மலைகள்—நமக்கு ஏன் தேவை
மலைகள்—நமக்கு ஏன் தேவை
“மலைகளில் ஏறிப் பார், அவை உனக்கு கதைகள் சொல்லும். மரக்கிளைகள் வழியே கதிரவனின் கதிர்கள் பாய்கையில் இயற்கையின் அமைதி உன் உள்ளத்தை ஊடுருவிச் செல்லும். தென்றல் உன்னைத் தாலாட்டும், பெருங்காற்று தன் சக்தியைக் காட்டும். இலையுதிர் காலத்தில் உதிரும் சருகுகளைப் போல் உன் கவலைகள் எல்லாம் மறைந்துவிடும்.”—ஜான் முயிர், அமெரிக்க எழுத்தாளர் மற்றும் இயற்கை அறிவியலாளர்.
ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜான் முயிர் கண்டுபிடித்த விதமாக, நம் மனதை கொள்ளைகொள்ளும் சக்தி மலைகளுக்கு இருக்கிறது. அவற்றின் கம்பீரம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது; அவற்றில் தஞ்சம் புகுந்துள்ள வனவிலங்குகள் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கின்றன; அவற்றின் அமைதி நமக்கு இதமளிக்கிறது. இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பதற்கும் புத்துணர்ச்சி பெறுவதற்கும் கோடிக்கணக்கானோர் வருடந்தோறும் மலைகளுக்குச் செல்கின்றனர். “ஆதிகாலம் முதற்கொண்டு மலைகள் மனிதரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றன, அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கின்றன” என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP)செயற்குழு இயக்குநர் கிளாஸ் டோப்ஃபர் குறிப்பிடுகிறார்.
என்றாலும், மலைகள் அநேக பிரச்சினைகளையும் எதிர்ப்பட்டு வருகின்றன. தொலை தூரத்தில் அமைந்திருக்கும் காரணத்தால், அவை பல ஆண்டுகளாக மனிதரின் மிதமிஞ்சிய சுரண்டல்களிலிருந்து தப்பித்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் இன்று அவை அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கின்றன. “விவசாயம், பொதுநல வசதிகளின் முன்னேற்றம், கால ஓட்டத்தில் அவ்வப்போது தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற புதுப்புது காரியங்கள் ஆகியவற்றால், எஞ்சியுள்ள காட்டுப் பகுதிகளும் படுவேகமாக அழிந்து வருகின்றன” என்று ஐக்கிய நாடுகளின் சமீபத்திய செய்தி அறிக்கை ஒன்று விவரிக்கிறது.
பூமியின் நிலப்பரப்பில் பெருமளவை மலைப் பகுதிகள் ஆக்கிரமித்துள்ளன. உலக மக்களில் பாதிப் பேர் அதன் வளங்களை நம்பியிருக்கின்றனர். கோடிக்கணக்கான மக்களுக்கு மலைகளே வீடுகளாக இருக்கின்றன. என்றாலும், ரம்மியமான பசும் புல்வெளிக்குப் பின்னால் காணப்படும் வெறும் பின்னணி காட்சியாக மட்டுமே மலைகள் இருப்பதில்லை. மனிதவர்க்கத்தின் நலனுக்காக அவை என்னவெல்லாம் அளிக்கின்றன என்பதை இப்போது சிந்திக்கலாம்.
மலைகள் ஏன் முக்கியமானவை?
◼ தண்ணீர்த் தேக்கங்கள். நம்முடைய மிகப் பெரிய ஆறுகளுக்கும் நீர்த்தேக்கங்களுக்கும் மலைகளே ஊற்றுமூலமாக விளங்குகின்றன. வட அமெரிக்காவில் பாயும் பெரிய ஆறான கொலரடோ ஆறும் ரியோ கிரேன்டி ஆறும் ராக்கி மலைகளிலிருந்துதான் தண்ணீரைப் பெறுகின்றன. உலக ஜனத்தொகையில் பாதிப் பேர் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் இமாலயம்-காரகோரம்-பாமீர்-திபெத் பகுதிகளில் இருக்கும் பெரிய மலைத் தொடர்களில் பெய்யும் மழையைச் சார்ந்தே வாழ்கின்றனர்.
“உலகத்தின் தண்ணீர்க் களஞ்சியங்கள் என்றழைக்கப்படும் மலைகள், இந்தப் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மக்களுக்கும் மிக அவசியமானவை” என்கிறார் டோப்ஃபர். அவர் மேலும் இவ்வாறு சொல்கிறார்: “மலை உச்சியில் நடக்கிற காரியங்கள் தாழ்ந்த நிலப்பகுதிகளிலும் நன்னீர் பகுதிகளிலும் கடலிலும் உள்ள உயிரினங்களைப் பாதிக்கின்றன.” பல நாடுகளில் குளிர்காலப் பனியை மலைகள் தன்வசம் வைத்துக்கொள்கின்றன; பின்பு வசந்த காலத்தின்போதும் வெயில் காலத்தின்போதும் தேவைப்படும் ஈரப்பதத்தை மெதுவாக வெளிவிடுகின்றன. உலகிலுள்ள சில வறண்ட பகுதிகள், எங்கோ தூரத்தில் இருக்கும் மலைகளிலிருந்து
பனிக்கட்டிகள் உருகுவதால் வரும் தண்ணீரையே நீர்ப்பாசனத்திற்குப் சார்ந்திருக்கின்றன. அநேக மலைச் சரிவுகளைக் காடுகள் போர்த்தியுள்ளன. அவை மழை நீரை பஞ்சு போல் உறிஞ்சிக்கொள்கின்றன. இதனால், தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, பாறைகள் வழியாக மென்மையாய் ஓடி ஆறுகளைச் சென்றெட்டுகிறது.◼ வன உயிர் வாழ்விடங்களும் உயிரியல் பல்வகைமையும். மலைப் பகுதிகள் மிகத் தொலைவில் இருப்பதாலும், வேளாண்மைக்கு அதிகமாக கைகொடுக்காததாலும், மனித ஆக்கிரமிப்பிலிருந்து அவை பெருமளவு தப்பித்திருக்கின்றன. விளைவு? அழிந்துவிடும் ஆபத்திலுள்ள தாழ் நிலப்பகுதி தாவரயினங்களுக்கும் விலங்கினங்களுக்கும் அவை சரணாலயங்களாக ஆகியிருக்கின்றன. உதாரணத்திற்கு, நியு யார்க் நகரத்தைவிட சற்று சிறிதாக இருக்கும் மலேஷியாவிலுள்ள மலைப்பாங்கான கினாபாலு தேசிய பூங்காவில் 4,500 தாவரயினங்கள் உள்ளன. அவை ஐக்கிய மாகாணங்கள் முழுவதிலுமுள்ள தாவரயினங்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமாகும். சீனாவின் ஜயன்ட் பாண்டாக்களும், ஆண்டிஸ் மலைத் தொடர்களின் கான்டார் கழுகுகளும், மத்திய ஆசியாவின் பனிச் சிறுத்தைகளும் மலைப் பகுதிகளிலிருக்கும் வாழிடங்களையே சார்ந்திருக்கின்றன. அழியும் ஆபத்திலிருக்கும் வேறு பல எண்ணிலடங்கா உயிரினங்களும் மலைகளையே சார்ந்திருக்கின்றன.
“அறியப்பட்டிருக்கும் நிலவாழ் தாவரங்களிலும் முதுகெலும்புள்ள விலங்கினங்களிலும் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை இந்தக் கிரகத்தின் இரண்டு சதவீத பரப்பளவில் மட்டுமே காணப்படுகின்றன” என்று சூழியலாளர்கள் கணக்கிட்டுள்ளதாக நேஷனல் ஜியோக்ராபிக் பத்திரிகை சொல்கிறது. பல இனங்கள் வளமிக்க நிலங்களில், எவற்றாலும் பாதிக்கப்படாத அருமையான சூழலில் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. அப்படிப்பட்ட இடங்களை அறிவியலாளர்கள் உயிரியல் ‘ஹாட் ஸ்பாட்’கள் என்று அழைக்கின்றனர். பெரும்பாலும் மலைப் பகுதிகளாகவே இருக்கும் இந்த ‘ஹாட் ஸ்பாட்’களில்தான் பல்வகை உயிரினங்கள் உள்ளன. அவற்றிலிருந்து நாம் அனைவருமே பயன் அடைந்திருக்கிறோம். உலகின் மிக முக்கியமான உணவுப் பொருட்களில் சில, மலைகளில் வளரும் காட்டுச் செடிகளின் மூலமாகவே கிடைக்கின்றன. உதாரணமாக, மெக்சிகோவின் மேட்டுநிலப் பகுதிகளில் சோளமும், பெருவியன் ஆண்டிஸில் உருளைக் கிழங்கும் தக்காளியும், காகஸஸில் கோதுமையும் கிடைக்கின்றன.
◼ பொழுதுபோக்கும் அழகும். மலைகள் இயற்கை அழகைப் பாதுகாக்கின்றன. அவை எழில்மிகு நீர்வீழ்ச்சிகளையும், அழகிய ஏரிகளையும், கண்கவர் இயற்கைக் காட்சிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன. சொல்லப்போனால், பாதுகாக்கப்படுகிற இடங்களில் மூன்றில் ஒரு பங்கு மலைப் பிரதேசங்களிலேயே உள்ளன. எனவே, அவை சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான இடங்களாக திகழ்கின்றன.
வெகு தூரத்திலுள்ள தேசிய பூங்காக்களையும்கூட உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கானோர் சென்று பார்க்கின்றனர். வட அமெரிக்காவின் மிக உயர்ந்த மலையான மெக்கின்லி மலையைப் பார்ப்பதற்கு திரளான மக்கள் பல்வேறு இடங்களிலிருந்து அலாஸ்காவிலுள்ள டெனாலி தேசிய பூங்காவிற்குச் செல்கின்றனர். கண்ணைக் கவரும் கிளிமஞ்சாரோவையும் மெரு சிகரங்களையும் கண்டுகளிக்க அநேகர் மகா பிளவு பள்ளத்தாக்குகளுக்கு விஜயம் செய்கின்றனர். அல்லது கம்பீரமாக நிற்கும் இந்த இரு மலைகளின் நடுவே வசிக்கும் காட்டு மிருகங்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதைப் பார்த்து ரசிக்கச் செல்கின்றனர். இந்தச் சுற்றுலாப் பயணிகளின் வரவால் அநேக மலைவாசிகள் பயனடைந்தாலும், இப்பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்த நுண்ணிய சூழியல் அமைப்புகள் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.
மலைகளில் அறிவுக் களஞ்சியங்கள்
மோசமான சூழ்நிலைகள் மத்தியில்கூட எப்படிச் சிறப்பாக வாழலாம் என்பதை பல நூற்றாண்டுகளினூடே மலைவாழ் மக்கள் கற்றிருக்கின்றனர். அவர்கள் உருவாக்கிய மலைப் படிக்கட்டுகள் 2,000 ஆண்டுகளுக்குப் பிறகும் வேளாண்மைக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. அதோடு, அங்கு வாழும் லாமா, யாக் போன்ற மிருகங்களை அவர்கள் பழக்கப்படுத்தியிருக்கின்றனர்; அந்த மிருகங்கள் உயரமான பிரதேசங்களிலுள்ள எந்தச் சூழலையும் தாக்குப்பிடிக்க வல்லவை. எனவே, மலைகளைப் பாதுகாப்பதற்கு மலைவாசிகள் பெற்றிருக்கும் பாரம்பரிய அறிவு விலையேறப் பெற்றதாய் இருக்கிறது.
“ஒவ்வொரு கண்டத்திலுமுள்ள கண்காணாத பரந்த இடங்களை, அவ்வளவாகப் பாதிக்கப்பட்டிராத அத்தகைய உறைவிடங்களைப் பாதுகாப்பதில் வல்லவர்கள் பழங்குடியினர் மட்டுமே” என்று உவர்ல்ட்வாட்ச் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஆலன் தேண் டர்னிங் விவரிக்கிறார். மேலும், “சூழியல் அமைப்பு பற்றிய அவர்களுடைய நடைமுறை அறிவு, நவீன அறிவியலின் நூலகங்களில் புதைந்துள்ள அறிவுக்குச் சமம்” என்றும்கூட அவர் விவரிக்கிறார். மலைகளின் மற்ற வளங்கள் பாதுகாக்கப்படுவது போல் இந்த அறிவுக் களஞ்சியங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் 2002-ம் ஆண்டை சர்வதேச மலைகள் ஆண்டாக ஸ்பான்ஸர் செய்தது. மனிதவர்க்கம் மலைகளைச் சார்ந்திருப்பதை வலியுறுத்துவதற்கு, “நாம் அனைவருமே மலைவாழ் மக்கள்” என்ற வாசகத்தை அதன் அமைப்பாளர்கள் புனைந்தனர். பூமியிலுள்ள மலைகள் எதிர்ப்படும் அபாயங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் அவற்றைப் பாதுகாக்க வழிதேடுவதுமே அவர்களுடைய நோக்கமாக இருந்தது.
அத்தகைய விழிப்புணர்வு நிச்சயமாகவே மதிப்புமிக்க ஒன்றாகும். “இயற்கை வளங்களை வாரி வழங்கும் களஞ்சியங்களாகவே பெரும்பாலும் மலைகள் கருதப்படுகின்றன. ஆனால் அங்கு வாழ்கிற மக்களுக்கும் அங்குள்ள சூழியல் அமைப்புகளுக்கும் போதுமான கவனம் செலுத்தப்படுவதே இல்லை” என்று கிர்கிஸ்தானில் நடத்தப்பட்ட 2002 பிஷ்கெக் உலக மலை உச்சிமாநாட்டில் முக்கியப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
பூமியிலுள்ள மலைகளும் அங்கு வாழ்கிற மக்களும் எதிர்ப்பட்டு வருகிற பிரச்சினைகள் என்னென்ன? இவை நம் அனைவரையும் எவ்வாறு பாதிக்கின்றன? (g05 3/22)