேவனுடைய விரலினால்” கற்பலகைகளில் எழுதப்பட்ட பத்துக் கட்டளைகளில் ஒன்று பிள்ளைகளுக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறது: ‘உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.’ (யாத்திராகமம் 20:12; 31:18; உபாகமம் 9:10) அதோடு, பைபிள் நீதிமொழி ஒன்று, ‘தாயின் போதகத்தைப்’ பற்றி குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 1:8) முதல் மூன்று வருட காலத்தில் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டுவது மிகவும் முக்கியம் என இப்போது அனைவருமே ஒத்துக்கொள்கிறார்கள்; அந்த வருடங்களில் பிள்ளைகள் பொதுவாக தங்களுடைய தாயின் பராமரிப்பில் இருக்கிறார்கள்.

சில சவால்கள்

பிள்ளைகளுடைய குணநலன்கள் உருப்பெறும் முக்கியமான வருடங்களின்போது அவர்களுக்குக் கற்பிப்பதில் தாய்மார் எதிர்ப்படும் ஒரு சவால், குடும்பத்தின் பணக் கஷ்டத்தைச் சமாளிக்க வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதுதான். வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில், மூன்று வயதிற்கு கீழுள்ள பிள்ளைகளை வைத்திருக்கும் பாதிக்கும் மேலான தாய்மார் வேலை செய்து வருவதாக ஐக்கிய நாடுகள் திரட்டியிருக்கும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

சில சந்தர்ப்பங்களில், வேலைக்காக குடும்பத்தை விட்டு வேறொரு நகரத்திற்கோ நாட்டிற்கோ கணவன்மார்கள் சென்றுவிடுகிறார்கள். இதனால், தனியாளாக பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும் சுமைகளை தாய்மார் சுமக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஆர்மீனியாவின் சில பகுதிகளில், ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் வேலை தேடி வேறு நாட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். வேறு சில சந்தர்ப்பங்களில், கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை அம்போவென விட்டுச் சென்றுவிடுகிறார்கள், அல்லது இறந்து விடுகிறார்கள்; இதனால் மனைவிமார்கள் தனிமரமாய் நின்று பிள்ளைகளை வளர்க்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.

சில நாடுகளில், தாய்மார் எதிர்ப்படும் மற்றொரு சவால்: அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாய் இருப்பது. உலகிலுள்ள 87.6 கோடி படிப்பறிவில்லா மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்களே என்று ஐ.நா. பொருளாதார, சமூகநல விவகாரத் துறை கணக்கிடுகிறது. சொல்லப்போனால், ஆப்பிரிக்கா, அரபு நாடுகள், கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா ஆகிய இடங்களிலுள்ள 60 சதவீத பெண்கள் படிக்காதவர்கள் என யுனெஸ்கோ (UNESCO) கணக்கெடுப்பு காட்டுகிறது. மேலும், பெண்களுக்கு கல்வி அவசியமே இல்லை என்றும், அவர்கள் கல்வி கற்றுவிட்டால் பிள்ளைகளை வளர்க்கத் தகுதியற்றவர்களாய் ஆகிவிடுகிறார்கள் என்றும்கூட அநேக ஆண்கள் நினைக்கிறார்கள்.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் பெண்கள் பொதுவாக 15 வயதிலேயே அம்மாவாக ஆகிவிடுகிறார்கள் என்றும் எந்தவொரு ஆணும் படித்த பெண்ணை மணமுடிக்க விரும்புவதில்லை என்றும் அவுட்லுக் பத்திரிகை குறிப்பிடுகிறது. அண்டை நாடான பாகிஸ்தானில், ஆண் பிள்ளைகளுக்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது. அவர்கள் பெரியவர்களான பிறகு கைநிறைய சம்பாதித்து வயதான பெற்றோரை கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில் சிறப்பாக வளர்க்கப்படுகிறார்கள். மறுபட்சத்தில், “தங்கள் குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக, பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை; அதனால் அவர்களுடைய படிப்புக்காகவும் அவர்கள் பணம் செலவழிப்பதில்லை” என்று வளரும் நாடுகளில் பெண்கள் கல்வி என்ற ஆங்கில நூல் கூறுகிறது.

மேலும், உள்ளூர் பழக்கங்களைச் சமாளிப்பதும் மிகப் பெரிய ஒரு சவால். உதாரணமாக, சில நாடுகளில், திருமணத்திற்காக இளம் பெண்களை விலைக்கு விற்பது, பெண் பிறப்புறுப்பை அறுப்பது போன்ற பழக்கங்களுக்கு உடன்பட வேண்டும் என்றெல்லாம் ஒரு தாயிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. வேறு சில கலாச்சாரங்களில், தாய்மார் ஆண் பிள்ளைகளுக்குப் போதிப்பதும் சிட்சிப்பதும் ஏற்கப்படுவதில்லை. ஒரு தாய் இது போன்ற பழக்கங்களுக்குக் கட்டுப்பட்டு, தன் மகன்களுக்குப் போதிக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் விட்டுவிட வேண்டுமா?

இது போன்ற சவால்களை தாய்மார் சிலர் எப்படி சமாளித்திருக்கிறார்கள் என்பதை அடுத்து வரும் கட்டுரைகளில் காணலாம். தாய்மாரையும் தாய் என்ற ஸ்தானத்தையும் பற்றிய நம் போற்றுதலை இது அதிகரிக்கும். பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டிய தாயின் பாகத்தைப் பற்றி சமநிலையான கண்ணோட்டத்தைப் பெறவும் நமக்கு உதவும். (g05 2/22)

[பக்கம் 4-ன் பெட்டி/படம்]

“ஒரு பிள்ளையின் அறிவையும் ஆவலையும் தூண்டுவதற்கும், அவனது/அவளது படைப்பாற்றலை வளர்ப்பதற்கும் ஒரு தாயின் பங்கு முக்கியம்.”​⁠குழந்தைகளின் உரிமைகள் பற்றிய மண்டல உச்சிமாநாடு, புர்கினோ ஃபாஸோ, 1997.

[பக்கம் 3-ன் படங்கள்]

ஒவ்வொரு பிள்ளையின் ஆரோக்கியம், கல்வி, சுபாவம், உணர்ச்சிப்பூர்வ ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பது தாய்மாரே