Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளுக்குத் தேவையான கவனத்தை அளித்தல்

பிள்ளைகளுக்குத் தேவையான கவனத்தை அளித்தல்

பைபிளின் கருத்து

பிள்ளைகளுக்குத் தேவையான கவனத்தை அளித்தல்

கடவுளுடைய குமாரனுக்கு பிள்ளைகளோடு செலவிட நேரம் இருந்ததா? நேரம் இல்லையென அவருடைய சீஷர்கள் சிலர் நினைத்தார்கள். ஆகவே, ஒரு சந்தர்ப்பத்தில், பிள்ளைகளை இயேசுவிடம் நெருங்க விடாமல் தடுக்கவும் முயன்றார்கள். ஆனால் இயேசு இவ்வாறு கூறினார்: “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்.” பிறகு அந்த பிள்ளைகளை அன்பாக அணைத்துக்கொண்டு அவர்களிடம் பேசினார். (மாற்கு 10:13-16) பிள்ளைகளுக்கு கவனத்தைக் கொடுக்க தாம் மனமுள்ளவராக இருந்ததை இயேசு இவ்வாறு காண்பித்தார். அவருடைய முன்மாதிரியை இன்றைக்குப் பெற்றோர்கள் எவ்வாறு பின்பற்றலாம்? பிள்ளைகளுக்கு சரியான பயிற்சி அளிப்பதன் மூலமாகவும் அவர்களுடன் நேரம் செலவிடுவதன் மூலமாகவுமே.

பொதுவாக, பொறுப்புள்ள பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் மிகச் சிறந்த நலனுக்காக எதையும் செய்ய தயாராய் இருப்பார்கள், அவர்களை மோசமாக நடத்தவும் மாட்டார்கள். பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை மதிப்புடன் நடத்துவதும் அவர்கள் மீது கரிசனை காட்டுவதும் “இயற்கை” என்றும்கூட சொல்லப்படலாம். என்றாலும், நம்முடைய நாட்களில் வாழும் அநேகருக்கு ‘சுபாவ அன்பு’ இருக்காது என பைபிள் எச்சரிக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-3) அப்படியே தங்கள் பிள்ளைகள் மீது அன்பும் அக்கறையும் காட்டும் பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளை வளர்ப்பது சம்பந்தமாக கற்றுக்கொள்ள எப்போதுமே நிறைய விஷயம் இருக்கிறது. பிள்ளைகளை எப்போதும் மிகச் சிறந்த விதத்தில் நடத்த விரும்பும் பெற்றோருக்கு பின்வரும் பைபிள் நியமங்கள் பயனுள்ள நினைப்பூட்டுதல்களாக இருக்கும்.

கோபப்படுத்தாமல் பயிற்சியளித்தல்

பிரபல ஆசிரியரும் மனவியல் ஆராய்ச்சியாளருமான டாக்டர் ராபர்ட் கோல்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒரு பிள்ளையின் மனதில் ஒழுக்கவுணர்வு வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது கடவுளால் கொடுக்கப்பட்டது என்றும், ஒழுக்கப் பிரகாரமான வழிநடத்துதலுக்காக பிள்ளைகள் ஏங்குகிறார்கள் என்றும் நான் நினைக்கிறேன்.” ஒழுக்க நெறிகளுக்கான இந்த பசிதாகத்தை யார் திருப்தி செய்ய வேண்டும்?

எபேசியர் 6:4-⁠ல் வேதாகமம் இவ்வாறு உற்சாகப்படுத்துகிறது: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் [“மனக் கட்டுப்பாட்டிலும்,” NW] அவர்களை வளர்ப்பீர்களாக.” கடவுளுக்கான அன்பையும் தெய்வீக நியமங்களுக்கான போற்றுதலையும் பிள்ளைகளுக்கு புகட்ட வேண்டிய கடமை குறிப்பாக தகப்பனுக்கு இருப்பதாக இந்த வசனம் சொல்வதை கவனித்தீர்களா? எபேசியர் 6:1-⁠ல், ‘உங்கள் பெற்றாருக்குக் கீழ்ப்படியுங்கள்’ என்று பிள்ளைகளுக்குச் சொன்னபோது அப்போஸ்தலன் பவுல் தகப்பனையும் தாயையும் சேர்த்து குறிப்பிட்டார். a

தகப்பன் இல்லாத பட்சத்தில், தாய் அந்த பொறுப்பை ஏற்க வேண்டும். தனிமரமான தாய்மார்கள் அநேகர் தங்களுடைய பிள்ளைகளை யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக் கட்டுப்பாட்டிலும் நல்லபடியாக வளர்த்திருக்கிறார்கள். என்றாலும், அப்படிப்பட்ட ஒரு தாய் மணம் செய்துகொண்டால், அவளுடைய கிறிஸ்தவ கணவரே தலைமையேற்க வேண்டும். பிள்ளைகளைக் கண்டித்து பயிற்றுவிக்கும்போது அவருடைய தலைமை ஸ்தானத்திற்கு தாய் மனப்பூர்வமாய் ஒத்துழைப்பு காட்ட வேண்டும்.

பிள்ளைகளைக் “கோபப்படுத்தாமல்” அவர்களை பயிற்றுவிப்பது அல்லது சிட்சிப்பது எப்படி? இதற்கென எந்தவொரு ரகசிய ‘ஃபார்முலா’வும் இல்லை; ஏனெனில் ஒவ்வொரு பிள்ளையும் வித்தியாசமாக இருக்கிறது. எப்போதும் பிள்ளைகளுக்கு அன்பும் மரியாதையும் காட்டும் விதத்தில் அவர்களுக்கு சிட்சை கொடுக்க பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளைக் கோபப்படுத்தக் கூடாது என்ற இவ்விஷயம் கொலோசெயர் 3:21-⁠ல் மறுபடியும் சொல்லப்பட்டிருப்பது ஆர்வத்துக்குரியதாக இருக்கிறது. தகப்பன்மாருக்கு அங்கே மறுபடியும் இவ்வாறு நினைப்பூட்டப்படுகிறது: “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.”

பெற்றோர் சிலர் தங்கள் பிள்ளைகளிடத்தில் கத்தி கூச்சல் போடுவார்கள். இது பிள்ளைகளைக் கோபப்படுத்தும் என்பதில் துளிகூட சந்தேகமில்லை. ஆனால் பைபிள் இவ்வாறு உற்சாகப்படுத்துகிறது: ‘சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.’ (எபேசியர் 4:31) ‘கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனாக இருக்க வேண்டும்’ என்பதாகவும் பைபிள் குறிப்பிடுகிறது.​—2 தீமோத்தேயு 2:24.

உங்கள் நேரத்தை அவர்களுக்கு கொடுங்கள்

பிள்ளைகளுக்குத் தேவையான கவனம் செலுத்துவது, உங்களுடைய விருப்பங்களையும் தனிப்பட்ட வசதிகளையும் பிள்ளைகளுடைய நலனுக்காக தியாகம் செய்வதையும் அர்த்தப்படுத்துகிறது. பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.’​—உபாகமம் 6:6, 7.

பொருளாதார கடமைகளுக்குக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அநேக பெற்றோருக்கு நாள் முழுக்க தங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிட முடிவதில்லை. இருப்பினும், பிள்ளைகளுடன் செலவிட கண்டிப்பாக நேரத்தை கண்டுபிடிக்க வேண்டுமென்று பைபிளில் உபாகம புத்தகம் வலியுறுத்துகிறது. இதற்கு நல்ல ஒழுங்கமைப்பும் தியாகமும் அவசியம். இருப்பினும், பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட கவனம் கண்டிப்பாக தேவை.

12,000 டீனேஜ் பிள்ளைகளிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவை கவனியுங்கள். “பெற்றோருடன் உள்ள பலமான உணர்ச்சிப்பூர்வ பிணைப்பு, டீனேஜ் பிள்ளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்த உத்தரவாதம் அளிக்கிறது, அபாயகரமான நடவடிக்கைகளை தடுக்கும் பலமான வேலியாகவும் இருக்கிறது” என்ற முடிவுக்கு அந்த ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். ஆம், பிள்ளைகள் தங்கள் பெற்றோருடைய கவனத்திற்காக ஏங்குகிறார்கள். ஒரு தாய் தன் பிள்ளைகளிடம் ஒருமுறை இவ்வாறு கேட்டார், “உங்களுக்கு பிடிச்ச எது வேணுமானாலும் கிடைக்கும்-னா, என்ன கேப்பீங்க?” அவருடைய நான்கு பிள்ளைகளும், “அம்மா அப்பா கூட ரொம்ப நேரம் இருக்கணும்னு கேப்போம்” என்றார்கள்.

பொறுப்பான பெற்றோராக இருக்க விரும்பினால், உங்களுடைய பிள்ளைகளின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்; ஆன்மீக கல்வியும் பெற்றோரோடு நெருங்கிய நட்பும் அந்தத் தேவைகளில் உட்படும். பிள்ளைகள் தகுதியான, மரியாதையான, நேர்மையான நபர்களாக, மற்றவர்களை தயவோடு நடத்துபவர்களாக, தங்கள் படைப்பாளருக்கு மகிமை சேர்ப்பவர்களாக வளர உதவி செய்வதையும் இது உட்படுத்துகிறது. (1 சாமுவேல் 2:26) ஆம், பிள்ளைகளைக் கண்டித்து கடவுளுடைய வழியில் பயிற்றுவிக்கும்போது, பெற்றோர் தங்களை பொறுப்புள்ளவர்களாக நிரூபிக்கிறார்கள். (g05 2/8)

[அடிக்குறிப்பு]

a கானெஃப்ஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து எடுக்கப்பட்ட கானெஃப்சின் என்ற கிரேக்க வார்த்தையை பவுல் இங்கே பயன்படுத்தினார். இதன் அர்த்தம் “பெற்றோர்” என்பதாகும். ஆனால் 4-⁠ம் வசனத்தில் பாடீரெஸ் என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தினார். இதன் அர்த்தம் “தகப்பன்மார்” என்பதாகும்.

[பக்கம் 13-ன் படம்]

கத்தி கூச்சலிடுவது பிள்ளைகளுக்கு வேதனை அளிக்கலாம்

[பக்கம் 13-ன் படம்]

உங்கள் பிள்ளைகளோடு நேரத்தை செலவிடுங்கள்