Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முயல்கள், தேரைகள்—கண்டத்தின் ஆக்கிரமிப்பாளர்கள்

முயல்கள், தேரைகள்—கண்டத்தின் ஆக்கிரமிப்பாளர்கள்

முயல்கள், தேரைகள்—கண்டத்தின் ஆக்கிரமிப்பாளர்கள்

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

சேதமடைந்த ஒரு தரிசு நிலம்தான் போர்க்களம். ஒரு காலத்தில் பச்சைப்பசேலென இருந்த நிலம் இன்று குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. களமெங்கும் எதிரிகளின் பிணங்கள் குவிந்து கிடக்கின்றன. பச்சை நிற ராணுவ உடையையோ பூட்ஸையோ இந்த வீரர்கள் அணியவில்லை, வாளோ துப்பாக்கியோ ஏந்தவுமில்லை. மாறாக, மென்மையான ரோமமே இவர்களது உடை, கூர்மையான பற்களே இவர்களது ஆயுதம். இந்த வர்ணனை ஆஸ்திரேலியாவில் அட்டூழியம் செய்யும் காட்டு முயல்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

திரும்பிய பக்கமெல்லாம் முயல்கள்

ஐரோப்பிய முயல்கள் 1859-⁠ல் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு முனையை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தன. உள்ளூர் விளையாட்டு வீரர்களின் பொழுதுபோக்கிற்காக இறக்குமதி செய்யப்பட்ட இவை வெகு விரைவில் வேட்டையாடப்பட்டன. அதற்கு காரணம் பொழுதுபோக்கு அல்ல, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தமே.

ஐரோப்பிய முயல்கள் பிரிட்டனில் குடிகொள்ள 900 ஆண்டுகள் எடுத்தன. ஆனால் 50 ஆண்டுகளிலேயே ஐரோப்பாவின் பாதி அளவுக்கும் அதிகமான ஆஸ்திரேலிய பகுதியை இவை ஆக்கிரமித்து விட்டன. வளர்ந்த பெண் முயல்கள் வருடத்துக்கு 40 குட்டிகள் வரை ஈன ஆரம்பித்ததால், ஒவ்வொரு ஆண்டும் அந்தக் கண்டத்தின் குறுக்கே 100 கிலோமீட்டர் முன்னோக்கி தாக்குதலை நடத்த ஆரம்பித்தன. பீரோ ஆஃப் ரூரல் சயின்ஸஸ் (BRS) வெளியிட்ட அறிக்கை ஒன்று இவ்வாறு கூறுகிறது: “புதிய இடங்களில் இந்தளவு வேகமாக பலுகிப் பெருகிய பாலூட்டிகள் உலகில் வேறெதுவும் இல்லை.” அதன் விளைவுகள் விபரீதமாக இருந்தன.

முயல்கள் ஆஸ்திரேலிய விலங்குகளின் தீவனத்தை உட்கொண்டு, அவற்றின் வளைகளையும் கைப்பற்றின; அங்குள்ள பல்வேறு இனங்களின் அழிவுக்கு இவை காரணமாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகின்றன. காடுகளும்கூட அழிவதற்கு இவை காரணமாக இருந்திருக்கின்றன. “இளம் மரக் கன்றுகளை தின்று விடுவதால், அம்மரங்கள் ‘வாரிசுகள்’ இல்லாமல் பட்டுப்போகின்றன” என ஓர் ஆராய்ச்சியாளர் விளக்குகிறார். சிறிய தீவு ஒன்றை நோக்கி அவை படையெடுக்கையில் விளைவுகள் நாசகரமானதாக இருக்கக்கூடும். “1903-⁠ல் லைசேன் தீவுக்கு முயல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1936-⁠க்குள் அவ்விடத்திற்குரிய மூன்று பறவை இனங்களும், 26 தாவர இனங்களில் 22-⁠ம் அழிந்து போயின. . . . 1923-⁠ல், வளர்ச்சி குன்றிய சில மரங்களை மட்டுமே கொண்ட தரிசு நிலமாக அத்தீவு மாறியது” என BRS அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஒட்டுமொத்தமாய் ஒழித்துக்கட்ட உபாயங்கள்

ஆஸ்திரேலியாவில் முயல்கள் துப்பாக்கியால் சுடப்பட்டன, கண்ணி வைத்து பிடிக்கப்பட்டன, விஷம் வைத்துக் கொல்லப்பட்டன. அவற்றின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த மேற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தின் குறுக்கே, 1,830 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரசித்திபெற்ற முயல் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. a ஆனால், எவ்வித வேலிகளும் இந்தப் படையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

மிக்ஸோமெட்டோசிஸ் வைரஸ் என்னும் உயிரியல் ஆயுதத்தை பயன்படுத்தி 1950-⁠ல் எதிர்த்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. 60 கோடி என்ற பிரம்மாண்ட எண்ணிக்கையை எட்டியிருந்த முயல்களை இந்த வைரஸ் மளமளவென்று குறைத்தது. கொசுக்கள் மற்றும் தெள்ளுப்பூச்சிகளால் கடத்தப்பட்ட இந்த வைரஸ் முயல்களை மட்டுமே பாதித்தது. இரண்டே ஆண்டுகளில் 50 கோடி முயல்களை அது அழித்தது. இருப்பினும், முயல்கள் இந்த வியாதிக்கு எதிர்ப்புச் சக்தியை வேகமாக வளர்த்துக் கொண்டன; உயிர்பிழைத்த முயல்கள் இன்னும் அதிகமாக இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்தன. இப்படியாக 1990-களில் அவற்றின் எண்ணிக்கை 30 கோடியை எட்டியது. மற்றொரு எதிர்த்தாக்குதல் முறை மிகவும் அவசியமாக தேவைப்பட்டது.

கெட்ட செய்தி​—⁠நல்ல செய்தி

1995-⁠ல், முயல் இரத்தப்பெருக்கு நோய் என்னும் இரண்டாவது உயிரியல் ஆயுதம் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்பட்டது. 1984-⁠ல் இந்நோய் சீனாவில் முதன் முதலில் ஏற்பட்டது. 1998-⁠க்குள் அது ஐரோப்பாவுக்கு பரவி, அதன்பின் சிறிது காலத்திற்குள்ளாகவே இத்தாலியில் இருந்த மூன்று கோடி வீட்டு முயல்களை துடைத்தழித்துப் போட்டது. இந்நோய் ஐரோப்பிய முயல் வளர்ப்புத் துறையினருக்கு ஒரு கெட்ட செய்தியாக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய விவசாயிகளுக்கோ நல்ல செய்தியாக இருந்தது. ஏனென்றால் அது வெளியிடப்பட்ட முதல் இரண்டு மாதங்களிலேயே ஒரு கோடி முயல்கள் அழிந்தன. இந்த வைரஸ் முயல்களை மட்டுமே பாதிப்பது போல் தோன்றுகிறது. இந்தத் தொற்று ஏற்பட்ட 30 முதல் 40 மணிநேரத்திற்குள்ளாகவே, வெளிப்படையான எந்த வேதனையும் இன்றி முயல்கள் இறந்து விடுகின்றன. 2003-⁠க்குள் ஆஸ்திரேலியாவின் வறண்ட பகுதிகளில் இந்த முயல்களின் எண்ணிக்கையை 85 சதவீதம் வரை இந்த வைரஸ் குறைத்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலிய தேசிய பூங்காவில் உள்ள ஆர்க்கிட் செடிகளின் தழைகளை கொறிப்பதற்கு முயல்கள் இல்லாததால் ஐந்து வருடங்களுக்குள் அவை எட்டு மடங்கு அதிகமாய் பெருகியிருக்கின்றன. அந்த மாகாணத்தின் மற்ற பகுதிகளில் “இந்த நோய் தாக்கிய இடங்களிலெல்லாம் இருந்த செடிகள் குறிப்பிடத்தக்க விதத்தில் சீக்கிரமாகவே தழைக்க ஆரம்பித்தன” என்று எக்கோஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. முயல்கள் இல்லாத காரணத்தால், பிற நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மாமிசப்பட்சிணிகளான நரிகள், காட்டுப் பூனைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சூழியலாளர்களும் விவசாயிகளும் இந்தப் புதிய ஆயுதத்தின் திறனைக் குறித்து மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள், ஏனெனில் முயல்கள் ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு ஒரு வருடத்தில் 2000 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்திக்கொண்டு இருந்தன. என்றாலும், எதையும் தாக்குப்பிடிக்கும் ஆஸ்திரேலிய முயல்களின் எண்ணிக்கையில் இந்த நோய் ஏற்படுத்தப்போகும் நீண்டகால பாதிப்புகள் இனிமேல் தான் கண்டறியப்படும்.

தேரை​—⁠அன்று ஹீரோ, இன்று வில்லன்

காட்டு முயல்களோடு போராடி வெற்றிபெற்ற விஞ்ஞானிகளால் மற்றொரு புதிய ஆக்கிரமிப்பாளரான கரும்புத் தேரையை இன்னமும் வெல்ல முடியவில்லை. முயலைப் போல இந்த வில்லன் திருட்டுத்தனமாக நாட்டுக்குள் நுழையவில்லை, ஆனால் வேண்டுமென்றே இறக்குமதி செய்யப்பட்டது. ஏன்?

20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இரு கரும்பு வண்டு இனங்கள், ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 6,400 கோடி ரூபாய் ஈட்டித்தரும் கரும்புத் தொழிற்சாலையின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தன. 1935-⁠ல், கரும்பு விவசாயிகள் தங்களை காப்பாற்ற வந்த ஒரு ஹீரோவாக கரும்புத் தேரையை கருதினர். ஏனென்றால், கைமுட்டு அளவே உள்ள நில நீர்வாழ் உயிரினமான ப்யூஃபோ மாரினஸ் அல்லது கரும்புத் தேரை, வண்டுகளை ஏராளமாக சாப்பிடுவதற்குப் பேர்பெற்றிருந்தது. சில விஞ்ஞானிகளின் ஆட்சேபங்கள் எல்லாம் சட்டை செய்யப்படாமல், தென் அமெரிக்காவில் இருந்து ஹவாய் வழியாக குயின்ஸ்லாந்தின் கரும்புத் தோட்டங்களுக்குள் இந்தத் தேரைகள் விடப்பட்டன.

இந்தக் கரும்புத் தேரைகள் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் கரும்பு வண்டுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, துரோகிகளாக மாறின. இவை முட்டையாக இருக்கும் சமயத்திலிருந்து பெரியதாக வளரும் சமயம் வரை எல்லா நிலைகளிலும் விஷத்தன்மை உள்ளவையாக இருக்கின்றன. தலைப்பிரட்டையாக இருந்து தேரையாக மாறுகையில் சில விசேஷ சுரப்பிகள் அவற்றின் தோலுக்கு அடியில் வளர்கின்றன. தேரைகள் எரிச்சலடைகையில் அந்த சுரப்பிகள் அதிக விஷத்தன்மையுள்ள பிசுபிசுப்பான திரவம் ஒன்றை சுரக்கின்றன. பல்லிகள், பாம்புகள், காட்டு நாய்கள், இவ்வளவு ஏன், தெரியாத்தனமாக அவற்றை விழுங்கிவிடும் முதலைகளைக் கூட கொல்லும் திறன் இந்தக் கரும்புத் தேரைகளுக்கு உண்டு என அறியப்பட்டிருக்கிறது. இவை அபரிமிதமாக இனவிருத்தி செய்யக்கூடியவை, விடப்பட்ட இடத்திலிருந்து 900 கிலோமீட்டர் தூரம் வரை இப்போது பரவியுள்ளன. இவற்றின் எண்ணிக்கை அதன் சொந்த நாடான வெனிசுவேலாவில் இருப்பதைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக இருக்கிறது. பைபிளில் சொல்லப்பட்டுள்ள வாதையைப் போல அவை வயல்களை ஆக்கிரமித்து, வீடுகளைத் தாக்கி, டாய்லெட்டிற்குள் பதுங்குகின்றன. வருடத்திற்கு 30 கிலோமீட்டர் தூரம் என்றளவில் முன்னேறி தற்போது வடக்கு பிரதேசத்தில் உள்ள காக்கடூ தேசிய பூங்கா வரை சென்றுவிட்டன; உலக சொத்துக்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பூங்கா இது. இந்த இடத்தை தேரைகளின் பரதீஸ் என்றே அழைக்கலாம்; இந்தத் தேரைகளின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிக்காக லட்சக்கணக்கான டாலர்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் தண்ணீராக செலவழித்தபோதிலும் இன்னும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அந்த யுத்தம் இன்னும் முடிந்தபாடில்லை, இதுவரை தேரைகள்தான் வெற்றி பெற்று வருகின்றன.

ஏன் இந்த யுத்தம்?

சூழியல் அமைப்பு குலையாத இடங்களில், உயிரினங்கள் தங்களுடைய எண்ணிக்கையை அளவோடு வைக்கும் இயற்கையான கட்டுப்பாட்டு முறைகள் சில இருக்கின்றன. தங்களுக்குரிய சூழ்நிலைகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடும்போது, சாதுவாகத் தோன்றும் விலங்குகள்கூட பெரும் சேதத்தை விளைவிக்கும் அளவிற்கு விரைவாக இனப்பெருக்கம் செய்கின்றன.

இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகள் மற்றும் தாவரங்களின் கட்டுப்பாடற்ற எண்ணிக்கை இந்தளவிற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் குடியேறிய ஐரோப்பியர்கள் எதிர்பார்க்கவில்லை. இறக்குமதி செய்யப்பட்ட அநேக இனங்கள் பயனுள்ளதாக இருந்திருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. சொல்லப்போனால், இறக்குமதி செய்யப்பட்ட தாவரங்களையும் விலங்குகளையுமே ஆஸ்திரேலியர்கள் முழுமையாக சார்ந்து இருக்கிறார்கள்; உதாரணத்திற்கு, இறக்குமதி செய்யப்பட்ட செம்மறியாடுகள், மாடுகள், கோதுமை, அரிசி, இன்னும் மற்ற அத்தியாவசியமான பொருட்கள் ஆகியவற்றை சார்ந்திருக்கின்றனர். என்றாலும், பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணமாக, இப்பூமியில் காணப்படும் உயிர்களின் சிக்கலான வலைப்பின்னலை மனிதர்கள் கையாள முயற்சிக்கையில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதற்கு முயலும் கரும்புத் தேரையும் சிறந்த உதாரணங்களாக இருக்கின்றன. (g05 2/8)

[அடிக்குறிப்பு]

[பக்கம் 26-ன் படம்]

ஹீரோ வில்லனாகிறார்​—⁠கரும்புத் தேரையின் படையெடுப்பு ஒரு தொடர்கதை

[படத்திற்கான நன்றி]

U.S. Geological Survey/photo by Hardin Waddle

[பக்கம் 26-ன் படம்]

தெற்கு ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் வளைகுடாவில் இருக்கும் வார்டங் தீவில் உள்ள நீர்நிலையைச் சுற்றி தாகத்தோடு நிற்கும் ஆக்கிரமிப்பாளர்கள்

[படத்திற்கான நன்றி]

By courtesy of the CSIRO

[பக்கம் 25-ன் படங்களுக்கான நன்றி]

முயல்கள்: Department of Agriculture, Western Australia; தேரை: David Hancock/© SkyScans