Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தக்காளி பல்வகைப் பயனுள்ள ஒரு “காய்கறி”

தக்காளி பல்வகைப் பயனுள்ள ஒரு “காய்கறி”

தக்காளி பல்வகைப் பயனுள்ள ஒரு “காய்கறி”

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“தக்காளி இல்லாமல் நான் என்ன செய்வேன்!” என்கிறார் ஒரு இத்தாலிய இல்லத்தரசி. இக்கருத்தை உலகெங்குமுள்ள எண்ணிலடங்கா சமையல்காரர்களும் ஆமோதிக்கின்றனர். பார்க்கப்போனால், பல்வேறு கலாச்சாரங்களின் சமையல் குறிப்புகளில் தக்காளிக்கென்று ஒரு தனி இடமே எப்போதும் உண்டு. வீட்டுத் தோட்டம் வைத்திருப்போர் வேறெந்தச் செடியையும்விட இதை அதிகமாக வளர்க்கின்றனர். அதெல்லாம் சரி, இது காய்கறி வகையைச் சேர்ந்ததா அல்லது பழவகையைச் சேர்ந்ததா?

தாவரவியலின்படி, தக்காளி ஒரு பழமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது விதையுள்ள ஒரு பெரி (berry) பழம். இருந்தாலும், உணவு தயாரிப்பதில் இது முக்கியமாய் சேர்த்துக் கொள்ளப்படுவதால் பெரும்பாலான மக்கள் இதைக் காய்கறி வகை என்றே கருதுகின்றனர். சுவையான இந்தக் காய்க்கு ஆர்வமூட்டும் வரலாறு இருக்கிறது.

ஆர்வமூட்டும் வரலாறு

மெக்ஸிகோவில், அஸ்டெக் இனத்தவர் உணவுக்காகத் தக்காளியைப் பயிரிட்டனர். அந்நாட்டைக் கைப்பற்றின ஸ்பானிய வெற்றி வீரர்கள் 16-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதை ஸ்பெயினுக்குக் கொண்டு சென்றனர். நாவாட்டில் என்ற மொழியில் டாமாட்டில் எனப்படும் வார்த்தையைக் ‘கடன் வாங்கி’ இதை டாமாடே என்று அழைத்தனர். விரைவில், இத்தாலி, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்த ஸ்பானிய குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் புதிய சுவையை ருசிக்க ஆரம்பித்தனர்.

அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், வட ஐரோப்பாவிற்குத் தக்காளி அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் அது நச்சுத்தன்மையுள்ளதென்று கருதப்பட்டதால், தோட்டத்தில் அலங்காரச் செடியாக வளர்க்கப்பட்டது. இரவில் மலர்கிற ஒரு செடியாக, அதிக வாசனையுள்ள இலைகளையும் நச்சுத்தன்மையுள்ள தண்டுகளையும் கொண்ட ஒரு செடியாக இது இருந்தது. என்றாலும், அதன் பழத்தில் எவ்வித ஆபத்தும் இல்லையென்பது நிரூபிக்கப்பட்டது.

ஐரோப்பாவுக்கு முதன்முதலில் கொண்டுவரப்பட்ட தக்காளிகள் மஞ்சள் நிறத்தில் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இத்தாலியர்கள் அதை போமோடோரோ (தங்க ஆப்பிள்) என்றழைத்தனர். ஆங்கிலேயர் முதலில் அதை டொமாட்டே என்றும் பிற்பாடு அதை டொமாட்டோ என்றும் அழைத்தனர். ஆனால் “லவ் ஆப்பிள்” என்ற பெயரும் அதிக பிரபலமானது. ஐரோப்பாவிலிருந்து அட்லாண்டிக் வழியாகத் திரும்பவும் வட அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்ட தக்காளி, 19-⁠ம் நூற்றாண்டில் அவ்விடத்தின் முக்கிய உணவாக ஆனது.

குறிப்பிடத்தக்க ரகங்களும் பிரசித்தியும்

தக்காளியின் நிறம் என்னவென்று கேட்டால், பெரும்பாலும் “சிகப்பு” என்றே சட்டென பதில் வரும். ஆனால் அது மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, ஊதா, பிரவுன், வெள்ளை, அல்லது பச்சை நிறங்களிலும், ஏன் வரி வரியாகக்கூட இருக்கின்றன, இதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எல்லா ரகங்களும் உருண்டையாக இருப்பதில்லை. சில வகைகள் தட்டையாகவோ முட்டை வடிவிலோ அல்லது பேரிக்காய் வடிவிலோ இருக்கின்றன. அது ஒரு பட்டாணி அளவு சிறியதாகவும் இருக்கலாம் அல்லது கைமுஷ்டியின் அளவுக்குப் பெரியதாகவும் இருக்கலாம்.

பிரபலமான இந்தக் காய், வடக்கிலுள்ள ஐஸ்லாந்து முதற்கொண்டு தெற்கிலுள்ள நியுஜிலாந்து வரை பயிரிடப்படுகிறது. அமெரிக்காவும் தென் ஐரோப்பிய நாடுகளும் இதைப் பெருமளவு உற்பத்தி செய்கின்றன. குளிர்ப் பிரதேசங்கள் பசுங்கூடத் தயாரிப்பைச் (greenhouse production) சார்ந்திருக்கின்றன, வறண்ட பகுதிகளில், மண்ணுக்குப் பதிலாக ஊட்டச் சத்துள்ள நீரில் செடி பயிரிடும் ஹைட்ரோபோனிக்ஸ் (hydroponics) எனப்படும் முறையைப் பயன்படுத்தி இது பயிரிடப்படுகிறது.

தோட்டக்கலையில் பொழுதுபோக்கிற்காக ஈடுபடுபவர்கள் மத்தியில் தக்காளிக்கு எப்போதுமே தனி மவுசுதான். அதை வளர்ப்பது எளிது, சிறிய குடும்பத்துக்கு வேண்டிய தக்காளியைப் பெறுவதற்கு சில செடிகளே போதும். இடப்பற்றாக்குறை இருந்தால், முற்றத்திலோ ஜன்னலில் வைக்கப்படும் பெட்டிகளிலோ வளரும் ரகங்களைப் பயன்படுத்தலாம்.

சில யோசனைகளும் ஆரோக்கியத்திற்கான தகவல்களும்

குளிர்ந்த தட்பவெப்பம் தக்காளியின் சுவையைக் குறைத்துவிடும், ஆதலால் அதை ஃப்ரிட்ஜில் வைப்பதைத் தவிருங்கள். சீக்கிரம் பழுக்க வைக்க விரும்பினால், அவற்றைச் சூரிய ஒளி படக்கூடிய ஜன்னல் திண்டில் வைக்கலாம் அல்லது சாதாரண தட்பவெப்பத்தில் பழுத்த தக்காளியுடனோ வாழைப் பழத்துடனோ சேர்த்து ஒரு பாத்திரத்தில் சில நாட்களுக்கு வைக்கலாம் அல்லது ஒரு பிரவுன் நிற பேப்பர் பையில் வைக்கலாம்.

தக்காளி உங்கள் ஆரோக்கியத்திற்குக் கைகொடுக்கும். அதில் வைட்டமின் ஏ, சி, ஈ மட்டுமல்லாமல், பொட்டாசியம், கால்சியம் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. புற்றுநோய், இருதய நோய் போன்ற வியாதிகளால் தாக்கப்படுவதைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் (antioxidant) தக்காளியில் நிறைய உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தக்காளியில் 93 முதல் 95 சதவீதம் வரை தண்ணீரே உள்ளது. தங்கள் எடையைக் குறித்து அக்கறையுள்ளவர்கள் தக்காளியில் கலோரிகள் மிகக் குறைவு என்பதை அறிவதில் மகிழ்வார்கள்.

சுவைகள் பல விதம்

தக்காளி வாங்கும்போது, எந்த ரகத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? சாலட், சூப், சாஸ் போன்றவற்றைத் தயாரிக்க சிகப்பு தக்காளி ரொம்ப பொருத்தமாக இருக்கும். சிறியதாக இருக்கும் சிகப்பு, ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிற செர்ரி தக்காளிகளில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் அவை தித்திப்பாக இருக்கின்றன. அதனால் அவற்றைச் சமைக்காமலேயே சாப்பிடலாம். பிட்ஸா அல்லது பாஸ்டா பதார்த்தங்களைச் செய்வதற்கு, முட்டை வடிவத்திலிருக்கும் சதைப்பிடிப்பான ப்ளம் தக்காளி பொருத்தமாக இருக்கும். ஸ்டஃபிங் அல்லது பேக்கிங் செய்வதற்கு தடிமனாக இருக்கும் பெரிய பீஃப்ஸ்டேக் தக்காளி பொருத்தமானதாக இருக்கும். சில சமயத்தில் வரி வரியாக இருக்கும் பச்சை நிற தக்காளியை உணவோடு சேர்த்து சாப்பிட்டால் சுவை கூடும். சொல்லப்போனால், விதவிதமான சுவைமிக்க காய்கறிகள், முட்டை, பாஸ்டா, கறி, மீன் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிற உணவுகளுக்கு தக்காளி நிறத்தையும் கொடுக்கிறது, தனிச் சுவையையும் சேர்க்கிறது. உங்களுக்குத் தக்காளி கிடைக்கவில்லை என்றால், பதப்படுத்திய தக்காளியால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் உள்ளூர் கடைகளில் கண்டிப்பாக கிடைக்கும்.

சமையல் செய்யும் ஒவ்வொருவரும் தக்காளியை விதவிதமாக சமைக்கத் தெரிந்திருப்பர். இருந்தாலும் நீங்கள் முயற்சி செய்து பார்க்க இதோ சில ஆலோசனைகள்:

1. பசியைத் தூண்டுகிற இந்த வண்ணமிகு சாலடை சட்டென தயாரித்துப் பரிமாறுங்கள்: தக்காளி, மாட்சரெல்லா சீஸ், அவொகெடோ ஆகியவற்றை நறுக்கி ஒன்றன் மேல் ஒன்றாக வையுங்கள். ஆலிவ் எண்ணெய், மிளகு ஆகியவற்றிலான சாஸ்ஸை ஊற்றி உணவுக்குச் சுவையைக் கூட்டிடுங்கள், பிறகு இனிப்பு துளசி இலைகளால் அலங்கரியுங்கள்.

2. தக்காளித் துண்டுகள், வெள்ளரி, ஃபெட்டா சீஸ் ஆகியவற்றை கருநிற ஆலிவ் மற்றும் நறுக்கிய சிகப்பு வெங்காயத்தோடு சேர்த்து கிரேக்க சாலடை தயாரியுங்கள். இவற்றோடு உப்பு, மிளகு சேர்த்து, அதன் மீது ஆலிவ் எண்ணெயையும் எலுமிச்சை சாறையும் ஊற்றிப் பரிமாறுங்கள்.

3. நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றோடு கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்தால், சுவையான மெக்ஸிகன் சால்ஸா ரெடி.

4. பாஸ்டாவிற்காக எளிய ஆனால் ருசியான தக்காளி சாஸ் செய்யலாம். வாணலியில் ஒரு கேன் நறுக்கிய தக்காளி (அதாவது கேனில் அடைத்து வைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட தக்காளி), ஒரு சிட்டிகை அளவு சர்க்கரை (அல்லது கெட்சப்), கொஞ்சம் ஆலிவ் எண்ணெய், சிறு துண்டுகளாக நறுக்கிய பூண்டு, பேசில், பே லீஃப் அல்லது ஆரிகேனோ இலைகள் ஆகியவற்றோடு சிறிதளவு உப்பும், மிளகும் சேருங்கள். இந்தக் கலவையைக் கொதிக்க வைத்துவிட்டு, அதன்பிறகு சாஸ் கெட்டியாகும் வரை 20 நிமிடத்திற்கு குறைந்தளவு தீயில் வையுங்கள். பிறகு, வேக வைத்து வடிகட்டிய பாஸ்டா மீது அதைத் தடவி சாப்பிடலாம்.

நமக்காகப் படைக்கப்பட்ட விதவிதமான உணவு வகைகளில் பல்வகைப் பயனுள்ள இந்தத் தக்காளி ஒரு உதாரணம் மட்டுமே. (g05 3/8)