Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மலைகள்—யார் காப்பாற்றுவார்?

மலைகள்—யார் காப்பாற்றுவார்?

மலைகள்​—⁠யார் காப்பாற்றுவார்?

கிர்கிஸ்தானிலுள்ள (மத்திய ஆசியா) பிஷ்கெக் என்ற இடத்தில் 2002-⁠ல் உலக மலை உச்சிமாநாடு நான்கு நாட்களாக நடத்தப்பட்டது. அது மலை சம்பந்தமான பிரச்சினைகளைக் கலந்தாலோசிப்பதற்காகவே நடத்தப்பட்ட முதல் சர்வதேச கூட்டமாகும். 2002-⁠ம் வருடம், “மலைகளின் உண்மையான மதிப்பை பறைசாற்றும் புதிய சகாப்தத்தின் துவக்கமாக” இருக்கும் என்று அந்தக் கூட்டத்தை ஸ்பான்சர் செய்தவர்கள் நம்பினார்கள்.

அந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டவர்கள் “பிஷ்கெக் மலை திட்டங்களை” ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்கள். அத்திட்டங்கள் மலைகளைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் ஆலோசனைகளை அளித்தன. “மலைவாழ் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவிப்பதும், மலை சூழியலை பாதுகாப்பதும், மலை வளங்களை ஞானமாக பயன்படுத்துவதுமே” அதன் குறிக்கோள் என்று சொல்லப்பட்டது.

சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அழகும் உயிரியல் பல்வகைமையும் நிறைந்த இடங்களை உலகெங்கும் அமைக்கப்பட்டுள்ள தேசிய பூங்காக்கள் பாதுகாக்கின்றன. சுற்றுச்சூழல் பேரழிவைச் சந்திப்பதைத் தடுத்து நிறுத்துவதில் உலகின் பல்வேறு இடங்களிலுள்ள பாதுகாப்பு அமைப்புகள் ஓரளவு வெற்றி கண்டிருக்கின்றன. தொடக்க முயற்சியாக, கிர்கிஸ்தானின் மலைகளில் குவிக்கப்பட்ட அணுக் கழிவுகளை அகற்றுவதற்கான ஒப்பந்தம் பிஷ்கெக் மலை உச்சிமாநாட்டில் செய்யப்பட்டது. ஏனெனில் மத்திய ஆசியாவிலுள்ள மக்களில் 20 சதவீதத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீரில் அந்த நச்சுப் பொருட்கள் கலக்கப்பட்டிருக்குமோ என்ற அச்சுறுத்தல் இருந்து வந்தது.

ஆனாலும், உலகிலுள்ள மலைகளைப் பாதுகாப்பதில் உட்பட்டிருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பது கடினம்தான். உதாரணத்திற்கு, 1995-⁠ல் கனடா நாட்டு அதிகாரிகள், பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிகளில் மிஞ்சியிருக்கும் மழைக் காடுகளைப் பாதுகாக்க “வன பாதுகாப்பு விதிகளின் தொகுப்பு” ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். எனினும், மர கம்பெனிகள் பொதுவாக அந்த விதிகளை அலட்சியப்படுத்தி, செங்குத்தான பகுதிகளிலிருந்த மரங்களையும்கூட விட்டு வைக்காமல் அவற்றை வெட்டிச் சென்றதை அதற்குப் பின்பு நடத்திய புலனாய்வு தெளிவுபடுத்தியது. அந்த விதிகளின் தொகுப்பு அளவுக்கதிகமான கட்டுப்பாட்டை விதித்ததாக மரத் தொழில் நிறுவனங்கள் கூறியதால், 1997-⁠ல் அது கொஞ்சம் தளர்த்தப்பட்டது.

வியாபார நடவடிக்கைகள் மட்டுமே ஒரு தடையாக இருப்பதில்லை. போர், வறுமை, பசி, இவையெல்லாம் மலைகளிலுள்ள சூழியல் அமைப்புகள் அழிந்து வருவதற்கு காரணங்கள் ஆகின்றன என்று பிஷ்கெக் உச்சிமாநாட்டின் கடைசி அறிக்கை குறிப்பிட்டது. வாழிடங்கள் அழிக்கப்படுவதற்கான இந்த எல்லா காரணங்களும் நீக்கப்படுகிற வரையில், பூமியின் மற்ற பாகங்களைப் போலவே, மலைகளும் தொடர்ந்து சோதனைகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.

தமது சிருஷ்டிப்பின் மீது கடவுளுக்கு அக்கறை இருக்கிறது

இது போன்ற வருந்தத்தக்க சூழ்நிலைமையிலும் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். சர்வ வல்லமையுள்ள கடவுள் தமது படைப்புகள் அழிக்கப்பட்டு வருவதை கண்டும் காணாதவர் போல் இருப்பதில்லை. “பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்” என்று பைபிள் விவரிக்கிறது. (சங்கீதம் 95:4) மலைகளிலுள்ள மிருகங்களைப் பற்றியும்கூட அவர் அக்கறையுள்ளவராய் இருக்கிறார். சங்கீதம் 50:10, 11-⁠ல் யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “சகல காட்டு ஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.”

இந்த உலகில் மாசுபடுத்தப்பட்டிருக்கும் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற கடவுளுக்கு ஏதேனும் வழி இருக்கிறதா? ஆம், நிச்சயம் இருக்கிறது! அவர் ‘என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணியிருக்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது. (தானியேல் 2:44) இந்தப் பரலோக அரசாங்கத்தின் நியமிக்கப்பட்ட அரசரான இயேசு கிறிஸ்து, பூமியின் மீதும் அதில் வாழும் மக்களின் மீதும் விசேஷித்த அக்கறை உடையவராக இருக்கிறார். (நீதிமொழிகள் 8:31) அவருடைய ஆட்சி பூமியில் சமாதானத்தை நிலைநாட்டும், சுயநலத்துக்காக செய்யப்படும் சுரண்டல்கள் அனைத்துக்கும் முடிவுகட்டும், பூமிக்கு இழைக்கப்பட்டுள்ள சேதங்களைச் சரிசெய்யும்.​—வெளிப்படுத்துதல் 11:⁠18.

அத்தகைய ஒரு தீர்வைக் காண நீங்கள் ஆவலாக இல்லையா? அப்படியென்றால், ‘தேவனுடைய ராஜ்யம் வருவதாக’ எனத் தொடர்ந்து நீங்கள் ஜெபம் செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. (மத்தேயு 6:9, 10) அந்த ஜெபங்கள் நிச்சயமாக பதிலளிக்கப்படும். கடவுளுடைய ராஜ்யம் விரைவில் அநியாயத்திற்கு முடிவுகட்டி, இப்பூமிக்கு இழைக்கப்பட்ட தீங்கைச் சரிசெய்யும். இது நடந்தேறும்போது, அடையாள அர்த்தத்தில் ‘பர்வதங்கள் [அதாவது, மலைகள்] ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடும்.’​—சங்கீதம் 98:⁠8. (g05 3/22)