Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“பயனற்ற” டிஎன்ஏ?

“பயனற்ற” டிஎன்ஏ?

“பயனற்ற” டிஎன்ஏ?

உயிரியல், மரபியல் போன்ற துறைகளை அநேக விஞ்ஞானிகள் பரிணாம கோட்பாட்டின் கண்ணோட்டத்திலேயே நோக்குகிறார்கள். இது தவறான முடிவுகளுக்கு அவர்களை அடிக்கடி வழிநடத்தியிருக்கிறது. உதாரணமாக, குடல்வால், பிட்யூட்டரி சுரப்பி, உள்நாக்கு போன்ற சில உறுப்புகள் பயனற்றவை என பூர்வ டார்வீனிய கோட்பாடுகளை ஆதரித்தோர் கூறிவந்தனர். எந்த வேலையும் இல்லாததாக தோன்றிய இவையெல்லாம் பரிணாமத்தின் போது பயனற்றுப்போன உறுப்புகளின் மிச்சப்பகுதி என கருதினர். காலப்போக்கில், இந்த உறுப்புகள் ஆற்றும் முக்கிய பணி வெளிச்சத்துக்கு வந்தபோது, பரிணாமவாதிகள் தங்களுடைய கருத்துக்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.

மரபியல் துறையில் இதே போன்ற ஒரு முன்னேற்றம் சமீபத்தில் ஏற்பட்டது. மனிதனிலும் மற்ற உயிரினங்களிலும் உள்ள 98 சதவீத டிஎன்ஏ-⁠க்கு எந்த வேலையும் இல்லை என முந்தைய ஆராய்ச்சிகள் குறிப்பிட்டன. இந்த டிஎன்ஏ “பரிணாமத்தின் போது விட்டுப்போன பயனற்ற மிச்சம்” என பரிணாம கோட்பாட்டை நம்பிய அநேகர் ஊகித்தனர். அந்த ஊகம் விரைவில் அநேகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் டார்வீனிய கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அந்த ஊகமும் தவறென நிரூபிக்கப்பட்டுள்ளது. உயிருக்கு மிக அத்தியாவசியமான சில விசேஷ வகையான ஆர்என்ஏ-வை (ரிபோநியூக்ளிக் அமிலத்தை) உருவாக்குவதன் மூலம் இந்த டிஎன்ஏ நம் உடலில் ஒரு முக்கிய பங்காற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். “பயனற்ற” டிஎன்ஏ கோட்பாட்டை முன் பின் யோசிக்காமல் ஒத்துக்கொண்டது, “உண்மைகளை அலசி ஆராய்வதற்குப் பதிலாக பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தையே கண்மூடித்தனமாக நம்புவதற்கு ஒரு நல்ல உதாரணம், அதுவும் இது 25 வருடங்களாக அவ்வாறு நம்பப்பட்டு வந்திருக்கிறது” என ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூலக்கூறு உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் ஜான் எஸ். மட்டிக் கூறினார். இந்தக் கோட்பாட்டின் தோல்வி, “மூலக்கூறு உயிரியல் துறையில் ஏற்பட்ட ஒரு பெருந்தவறாக எப்போதும் கருதப்படும்” என்றும் அவர் கூறினார்.

டிஎன்ஏ-வை ஒரு புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பாளர் உருவாக்கியிருப்பார் என்பதை ஏற்றுக்கொள்வது அதிக ஞானமாக இருக்கும் அல்லவா? இப்படிப்பட்ட நோக்குநிலையை உடைய மக்கள், புதிராக தோன்றும் கடவுளுடைய கைவேலைகள் சரியான சமயத்தில் வெளிச்சத்துக்கு வரும் என்பதை அறிந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் அவர்களை சோர்வூட்டுவதற்கு பதிலாக, வியப்பில் ஆழ்த்துகின்றன.​—நீதிமொழிகள் 1:7; பிரசங்கி 3:11. (g05 2/22)

[பக்கம் 21-ன் படங்களுக்கான நன்றி]

டிஎன்ஏ; புகைப்படம்: www.comstock.com; researcher: Agricultural Research Service, USDA