Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

உருக்குலைந்த பிள்ளை மைலினுடைய அனுபவம் என்னை ரொம்பவே பாதித்து விட்டது. (“மைலினுக்கு புதிய முகம்,” ஜூன் 8, 2004) இந்த 11 வயது சிறுமி கொடிய வியாதியோடு எப்படியெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறாள் என்பதையும், அந்தக் கஷ்டத்திலும்கூட பைபிளிலுள்ள நம்பிக்கையை மற்றவர்களிடம் எப்படிச் சொல்லி வருகிறாள் என்பதையும் படித்தது என்னை உற்சாகப்படுத்தியது.

எம். பி., இத்தாலி

மைலின் மற்றும் அவளுடைய குடும்பத்தாரின் நம்பிக்கையான மனநிலை என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. இன்றைய மீடியா ஒருவரது தோற்றத்துக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவத்தை அளித்துவருகிறது. இது நம்மை சோர்வடையச் செய்துவிடலாம். மைலினுடைய உண்மையான அழகை இப்போது என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது, அவளிடம் இதைத் தெரியப்படுத்த விரும்புகிறேன். புதிய உலகில் யெகோவா அவளுக்கு ஒரு புதிய முகத்தைக் கொடுக்கையில் அவளுடன் சேர்ந்து சந்தோஷப்படுவதற்கு எனக்கும் வாய்ப்பு கிடைக்குமென்று நம்புகிறேன். அவளுடைய விசுவாசம் என்னைப் பலப்படுத்தியிருக்கிறது.

எம். எஸ்., அமெரிக்கா

அறுவை சிகிச்சை மூலம் விரைவில் என்னுடைய ஒரு மார்பகம் நீக்கப்படவிருக்கிறது. உடல்நலக் கோளாறினால் தோற்றம் பாதிக்கப்பட்டால், சோர்ந்து விடாதிருக்க அதிக பலமும் தைரியமும் தேவை. மைலினுடைய தைரியமும் நம்பிக்கையான மனநிலையும் என்னைப் பலப்படுத்தியது. மைலினுக்கு நான் சொல்லிக் கொள்வது: எல்லாம் நல்லபடியாக நடக்க உனக்கு என் வாழ்த்துக்கள். என்னைப் பொறுத்தவரை, நீ அழகானவள்!

ஜி. ஆர்., பிரான்ஸ்

“ஹேர்லிப்” (பிளவுபட்ட மேல் உதடு) என்றழைக்கப்படும் ஒரு அங்கவீனத்தோடு நான் பிறந்தேன். பள்ளியிலிருந்த மற்ற பிள்ளைகள் என்னை விநோதமாகப் பார்ப்பார்கள். சிலர் என் மேல் எச்சில்கூட துப்புவார்கள். என்னுடைய அம்மா எனக்கு பைபிளிலிருந்து கற்பித்தவைதான் எனக்குத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்தன. என்னுடைய இந்த 31 வயதிலும் என்னுடைய தோற்றத்தைக் குறித்து வருந்தவே செய்கிறேன். அதனால் மைலினுடைய அனுபவம் என் மனதை ரொம்பவே தொட்டுவிட்டது. எப்படிப்பட்ட சவால்கள் இனி வந்தாலும் யெகோவாவின் உதவியோடு நம்மால் அவற்றைச் சமாளிக்க முடியும் என்பதை அறிந்திருக்கிறேன்.

டி. எஸ்., ஜப்பான்

அழகான தோற்றம் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் முழுமையாய்த் தராது என்பதை மைலின் எனக்குப் புரிய வைத்திருக்கிறாள். யெகோவாவை நேசித்து அவருக்குச் சேவை செய்கையில் மட்டுமே அப்படிப்பட்ட மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்கிறது. மைலினுடைய உதாரணம் எனக்கு மிகப் பெரிய தூண்டுதலாக இருக்கிறது.

எ. டி., பிலிப்பைன்ஸ் (g05 3/8)

துஷ்பிரயோகம் செய்யும் பாய்ஃபிரண்ட் “இளைஞர் கேட்கின்றனர் . . . அவன் ஏன் என்னை ரொம்ப மோசமாக நடத்துகிறான்?” (ஜூன் 8, 2004) என்ற கட்டுரைக்கு அதிக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். மோசமான ஓர் உறவில் சிக்கியிருந்தேன். என் பாய்ஃபிரண்ட், என்ன தப்பு நடந்தாலும் என் மேல்தான் பழியைப் போடுவான். வன்முறையும், தூஷணமான பேச்சும் நிறைந்த குடும்பத்தில் நான் வளர்ந்ததால் அவனுடைய நடத்தையை அப்போது நான் அவ்வளவாகப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் அவனுடன் உறவை முறித்துக் கொண்டதை நினைத்து இப்போது சந்தோஷப்படுகிறேன். ஒரு கணவனாக இருக்கத் தகுதியற்றவன் என்பதை அவன் நிரூபித்துவிட்டான்.

பெயர் குறிப்பிட விரும்பவில்லை, பெலிஸ்

இந்தக் கட்டுரை என் உணர்வுகளையே வார்த்தைகளாக வடித்தது போல இருந்தது. என்னுடைய திருமணத்திற்கு முன்பும் பின்பும், நீங்கள் விவரித்ததைப் போன்ற சூழ்நிலைகளையே எதிர்ப்பட்டேன். மனோரீதியான வன்முறை என் சுய மரியாதையைச் சுக்குநூறாக்கியது. காதல் விவகாரங்களில் ஈடுபட்டுள்ள அநேகர் தங்களுடைய உறவை கவனமாகச் சீர்தூக்கிப் பார்க்க இந்தக் கட்டுரை தூண்டுவிக்கும் என்று நம்புகிறேன். இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு, திருமணத்திற்கு முன்பே ஒருவரையொருவர் அறிந்துகொள்வது எவ்வளவு ஞானமாக இருக்கும்!

எம். எம்., ஜெர்மனி (g05 3/8)

தனிமை எனக்கு 14 வயதாகிறது. ஒரு காலக்கட்டத்தில், என் வகுப்பு மாணவர்கள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பினேன். அவர்கள் என்னுடைய நண்பர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், ஒரு கிறிஸ்தவனாக நான் வித்தியாசமாய் இருப்பதை அவர்கள் கண்டபோது, அவர்களைப் போல் நான் மாறவில்லையென்றால் என்னை ஒதுக்கி விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். இப்போதோ, உண்மையான நண்பர்கள்​—⁠இளம் நண்பர்களும் வயதான நண்பர்களும்​—⁠கிறிஸ்தவ சபையில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறேன்.

என். சி., ஸ்பெயின் (g05 3/22)