Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விலங்கு உலகில் குட்டிகளை ஊட்டி வளர்த்தல்

விலங்கு உலகில் குட்டிகளை ஊட்டி வளர்த்தல்

விலங்கு உலகில் குட்டிகளை ஊட்டி வளர்த்தல்

ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

பிள்ளைகளை வளர்ப்பதற்காக மனித பெற்றோர் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளைச் செலவழிக்கிறார்கள். மறுபட்சத்தில், அநேக விலங்குகள் குறுகிய கோடைகாலப் பகுதியிலேயே தங்கள் குட்டிகளுக்கு முழுமையான போஷாக்கையும் பயிற்சியையும் அளிக்க வேண்டியிருக்கிறது. விலங்கின பெற்றோர் சிலர் ஒவ்வொரு ஆண்டும் எதிர்ப்படுகிற சிரமத்தைப் பின்வரும் ஒருசில உதாரணங்கள் விளக்கும்.

1. வெள்ளை நாரை பக்கத்திலுள்ள படத்தில் காணப்படும் இந்த நாரைக்கு கோடை விடுமுறையே கிடையாது. ஒரு காரணம், அது தன்னுடைய கூட்டை அவ்வப்போது ‘ரிப்பேர்’ செய்ய வேண்டும். அதைவிட முக்கிய காரணம், பசியோடுள்ள இளம் குஞ்சுகளுக்கு உணவூட்டுவதற்காக தவளை, சிறு மீன், பல்லி, வெட்டுக்கிளி போன்றவற்றைத் தேடி பக்கத்திலுள்ள குளத்திற்கு எந்நேரமும் போய்வர வேண்டும். நாள் முழுக்க, பெற்றோர் இருவரும் கூட்டுக்கு வருவதும் போவதுமாக இருப்பர். இளம் பறவைகள் எக்கச்சக்கமாகச் சாப்பிடும். முதல் சில வாரங்களில் ஒவ்வொரு நாளும் தங்களுடைய உடல் எடையில் பாதி அளவான உணவைச் சாப்பிடுமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பறக்க கற்றுக்கொண்ட பிறகும்கூட, இளம் நாரைகள் தொடர்ந்து பல வாரங்களுக்குத் தங்கள் பெற்றோரையே சார்ந்து இருக்கின்றன.

2. வேட்டைச் சிறுத்தை இந்தச் சிறுத்தைகள் பெரும்பாலும் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களாகவே இருக்கின்றன. குட்டிகளைக் கவனித்துக்கொள்கிற பொறுப்பு தாய்க்கு மட்டுமே. அது மூன்று முதல் ஐந்து குட்டிகள் வரை ஈனும். குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் பருவத்தில் அது தன்னைத்தான் போதுமான அளவு போஷித்துக்கொள்ளும், அதற்காக தினசரி இரைதேட வேண்டியிருக்கும். இது ஒன்றும் லேசான வேலை அல்ல. ஏனென்றால் அதனுடைய வேட்டை முயற்சி பல முறை தோல்வியுறும். அத்துடன், குடும்பத்தோடு அடிக்கடி வேறொரு குகைக்கு அது குடிமாற வேண்டியிருக்கும். ஏனென்றால் ஆள் இல்லாத சமயம் பார்த்து சிங்கங்கள் வந்து அதன் குட்டிகளை இரையாக்கிக் கொள்ளும். ஏழு மாதங்களுக்குப் பிறகு, இரையை வேட்டையாட தாய் தன் குட்டிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது. அந்தப் பயிற்சி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் எடுக்கிறது. பொதுவாக, ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை குட்டிகள் தாயின் அரவணைப்பில் இருக்கின்றன.

3. முக்குளிப்பான் முக்குளிப்பானையும் (Little Grebe) அதன் குஞ்சுகளையும் பிரிக்கவே முடியாது. குஞ்சுகள் பொரிந்தவுடன், மிதக்கும் கூடுகளை விட்டுவிட்டு, தங்கள் பெற்றோரின் முதுகில் ஏறிக்கொள்கின்றன. இந்தக் குஞ்சுகள் தத்தித் தத்திச் சென்று பெரிய பறவையின் இறக்கைக்கும் பின்பகுதியிலுள்ள இறகுகளுக்கும் நடுவே உள்ள முதுகுப் பகுதிக்கு ஏறிவிடுகின்றன. அம்மாவும் அப்பாவும் நீந்திக்கொண்டிருக்கையில், அங்கே அவை இதமாக, பாதுகாப்பாக உணருகின்றன. இரை தேடுவது, குஞ்சுகளைச் சுமப்பது போன்ற வேலைகளை அதன் பெற்றோர் ஒருவர் மாற்றி ஒருவர் செய்கின்றனர். குஞ்சுகள் நீரில் மூழ்கி உணவைக் கண்டுபிடிக்க சீக்கிரத்திலேயே கற்றுக்கொண்டாலும், பெற்றோருடன் அவற்றிற்குள்ள பந்தம் சில காலத்திற்குத் தொடர்கிறது.

4. ஒட்டகச்சிவிங்கி ஒட்டகச்சிவிங்கிகள் பெரும்பாலும் ஒருமுறைக்கு ஒரு குட்டிதான் ஈனுகின்றன. காரணத்தைப் புரிந்துகொள்வது கஷ்டமல்ல. பக்கத்திலுள்ள ஃபோட்டோவில் இருப்பதைப் போன்ற புதிதாகப் பிறந்த ஒட்டகச்சிவிங்கிக் குட்டி 60 கிலோ எடையும் ஆறடி உயரமும் இருக்கும்! பிறந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, குட்டி தன் காலில் ஊன்றி நிற்க ஆரம்பிக்கிறது; சீக்கிரத்திலேயே தாய்ப்பாலைக் குடிக்க ஆரம்பிக்கிறது. பிறந்தவுடனே புல் மேய ஆரம்பித்தாலும், ஒன்பது மாதங்கள் வரை தாய்ப்பால் குடித்தே வளர்கிறது. ஏதாவது ஆபத்து தென்பட்டால், அது தன் தாயின் கால்களுக்கு இடையே போய் நின்றுகொள்கிறது. ஆம், எதிரிகள் கிட்டே நெருங்கினால் அவற்றைப் பலமாக எட்டி உதைத்து தாய் தன் குட்டியைப் பாதுகாத்துவிடும்.

5. மீன்கொத்தி மீன்கொத்திகள் தங்களுடைய இளம் குஞ்சுகளுக்கென மீன் பிடிக்கையில் திறமையாகவும், கவனமாகவும் தெரிந்தெடுக்க வேண்டியிருக்கிறது. புதிதாகப் பொரிந்த குஞ்சுகளுக்கு அதன் பெற்றோர் இருவரும் ஒரு இன்ச்சுக்கும் குறைவான நீளமுள்ள சிறு மீன்களை ஊட்டிவிடுவதைப் பறவையியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன் பெற்றோர், மீனின் தலை வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறபடி அதை அலகில் தூக்கிக்கொண்டு வருகின்றன. அப்போது பசியோடிருக்கும் குஞ்சுகள், மீனின் தலையிலிருந்து ஆரம்பித்து எளிதாக இரையை விழுங்க ஆரம்பிக்கின்றன. குஞ்சுகள் பெரிதாக வளருகையில், பெற்றோர் சற்று பெரிய மீன்களைக் கொண்டுவர ஆரம்பிக்கின்றனர். உணவு அளிக்கப்படும் விகிதத்தையும் அவை மெதுவாக அதிகரிக்கின்றன. முதலில், 45 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு குஞ்சுக்கும் உணவளிக்கப்படுகிறது. 18 நாட்களுக்குப் பிறகு, அவற்றிற்குப் பயங்கரமாகப் பசியெடுக்க ஆரம்பிப்பதால், 15 நிமிடத்துக்கு ஒருமுறை உணவளிக்கப்படுகிறது! இந்தப் படத்தில் காணப்படும் இளம் பறவை ஏற்கெனவே கூட்டை விட்டு வெளியேறிவிட்டது. சீக்கிரத்தில் அது தன் உணவைத் தானே தேடிக்கொள்ளும். பிள்ளை வளர்ப்பு முடிந்து விட்டதென்று பெற்றோர் நிம்மதிப் பெருமூச்சு விடுவர் என நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். ஆனால், மீன்கொத்திகள் இதற்கு விதிவிலக்கு. அதே கோடை காலத்தில் இரண்டாவது முறையாகக் குஞ்சுகளைப் பொரித்து அந்த முழு வேலையையும் மறுபடி ஆரம்பிக்கின்றன.

வித்தியாசமான விலங்குகள் தங்கள் குட்டிகளைக் கவனித்துக்கொள்கிற விதத்தைப் பற்றிய அநேக தகவல்கள் அறியப்படாமலிருப்பது உண்மைதான். என்றாலும், இயற்கை ஆராய்ச்சியாளர்கள் அவற்றை அதிகமதிகமாகக் கண்டுபிடிக்கும்போதுதான் விலங்குகள் உலகில் பெற்றோர் பாசம் என்ற இயல்புணர்வு மாபெரும் ஒரு சக்தியாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. தாம் படைத்த விலங்குகளுக்கே கடவுள் இப்படிப்பட்ட பாச உணர்வை கொடுத்திருக்கும்போது, மனித பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளை ஊட்டி வளர்த்து பாசத்தைப் பொழிய வேண்டுமென்று அவர் எதிர்பார்ப்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா? (g05 3/22)