Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முதலையைப் பார்த்து புன்னகைப்பீர்களா?

முதலையைப் பார்த்து புன்னகைப்பீர்களா?

முதலையைப் பார்த்து புன்னகைப்பீர்களா?

இந்தியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

முதலையைப் பார்த்து புன்னகைக்க எப்போதாவது நினைப்பீர்களா? பீட்டர் பான் என்ற குழந்தைகளுக்கான கதையின் இசைப் பதிப்பில், கேப்டன் ஹுக் என்ற கதாபாத்திரம், “ஒருநாளும் முதலையைப் பார்த்து புன்னகைக்காதே” என அறிவுரை தருகிறார்; ஏனென்றால் “அது உன்னை விழுங்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது!” என்கிறார்.

உலகெங்குமுள்ள முதலைகளில் சில வகை மனிதர்களைத் தாக்கும் என்பது உண்மையென்றாலும், “இது எப்போதாவது மட்டுமே நடக்கிறது, . . . ஆகையால் முதலைகள் நரமாமிசப் பட்சிணிகள் என்று பொதுவாக முத்திரை குத்திவிட முடியாது.” (என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா) சிலருக்கு முதலையைப் பார்த்தால் அருவருப்பாகவும், பயமாகவும் தோன்றினாலும், மற்றவர்கள் அவற்றால் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். உவர்நீர் முதலை, சதுப்புநில முதலை, கேவியல் முதலை ஆகிய மூன்று இந்திய முதலை இனங்களைப் பற்றி இப்போது கவனிக்கலாம்.

பெரிய “உவர்நீர் முதலை”

உலகிலேயே மிகப் பெரிய ஊரும் பிராணியான உவர்நீர், அதாவது கழிமுக முதலை 23 அடி நீளத்திற்கு வளரக்கூடும். அதன் எடை 1,000 கிலோ அளவு இருக்கலாம். உப்பு நீரில் மட்டுமே இவை வாழும். இவற்றை இந்தியா முதற்கொண்டு வடக்கு ஆஸ்திரேலியா வரையுள்ள கடலோர சதுப்பு நிலங்களிலும், நதியின் கழிமுகப் பகுதிகளிலும், கடல்களிலும் காணலாம். இந்த ஊன் உண்ணி எலி, தவளை, மீன், பாம்பு, நண்டு, ஆமை, மான் போன்றவற்றைக் கொஞ்சமாகச் சாப்பிடும். பெரிய ஆண் முதலைகள் சராசரியாக ஒவ்வொரு நாளும் 500 முதல் 700 கிராம் உணவை மட்டுமே உட்கொள்கின்றன. சூரிய ஒளியில் திளைத்துக் கொண்டோ, தண்ணீரில் மிதந்து கொண்டோ ஹாயாக வாழ்வதாலும், அபாரமான ஜீரண அமைப்பு முறையைக் கொண்டிருப்பதாலும் அதிகமான சக்தியை அவை இழப்பதில்லை. பெரிய ‘உவர்நீர் முதலை’ கவனக்குறைவாக இருக்கிற மனிதர்களை எப்போதாவது தாக்கக்கூடும். வாலை பக்கவாட்டில் அசைத்து அசைத்து அவை நீந்திச் செல்கின்றன. அவ்வாறு நீந்துகையில் கண்ணும் மூக்கும் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும், உடல் நீருக்குள் இருக்கும். நிலத்தில் குட்டையான கால்களால் அவை நடக்கின்றன. அவற்றால் எம்பிச் சென்று இரையைக் கவ்விப் பிடிக்க முடியும். அதோடு சில சமயங்களில் இரையைத் துரத்திக் கொண்டு ஓடவும் முடியும். மற்ற எல்லா முதலைகள் போலவே அவற்றுக்கு நல்ல மோப்ப சக்தியும் கண்பார்வையும் செவியுணர்வும் இருக்கிறது. ஆண் முதலை இணை சேரும் காலத்தில் தன் எல்லையில் நுழைய முற்படுவோரை மூர்க்கத்தனமாகத் தாக்கும். பெண் முதலை அதே அளவு மூர்க்கத்தனத்தை தன் முட்டைகளைப் பாதுகாக்கும்போது வெளிக்காட்டும்.

அர்ப்பணம் செய்துள்ள தாய்மார்கள்

பெண் முதலை, அழுகிய இலைதழைகள், மண் ஆகியவற்றைக் குவித்து வைத்து, கரையோரத்தில் கூடு கட்டுகிறது. அதில் ஒரே சமயத்தில் 100 முட்டைகள் வரை இடுகிறது. முட்டைகள் நீள் உருண்டை வடிவத்தில், கடினமான ஓட்டுடன் காணப்படுகின்றன. பெண் முதலை அவற்றை மூடி வைத்து எதிரிகளிடமிருந்து பாதுகாக்கிறது. பிறகு கூட்டை மூடியிருக்கும் இலைதழைகளை மக்கிப் போகச் செய்வதற்காக அதன் மேல் தண்ணீர் தெளிக்கிறது. இதன் மூலம் முட்டைகளை அடைகாக்கத் தேவையான வெப்பம் உண்டாகிறது.

அதன் பிறகு நடப்பது நம் கவனத்தைக் கவர்கிறது. அந்த முட்டைகள் அடைகாக்கப்படுகையில் இருக்கும் வெப்ப நிலையே குஞ்சுகள் ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிக்கிறது. ஆம்! 28 டிகிரி செல்சியஸுக்கும் 31 டிகிரி செல்சியஸுக்கும் இடையேயுள்ள வெப்பநிலையில் அடைகாக்கப்படும் முட்டைகளிலிருந்து பெண் முதலைகள் ஏறத்தாழ 100 நாட்களில் வெளிவருகின்றன. 32.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஆண் முதலைகள் ஏறத்தாழ 64 நாட்களில் வெளிவருகின்றன. 32.5 டிகிரி செல்சியஸுக்கும் 33 டிகிரி செல்சியஸுக்கும் இடையேயுள்ள வெப்பநிலையில் அடைகாக்கப்படும் முட்டைகளிலிருந்து ஆண், பெண் ஆகிய இரண்டு முதலைகளுமே வெளிவருகின்றன. ஒரு பக்கம் தண்ணீர் ஓரமாகவும் மறுபக்கம் சூரியனைப் பார்த்தபடியாகவும் கூடு அமைக்கப்பட்டிருந்தால், வெப்பமான பகுதியிலுள்ள முட்டைகள் ஆணாகவும், குளிரான பகுதியிலுள்ள முட்டைகள் பெண்ணாகவும் பொரிந்து வரும்.

முட்டையிலிருந்து சத்தம் கேட்கையில் தாய் அந்தக் கூட்டை கலைத்துவிடுகிறது. குஞ்சுகள் அவற்றின் பிரத்தியேக பல்லால் முட்டையின் ஓட்டை உடைக்கவில்லையென்றால், தாய் அந்த வேலையைச் செய்கிறது. தாய் முதலை தன்னுடைய பெரிய தாடையில் குஞ்சுகளை மெதுவாக வெளியே எடுத்து, அதன் நாக்கின் கீழிருக்கும் பை போன்ற குழிவில் அவற்றைப் போட்டு தண்ணீருக்கு அருகே கொண்டு செல்கிறது. பிறந்த உடனே குஞ்சுகள் தன்னிச்சையாகச் செயல்பட ஆரம்பிக்கின்றன. பூச்சிகள், தவளைகள், சிறு மீன்கள் போன்றவற்றை உடனே வேட்டையாட ஆரம்பிக்கின்றன. பாதுகாப்புணர்வுள்ள சில அம்மா முதலைகள், சில மாதங்களுக்கு அவற்றினருகே இருந்து, அந்தச் சதுப்பு நிலத்தில் அவற்றைப் பராமரிப்பதற்கான இடங்களை ஏற்படுத்துகின்றன. அங்கே முதலைத் தகப்பனும் தன் பங்கிற்குக் குஞ்சுகளைக் கவனித்து பாதுகாக்கிறது.

சதுப்பு நில முதலை, நீள் மூக்கு கேவியல் முதலை

பரந்தகன்ற மூக்குடைய சதுப்புநில முதலைகளும், நீள் மூக்கு கேவியல் முதலைகளும் இந்தியத் துணைக்கண்டத்திற்கே உரித்தானவை. இந்தியா முழுவதிலும் காணப்படுகிற நன்னீர் சதுப்புநிலங்களிலும், ஏரிகளிலும், ஆறுகளிலுமுள்ள இந்தச் சதுப்புநில முதலைகளின் நீளம் கிட்டத்தட்ட 13 அடி இருக்கும். உவர்நீர் முதலைகளைவிட இவை மிக மிகச் சிறியவை. தங்கள் பலமான தாடையில் சிறு விலங்குகளைப் பிடித்து, மூழ்கடித்த பிறகு, அவற்றைச் சுழற்றி வீசி, துண்டு துண்டாக விழச் செய்து சாப்பிடுகின்றன.

சதுப்புநில முதலை எவ்வாறு துணை தேடுகிறது? ஆண் முதலை ஒரு துணையைத் தேடும்போது, தன்னுடைய தாடையைத் தண்ணீரில் அடித்து, உறுமுகிறது. பிற்பாடு கூட்டைப் பாதுகாப்பதில் பெண்ணுக்கு ஒத்தாசை புரிகிறது; முட்டையை விட்டு வெளிவர குஞ்சுகளுக்கு உதவி செய்த பின்பு அவற்றுடன் சிலகாலம் தங்கிவிடுகிறது.

அரிதாகக் காணப்படும் கேவியல் முதலை, உண்மையிலேயே ஒரு முதலை அல்ல. ஏனெனில் அது பல விதத்தில் முதலையிலிருந்து வித்தியாசப்படுகிறது. அதன் முக்கிய உணவான மீனைப் பிடிப்பதற்கு வசதியாக உள்ள அதன் நீண்ட, குறுகலான தாடையைப் பார்த்தே அதை அடையாளம் கண்டுகொள்ளலாம். இந்தக் கேவியல் முதலை, உவர்நீர் முதலை அளவிற்கு நீளமாக இருந்தாலும், மனிதர்களை அது தாக்குவதாகத் தெரியவில்லை. ஆழமும் வேகமும் ஒருசேரக் கொண்ட வட இந்திய நதிகளில் துரிதமாக நீந்துவதற்கு, இவற்றின் வழவழப்பான, காற்றைக் கிழித்துச் செல்லும் இயல்புடைய உடல் உதவுகிறது. ஆண் கேவியல் இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் அதன் முகவாய் கட்டையின் நுனியில் உருண்டையான குமிழ் போன்ற ஒன்று வளர்கிறது. இது, அந்த முதலை சாதாரணமாக எழுப்பும் மெல்லிய சத்தத்தை அதிகரிக்க வைத்து, அதன் மூலம் பெண் முதலையைக் கவர வழிசெய்கிறது.

சூழியலில் அவற்றின் பங்கு

சுற்றுச்சூழலுக்கு முதலைகள் எந்தளவு முக்கியம்? ஆறுகளிலும் குளங்களிலும், அதோடு அவற்றை அடுத்துள்ள நிலப்பகுதிகளிலுமுள்ள செத்துப்போன மீன் மற்றும் விலங்குகளைச் சாப்பிடும் தோட்டிகளே முதலைகள். இதனால் தண்ணீர் சுத்தமாகிறது. பலவீனமான, காயமுற்ற, மற்றும் நோயுற்ற உயிரினங்களையே அவை குறிவைக்கின்றன. மனிதர்கள் பயன்படுத்துவதற்காக வியாபார ரீதியில் பிடிக்கப்படும் கெண்டை, திலேப்பியா போன்ற மீன்களைச் சாப்பிட்டுவிடும் கெளுத்தி மீனை முதலைகள் கபளீகரம் செய்துவிடுகின்றன.

உயிர் பிழைப்பதற்கான போராட்டம் —⁠முதலைக் கண்ணீரல்ல

‘முதலைக் கண்ணீர் வடிக்கிறார்’ என்று யாரையாவது பற்றிச் சொல்லப்பட்டதைக் கேட்டிருக்கிறீர்களா? அந்தக் கண்ணீரும் வருத்தமும் உண்மையானதோ உள்ளப்பூர்வமானதோ அல்ல என்பதே அதன் அர்த்தம். உண்மையில் முதலை, தன் உடம்பில் சேரும் அதிகப்படியான உப்பை வெளியேற்றுவதற்காகவே கண்ணீர் வடிக்கிறது. ஆனால், 1970-களின் ஆரம்பத்தில் முதலைகளுக்காக நிஜமாகவே கண்ணீர் சிந்தப்பட்டிருக்கலாம். இந்தியாவில் சில ஆயிரம் முதலைகளே இருந்தன, அதற்கு முன்பிருந்த எண்ணிக்கையில் இது 10 சதவீதம் மட்டுமே. ஏன்? அவற்றின் இருப்பிடத்தை மனிதர்கள் அதிகமதிகமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தபோது, சிறிய அல்லது பலவீனமான வீட்டு விலங்குகளுக்கு இவை அச்சுறுத்தலாய் இருப்பதாகக் கருதி இவற்றைக் கொன்றனர். முதலைக்கறியும் அதன் முட்டைகளும் ருசியாக இருப்பதை அநேகர் கண்டனர். முதலையின் கஸ்தூரி சுரப்பிகள் வாசனை திரவியங்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன. அது மட்டுமல்லாமல், அணை கட்டுவதும், தண்ணீர் மாசுபடுவதும் முதலைகளின் எண்ணிக்கையைக் குறைத்தன. அதைவிட முக்கியமாக, அவற்றின் தோலுக்கு இருந்த மவுசுதான் அவற்றை அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்றது. முதலைத் தோலினால் செய்யப்பட்ட ஷூக்கள், கைப்பைகள், சூட்கேஸுகள், பெல்ட்டுகள் போன்ற பொருட்கள் அழகாகவும், நீடித்து உழைப்பதாகவும், அதிகம் விரும்பப்படுவதாகவும் இருக்கின்றன. இந்த அச்சுறுத்தல்கள் தொடர்ந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பெருமளவு வெற்றி கண்டிருக்கின்றன!​—⁠கீழே உள்ள பெட்டியைப் பாருங்கள்.

புன்னகைக்க மறவாதீர்கள்!

முதலைக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் சிலரைப் பற்றி இப்போது ஓரளவு தெரிந்துகொண்ட பிறகு, நீங்கள் அவற்றைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? தவறான அபிப்பிராயங்கள் மறைந்து அவற்றின் மேல் உங்களுக்கு ஆர்வம் பிறந்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். உலகெங்குமுள்ள அநேக விலங்குப் பிரியர்கள் பெரிய உவர்நீர் முதலைக்குக்கூட பயப்பட வேண்டியிருக்காத ஒரு காலத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். ஊரும் பிராணிகளையெல்லாம் படைத்தவர் பூமியைப் புதிதாக்கும்போது, எல்லா விதமான முதலைகளையும் பார்த்து நாம் புன்னகை புரிவோம்.​—ஏசாயா 11:8, 9. (g05 3/8)

[பக்கம் 25-ன் பெட்டி/படம்]

சென்னை முதலைப் பண்ணை

ஆசியாவின் சில பகுதிகளில் இயற்கை சூழலில் வெகு சில முதலைகளே மீந்திருக்கின்றன என்று ஒரு சுற்றாய்வு காண்பித்தது; எனவே 1972-⁠ல், சென்னை பாம்பு பண்ணையில் முதலைப் பாதுகாப்பு ஆரம்பமானது. இந்தியாவிலுள்ள 30-⁠க்கும் மேற்பட்ட ஊரும் பிராணி மையங்களில் சென்னை முதலைப் பண்ணையே மிகப் பெரியதும் பழமையானதும் ஆகும். 1976-⁠ல் ஊரும் பிராணிகள் பற்றிய ஆராய்ச்சியாளரான ராம்யலஸ் விட்டகர், சோழமண்டல கடற்கரையில் எட்டரை ஏக்கர் பரப்பளவில் இப்பண்ணையை அமைத்தார். அழகிய பறவைகளையும் பூச்சிகளையும் கவர்ந்திழுக்கக்கூடிய 150 வகை மரங்கள் இந்தப் பண்ணையில் அசைந்தாடுகின்றன.

கேவியல் முதலைகளும் மற்ற முதலைகளும் அப்பண்ணையில் வளர்க்கப்பட்டு, பிறகு சதுப்பு நிலப்பகுதிகளிலும் ஆறுகளிலும் விடப்படுகின்றன. அல்லது மற்ற வளர்ப்பிடங்களுக்கும் ஆராய்ச்சி மையங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. ஒரே சமயத்தில் 2,500 முதலைக் குஞ்சுகள் வரை இப்பண்ணையில் வளர்க்கலாம். அவை சிறு குளங்களில் விடப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் கொடுக்கும் மீன்கள் அவற்றிற்கு உணவாக நறுக்கிப் போடப்படுகின்றன. அக்குளங்களின் மீது விரிக்கப்பட்டுள்ள வலைகள், இரை தேடி வரும் பறவைகள் மீன்களையோ பலவீனமான முதலைக் குஞ்சுகளையோ ‘அபேஸ்’ செய்துவிடாமல் பாதுகாக்கின்றன. இக்குஞ்சுகள் வளருகையில், சற்று பெரிய குளங்களுக்கு மாற்றப்படுகின்றன. மூன்று வயதும், நான்கு முதல் ஐந்தடி நீளமும் ஆகிற வரைக்கும் அவற்றிற்கு உணவாக முழு மீன் அளிக்கப்படுகிறது. இறைச்சி பதப்படுத்தும் கம்பெனியிலிருந்து மிச்சமாகும் மாட்டிறைச்சியும் அவற்றிற்கு உணவாக அளிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மூன்று இந்திய இன முதலைகள் மட்டுமே இப்பண்ணையில் வளர்க்கப்பட்டன. ஆனால் தற்போது அங்கே இன்னும் ஏழு இனங்கள் இருக்கின்றன. இதுவரை உலகில் அறியப்பட்டுள்ள எல்லா முதலை இனங்களையும் இங்கே கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கிறது. இவற்றின் தோலுக்காகவும், இறைச்சிக்காகவும் வர்த்தக ரீதியில் இவற்றை வளர்ப்பது குறித்து தற்போது சர்ச்சை இருந்து வருகிறது. இவற்றின் இறைச்சி சுவை மிகுந்தது, அதோடு கொழுப்புச்சத்து குறைந்தது என்று விட்டகர் விழித்தெழு!-விடம் கூறினார். இவற்றைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்ததால் அவை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றப்பட்டு, தற்போது அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் மொய்க்கும் இந்தச் சென்னை முதலைப் பண்ணை, முதலைகளைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களைக் களையவும் பொதுமக்களிடையே அவற்றைக் குறித்து நல்லெண்ணத்தை ஏற்படுத்தவும் முயல்கிறது.

[படத்திற்கான நன்றி]

Romulus Whitaker, Madras Crocodile Bank

[பக்கம் 23-ன் படம்]

ஒரு பெரிய “உவர்நீர் முதலை”

[பக்கம் 24-ன் படம்]

ஒரு பெண் உவர்நீர் முதலை தன் குஞ்சைத் தாடையில் தூக்கிச் செல்கிறது

[படத்திற்கான நன்றி]

© Adam Britton, http://crocodilian.com

[பக்கம் 24-ன் படம்]

சதுப்புநில முதலை

[படத்திற்கான நன்றி]

© E. Hanumantha Rao/​Photo Researchers, Inc.

[பக்கம் 24-ன் படம்]

நீள் மூக்கு கேவியல் முதலை