கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறாரா?
பைபிளின் கருத்து
கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறாரா?
எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர் என்றெல்லாம் கடவுள் மிகச் சரியாகவே விவரிக்கப்படுகிறார். அவருடைய மகத்துவத்தை விவரிப்பதற்காக, அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்ற இன்னொரு கருத்தையும் அநேகர் சேர்த்துக் கொள்கிறார்கள். அதாவது, கடவுள் ஒரே நேரத்தில் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
முதல் இரண்டு கருத்துகளையும் பைபிள் ஆதரிக்கிறது. (ஆதியாகமம் 17:1; எபிரெயர் 4:13; வெளிப்படுத்துதல் 11:17) கடவுள் சர்வவல்லவர்; சகலமும் அறிந்தவர், அதாவது அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது என்பதெல்லாம் உண்மையே. ஆனால், கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறாரா? அல்லது குறிப்பிட்ட ஒரு வாசஸ்தலத்தில் இருக்கிறாரா?
கடவுள் எங்கிருக்கிறார்?
பைபிளிலுள்ள அநேக வசனங்களில், ‘பரலோகங்கள்’ கடவுளுடைய ‘வாசஸ்தலமாக’ குறிப்பிடப்பட்டிருக்கின்றன. (1 இராஜாக்கள் 8:39, 43, 49; 2 நாளாகமம் 6:33, 39) என்றாலும், பைபிள் பதிவு ஒன்று யெகோவா தேவனின் மகத்துவத்தைப் பின்வரும் வார்த்தைகளில் விவரிக்கிறது: “தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே.”—2 நாளாகமம் 6:18.
“தேவன் ஆவியாயிருக்கிறார்” என்று பைபிள் கூறுகிறது. (யோவான் 4:24) ஆகவே, சடப்பொருளாலான இந்தப் பிரபஞ்சத்தைச் சார்ந்திராத ஆவியுலகில் அவர் இருக்கிறார். ‘வானங்களை’ கடவுளுடைய வாசஸ்தலமாக பைபிள் குறிப்பிடுகையில், அவர் இருக்கிற இடம் நாம் வாழ்கிற இடத்தைவிட எவ்வளவு உன்னதமானது என்பதையே சுட்டிக்காட்டுகிறது. மிக முக்கியமாக, கடவுளுடைய வாசஸ்தலம் சடப்பொருளாலான பிரபஞ்சத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமானது எனவும் அவருக்கென்று ஒரு குறிப்பிட்ட இருப்பிடம் உள்ளது எனவும் பைபிள் போதிக்கிறது.—யோபு 2:1-2.
கடவுள் ஒரு நபர்
“என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; . . . ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்” என்று இயேசு தம் சீஷர்களிடம் சொன்னபோது யெகோவாவின் இருப்பிடத்தைக் குறித்தே பேசினார். (யோவான் 14:2) இயேசு எங்கே சென்றார்? “பரலோகத்திலேதானே இப்போழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.” (எபிரெயர் 9:24) இந்தப் பதிவு யெகோவா தேவனைப் பற்றி மிக முக்கியமான இரண்டு உண்மைகளை நமக்குப் போதிக்கிறது. முதலாவது, அவருக்கென்று ஒரு சொல்லர்த்தமான இருப்பிடம் உள்ளது. இரண்டாவது, அவர் ஒரு தனிப்பட்ட நபர், எங்கும் நிறைந்திருக்கும் விவரிக்க முடியாத வெறும் ஒரு சக்தியல்ல.
மத்தேயு 6:9, தமிழ் கத்தோலிக்க பைபிள்; மத்தேயு 12:50) இந்த விளக்கம், 1,500-க்கும் அதிகமான ஆண்டுகளாகக் கடவுளுடைய ஜனங்கள் ஜெபிக்கும்படி கற்பிக்கப்பட்ட விதத்திற்கு இசைவாக இருக்கிறது. கடவுளால் ஏவப்பட்ட மிகப் பழமையான பதிவு ஒன்றில் பின்வரும் ஜெபம் காணப்படுகிறது: ‘நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்த்து, உமது ஜனங்களை . . . ஆசீர்வதியும்.’—உபாகமம் 26:15.
அதனால்தான் இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம், “வானகத்திலுள்ள எங்கள் தந்தாய்” என்று ஜெபிக்கும்படி கூறினார். பரலோகம் என பைபிள் குறிப்பிடுகிற ஆவிக்குரிய வானகங்களில் வாசம்பண்ணும் யெகோவா என்பவரிடம் ஜெபங்களை ஏறெடுக்கும்படி கூறினார். (கடவுளுடைய பரிசுத்த ஆவி—எங்கும் செல்லக்கூடியது
கடவுளுக்குக் குறிப்பிட்ட வாசஸ்தலம் இருப்பதாக பைபிள் குறிப்பிட்டாலும்கூட, அவருடைய பரிசுத்த ஆவி எங்கும் இருப்பதாக அது அடிக்கடி சொல்கிறது. “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?” என சங்கீதக்காரனாகிய தாவீது கேட்டார். (சங்கீதம் 139:7) இப்படிப்பட்ட குறிப்புகளைப் பார்த்து அநேகர் குழம்பிப்போய், கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடும். இருப்பினும், இது போன்ற வசனங்களின் சூழமைவைக் கவனிக்கையில், கடவுள் இருக்கிற குறிப்பிட்ட இடத்திலிருந்து அவருடைய செயல் நடப்பிக்கும் சக்தியான பரிசுத்த ஆவி இப்பிரபஞ்சத்திலுள்ள எந்த இடத்துக்கும் செல்ல முடியும் என்பது தெளிவாகிறது.
ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு ஆறுதலையும் ஆதரவையும் அளிப்பதற்காக தன் கையை நீட்டுவதைப் போல, யெகோவா தம் கரத்தை அல்லது பரிசுத்த ஆவியை தமது நோக்கத்தை நிறைவேற்ற ஆவிக்குரிய பிரதேசத்திலோ சடப்பொருளாலான பிரபஞ்சத்திலோ இருக்கும் எந்த இடத்திற்கும் நீட்ட முடியும். அதனால்தான் சங்கீதக்காரனால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.”—சங்கீதம் 139:9, 10.
நீங்கள் கடவுளுடைய நண்பராக முடியும்
மனிதர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் தமது இயல்பையும் தம்முடைய இருப்பிடத்தையும் பற்றி விவரிப்பதற்கு யெகோவா தேவன் மனத்தாழ்மையோடும் அன்போடும் அனுமதித்திருக்கிறார். இவ்விதத்திலும் இன்னும் பல வழிகளிலும், அவர் ‘வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படிக்கு தாழ குனிவதை’ போன்று இருக்கிறது. (சங்கீதம் 113:6, நியூ இன்டர்னேஷனல் வர்ஷன்) என்றபோதிலும், கடவுளுடைய இயல்பை மனிதர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ளவே முடியாது.
யெகோவா தேவன் மனிதர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு மிக மகத்துவமானவராகவும் மிக சிறப்பானவராகவும் மிக அற்புதமானவராகவும் இருக்கிறார். ஆகவே, அவருடைய பரலோக வாசஸ்தலத்தை ஒரு குறிப்பிட்ட இடம் என வேதவாக்கியங்கள் குறிப்பிடுகையில், அந்த ஆவிக்குரிய இடத்தை முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது மனிதர்களால் கூடாத காரியம்.—சங்கீதம் 139:6.
என்றாலும், யெகோவாவின் உண்மையான இயல்பைப் புரிந்துகொள்வதும், அவர் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் ஏதோ ஒரு விவரிக்க முடியாத சக்தி அல்ல என்பதை உணர்ந்துகொள்வதும் அதிக ஆறுதலைக் கொடுக்கிறது. அவர் ஒரு தனிப்பட்ட நபர், அவருக்கென்று தனிப்பட்ட ஓர் இருப்பிடம் இருக்கிறது; அவர் அன்பும் இரக்கமும் நிறைந்தவர். இப்படிப்பட்ட அறிவு, மிக அரிய ஒரு வாய்ப்பை எந்தவொரு மனிதனுக்கும் தருகிறது, அதாவது இப்பிரபஞ்சத்தின் சர்வவல்லமையுள்ள பேரரசருடன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நட்பைப் பெற்றுக்கொள்கிற அரிய ஒரு வாய்ப்பைத் தருகிறது.—யாக்கோபு 4:8. (g05 3/8)