Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இன்டர்நெட் டேட்டிங்—செய்து பார்க்கட்டுமா?”

“இன்டர்நெட் டேட்டிங்—செய்து பார்க்கட்டுமா?”

இளைஞர் கேட்கின்றனர் . . .

“இன்டர்நெட் டேட்டிங்​—⁠செய்து பார்க்கட்டுமா?”

“நாங்க தினமும் ஈ-மெயில் அனுப்பிக்கிட்டோம். எந்த இடத்தில குடித்தனம் நடத்தறது, எந்த இடத்தில வேலை செய்றதுன்னு நிறைய திட்டம்போட்டோம். நிச்சயதார்த்த மோதிரங்களை வாங்கறது என்னோட பொறுப்பா இருந்துச்சு. நாங்க ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சு ஒரு மாசம்கூட ஆகல, இதுவரை நாங்க இரண்டு பேரும் நேர்ல சந்திச்சதும் இல்ல.”​—⁠மானிக்கா, ஆஸ்திரியா. a

யாரோ ஒருவரைச் சந்தித்தே தீர வேண்டுமென நீங்கள் துடிக்கிறீர்கள். யாரை? நீங்கள் பழகிப் பார்த்து கல்யாணம் செய்துகொள்ள விரும்பும் ஒருவரை. ஆனால், உங்கள் மனதிற்குப் பிடித்தவர் இன்னும் யாருமே அமையவில்லை, உங்கள் முயற்சிகளெல்லாம் வீணாகிப் போயிருக்கிறது. உங்களை ஒரு நபருடன் இணைத்து வைக்க உங்கள் சொந்தபந்தங்கள் நல்ல எண்ணத்தோடு பல முயற்சிகள் எடுத்திருந்தபோதிலும், அதனால் கடைசியில் உங்களுக்கு மானக்கேடுதான் ஏற்பட்டிருக்கிறது, இப்போது இன்னுமதிகமாக மனமொடிந்துப் போயிருக்கிறீர்கள். இந்த நிலையில், தொழில்நுட்பத்தின் உதவியை நாடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்த கம்ப்யூட்டர் யுகத்தில், ஏற்ற ஒரு ஜோடியைக் கண்டுப்பிடிக்க கம்ப்யூட்டர் பட்டன்களை வெறுமனே ‘க்ளிக்’ ‘க்ளிக்கென்று’ சில முறை தட்டினாலே போதும் போல தோன்றலாம். கல்யாணம் ஆகாதவர்களுக்கென்று விசேஷமாய்த் திட்டமைக்கப்பட்ட வெப் சைட்டுக்குள், இன்டர்நெட் சாட் ரூமுக்குள் அல்லது புல்லெட்டின் போர்டிற்குள் நீங்கள் நுழைந்தாலே போதும் காரியம் கைகூடிவிடுமென சிலர் சொல்லலாம். இப்படி ஆன்-லைன் டேட்டிங் செய்வதற்கான வெப் சைட்களை அமெரிக்காவில் மட்டும், ஒரு மாதத்தில் 4.5 கோடி பேர் ‘விசிட்’ செய்தார்கள் என்று த நியு யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. ஜோடி சேர்த்து வைக்கும் இன்டர்நெட் நிறுவனம் ஒன்று, 240 நாடுகளில் 90 லட்சத்திற்கும் அதிகமானோர் அதன் வெப் சைட்டைப் பயன்படுத்துவதாகச் சொன்னது.

ஆன்-லைன் டேட்டிங் மனம் கவருகிறது

நீங்கள் கூச்ச சுபாவமுள்ளவரா, ஜனங்களைச் சந்திப்பதென்றாலே உங்களுக்குச் சங்கடமாக இருக்கிறதா? வேண்டாமென ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்று பயப்படுகிறீர்களா? அல்லது உங்களுக்கு ஏற்றவர் நீங்கள் வசிக்கும் பகுதியில் இல்லை என்று நினைக்கிறீர்களா? ‘ஆம்’ என்றால், கம்ப்யூட்டர் டேட்டிங் உங்கள் மனதைக் கவருவதாக இருக்கலாம். அது அப்படி மனங்கவருவதற்கு ஒரு காரணம், நீங்கள் “டேட்டிங்” செய்யப்போகிற நபரை உங்கள் இஷ்டப்படி தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதில் இருப்பதாக ஜோடி சேர்த்து வைக்கும் ஆன்-லைன் நிறுவனங்கள் உங்களிடம் சொல்வதே. நபர்களுடைய வயது, நாடு, குணாம்சம், ஃபோட்டோக்கள், புனைப்பெயர்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அந்தந்த பட்டன்களைத் தட்டினால் போதும் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்துவிடலாம். இப்படி ஏராளமான ‘சாய்ஸ்’ இருப்பதால், ஆன்-லைன் டேட்டிங் செய்வது ரொம்பவே ‘பெஸ்ட்’ என்பது போலத் தோன்றலாம், அதுமட்டுமல்ல, நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவதைக் காட்டிலும் இதில் ‘டென்ஷன்’ ரொம்ப குறைவு என்பது போலவும் தோன்றலாம்.

ஆனால், உண்மை என்ன? ஆன்-லைன் டேட்டிங் செய்வது நிஜமாகவே நிரந்தர சந்தோஷத்திற்கு வழிநடத்துகிறதா? இந்த விஷயத்தைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: ஜோடி சேர்த்து வைக்கும் நிறுவனம் ஒன்றில் ஆறு வருட சமயத்தின்போது 1.1 கோடி பேர் அங்கத்தினர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்களில் 1,475 பேருக்கு மட்டுமே திருமணம் நடந்தது. மற்றொரு டேட்டிங் நிறுவனம் ஒன்றில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் அங்கத்தினர்களாக இருந்தபோதிலும், 75 திருமணங்கள் மட்டுமே நடைபெற்றன! அப்படியானால், இத்தகைய இன்டர்நெட் டேட்டிங்கில் உள்ள பிரச்சினைதான் என்ன?

ஒருவரையொருவர் சரியாக எடைபோட இது சிறந்த வழியா?

“இன்டர்நெட்டில், எல்லாருமே கவர்ச்சியானவர்களாயும், நேர்மையானவர்களாயும், வெற்றிகண்டவர்களாயும் காட்டப்படுகிறார்கள்” என ஒரு செய்தித்தாள் கட்டுரை கூறியது. ஆனால், ஜனங்கள் தங்களைப் பற்றித் தாங்களே அளிக்கும் விஷயங்கள் எந்தளவு உண்மையானவை? “எல்லாருமே கொஞ்சமாவது பொய்ச் சொல்வார்கள் என்பதை நாம் எதிர்பார்க்கத்தான் வேண்டும்” என மற்றொரு செய்திக்கட்டுரை குறிப்பிட்டது. டீனேஜர்களுக்கான பிரபல பத்திரிகை ஒன்றின் பதிப்பாசிரியை அதைக் குறித்துக் கொஞ்சம் தனிப்பட்ட ஆராய்ச்சி செய்தார். மிகப் பிரபலமான டேட்டிங் வெப் சைட்களில் தன்னுடைய பெயரைப் பதிவுசெய்தார்; விரைவில் ஏராளமான பேரிடமிருந்து அவருக்குப் பதில் வந்தது. இதனால் நிறைய ஆண்களோடு அவரால் டேட்டிங் செய்ய முடிந்தது. விளைவு? படுதோல்வி! அந்த ஆண்கள் அப்பட்டமாகப் பொய்ச் சொல்லியிருந்தார்கள். எனவே, “அனுபவப்பூர்வமாக சொல்கிறேன், அவர்கள் எல்லாரும் பொய் பேசுபவர்கள்தான்” என அவர் எச்சரிக்கிறார்.

ஒருவர் தன்னுடைய உயரத்தைப் பற்றியோ எடையைப் பற்றியோ கொஞ்சம் ‘கதைவிடுவது’ ஒருவேளை சின்ன விஷயமாகவே தோன்றலாம். ‘பார்க்க எப்படியிருந்தா என்ன, அது முக்கியமல்ல’ எனச் சிலர் சொல்லலாம். உண்மைதான், “செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்” என்று பைபிள்கூட சொல்கிறது. (நீதிமொழிகள் 31:30) ஆனால், சிறிய விஷயங்களாகத் தோன்றுகிற காரியங்களில் பொய்ச் சொல்வது, ஒரு பந்தத்தை ஆரம்பிப்பதற்கு ஒரு நல்ல வழியாக இருக்குமா? (லூக்கா 16:10) அப்படிப்பட்ட ஒரு நபர் அதிக முக்கியமான விஷயங்களைப் பற்றி, அதாவது சொந்த இலட்சியங்கள் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசினாரென்றால், அவற்றை நீங்கள் எந்தளவு நம்புவீர்கள்? “அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (சகரியா 8:16) ஆம், நேர்மை என்பது ஒரு பந்தத்திற்கு அஸ்திவாரமாய் இருந்து, அது மேன்மேலும் வளர வழிசெய்யும்.

என்றாலும், இன்டர்நெட் டேட்டிங்கில் ஈடுபடுவது பெரும்பாலும் ஆகாயத்தில் கோட்டை கட்டுவது போலத்தான் இருக்கிறது. நியூஸ்வீக் பத்திரிகையில் ஓர் அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஆன்-லைன் டேட்டிங் செய்பவர்கள் தங்களுடைய ஈ-மெயில்களில் வார்த்தைகளை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து, உச்சிகுளிர வைக்கும் விதத்தில் தங்களையே அறிமுகம் செய்துகொள்ள முடிகிறது. . . . இதன் விளைவு? எதிர்பார்த்த பதில் கிடைக்கிறது: அவர்கள் இனியவர்களாகவும் உங்களை விரும்புகிறவர்களாகவும் இருப்பது போல் உங்களுக்குத் தெரிவதால், நீங்களும் இனியவர்களாக, அவர்களை விரும்புகிறவர்களாக ஆகிவிடுகிறீர்கள்.” அத்தகைய சூழ்நிலைகளில், ரொம்பவே நெருக்கமான ஒரு பந்தம் ஏற்பட்டுவிடலாம் என்று ஆன்-லைன் டேட்டிங் செய்பவர்களைப் பற்றி ஆய்வு நடத்தும் நியு யார்க்கின் ரின்ஸலார் பாலிடெக்னிக் பயிலகத்திலுள்ள ஒரு பேராசிரியர் தெரிவிக்கிறார். ஆனால், இது சந்தோஷமான திருமணத்திற்கு வழிநடத்துவதில்லை என்பதுதான் அடிக்கடி கவனிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் டேட்டிங்கில் தன்னுடைய அனுபவத்தைப் பற்றி ஒருவர் இவ்வாறு எழுதினார்: “இது ஒரு கண்ணி. எந்தெந்த விவரங்கள் இல்லையோ, அவற்றை உங்களுக்குப் பிடித்தமான விதத்தில் நீங்களே உங்கள் கற்பனையில் பூர்த்திசெய்து விடுவீர்கள்.”

நேருக்கு நேர்

என்றாலும், ஒருவரையொருவர் சந்திக்காமல் இருப்பதில் நிச்சயமாகவே பல நன்மைகள் உள்ளதாகச் சிலர் நினைக்கலாம். தங்கள் எதிர்கால மணத்துணை உள்ளுக்குள் எப்படிப்பட்டவராய் இருக்கிறார் என்பதற்குக் கவனம் செலுத்த இந்த ஆன்-லைன் டேட்டிங் உதவுவதாகவும் வெளித்தோற்றத்தைக் கண்டு குழம்பிவிடாதிருக்க அது உதவுவதாகவும் அவர்கள் நினைக்கலாம். உண்மைதான், உள்ளத்தில் மறைந்திருக்கிற குணங்களுக்கே கவனம் செலுத்த வேண்டுமென பைபிளும்கூட நம்மை உற்சாகப்படுத்துகிறது. (1 பேதுரு 3:4) ஆனால், இத்தகைய கம்ப்யூட்டர் உறவுகளில், ஒருவருடைய சைகைகளையோ, புன்னகையையோ, முகபாவனையையோ உங்களால் கவனிக்க முடியாது. அவ(ள்)ன் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தை அல்லது ஏதோவொரு அழுத்தம் ஏற்படும்போது நடந்துகொள்ளும் விதத்தை உங்களால் பார்க்க முடியாது. உங்களுடைய நம்பிக்கைக்கும் அன்புக்கும் அவ(ள்)ன் பாத்திரமானவ(ளா)ரா இல்லையா என்று தீர்மானிக்கும்போது இந்த விஷயங்களையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்வது ரொம்பவும் முக்கியமாகும். அன்பைப் பற்றி பைபிள் வர்ணிப்பதை வாசித்துப் பாருங்கள், அது 1 கொரிந்தியர் 13:4, 5-⁠ல் உள்ளது. அன்பு என்பது வார்த்தைகளை மையமாக வைத்தல்ல, ஆனால் நடத்தையை மையமாக வைத்து விளக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். ஆகவே, ஒரு நபர் தன்னுடைய வார்த்தைகளுக்கு ஏற்ப நடக்கிறாரா இல்லையா என்பதைக் கவனிப்பதற்கு நீங்கள் கட்டாயம் நேரமெடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ளாமல், டேட்டிங் செய்யத் தொடங்கும் சமயத்திலிருந்தே ஓர் ஆணும் பெண்ணும் தங்களுடைய அந்தரங்க உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களில் சிலர், எச்சரிப்பு மணியைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், முக்கியமான காதல் வாக்குறுதிகளை அவசரப்பட்டுக் கொடுத்து விடுகிறார்கள், ஒருவரைப் பற்றி ஒருவருக்கு அவ்வளவாகத் தெரியாதபோதிலும்! “இன்டர்நெட் காதல் உண்மையிலேயே குருடானது” என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரை, 12,800 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஓர் ஆணும் பெண்ணும் இன்டர்நெட்டில் தொடர்புகொண்டது பற்றிச் சொல்கிறது. மூன்று வாரங்கள் கழித்து அவர்கள் நேரில் சந்தித்தார்கள். “கண்களுக்கு அவள் நிறைய மஸ்காரா போட்டிருந்தாள். மஸ்காரா போட்டுக்கொள்ளும் பெண்களோடு நான் டேட்டிங் செய்ய மாட்டேன்” என்றான் அவன். பட்டென்று அவர்களுடைய உறவு முறிந்தது. இப்படி நேரில் சந்தித்துக்கொண்ட மற்றொரு ஜோடியின் அனுபவத்தில், பையனுக்குப் பயங்கர ஏமாற்றமாகிப் போய்விட்டது, அதனால் அந்தப் பெண்ணுக்காக தான் வாங்கி வைத்திருந்த ரிட்டர்ன் டிக்கெட்டையே அவன் கான்ஸல் செய்துவிட்டானாம்!

எட்டா என்ற இளம் பெண் ஆன்-லைன் டேட்டிங்கில் தன்னுடைய அனுபவத்தைச் சொல்கிறாள்: “எங்களுடைய உறவு ரொம்ப ரொம்ப ஜோராக இருந்தது. கல்யாணம் செய்துகொள்ள திட்டமிட்டுக் கொண்டிருந்தோம்.” ஆனால், ஒருவரையொருவர் நேரில் சந்தித்தபோது, அவர்களுடைய உறவு படுதோல்வியடைந்தது. “நான் நினைத்த மாதிரி அவன் இருக்கவில்லை, எப்போதும் குறை கண்டுபிடிப்பவனாக இருந்தான், முணுமுணுப்பவனாக இருந்தான். இது நிச்சயம் சரிப்பட்டு வராதென்று முடிவு செய்தேன்.” ஒரு வாரம் கழித்து அவர்களுடைய உறவு அறுந்தது, எட்டாவின் மனம் நொறுங்கிப் போனது.

கம்ப்யூட்டர் டேட்டிங் எனும் மாயையில் மிதந்துகொண்டிருக்கும்போது, உணர்ச்சிகள் குபுகுபுவென மேலெழும்பலாம், அதுவும் வெகு சீக்கிரத்திலேயே எழும்பிவிடலாம். ஒருவேளை இந்த உறவு வெற்றிகரமாக அமையாவிட்டால், உங்கள் மனதையே அது சுக்குநூறாக்கி விடலாம்​—⁠பெரும்பாலும் அப்படித்தான் ஆகிறது. “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்” என்று நீதிமொழிகள் 28:26 எச்சரிக்கிறது. ஆம், நிறைவேற முடியாதவற்றின் அடிப்படையிலும், உணர்ச்சிகளின் அடிப்படையிலும் முக்கியமான தீர்மானங்களை எடுப்பது ஞானமல்ல. அதே நீதிமொழிகள் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான் [அதாவது, தப்பித்துக்கொள்வான்].”​நீதிமொழிகள் 28:26.

அவசரப்படுவதால் ஏற்படும் ஆபத்துகள்

ஒருவரைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்வதற்கு முன்னரே அவரோடு பழக ஆரம்பிப்பது நிச்சயமாகவே ஞானமல்ல. ஆங்கில எழுத்தாளரான ஷேக்ஸ்பியர் இவ்வாறு சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது: “அவசரத் திருமணம் வெற்றி பெறுவது வெகு அபூர்வம்.” பைபிள் அதை இன்னும் நேரடியாகச் சொல்கிறது: ‘பதறுகிறவனுடைய [அதாவது, அவசரப்படுகிறவனுடைய] நினைவுகள் தரித்திரத்துக்கு ஏதுவாகும்.’​—நீதிமொழிகள் 21:5.

வருத்தகரமாக, இன்டர்நெட் டேட்டிங்கில் ஈடுபடுகிற அநேகருடைய விஷயத்தில் அது உண்மையாகி விட்டிருக்கிறது. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மானிக்கா ஓர் ஆளுடன் ஒரு மாதத்திற்கு இன்டர்நெட்டில் தொடர்பு வைத்திருந்தாள், தன் மனதிற்குப் பிடித்த மணவாளன் அமைந்துவிட்டதாக அப்போது நினைத்தாள். ஆனால், திருமணத்திற்கு வேண்டிய திட்டங்களெல்லாம் போட்ட பிறகு​—⁠நிச்சயதார்த்த மோதிரங்களைக்கூட வாங்க ஏற்பாடு செய்த பிறகு​—⁠அவளுடைய அவசர உறவு “ஆழ்ந்த துக்கத்தில்” முடிவடைந்தது.

பைபிளின் பின்வரும் ஆலோசனைக்குச் செவிகொடுப்பதன் மூலம் அப்படிப்பட்ட மனவேதனையை நீங்கள் தவிர்க்கலாம்: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.” (நீதிமொழிகள் 22:3) என்றாலும், கம்ப்யூட்டர் டேட்டிங்கினால் உங்களுக்கு ஏற்படுவது ஏமாற்றமும் மன வேதனையும் மட்டுமே அல்ல. அதனால் ஏற்படும் இன்னும் பல பிரச்சினைகளைப் பற்றி அடுத்த இதழில் வரும் கட்டுரை கலந்தாலோசிக்கும். (g05 4/22)

[அடிக்குறிப்பு]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 13-ன் படம்]

ஆன்-லைனில் தொடர்புகொள்ளும்போது, ஆட்கள் பெரும்பாலும் தங்களைப் பற்றி கொஞ்சம் ‘ஓவராக’ கதையடிக்கிறார்கள் அல்லது தங்களைப் பற்றிப் பொய் சொல்கிறார்கள்

[பக்கம் 14-ன் படம்]

ஈ-மெயிலில் பல முறை காதல் ‘கடிதங்களை’ அனுப்பிக்கொண்ட ஜோடிகளின் நேருக்கு நேர் சந்திப்பு பெரும்பாலும் ஏமாற்றத்திலேயே முடிவடைந்திருக்கிறது