Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மலைகள்—ஆபத்தில்!

மலைகள்—ஆபத்தில்!

மலைகள்​—⁠ஆபத்தில்!

“உலகின் மலைப் பிரதேசங்கள் இன்னும் பல தலைமுறைகளுக்கு வளங்களைத் தொடர்ந்து வாரி வழங்கும்படி பார்த்துக் கொண்டால்தான் அனைவரும் பயனடைய முடியும்.”​—⁠கோஃபி அன்னன், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர்.

கம்பீரம், கட்டுறுதி, பலம்​—⁠மலைகள் என்றதுமே இவைதான் மனதில் தோன்றுகின்றன. அப்படியிருக்க, இந்த இயற்கை “இராட்சதர்களை” அச்சுறுத்த எவற்றால் முடியும்? இந்தப் பூமியிலுள்ள மலைகள் ஆபத்தில் இருக்கின்றன என்பதை அநேகர் நம்ப மறுக்கலாம். ஆனால் மலைகள் நிஜமாகவே ஆபத்தில்தான் இருக்கின்றன. மலைகளின் சூழியல் அமைப்பையே வலுவிழக்கச் செய்யும் சில பிரச்சினைகளைப் பற்றி இயற்கை பாதுகாவலர்கள் விளக்குகிறார்கள். அவை எல்லாமே கடுமையானவை. நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே வருபவை. மலைகளை அச்சுறுத்தி வரும் அத்தகைய பிரச்சினைகள் சிலவற்றைப் பற்றி இப்போது சிந்திக்கலாம்.

வளர்ச்சித் திட்டங்கள். சாலைகள், சுரங்கங்கள், நிலத்தடி குழாய்கள், அணைகள் ஆகியவையும் அடுத்த 30 வருடங்களுக்காகத் திட்டமிடப்பட்டிருக்கும் வேறு சில வளர்ச்சிப் பணிகளும் உலகின் 25 சதவீத மலைப் பிரதேசங்களை ஆபத்திற்குள்ளாக்கி இருக்கின்றன. சாலைகள் அமைப்பது செங்குத்தான சரிவுகளில் அரிப்பை ஏற்படுத்தக்கூடும். அதுமட்டுமல்ல, மரங்களை வெட்டியெடுத்துச் செல்பவர்களுக்கு அவை வசதி செய்து தருகின்றன; இப்படிப்பட்டவர்களால் ஏகப்பட்ட சேதம் விளைகிறது. சுரங்கங்களிலிருந்து ஆயிரம் கோடி டன் எடையுள்ள தாதுப் பொருட்கள் வருடந்தோறும் வெட்டி எடுக்கப்படுகின்றன; அவற்றில் பெரும்பாலானவை மலைகளிலிருந்தே எடுக்கப்படுகின்றன. அதோடு, இன்னும் அதிகமான கழிவுப் பொருட்களும் உருவாக்கப்படுகின்றன. a

புவிச்சூடு. “மிகச் சூடாக இருந்த வருடங்களின் பதிவில் 1990-ஐத் தொடர்ந்து வந்த வருடங்களே முதல் ஒன்பது இடங்களைப் பிடிக்கின்றன” என்று உலக கவனிப்பு நிலையம் குறிப்பிடுகிறது. அதிலும் முக்கியமாக மலைப் பிரதேசங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. பனியாறுகள் (Glaciers) தொடர்ந்து உருகுகின்றன. பனிமலை உச்சிகள் சரியத் தொடங்கியுள்ளன, இதனால் நீர்த் தேக்கங்கள் பாதிக்கப்பட்டு பயங்கரமான நிலச் சரிவுகள் உருவாகலாம் என்று சில அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இமயத்தின் பகுதிகளிலுள்ள அநேக பனியாறுகள் இயற்கை அடைப்புகளை மீறி பேரழிவுக்குரிய வெள்ளங்களை உருவாக்கும் நிலையில் இருக்கின்றன. இது ஏற்கெனவே கடந்த சில பத்தாண்டுகளாக நடந்து வருகிறது.

பிழைப்புக்காக விவசாயம். ஜனத்தொகை வெடிப்பு காரணமாக வளமற்ற இடங்களிலும் பயிர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருக்கிறார்கள். ஓர் ஆய்வு குறிப்பிடுகிறபடி, ஆப்பிரிக்காவின் மலைப் பிரதேசங்களில் பாதியளவு, பயிரிடுவதற்காகவோ கால்நடைகளுக்காகவோ (பயிரிடுவதற்காக 10 சதவீதமும் மேய்ச்சலுக்காக 34 சதவீதமும்) இப்போது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த மலைப் பிரதேசங்கள் பயிரிடுவதற்கு ஏற்றதாய் இல்லாததால், இங்கே செய்யப்படுகிற விவசாயம் அந்தளவு லாபம் ஈட்டுவதில்லை. b மேலும், கால்நடைகள் அளவுக்கு அதிகமாக மேய விடப்படுவதால் பயிர்கள் அழிந்து நாசமாகின்றன. மலைப் பிரதேச நிலங்களில் 3 சதவீதம் மட்டுமே நிலையான விவசாயத்திற்குக் கைகொடுக்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

போர். சமீபத்திய உள்நாட்டுப் போர்களின் திடீர் அதிகரிப்பு அநேக மலைகளின் சுற்றுச்சூழலைக் கெடுத்துவிட்டிருக்கிறது. தீவிரவாதிகள் தங்களுடைய நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக மலைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆப்பிரிக்காவின் மலைப்பாங்கான பகுதிகளில் 67 சதவீத இடங்கள் “மனிதரின் கொடூர சண்டைகளால்” பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கை கணக்கிட்டுள்ளது. மேலும், சில மேட்டுநிலங்கள் போதைப் பொருட்களை உருவாக்கும் மையங்களாக ஆகியிருக்கின்றன. இதன் விளைவாக பெரும்பாலும் ஆயுதச் சண்டைகள் நடைபெறுவதோடு, சுற்றுச்சூழலும் மாசுபடுத்தப்படுகிறது.

அவற்றைப் பாதுகாக்க வேறென்ன தேவை?

மனிதன் மலைகளை நாசப்படுத்துவதால் ஏற்படுகிற பாதிப்புகளை நாம் இப்போதே அனுபவித்து வருகிறோம். வெள்ளங்கள், நிலச்சரிவுகள், தண்ணீர் பற்றாக்குறை ஆகியவை எல்லாம் பிரச்சினைகள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிற சில அறிகுறிகளே. அரசாங்கங்கள் ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டன. காடுகள் புதுப்பிக்கப்படுகின்றன. மரங்களை வெட்டுவது சில இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. எழில்மிகு இயற்கைக் காட்சிகளையும் அதிகமாக அழிந்துவரும் வனவிலங்குகளின் வாழிடங்களையும் பாதுகாப்பதற்கு தேசிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பாதுகாக்கப்பட்ட இடங்களும்கூட சுற்றுச்சூழலின் அழுத்தத்தால் அழிந்துகொண்டு வருகின்றன. (“இயற்கையின் சில அரண்கள்” என்ற பெட்டியைக் காண்க.) உயிரினங்கள் படுவேகத்தில் அழிந்து வருவது, மலைகளைப் பாதுகாப்பதற்கு நடத்தும் போராட்டம் தோல்வியடைந்து வருகிறது என்பதற்கு ஓர் அத்தாட்சியாக இருக்கிறது. இப்பிரச்சினைகளை வல்லுநர்கள் நன்றாக அறிவார்கள். ஆனால் பாதிக்கப்படாத காட்டுப்பகுதிகளைப் பாதுகாக்க பெரிய அளவிலான திட்டம் எதுவும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. “நம்முடைய அறிவியல் அறிவை நினைத்துப் பெருமைப்படுகிறேன், ஆனால் உயிரியல் பல்வகைமைக்குக் காரணமான முக்கிய வாழிடங்கள் அழிக்கப்பட்டு வருவதை நினைக்கும்போதோ வேதனையடைகிறேன்” என்று புகழ்பெற்ற உயிரியலாளர் ஈ. ஓ. வில்சன் குறிப்பிட்டார்.

உயிரியல் பல்வகைமை அழிந்துகொண்டு வருவது உண்மையிலேயே கவலைதரும் விஷயமா? பூமியின் உயிரியல் பல்வகைமையைப் பாதுகாப்பதால் மனிதவர்க்கத்திற்குப் பெரும் பயன் உண்டென்று அநேக உயிரியலாளர்கள் சொல்கிறார்கள். செந்நிற பெரிவிங்கிள் மலர்ப் பசுங்கொடிகளை அவர்கள் உதாரணமாகக் குறிப்பிடுகிறார்கள். இச்செடி உயிரியல் பல்வகைமை அதிகமாகக் காணப்படுகிற மடகாஸ்கரின் மேட்டுப் பகுதிகளில் உள்ளது. வெள்ளணு புற்றுநோயுக்கான ஒரு முக்கிய மருந்து தயாரிக்க இச்செடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், க்வினைன் என்ற மருந்தும் மலேரியாவை குணப்படுத்த உதவும் மற்ற மருந்துகளும், ஆண்டிஸ் மலைத் தொடர்களில் காணப்படும் சின்கோனா மரத்திலிருந்துதான் பல பத்தாண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மலைப் பிரதேசங்களில் வளரும் வேறு பல தாவரங்கள் கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பதற்கு துணை புரிந்திருக்கின்றன. மலைகளில் வளரும் இது போன்ற சில தாவரங்கள் மலைப் பகுதிகள் அல்லாத மற்ற இடங்களிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன என்பதும் உண்மைதான். ஆனால் மனிதன் மலைகளில் வளரும் பல்வகை தாவரங்களைப் பெரியளவில் அழிக்கும்போது, இன்னமும் கண்டறியப்படாத மருத்துவ குணமுள்ள, ஊட்டச்சத்துமிக்க மூலாதாரங்களையும் தெரியாத்தனமாக அழித்துவிடலாம் என்பதே கவலைக்குரிய ஒரு விஷயம்.

இந்த அழிவுகளை ஏதேனும் ஒரு வழியில் தடுத்து நிறுத்த முடியுமா? ஏற்பட்டுள்ள சேதங்களைச் சரிசெய்ய முடியுமா? அழகுக்கும் பல்வகைமைக்கும் மலைகள் தொடர்ந்து அரண்களாக விளங்குமா? (g05 3/22)

[அடிக்குறிப்புகள்]

a ஒரேவொரு தங்க மோதிரத்தைச் செய்யும்போது குவிக்கப்படுகிற கழிவுப் பொருட்களின் சராசரி எடை மூன்று டன் ஆகும்.

b மறுபட்சத்தில், பல நூற்றாண்டுகளினூடே, மலைவாசிகளான பழங்குடியினர் சுற்றுச்சூழலுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் செய்வதற்குக் கற்றிருக்கின்றனர்.

[பக்கம் 7-ன் பெட்டி/படங்கள்]

மலைவாழ் விலங்கினங்கள்

மலைச் சிங்கம் என்ற ப்யூமா அதன் பெயருக்கேற்ப பெரும்பாலும் மலைகளிலேயே காணப்படுகிறது​—⁠முக்கியமாக ராக்கி மலைத் தொடர்களிலும் ஆண்டிஸ் மலைத் தொடர்களிலும் காணப்படுகிறது. பிற விலங்குகளைக் கொன்று தின்னும் அநேக பெரிய பிராணிகளைப் போலவே, இந்த ப்யூமாக்களும் மனித அச்சுறுத்தலின் காரணமாக எட்டமுடியா இடங்களுக்கு மெதுமெதுவாய் இடம் மாறிச் சென்றுவிட்டன.

சிவப்பு பாண்டா முக்கியமாக இமய மலைத் தொடர்களில் (எவரெஸ்ட் சிகரத்தின் தாழ்வான மலைச் சரிவுகளில்கூட) வாழ்கிறது. வாழிடம் நெடுந்தொலைவில் இருந்தாலும், அதன் பாடு திண்டாட்டமாகவே இருக்கிறது; ஏனென்றால் உணவுக்காக அது பெரிதும் சார்ந்திருக்கிற மூங்கில் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

[படத்திற்கான நன்றி]

Cortesía del Zoo de la Casa de Campo, Madrid

பழுப்பு நிறக் கரடிகள் ஒரு காலத்தில் ஐரோப்பாவையும் ஆசியாவையும் வட அமெரிக்காவையும் சுற்றி நடமாடி வந்தன. இப்போது, ஐரோப்பாவில் சில தனிமையான மலைப் பகுதிகளில் வாழும் கட்டாயத்தில் இருக்கின்றன. ஆனால் கனடியன் ராக்கீஸ், அலாஸ்கா, சைபீரியா போன்ற இடங்களில் இவை பரவலாகக் காணப்படுகின்றன. கடந்த நூற்றாண்டில், ஐக்கிய மாகாணங்களில் அதன் எண்ணிக்கை 99 சதவீதம் குறைந்துள்ளது.

தங்கக் கழுகு வட துருவத்தின் பெரும் பகுதிகளில், “மலைப் பிரதேச ஆகாயத்தின் அதிபதி” என்றழைக்கப்படுகிறது. ‘வெறுக்கப்பட்ட, துன்புறுத்தப்பட்ட பறவை’ என்று இது முன்னர் பெயரெடுத்திருந்தது. எனவே, வருத்தகரமாக, 5,000-⁠ற்கும் குறைவான ஜோடிகளே இன்று ஐரோப்பாவில் உள்ளன.

ஜயன்ட் பாண்டாக்கள் “உயிர் வாழ மூன்று முக்கிய காரியங்கள் தேவை” என்று சீன இயற்கையியலாளர் டாங் சீயாங் குறிப்பிடுகிறார். அவை “உயரமான மலைகளும் ஆழமான பள்ளத்தாக்குகளும்; அடர்ந்த மூங்கில் காடுகளும்; சிற்றலைகள் தவழும் ஓடைகளும்” ஆகும். ஒரு கணக்கெடுப்பின்படி, 1,600-⁠க்கும் குறைவான பாண்டாக்களே காடுகளில் வாழ்கின்றன.

[பக்கம் 8, 9-ன் பெட்டி/படங்கள்]

இயற்கையின் அரண்கள் சில

யோஸ்மைட் தேசிய பூங்கா (கலிஃபோர்னியா, அ.ஐ.மா.), இயற்கையியலாளர் ஜான் முயிரின் அயராத உழைப்பின் காரணமாக 1890-⁠ல் அமைக்கப்பட்டது. வருடந்தோறும் 40 லட்சம் பார்வையாளர்கள் இதன் இயற்கை அழகை கண்டுகளிக்க வருகிறார்கள். எனவே, வனப் பகுதிகளைப் பாதுகாப்பதா, அல்லது இயற்கைப் பிரியர்களுக்காக வசதிகளைச் செய்து கொடுப்பதா என்று இந்தப் பூங்காவின் மேலதிகாரிகள் திண்டாடி வருகிறார்கள்.

போடோகார்பஸ் தேசிய பூங்கா (ஈக்வடார்) பல்வகை விலங்கினங்களையும் தாவரயினங்களையும் (600-⁠க்கும் அதிகமான பறவைகளையும், கிட்டத்தட்ட 4,000 தாவரயினங்களையும்) பாதுகாத்து வருகிற ஆண்டிஸ் மலை சிகரங்களிலுள்ள காடுகளின் ஒரு பகுதியாகும். எண்ணிலடங்கா மனித உயிர்களை காப்பாற்றியிருக்கும் க்வினைன் என்ற மருந்து இந்த இடத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற பூங்காக்களில் நடப்பது போலவே, இங்கும் மரங்களை வெட்டுவதும் விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவில் நடந்து வருகின்றன.

கிளிமஞ்சாரோ மலை (டான்ஜானியா) உலகிலுள்ள மிகப் பெரிய எரிமலைகளுள் ஒன்று. இது ஆப்பிரிக்க மலைகளிலேயே மிக மிக உயரமான மலை. இதன் தாழ்வான மலைச்சரிவுகளில் யானைகள் மேய்கின்றன. ஜயன்ட் லோபீலியா மற்றும் ஜயன்ட் கிரவுண்ட்செல் என்ற பிரத்தியேகமான தாவரயினங்கள் மலை உச்சிகளில் வளருகின்றன. சட்டவிரோதமாக வேட்டையாடுதல், மரங்களை வெட்டுதல், வீட்டு விலங்குகளை மேயவிடுதல் ஆகியவை அங்குள்ள சூழலை அச்சுறுத்தி வருகிற முக்கிய காரணிகளாகும்.

டேதே தேசிய பூங்கா (கேனரி தீவுகள்) வெறுமையாகக் காட்சியளிக்கும் எரிமலைக்கு உயிரூட்டுகிற பிரத்தியேகமான தாவரயினங்களை இது பாதுகாக்கிறது. எரிமலைகளுள்ள தீவுகளின் சூழியல் அமைப்புகள் பெரும்பாலும் உருக்குலைந்து வருகின்றன. வேறு இடங்களைச் சேர்ந்த உயிரினங்கள் இங்கு விடப்படுவதே இதற்குக் காரணம்.

பிரேனே ஆக்சிடென்டேல்ஸ் மற்றும் ஆர்டீஸா தேசிய பூங்காக்கள் பிரமாண்டமான மலைகளின் அழகைப் பாதுகாப்பதோடு அதன் விலங்கினங்களையும் தாவரயினங்களையும்கூட பாதுகாக்கின்றன. ஐரோப்பாவின் பிற மலைத் தொடர்களைப் போலவே, இங்கும் பனிச் சறுக்கு விளையாட்டிற்கான வசதிகளும் மற்ற சுற்றுலா வசதிகளும் பெருகி வருவதால் ஏகப்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாரம்பரிய விவசாய முறைகள் கைவிடப்பட்டதாலும் இங்குள்ள சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஸாரக்சன் தேசிய பூங்கா கொரியாவில் மிகப் பிரபலமானது. கிரானைட் மலைச் சிகரங்களும் வனப் பகுதியுடைய மலைச்சரிவுகளும், விசேஷமாக இலையுதிர் காலத்தில் எழில் கொஞ்சுகின்றன. இந்தப் பூங்கா மிகவும் பிரபலமானதால், இதன் சில பகுதிகள் வார இறுதி நாட்களில் நகரத்தின் பரபரப்பான நடைபாதை போன்று காட்சியளிக்கின்றன.

[பக்கம் 10-ன் பெட்டி/படங்கள்]

மலை தாவரங்கள்

டவர் ஆஃப் ஜுவல்ஸ். இளவேனிற் காலத்தின் சில வாரங்களின்போது, இந்த அட்டகாசமான பூ ஆளுயரத்திற்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 1,800 மீட்டர் உயரத்திலிருக்கும் கேனரி தீவிலுள்ள இரண்டு எரிமலை சிகரங்களில் மட்டுமே இது காணப்படுகிறது. அநேக மலை தாவரங்களும் இது போலவே குறிப்பிட்ட பகுதியில் மட்டும் காணப்படுகின்றன.

கார்லீன் திசில்ஸ் ஆல்ப்ஸ் மற்றும் பிரனீஸ் மலைத் தொடர்களில் வளருகின்றன. கோடை காலம் முடிவுறும் தருவாயில், இவற்றின் ஒளிர்கிற தோற்றம் பசும் புல்வெளிகளின் அழகைக் கூட்டுகிறது. அவற்றின் மலர்கள் பூச்சிகளுக்கும் விருந்தளிக்கின்றன.

இங்கிலிஷ் ஐரிஸ். வசீகரிக்கும் இந்தக் காட்டு மலரின் கலப்பினங்கள் தோட்டச் செடிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. தோட்ட மலர்களில் அநேகம் மலைப் பிரதேச தாவரயினங்களிலிருந்து வந்தவையாகும்.

மௌன்டன் ஹவுஸ்லீக் என்ற தாவரம் பாறைகளின் பிளவுகளில் தொற்றிக்கொண்டு வளருகிற ஒரு மலைப் பிரதேச தாவரமாகும். தெற்கு ஐரோப்பாவின் மலைகளில் காணப்படும் இந்தத் தாவரம், எதையும் தாங்குகிற அபார சக்தியுடன் நீண்ட காலம் வாழ்வதால், “என்றும் வாழ்கிற தாவரம்” என அழைக்கப்படுகிறது.

புரோமிலியாட்கள். வெப்பமண்டல பகுதிகளின் மேகமூட்டமுள்ள காடுகளில், புரோமிலியாட்களின் பல வகைகளும் ஆர்க்கிட்களின் வகைகளும் செழிப்பாக வளருகின்றன. அவை 4,500 மீட்டர் உயரம் வரை வளரலாம்.

அல்ஜீரியன் ஐரிஸ் என்ற தாவர இனம், வட ஆப்பிரிக்காவில் எர் ரிஃப் மலைத் தொடரிலும், அட்லஸ் மலைத் தொடர்களிலும் வளருகிறது. மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள தாவரயினங்களின் ஹாட் ஸ்பாட் என்று இந்தப் பகுதி அழைக்கப்படுகிறது.

[பக்கம் 6-ன் படம்]

இந்தோனேஷியாவிலுள்ள மோக்கே மலைகளுக்கு அருகே செம்பு மற்றும் தங்கம் தோண்டியெடுக்கப்படுகிறது

[படத்திற்கான நன்றி]

© Rob Huibers/Panos Pictures

[பக்கம் 8-ன் படம்]

செந்நிற பெரிவிங்கிள்