Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளைஞர்கள் நெருக்கடியில்

இளைஞர்கள் நெருக்கடியில்

இளைஞர்கள் நெருக்கடியில்

◼ அமெரிக்காவில், 15 வயது மாணவன் ஒருவன் வகுப்பிலிருந்த மற்ற மாணவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளியதில், 2 பேர் பிணமானார்கள், 13 பேர் படுகாயமடைந்தார்கள்.

◼ ரஷ்யாவில், குடித்து வெறித்துப்போன இளசுகளின் ஒரு கும்பல், ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்து, அவளுடைய அப்பாவையும் அண்ணனையும் அடித்துப்போட்டது.

◼ பிரிட்டனில், 17 வயது இளைஞன் இன்னொரு பையனை கண்மண் தெரியாமல் அடித்து, கத்தியால் குத்திக் கொலை செய்தான். “முதலில் அவனை கொல்ல நினைக்கவில்லை, ஆனால் ரத்தத்தைப் பார்த்தவுடன் கொல்லாமலிருக்க முடியவில்லை” என அவன் போலீசிடம் தெரிவித்தான்.

இப்படிப்பட்ட அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் சர்வசகஜமாகி வருகின்றன. இவை எப்போதாவது எங்கேயாவதுதான் நடக்கின்றன என உதறித்தள்ள முடியாது. “இளசுகள் அடிதடியிலும் குத்துவெட்டிலும் இறங்கிவிடுவது மிகப் பெரிய சமுதாயப் பிரச்சினை” என புரொஃபஷெனல் ஸ்கூல் கௌன்சலிங்-⁠ல் வெளியான ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது. புள்ளிவிவரங்களும் இந்த உண்மையை ஆதரிக்கின்றன.

அமெரிக்க பள்ளிகளில், அறிக்கை செய்யப்பட்ட வன்முறை சம்பவங்கள் சற்று குறைந்திருந்தாலும், “2001-⁠ல், 12-18 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர் பள்ளியில் சுமார் 20 லட்சம் குற்றச்செயல்களுக்கு (உயிர் சேதமில்லாத குற்றச்செயல்களுக்கு) அல்லது திருட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்” என ஐ.மா. கல்வி புள்ளியியலுக்கான தேசிய மையம் குறிப்பிடுகிறது. மாணவர்கள் உருட்டல்மிரட்டல்களுக்கு ஆளாவதும் அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன.

ஆனால் அமெரிக்காவில் மாணவர்கள் மற்ற மாணவர்களை தாக்குவதோடு மட்டுமே நிறுத்திக்கொள்வதில்லை. “1997 முதல் 2001 வரையான ஐந்து வருடங்களில், பள்ளி ஆசிரியர்கள் சுமார் 13 லட்சம் குற்றச்செயல்களுக்கு ஆளானார்கள், அதில் 8,17,000 திருட்டுகளும் 4,73,000 வன்முறைத் தாக்குதல்களும் (உயிர் சேதமில்லாத தாக்குதல்களும்) அடங்கும்” என அதே மையம் குறிப்பிடுகிறது. அதுமட்டுமின்றி, “தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிலும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களிலும் 9 சதவீதத்தினர், தாக்கப்படப்போவதாக மாணவரால் மிரட்டப்பட்டிருக்கின்றனர், அவர்களில் 4 சதவீதத்தினர் நிஜமாகவே அவ்வாறு தாக்கப்பட்டிருக்கின்றனர்.”

மற்ற நாடுகளின் நிலவரம் எப்படி? “2003-ஆம் ஆண்டு சீனாவில் சட்டவிரோத செயல்களுக்காக 69,780 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், இது 2002-ஆம் ஆண்டைவிட 12.7 சதவீதம் அதிகமாகும்” என ஒரு செய்தி அறிக்கை தெரிவித்தது. “இளைஞரின் குற்றச்செயல்களில் 70 சதவீதம் கூட்டுக் குற்றச்செயல்களே” என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. ஜப்பானில் 2003-ஆம் ஆண்டு வெளியான ஓர் அறிக்கைகூட, கடந்த 10 ஆண்டுகளில் நடந்த குற்றச்செயல்களில் பாதிக்குக் காரணம் இளைஞர்கள் என குறிப்பிட்டது.

இளம் உடல்களில் போதைப்பொருட்களின் தாக்குதல்

அநேக இளைஞர்கள் தங்கள் உடலையே தாக்கிக்கொள்வது மற்றொரு சிக்கல். அமெரிக்காவிலுள்ள டீனேஜர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் சட்டவிரோத போதைப்பொருள் ஒன்றை ‘ருசி கண்டிருக்கின்றனர்’ என ஐ.மா. போதைப்பொருள் துஷ்பிரயோக தேசிய நிறுவனம் குறிப்பிடுகிறது. “இன்று டீனேஜர்கள் மதுபானம் அருந்துவது மிகப் பரவலான பிரச்சினையாக இருந்து வருகிறது. மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் ஐந்தில் நான்கு (77%) மாணவர்கள் (கணிசமான அளவு) மதுபானம் அருந்தியிருக்கின்றனர்; கிட்டத்தட்ட பாதிப்பேர் (46%) 8-வது வகுப்பை முடிப்பதற்குள் மதுபானம் அருந்தியிருக்கின்றனர்.”

பலருடன் பாலுறவு

எய்ட்ஸ் தாண்டவமாடும் இந்தக் காலத்தில் பலருடன் பாலுறவில் ஈடுபடுவது நிச்சயமாகவே ஆபத்தானது. இருந்தாலும் செக்ஸ் ஒரு தீங்கற்ற விளையாட்டு என்றே அநேக இளைஞர்கள் நினைக்கின்றனர். உதாரணத்திற்கு, சில அமெரிக்க இளைஞர்கள், பொழுதுபோக்கிற்காக மட்டுமே உடலுறவில் ஈடுபடுவதை நாகரிக பாஷையில் “பழக்கம்” (hooking up) என சொல்லிக்கொள்கிறார்கள். அதேபோல் எவ்வித உணர்ச்சிப்பூர்வ கோரிக்கைகளும் விடுக்காமல் வெறுமனே காமப் பசியை தீர்க்கும் ஒருவரை “உபயோகமான நண்பர்” (a friend with benefits) என அழைக்கிறார்கள்.

புறநகரிலுள்ள சில இளைஞர்கள் தங்களுடைய பெற்றோர் வேலைக்கு போனவுடன் காமவெறிபிடித்த பார்ட்டிகளில் கலந்து கொள்வதைப் பற்றி ஆசிரியர் ஸ்காட் வால்டர் விவரிக்கிறார். அப்படிப்பட்ட ஒரு பார்ட்டியில், “அங்கிருந்த எல்லா பையன்களுடனும் உடலுறவு கொள்ளப்போவதாக” ஓர் இளம் பெண் அறிவிப்பு செய்தாள். “12 வயது பிள்ளைகள்கூட அந்தப் பார்ட்டிகளில் கலந்துகொண்டனர்.”

அதிர்ச்சியாக இருக்கிறதா? டீனேஜர்களின் செக்ஸ் நடவடிக்கைகளை ஆராயும் நிபுணர்களுக்கு இது அதிர்ச்சியளிப்பதில்லை. டாக்டர் ஆன்ட்ரியா பெனிங்டன் இவ்வாறு எழுதுகிறார்: “உடலுறவில் ஈடுபடும் டீனேஜர்களின் சராசரி வயது கடந்த 20 ஆண்டுகளாகக் குறைந்துகொண்டே வந்திருக்கிறது. இப்போதெல்லாம் பையன்களும் பெண்களும் 12 வயதிலேயே செக்ஸில் ஈடுபடத் தொடங்குவது சகஜமாகிவிட்டது.”

இன்னுமதிக வேதனையளிக்கும் செய்தியை இன்றைய அஐமா என்ற ஆங்கில செய்தித்தாள் அறிக்கை செய்தது: “மிக இளைய தலைமுறையினரில் அதிகமதிகமானோர் . . . வாய்வழி உடலுறவில் ஈடுபடுகின்றனர். . . . இவ்வகையான உறவு ‘உண்மையில் உடலுறவு அல்ல’ என இளவட்டங்கள் நம்புகின்றன.” 10,000 பருவப் பெண்களை வைத்து நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி “80 சதவீதத்தினர் கன்னி கழியாதிருந்ததாகச் சொன்னார்கள், ஆனால் அதில் 25 சதவீதத்தினர் வாய்வழி உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். ‘ஓர் ஆணுடன் வெறுமனே ஜாலியாக பொழுதைப் போக்கத்தான்’ அவ்வாறு செய்வதாக 27 சதவீதத்தினர் கூறினர்.”

செக்ஸ் பற்றிய அப்படிப்பட்ட கருத்துக்கள் மற்ற நாடுகளிலும் ஊடுருவியிருக்கின்றன. “ஆசியாவிலுள்ள இளைஞர்கள் பலர் சிறு வயதிலேயே செக்ஸில் ஈடுபடுவதால், அதுவும் அநேகருடன் செக்ஸில் ஈடுபடுவதால் எச்ஐவி தொற்றும் பேராபத்தில் இருக்கிறார்கள். இவ்வாறு திருமணத்திற்கு முன்பே பலருடன் உடலுறவு கொள்வதன் மூலம் டீனேஜர்கள் தங்கள் பெற்றோரின் ‘ஆசிய பாரம்பரிய மதிப்பீடுகளை’ புறக்கணிப்பது அதிகரித்து வருகிறது” என்று யுனெஸ்கோ அறிக்கை செய்கிறது.

இளைஞர்கள் சிக்கித் தவிக்கும் பிரச்சினைகள் வேறேதேனும் இருக்கின்றனவா? “16-19 வயதுக்குட்பட்ட இளம் பெண்களில் 25 சதவீதத்தினர் கடும் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்” என கனடாவின் விமென்ஸ் ஹெல்த் வீக்லி பத்திரிகை அறிக்கை செய்கிறது. இருந்தாலும் இந்த மனச்சோர்வு ஆண்கள், பெண்கள் ஆகிய இரு சாராரையுமே தாக்கும் ஒன்று. ஒவ்வொரு வருடமும் ஐந்தாயிரம் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதாக ஐ.மா. செய்தி மற்றும் உலக அறிக்கை (ஆங்கிலம்) தெரிவிக்கிறது. ஏதோவொரு காரணத்திற்காக “பருவப் பெண்களைவிட பருவப் பையன்களே ஆறு மடங்கு அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்” என்று அந்த அறிக்கை சொல்கிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் படுமோசமான சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருப்பதில் சந்தேகமே இல்லை. இதற்கான காரணம் என்ன? (g05 4/8)

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

STR/AFP/Getty Images