Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இன்றைய இளைஞர்களுக்கு உதவி

இன்றைய இளைஞர்களுக்கு உதவி

இன்றைய இளைஞர்களுக்கு உதவி

இவ்வுலகம் சிலசமயங்களில் கிலி உண்டாக்குகிறது; இப்படிப்பட்ட உலகில் வளர்ந்து வரும் இளைஞர்களில் சிலர், பெற்றோர் பிரிந்து போவதை அல்லது விவாகரத்து செய்து கொள்வதைப் பார்த்து செய்வதறியாது தவிக்கிறார்கள். சக மாணவர்கள் போதைப்பொருட்களை துஷ்பிரயோகம் செய்வதையும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதையும் மற்ற இளைஞர்கள் பார்க்கிறார்கள். இன்னும் அநேகர், பாலுறவில் ஈடுபடும்படி இரு பாலாராலும் வற்புறுத்தப்படுகிறார்கள். அதுபோக, கிட்டத்தட்ட எல்லா பருவ வயதினரும் மனஸ்தாபம், தனிமை, மனச்சோர்வு போன்றவற்றால் அவ்வப்போது அல்லாடுகிறார்கள்.

சவால்களை சமாளிக்க இளைஞர்களுக்கு எது தேவை? “பிள்ளைகளுக்கு உறுதியான தார்மீக நங்கூரம் தேவை; நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கவும், சரியான தீர்மானங்களை எடுக்கவும், மற்றவர்கள் மீது அனுதாபம் காட்டவும் உதவுகிற தார்மீக நங்கூரம் தேவை” என டாக்டர் ராபர்ட் ஷா எழுதுகிறார். பைபிள் அப்படிப்பட்ட மிகச் சிறந்த நங்கூரமாக இருக்கிறது, ஏனெனில் படைப்பாளரின் எண்ணங்களை அது பெற்றிருக்கிறது. இந்தக் கடினமான காலங்களை சமாளிக்க நமக்கு எது தேவையென யெகோவா தேவனைத் தவிர வேறு யாரால் நன்கு அறிந்திருக்க முடியும்?

எதார்த்தமான, நடைமுறையான வழிகாட்டி

பைபிளிலுள்ள நியமங்கள் எதார்த்தமானவை, நடைமுறையானவை. இளைஞரை நல்ல விதமாக வளர்த்து ஆளாக்க விரும்பும் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் மிக மதிப்புவாய்ந்தவை.

உதாரணத்திற்கு, “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்” என பைபிள் எதார்த்தமாக சொல்கிறது. ஆம், டுடேஸ் இங்லிஷ் வர்ஷன் சொல்கிறபடி, “பிள்ளைகள் இயல்பாகவே முட்டாள்தனமாக காரியங்களை யோசிக்காமல் செய்கிறார்கள்.” (நீதிமொழிகள் 22:15) சில டீனேஜர்கள் வயதுக்கு மிஞ்சிய முதிர்ச்சியோடு நடந்துகொள்ளலாம், ஆனாலும் அவர்கள் இன்னமும் அனுபவமில்லாத இளைஞர்களே. வளரும் பருவத்திற்கே உரிய ஆசைகளும் குழப்பமான உணர்வுகளும் தன்னம்பிக்கை குறைவும் இவர்களில் எவரையும் விட்டுவைப்பதில்லை. (2 தீமோத்தேயு 2:22) ஆக, இப்படிப்பட்ட இளைஞர்களுக்கு எவ்வாறு உதவலாம்?

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே எப்போதும் பேச்சுத்தொடர்பு இருக்க வேண்டுமென பைபிள் ஊக்குவிக்கிறது. அது பெற்றோரைப் பின்வருமாறு அறிவுறுத்துகிறது: ‘நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளை [கடவுளுடைய தராதரங்களை] குறித்துப் பேசு.’ (உபாகமம் 6:6, 7) இப்படிப்பட்ட பேச்சு இரு விதங்களில் பயனளிக்கிறது. முதலாவதாக, அது கடவுளுடைய வழிகளில் நடக்க இளைஞர்களைத் தூண்டுகிறது. (ஏசாயா 48:17, 18) இரண்டாவதாக, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே எப்போதும் பேச்சுத்தொடர்பு இருக்க வழிசெய்கிறது. முக்கியமாக, பருவ வயதில் இளைஞர்கள் கூச்சத்தோடு தனியே ஒதுங்கிக்கொள்வது இயல்பு என்பதால் அந்தப் பேச்சுத்தொடர்பு மிக அவசியம்.

பெரும்பாலான இளைஞர்கள் அவ்வப்போது தனிமை உணர்வால் அவதியுறுவது உண்மைதான். ஆனால் சிலர், தீராத தனிமை உணர்வால் தவிக்கிறார்கள். “இப்படிப்பட்ட இளைஞர்கள், தங்களுக்கு ஸ்கூலில் நண்பர்கள் கிடைப்பது கடினம், தங்களோடு பேசுவதற்கு யாருமே இல்லை, தனிமை வாட்டுகிறது, மற்ற பிள்ளைகளுக்குத் தங்களைப் பிடிக்கவே பிடிக்காது, தங்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்றெல்லாம் சொல்கிறார்கள்” என பருவ வயது சம்பந்தமாக ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. a

பெற்றோரும் அக்கறையுள்ள மற்றவர்களும் இளைஞர்கள் மீது கரிசனை காட்டி, பிரச்சினைகளை சமாளிக்க அவர்களுக்கு உதவலாம். எப்படி? “இளைஞர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரே வழி அவர்களிடமே கேட்டுவிடுவதுதான்” என இளைஞர்களுக்கான ஒரு பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் எழுதுகிறார். இளைஞர்களை மனம் திறந்து பேச வைப்பதற்கு நிச்சயமாகவே நேரமும் பொறுமையும் அவசியம். ஆனால் கைமேல் பலன் கிடைப்பதை வைத்துப் பார்க்கும்போது எப்பேர்ப்பட்ட முயற்சியும் தகும் என்றே சொல்லலாம்.​—நீதிமொழிகள் 20:⁠5.

நியாயமான வரம்புகளுக்கான தேவை

பேச்சுத்தொடர்பு தவிர, நியாயமான வரம்புகளும் இளைஞர்களுக்குத் தேவை, சொல்லப்போனால் அப்படிப்பட்ட வரம்புகளைப் பெற வேண்டும் என்பதுதான் அவர்களுடைய அடிமனதிலுள்ள விருப்பம். ‘தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளை தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான்’ என பைபிள் குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 29:15) தெளிவான வரம்புகள் இல்லாதது இளம் குற்றவாளிகள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கலாமென நிபுணர்கள் நினைக்கிறார்கள். “‘கூடாது’ என்ற வார்த்தைக்கே இடமில்லாமல், எவ்வித வரம்புகளும் வைக்காமல், அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து பிள்ளையை வளர்க்கும்போது, மற்றவர்களுக்குக்கூட வாழ்க்கையும் உணர்ச்சிகளும் தேவைகளும் விருப்பங்களும் உண்டு என்பதை அவன் உணர வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது” என டாக்டர் ஷா சொல்கிறார். “மற்றவர் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்கத் தெரியாத பிள்ளையால் அன்பு காட்ட முடியாது” என்கிறார்.

சிக்கலில் மாட்டிக்கொள்ளும் இளைஞர்களுக்கு அநேக ஆண்டுகளாக உதவி செய்த டாக்டர் ஸ்டான்டன் சாமனோ இதேபோன்ற கருத்தைத் தெரிவிக்கிறார். “பிள்ளைகள் சுதந்திரப் பறவைகளாக இருக்க வேண்டுமென சில பெற்றோர் நினைக்கிறார்கள். பொறுப்புக்களையோ வரம்புகளையோ அவர்கள்மீது சுமத்துவது, அவர்களுக்குத் தாங்க முடியாத சுமையாகிவிடும் என்றும் பிள்ளைப் பருவத்தை அனுபவிக்க முடியாமல் செய்துவிடும் என்றும் அவர்கள் பேதைத்தனமாக நினைக்கிறார்கள். வரம்புகளை வைக்காமல் போனால்தான் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். கண்டிப்பில்லாமல் வளர்க்கப்படும் பிள்ளைக்கு சுயகட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது மிகக் கடினமாகிவிடும் என்பதை அவர்கள் உணருவதில்லை.”

பெற்றோர் எப்போதுமே கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை. வரம்புகளை நிர்ணயிப்பது சிறந்த பெற்றோராக இருப்பதன் ஓர் அம்சம் மட்டுமே. இதை மிதமிஞ்சி செய்தால் வீட்டில் இறுக்கமான சூழ்நிலையே நிலவும். “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்” என பைபிள் சொல்கிறது.​—கொலோசெயர் 3:21; எபேசியர் 6:⁠4.

ஆகவே பெற்றோர் தங்கள் போதனா முறைகளையும் கண்டிப்பு முறைகளையும் அவ்வப்போது சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்; முக்கியமாக பிள்ளைகள் வளர்கையில், அதுவும் முதிர்ச்சிக்கான அறிகுறிகள் அவர்களில் தென்படுகையில் பெற்றோர் அதைச் செய்வது அவசியம். பிள்ளைக்கு எந்தளவு பொறுப்பு வந்திருக்கிறது என்பதை மனதில் வைத்து, அவர்கள் சில வரம்புகளை தளர்த்தலாம் அல்லது சற்று மாற்றலாம்.​—பிலிப்பியர் 4:⁠5, NW.

பாலங்கள் அமைத்தல்

சென்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டபடி, கடவுள் இவ்வுலகிலிருந்து அக்கிரமங்களை ஒழிப்பதற்கு முன்பு “கொடிய காலங்கள்” நிலவும் என பைபிள் முன்னறிவித்தது. அந்தக் காலங்களிலேயே, அதாவது அவபக்தியான உலகின் ‘கடைசி நாட்களிலேயே’ நாம் வாழ்கிறோம் என அத்தாட்சி காட்டுகிறது. பெரியவர்களைப் போலவே இளைஞர்களும், ‘தற்பிரியரான, . . . சுபாவ அன்பில்லாத, . . . இச்சையடக்கமில்லாத’ மக்கள் நிறைந்துள்ள உலகில் கஷ்டப்பட்டு வாழ வேண்டியிருக்கிறது.​—2 தீமோத்தேயு 3:1-5. b

பருவ வயது மகனோடு அல்லது மகளோடு தொடர்பே இல்லாமல் போய்விட்டதாக உணரும் பெற்றோர், தங்களுக்கிடையே பாலங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கலாம். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பிக்கலாம். அநேக பெற்றோர் பிள்ளைகளுடைய வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தவும் முக்கிய பங்காற்றவும் கடினமாக முயற்சி செய்வது பாராட்டத்தக்கது.

இவ்விஷயத்தில் பைபிள் மிகச் சிறந்த கருவியாக இருக்கிறது. தங்கள் பங்கை நிறைவேற்ற அநேக பெற்றோருக்கு அது உதவியிருக்கிறது; மிக ஆபத்தான படுகுழிகளில் விழாதிருக்க இளைஞர்களுக்கும் உதவியிருக்கிறது. (உபாகமம் 6:6-9; சங்கீதம் 119:9) பைபிள், நம் படைப்பாளராகிய யெகோவா தேவனால் கொடுக்கப்பட்டிருப்பதால், இன்றைய இளைஞர்களுக்கு அது மிகச் சிறந்த விதத்தில் உதவும் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். c(g05 4/8)

[அடிக்குறிப்புகள்]

a அதே புத்தகம் குறிப்பிடுகிறபடி, அவ்வப்போது தனிமையாக உணரும் இளைஞர்களைப் போலன்றி, தீராத தனிமையுணர்வால் வாடும் இளைஞர்கள் நீடித்த காலத்திற்கு, அதுவும் பெரும்பாலான நேரம் தனிமையாக உணருகிறார்கள். “நண்பர்கள் எப்போதுமே கிடைக்க மாட்டார்கள், அது தங்கள் கையில் இல்லை, தங்களுடைய குறைகளால்தான் இந்தக் கதி,” இந்நிலைமையை “மாற்ற முடியாது, இது மாறவே மாறாது” என்றெல்லாம் அவர்கள் நினைக்கிறார்கள்.

b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் 11-ஆம் அதிகாரத்தைக் காண்க.

c இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற பைபிள் சார்ந்த புத்தகம் மிகுந்த உதவியளிப்பதாக யெகோவாவின் சாட்சிகள் கண்டிருக்கின்றனர். அதன் 39 அதிகாரங்கள் ஒவ்வொன்றும், சிந்தனையைத் தூண்டும் ஒரு கேள்வியைப் பற்றி கலந்தாலோசிக்கின்றன. அதன் தலைப்புகளில் சில: “நான் எவ்வாறு உண்மையான நண்பர்களை அடைய முடியும்?” “சகாக்களின் செல்வாக்கு வலிமையை நான் எவ்வாறு எதிர்த்துச் சமாளிக்கலாம்?” “என் தனிமையுணர்வை நான் போக்குவது எவ்வாறு?” “எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட நான் தயாரா?” “போதை மருந்துகளுக்கு ‘முடியாது’ என்று ஏன் சொல்ல வேண்டும்?” “விவாகத்துக்கு முன்னான பாலுறவு பற்றி என்ன?”

[பக்கம் 10-ன் படம்]

வயதில் பெரியவரும் அக்கறை காட்டுபவருமான ஒருவருடன் உங்கள் கவலைகளைப் பற்றி பேசுங்கள்