Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் ஏன் உடலை வளைத்து வேலை செய்ய வேண்டும்?

நான் ஏன் உடலை வளைத்து வேலை செய்ய வேண்டும்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

நான் ஏன் உடலை வளைத்து வேலை செய்ய வேண்டும்?

“உடலை வளைத்து நிறைய வேலை செய்யறத பத்தி நான் நினைச்சுகூட பார்த்ததில்லை. கம்ப்யூட்டரோடு பொழுதைக் கழிக்கிறதுதான் எனக்கு ரொம்ப ஜாலியா இருந்துச்சு.”​—⁠நேத்தன்.

“உடல் களைக்க வேலை செய்ற எங்களை மாதிரி ஆட்களை வேற எதுக்குமே லாயக்கில்லாதவங்க மாதிரி சில பிள்ளைங்க பார்க்கிறாங்க.”​—⁠ஸேரா.

உடல்உழைப்பு​—⁠அநேகர் அதை அலுப்புதட்டுகிற, கீழ்த்தரமான, வெறுப்பூட்டுகிற ஒன்றாகக் கருதுகிறார்கள். பொருளியல் பேராசிரியர் ஒருவர் உடல் உழைப்பைத் தேவைப்படுத்துகிற வேலைகளைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்: “அந்தஸ்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய உலகில் இந்த மாதிரி வேலைக்கெல்லாம் மதிப்பே கிடையாது.” உடல் உழைப்பு என்றாலே இளைஞர்கள் பலர் முகத்தைச் சுளிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

என்றாலும், கடின உழைப்பை பைபிள் வித்தியாசமான கோணத்தில் பார்க்கும்படி ஊக்குவிக்கிறது. சாலொமோன் ராஜா இவ்வாறு கூறினார்: “மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் [அதாவது கடின உழைப்பின்] பலனை அநுபவிப்பதைப் பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை.” (பிரசங்கி 2:24) பைபிள் காலங்களில், இஸ்ரவேல் தேசம் ஒரு விவசாய சமுதாயமாக இருந்தது. நிலத்தை உழுவது, பயிரை அறுவடை செய்வது, தானியத்தைப் போரடிப்பது ஆகியவற்றிற்கு கடுமையான உடல் உழைப்பு தேவைப்பட்டது. இருப்பினும், கடின உழைப்பால் நிறைவான வெகுமதி கிடைக்கும் என சாலொமோன் கூறினார்.

நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறினார்: “திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்.” (எபேசியர் 4:28) பவுலும்கூட உடல் உழைப்பை அறியாதவரல்ல. உயர் கல்வி கற்றவராக இருந்தபோதிலும், தன் வாழ்க்கையை நடத்த சில சமயம் கூடாரத் தொழிலில் ஈடுபட்டார்.​—அப்போஸ்தலர் 18:1-3.

உடல் உழைப்பைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் அறிந்திருக்கிறீர்களோ இல்லையோ, உடல் உழைப்பு பல வழிகளில் உங்களுக்குப் பலனளிக்கிறது.

சிறந்த வாழ்க்கைக்கான பயிற்சி

சுத்தியலை ஓங்கி அடித்தோ, புற்களை வெட்டியோ, எவ்விதத்திலாவது நீங்கள் உடலை வளைத்து வேலை செய்கையில் அது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடல் உழைப்பு ஆரோக்கியத்தை மட்டுமல்ல, வேறு பல பலன்களையும் அள்ளித் தருகிறது. பஞ்சரான டயரை சரி செய்யவோ அல்லது காரில் ஆயில் மாற்றவோ உங்களுக்குத் தெரியுமா? உடைந்துபோன ஜன்னலை மாட்டவோ அடைபட்ட குழாயைச் சரிப்படுத்தவோ உங்களால் முடியுமா? உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா? பாத்ரூமை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க உங்களால் முடியுமா? இத்திறமைகளை இளம் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு சாராருமே தெரிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் வெற்றிகரமாக உங்கள் சொந்தக் காலில் நிற்க இவையெல்லாம் ஒருநாள் உங்களுக்கு உதவும்.

இயேசு கிறிஸ்துவும்கூட பூமியில் வாழ்ந்தபோது கைத்தொழிலில் திறமையுள்ளவராக இருந்தார் என்பதை அறிவது ஆர்வமூட்டுகிறது. அவர் தச்சு வேலையை கற்றிருந்ததால் தச்சர் என அழைக்கப்பட்டார். தனது வளர்ப்புத் தந்தையான யோசேப்பிடமிருந்து தச்சு வேலையை கற்றிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. (மத்தேயு 13:55; மாற்கு 6:3) அவரைப் போலவே, நீங்களும் உங்கள் கைகளால் வேலை செய்யும்போது பயனுள்ள பல திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள்.

நற்பண்புகளை வளர்த்தல்

உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் அபிப்பிராயத்தையும் கடின உழைப்பு மாற்றிவிடக்கூடும். உடல் உழைப்பைத் தேவைப்படுத்துகிற வேலைகளைக் கற்றுக்கொள்வது “சுயமாக சார்ந்திருக்கும் உணர்வையும், தன்னம்பிக்கையையும்” அதிகப்படுத்துகிறது. அதோடு, “வேலையில் வெற்றி பெறத் தேவையான சுயக் கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் வளர்க்க உதவுகிறது” என ஐ.மா. தேசிய மனோ ஆரோக்கியம் மற்றும் கல்வி அமைப்பின் சார்பாக டாக்டர் ஃப்ரெட் ப்ராவென்ஸாநோ எழுதினார். ஜான் என்ற இளைஞர் இவ்வாறு கூறுகிறார்: “உடல் உழைப்பு உங்களுக்குப் பொறுமையைக் கற்றுத் தரும். அதோடு, பிரச்சினைகளைக் கையாளவும் கற்றுத்தரும்.”

முன்பு குறிப்பிடப்பட்ட ஸேரா இவ்வாறு விளக்குகிறாள்: “கடினமாக வேலை செய்வதற்கும் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் உடல் உழைப்பு எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. மனோ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கட்டுப்பாட்டோடிருக்க நான் கற்றுக்கொண்டேன்.” கடின உழைப்பு என்றால் சலிப்பூட்டுவதாக மட்டுமே இருக்க வேண்டுமா? நேத்தன் இவ்வாறு கூறுகிறார்: “உடல் உழைப்பை மகிழ்ந்து அனுபவிக்கக் கற்றுக்கொண்டேன். என்னுடைய திறமைகளை நான் வளர்த்துக் கொண்டபோது, என்னுடைய வேலையின் திறம் அதிகரித்ததைக் கண்டேன். இது என்னுடைய சுயமதிப்பை கூட்டியது.”

உடல் உழைப்பு சாதனை உணர்வையும் அளிக்கும். ஜேம்ஸ் என்ற இளைஞர் இவ்வாறு கூறினார்: “நான் தச்சு வேலை செய்வதை ரொம்பவே மகிழ்ந்து அனுபவிக்கிறேன். சில சமயத்தில் அது அலுப்பை ஏற்படுத்தினாலும், நான் செய்து முடித்ததைப் பார்க்கும்போது எனக்குள் சாதனை உணர்வு ஏற்படுகிறது. அது உண்மையில் அதிக திருப்தியளிக்கிறது.” ப்ரையனும்கூட இதே போன்று உணர்கிறார்: “ஆட்டோமொபைல் வண்டிகளில் வேலை செய்வதை நான் அனுபவித்து மகிழ்கிறேன். பழுதடைந்த ஒன்றைச் சரிசெய்து அதை புதுசு போல ஆக்கும் திறமை எனக்கு இருப்பதை அறிகையில் அது தன்னம்பிக்கையையும் திருப்தியையும் அளிக்கிறது.”

பரிசுத்த சேவை

கடினமாக உழைக்கும் திறன் கடவுளுடைய சேவையில் அதிகத்தைச் செய்ய கிறிஸ்தவ இளைஞர்களுக்கு உதவக்கூடும். யெகோவா தேவனுக்கு மிகப் பெரிய ஆலயத்தைக் கட்டும் பொறுப்பு சாலொமோனுக்குக் கொடுக்கப்பட்டபோது, அதைச் செய்து முடிக்க பேரளவான முயற்சியும் திறமையும் தேவை என்பதை அவர் உணர்ந்தார். “ராஜாவாகிய சாலொமோன் ஈராம் என்னும் ஒருவனைத் தீருவிலிருந்து அழைப்பித்தான். இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு கைம்பெண்ணின் மகன்; இவன் தகப்பன் தீரு நகரத்தானான கன்னான்; இவன் சகலவித வெண்கல வேலையையும் செய்யத்தக்க யுக்தியும் புத்தியும் அறிவும் உள்ளவனாயிருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடத்தில் வந்து, அவன் வேலையையெல்லாம் செய்தான்” என பைபிள் கூறுகிறது.​—1 இராஜாக்கள் 7:13, 14.

தனது திறமையை யெகோவாவின் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காகப் பயன்படுத்த ஈராமுக்கு எப்பேர்ப்பட்ட பாக்கியம் கிடைத்தது! அவருடைய அனுபவம் நீதிமொழிகள் 22:29-⁠ல் காணப்படும் பின்வரும் வார்த்தைகள் உண்மை என்பதை நிரூபிக்கிறது: “தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.”

இன்று, கட்டுமான பணியில் சுமாரான திறமை உள்ளவர்கள் அல்லது சுத்தமாக அதைப் பற்றி தெரியாத இளைஞர்களும்கூட ராஜ்ய மன்ற கட்டுமான பணியில் ஈடுபடும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வேலைகளில் ஆர்வமாக ஈடுபட்டதன் காரணமாக, சிலர் மின்சார வேலை, குழாய்களைப் பழுதுபார்க்கும் வேலை, கட்டுமான வேலை, தச்சுவேலை போன்ற பல பயனுள்ள தொழில்களைக் கற்றிருக்கிறார்கள். ராஜ்ய மன்ற கட்டுமான பணியில் ஈடுபடும் வாய்ப்பைக் குறித்து உங்கள் சபை மூப்பர்களிடம் நீங்களும் கலந்து பேசலாம்.

ராஜ்ய மன்றங்கள் பலவற்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஜேம்ஸ் என்பவர் இவ்வாறு கூறுகிறார்: “சபையிலுள்ள அநேகருக்கு உதவி செய்ய நேரமோ திறமையோ இல்லாமல் இருக்கலாம். எனவே, இந்த வேலையில் நீங்கள் பங்குகொள்ளும்போது ஒரு முழு சபைக்கே உதவி செய்கிறீர்கள்.” கான்கிரீட் வேலை செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொண்ட நேத்தன் அந்தத் திறமை கடவுளுக்குச் சேவை செய்வதற்கான மற்றொரு வாய்ப்பை திறந்து வைத்ததைக் கண்டார். “ஜிம்பாப்வேக்குச் சென்று அங்கே யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலக கட்டுமானப் பணியில் என்னுடைய திறமையைப் பயன்படுத்த முடிந்தது. நான் அங்கே மூன்று மாதங்கள் வேலை செய்தேன், வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த அனுபவங்களில் அதுவும் ஒன்று” என அவர் சொல்கிறார்.

கடினமாக உழைப்பதற்கான விருப்பம் இருந்ததால், அநேக இளைஞர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் வாலண்டியர்களாகச் சேவை செய்வதற்கு விண்ணப்பிக்க தூண்டப்பட்டிருக்கிறார்கள்.

உடல் உழைப்பில் திறம்பட்டவராக ஆவதன் மூலம் ‘போதுமென்ற மனதை’ ஓரளவுக்கு பெற்றுக்கொள்ள முடியும். (1 தீமோத்தேயு 6:6) யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலுள்ள இளைஞர்கள் பலர் பயனியர்களாகவும் முழுநேர ஊழியர்களாகவும் சேவை செய்கிறார்கள். ஒரு தொழிலைக் கற்றுக்கொண்டதன் மூலம், அதிக நேரத்தையும் பணத்தையும் உலகப்பிரகாரமான பள்ளிப் படிப்பில் செலவழிக்காமலே பொருளாதார ரீதியில் தங்களை ஆதரித்துக்கொள்ள அநேக இளைஞர்களால் முடிந்திருக்கிறது.

எப்படிக் கற்றுக்கொள்வது

ஒரு தொழிலை பிழைப்புக்காகக் கற்றுக்கொண்டாலும் சரி, வீட்டு உபயோகத்திற்காகக் கற்றுக்கொண்டாலும் சரி, உடலை வளைத்து வேலை செய்வது எப்படியென்று தெரிந்துகொண்டீர்கள் என்றால் உங்களால் பயனடைய முடியும். உள்ளூரில் உள்ள பள்ளிகளில் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படலாம். வீட்டிலிருந்தபடியேகூட நீங்கள் சில பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளலாம். எப்படி? வீட்டு வேலைகளைச் செய்யப் பழகுவதன் மூலமாகவே. முன்பு குறிப்பிடப்பட்ட டாக்டர் ப்ரோவென்சனோ இவ்வாறு எழுதினார்: “வீட்டு வேலைகளைச் செய்யத் தெரிவது டீனேஜ் பிள்ளைகளுக்கு ரொம்பவே முக்கியம். ஏனெனில் அவை ‘வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான திறமைகளைக்’ கற்றுத் தருகின்றன. டீனேஜர்கள் தங்கள் பெற்றோரை விட்டுத் தனியே வாழ வேண்டிய சமயம் வருகையில் வெற்றிகரமாகவும், திறம்பட்டவராகவும் வாழ இந்தத் திறமைகள் அவர்களுக்குக் கைகொடுக்கும்.” ஆகவே வீட்டில் என்ன வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை எப்போதும் கவனியுங்கள். புல்வெளியில் புற்களை வெட்ட வேண்டியிருக்கிறதா அல்லது அலமாரி ஏதாவது ரிப்பேர் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறதா?

உடல் உழைப்பு ஒருவரது மதிப்பைக் குறைப்பதற்குப் பதிலாக பல வழிகளில் பலனளிக்கலாம். எனவே உடலை வளைத்து வேலை செய்வதென்றால் ஓடி ஒளியாதீர்கள்! மாறாக, உங்கள் கடின உழைப்பின் ‘பலனையும் அநுபவிக்க’ முயலுங்கள். ஏனெனில் பிரசங்கி 3:13 சொல்லுகிற பிரகாரம் அது “தேவனுடைய அநுக்கிரகம்.” (g05 3/22)

[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]

தொழிற்கல்வியைக் கற்றுக்கொள்வதன் மூலம் அநேக இளைஞர்களால் கடவுளுக்கு அதிக சேவை செய்ய முடிந்திருக்கிறது

[பக்கம் 22-ன் படங்கள்]

முக்கியமான திறமைகளைப் பெரும்பாலும் உங்கள் பெற்றோரே உங்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும்